இன்றையத் தேவை யோகேபேத்தின் வைராக்கியம்

February 23, 2012

2007ஆம் ஆண்டு நான் மதுரையிலிருந்து, சென்னைக்கு பணி மாறுதல் அடைந்தபோது, சில வீட்டு உபயோகப் பொருட்களை மதுரையிலேயே விட்டுச்செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது.


சென்னையில் நாங்கள் வாடகைக்காகச் சென்ற வீட்டிலே துணிமணிகளை வைக்க “அலமாரி” இல்லாதிருந்தது. எனவே நான் ஒரு “இரும்பு அலமாரி” வாங்கும்படி மயிலாப்பூரிலிருந்த “சத்யா பர்னிச்சர்ஸ்” என்ற கடைக்குச் சென்றேன்.அந்தக் கடையில், விற்பனைப் பிரிவைக் கவனித்துக்கொண்டிருந்தவர் மிகவும் நேர்த்தியாகப் பேசினார். வியாபார நுணுக்கங்களை மிக்கத் தெளிவாக அறிந்து வைத்திருந்தார். நான் “அவர் தான்” கடையின் உரிமையாளர் என முதலில் நினைத்தேன். ஆனால், நான் அவரிடம் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தபோது… அவருடைய உடைகள் மிகவும் பழமையாகவும், நைந்து போனதாகவும் இருந்ததைக் கவனித்தேன். நான் ஆச்சரியமடைந்தவனாக, அவரிடம் நீங்கள் தான் இந்தக் கடையின் உரிமையாளரா? எனக் கேட்டேன். அவரோ சிரித்துக்கொண்டே, நான் சாதாரண விற்பனை பிரதிநிதி, எனக்கு மாதம் ரூ.2500/- சம்பளம் கொடுக்கிறார்கள் என்றார்.


நான் மிகவும் அதிர்ச்சியடைந்தவனாக… உங்கள் பழக்க வழக்கங்களை காணும்போது, நீங்கள் ஒரு பெரிய இடத்து மனிதரைப் போலக் காணப்படுகிறீர்கள். ஆனால் உங்கள் உடைகள், உங்கள் ஏழ்மை நிலையைப் பிரதிபலிக்கிறது என்றேன். அதைக் கேட்ட அவருடையக் கண்கள் குளமாயின. அவர் இவ்வாறாகக் கூறினார்.


ஐயா, என்னுடையத் தகப்பனார் ஒரு பெரிய சமூக சேவகர். சென்னையிலுள்ள திருவொற்றியூர் பகுதி MLA-வாக இருந்தவர். பல பள்ளிக்கூடங்கள், கோவில்களைக் கட்டியுள்ளார். இன்றும்கூட அவருடைய பெயரில் பள்ளிக்கூடம் இருக்கிறது. அவர் தன்னுடைய சொத்துக்களையெல்லாம் கட்சிப் பணிக்காக செலவு செய்து, அனைத்தையும் இழந்து, பின்பு மரித்தும் போனார். அவருடையப் பிள்ளைகளாகிய நாங்களோ, இன்று வறுமையின் கொடுமையில், வாழ வழியின்றி தவிக்கிறோம் என்றார்.


இதைக் கேட்டபோது என்னுடையக் கண்கள் குளமாயின. இதை நினைத்து, என்னால் சரியாகத் தூங்கக்கூட முடியவில்லை. பெரிய மனிதராக வாழ்ந்து, மனிதர்களைப் பிரியப்படுத்தி,…. பிள்ளைகளை கோட்டை விட்டுவிட்டாரே… என வருந்தினேன்.இப்படித்தான் அநேக தேவப்பிள்ளைகள், இன்று வாழ்ந்து வருகிறார்கள். அநேக ஊழியங்கள் செய்கிறார்கள், கர்த்தருடைய பணிக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கிறார்கள். ஆனால் அவர்கள் பிள்ளைகளை சத்தியத்தில் நடத்த தவறி, ஆவிக்குரிய வறுமையில் அல்லாடும்படி விட்டுவிடுகிறார்கள்.


பார்வோனின் கட்டளைக்குப் பயந்து…. சகல இஸ்ரவேலரும், தங்கள் ஆண் மகனை, நதியிலே போட்டபோது… தன் பிள்ளையை, எப்படியாகிலும் பாதுகாக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு, மூன்று மாதமளவும் ஒளித்து வைத்து, பத்திரமாய்ப் பாதுகாத்து… பின்னாட்களில் ஒரு மாபெரும் தலைவனாகும்படி வளர்த்தெடுத்தாளே “மோசேயின் தாய்” அப்படிப்பட்ட வைராக்கியம் இன்று நமக்கு வேண்டும். இன்றைய சமுதாயம் பாவத்தில் மூழ்கி தவிக்கும்போது கர்த்தர் நமக்கு கொடுத்த சுதந்திரத்தைப் பாதுகாக்க வைராக்கியம் வேண்டும். இப்படிப்பட்ட தாய்மாரே சரித்திரத்தில் இடம்பெற முடியும், கர்த்தரால் மெச்சிக்கொள்ளப் படவும் முடியும்.
“என் பிள்ளைகள் சத்தியத்தில் நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை” 3 யோவான் 1:4



Author

You May Also Like…

விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டர் (Scientist Louis Pasteur)(எளிமையும், தாழ்மையுமான ஆவிக்குரிய மனிதன்)

லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானி பிரான்சு தேசத்தில் உள்ள பிரபலமானவர்.  அவர் அநேக கண்டுபிடிப்புகளை மருத்துவத்துறையிலும்,...

Share This