கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூறுவோம்

சில ஆண்டுகளுக்கு முன்பாக நான் திருநெல்வேலியிலிருந்து மதுரைக்கு மாலை நேர இரயிலில் பயணம் செய்யவேண்டிய சந்தர்ப்பம் வந்தது. அந்த இரயில் சென்னை வரை செல்லும் வண்டி, அதில் நான் “பதிவுசெய்யப்படாத” இரயில் பெட்டியில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.
நான் இரயிலில் ஏறும்போது அந்தப் பெட்டியின் ஒரு பகுதியில் சில சகோதரிகள் அருமையாக உட்கார்ந்து, எதிர் வரிசையில் தங்கள் கால்களை வைத்துக்கொண்டு, வேதாகமம் வாசித்துக் கொண்டிருந்தார்கள். இதைப் பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவர்கள் அனைவரும் சென்னையில், ஏதோ “ஆவிக்குரிய கருத்தரங்கு” ஒன்றில் பங்குபெறும்படி போகிறார்கள் என அவர்கள் பேசுவதிலிருந்து அறிந்துகொண்டேன்.
அவர்கள் அனைவரும் இளம் பெண்களாக இருந்தப்படியால் நான் அந்த இரயில் பெட்டியின் வேறு பகுதியில் சென்று அமர்ந்தேன். வண்டியோ இன்னமும் புறப்படவில்லை. ஆனால் நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்துக்கொண்டே போனது. சிறிது நேரம் கழித்து வண்டியும் புறப்பட்டது. வண்டி கோவில்பட்டியை அடைந்தது. அங்கு மேலும் வண்டியில் முண்டியடித்து ஏறியக் கூட்டம்… ஒருவர் மீது ஒருவர் நிற்காதக்குறை என்றேக் கூறலாம்.


வண்டியிலிருந்த அநேகர், சென்னை வரைச் செல்லவேண்டியவர்கள். என்ன அவசரமோ,… பதிவு செய்யப்படாத பெட்டியில், நிற்கக்கூட இடம் இல்லாமல் சென்னை வரை “12 மணி நேரம்” நெருக்கத்தில் சிக்கி பயணிக்கவேண்டிய அவல நிலை அந்த மக்களுக்கு. இது இந்த தேசத்திலுள்ள அநேக மக்களின் அன்றாட வாழ்க்கையின் பகுதியாக இருந்தாலும், மக்களின் கஷ்டத்தை நேரில் கண்ட எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.


80 பேர் பயணிக்க வேண்டிய பெட்டியில்… 400க்கும் மேற்பட்ட மக்கள் பயணித்துக் கொண்டிருந்தார்கள். மூச்சுவிடக் கூட காற்றைத் தேடவேண்டிய சூழ்நிலை… இதற்கிடையில் எதற்கும் அசராத இரயில் வண்டி கோவில்பட்டியிலிருந்து புறப்பட்டது. திடீரென பெரிய கூக்குரல்… பயங்கரமான சண்டையின் சத்தமும் கேட்டது. நான் ஏற்கனவே, எனது இருக்கையை ஒரு முதியவருக்குக் கொடுத்துவிட்டு நின்றுக்கொண்டிருந்தேன். சத்தம் வர, வர அதிகமாகவே நான் மக்கள் வெள்ளத்தில் நீந்தி, சத்தம் வந்த இடத்திற்குச் சென்றேன்.


நான் அங்கே கண்ட காட்சி, என்னைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது. நெருக்கித் தள்ளும் கூட்டத்தில், முதிர்வயதில் தள்ளாடும் தாத்தா, கண்கள்கூடச் சரியாகத் தெரியாத பாட்டி, ஒன்றும் புதியாத சிறுவர்கள் என பல்வேறு மக்கள் கூட்டத்தின் மத்தியில் ஒரு நிறைமாதக் கர்ப்பிணிப் பெண், விக்கவும், விழுங்கவும் முடியாமல், கண்ணீரோடு நின்றுகொண்டிருந்தாள்… அவளது கணவனோ, அங்கிருந்த நமது சகோதரிகளிடம்… தயவுகூர்ந்து தன்னுடைய மனைவிக்கு சற்று இடம் தரும்படி கெஞ்சிக்கொண்டிருந்தான்.வேதத்தை மடியில் வைத்து, கால்களை எதிர் வரிசையில் கிடத்தி, மனமகிழ்ச்சியாக பயணிக்கும் நமது சகோதரிகளுக்கோ சுற்றிலும் உள்ள மக்களின் கஷ்டம் எதுவும் புரியவில்லை. இடம் தர மனமுமில்லை. இதற்கிடையில், தங்களிடம் உதவி கேட்ட மக்களைப் பார்த்து அவர்கள் போட்ட சண்டையும், கூக்குரலும் அவர்கள் படித்த வேதமும், செய்த ஜெபமும் அவர்களுடைய வாழ்க்கையை மாற்றவில்லை என்பதையே பறை சாற்றியது.
இந்த சூழ்நிலையில் அந்தக் கர்ப்பிணி பெண்ணின் கணவன் ஒரு வார்த்தை சொன்னான். அது என்னை சம்மட்டியால் அடித்ததைப் போலிருந்தது. அவன் சொன்னான் “இவர்கள் மடியில் வேதம் இருப்பதால், இவர்கள் கடவுள், என் மனைவியை ஏதாவது செய்துவிடுமோ என்று பயப்படுவதால் தான் நான் இவர்கள் என்னை அசிங்கமாகத் திட்டினாலும், பதில் பேச பயமாக இருக்கிறது” என்றான். நமது சகோதரிகளுக்கோ மிக்க மகிழ்ச்சி. இப்படித்தான் அநேக கிறிஸ்தவர்கள் மற்றவர்களை பயம் காட்டி வைத்துள்ளார்கள். இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் மற்றவர்களை நேசியாமல் கிறிஸ்துவை அதிகமாக நேசிப்பது போன்ற எண்ணம். இவர்கள் கண்களை மூடி ஜெபிக்க ஆரம்பித்தால் “இயேசுவே உம்மை நேசிக்கிறேன், உம்மை நேசிக்கிறேன்” என பலமுறை, பலவிதக் குரல் நயத்தில் கூறினாலும், இதைக் கேட்கும் ஆண்டவர் நகைப்பார். ஏனெனில் வேதம் கூறுகிறது “தான் கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?” (1யோவான் 4:20).


நாம் ஒருவரிலொருவர் அன்பாயிருப்போம். கிறிஸ்துவை நம் வாழ்வில் வெளிப்படுத்துவோம், திரளான ஜனங்கள் இயேசுவை நம்மில் காணட்டும்.



Author

You May Also Like…

விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டர் (Scientist Louis Pasteur)(எளிமையும், தாழ்மையுமான ஆவிக்குரிய மனிதன்)

லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானி பிரான்சு தேசத்தில் உள்ள பிரபலமானவர்.  அவர் அநேக கண்டுபிடிப்புகளை மருத்துவத்துறையிலும்,...

Share This