2006ஆம் ஆண்டு, நான் பணி செய்யும் கம்பெனியின் சார்பாக மதுரையில், “பெயிண்ட் பிரஷ் தயாரிக்க பயன்படும் நைலான் முடிகளை” அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து தென்னிந்தியாவில் விற்பனை செய்வதற்காக, ஒரு அலுவலகத்தை, துவக்கி வைக்க வேண்டிய சூழ்நிலை எனக்கு இருந்தது.
இந்த நிகழ்ச்சிக்காக, 10க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி நிருபர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் தென்னிந்தியாவிலிருந்து பல்வேறு “பெயிண்ட் பிரஷ்” தயாரிப்பாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் பலர் “பன்றி முடியை வைத்து பிரஷ் தயாரிப்பவர்கள்”. எனவே நைலான் முடியை தென்னிந்தியாவில் அறிமுகம் செய்தால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் இருந்தனர்.
நான் அநேக வேலைகளை கவனிக்க வேண்டிய சூழலில் இருந்தபடியினால், சற்று காலதாமதமாக, நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு சென்றடைந்தேன். அந்த நிகழ்ச்சி ஒரு பெரிய நட்சத்திர ஓட்டலில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.இதற்கிடையில் பத்திரிக்கை நிருபர்கள், பலரிடமும் பேட்டி எடுத்து வந்தனர். அச்சமயத்திலே ஒரு தொலைக்காட்சி நிருபர், ஒரு பெரிய “பிரஷ் கம்பெனி உரிமையாளரிடம்” பேட்டி எடுத்துக்கொண்டு இருந்தார். அவரோ “பன்றி முடியை வைத்து பிரஷ் செய்பவர்” எனவே அவர் அந்த தொலைக்காட்சி நிருபரிடம் “இந்த அமெரிக்க நைலான் முடியெல்லாம் ஒன்றுக்கும் உதவாது… பன்றி முடி மட்டுமே நல்ல பிரஷ் செய்ய உதவும்” என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த “நைலான் முடி பிரஷ் உற்பத்தி செய்பவர்கள்” இவருடைய கருத்துக்கள், தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் படுமோ என்ற கவலையில், என்னிடமாய் வந்து “நீங்கள் ஏன் இவரை அழைத்தீர்கள், இவர் நமக்கு விரோதமாய்ப் பேசுவார் என்று உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டனர்.
நான் அவர்களிடம் “கவலைப்படாதீர்கள்… இவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்காகத்தான் பேட்டி எடுக்கச் சொன்னேன். நிகழ்ச்சி ஆரம்பமான பின்பு பதிவு செய்யப்படுபவை மட்டுமே, தொலைக்காட்சியிலும், பத்திரிக்கைகளிலும் பிரசுரமாகும் எனக் கூறினேன். அவர்களும் கலவரத்துடன் கேட்டுக்கொண்டிருந்தனர்.
பின்பு நான் அந்த சர்ச்சைக்குரிய, பன்றி முடி பிரஷ் உற்பத்தியாளரை அழைத்து… அண்ணாச்சி, நீங்கள் வயதில் மூத்தவர்கள். எனவே, உங்களை கனப்படுத்த விரும்புகிறேன். நீங்கள் இந்த விழாவிற்கு தலைமையேற்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று சொன்னேன். அவர் மிகவும், சந்தோஷமாக இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார். அனைவரும் என்னவாகுமோ? என்ற பயத்துடன், உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருந்தனர். தலைமையுரை ஆற்றவேண்டிய நேரம் வந்தது. அனைத்து பத்திரிக்கையாளர்களும் “பேனாவும், பேப்பருமாக” தயாராக இருந்தனர். அதைப்போலவே, தொலைக்காட்சி நிறுவனத்தாரும், நிகழ்ச்சிகளை பதிவுசெய்து, ஒளிபரப்பு செய்ய ஆயத்தமாயினர்.
தலைமையேற்ற, பன்றி முடி தயாரிப்பாளர் “இனி இந்தியா முழுவதும் இந்த அமெரிக்க நைலான் முடி பிரஷ் மட்டுமே இருக்கப் போகிறது; பன்றி முடி பிரஷெல்லாம் காணாமற்போகப் போகிறது” என்று ஆவேசமாகப் பேசினார். அனைவருக்கும் மிக்க ஆச்சரியம். எப்படி இந்த மனுஷன் “சில மணித்துளிகளில்” தலைகீழாகப் பேசுகிறாரே என்று நினைத்தனர். நிரூபர்கள், தலைமுடியை பிய்த்துக்கொள்ளாத குறை என்று கூடச் சொல்லலாம்.
இப்படித்தான் மனுஷர்கள் “புகழ்ச்சிக்கு அடிமையாக இருக்கின்றனர். யாராவது தங்களைப் புகழ்ந்துவிட்டால், சற்று உயர்த்திக் காட்டிவிட்டால் என்ன பேசுகிறோம் என்றுகூடத் தெரியாமல் தலைகீழாகப் பேசுகிறார்கள். தாங்கள் கட்டியதை, தாங்களே தங்கள் சொந்தக் கைகளால் உடைத்துப் போடுகிறார்கள்”
இதை நம்முடைய வேதம் இவ்வாறாக விவரிக்கிறது
“வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை” நீதி.27:21.
நாம் சோதனையை ஜெயிப்போம், தாழ்மையை தரித்துக்கொள்வோம். ஜெயவீரர்களாய் என்றென்றும் வாழ்வோம்.