சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஒரு திருச்சபைக்கு ஆராதனையில் கலந்துகொள்ளும்படி சென்றிருந்தேன். அன்றைய தினம், அந்த திருச்சபைக்கு ஒரு விசேஷித்த பிரசங்கியார் வந்திருந்தார். நான் அவரைப் பற்றி கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் நேரில் சந்தித்ததில்லை. அன்றுதான் அவரை நேரில் பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த பிரசங்கியார் மேடையில் ஏறும்போது, விசுவாசிகளின் கரவொலி வானைப் பிளந்தது. மேலும் அவர் பிரசங்கிக்கும்படி அழைக்கப்பட்டபோது, மீண்டும் ஆரம்பித்த கரவொலி அடங்கவே மிக்க நேரம் ஆயிற்று. வாழ்த்துதலை ஏற்றுக்கொண்டு, பிரசங்கத்தை ஆரம்பித்தவர், அன்றைய தினம் பிரசங்கத் தலைப்பாக “யோசேப்பின் அழகை” ஆதி.39:6 எடுத்துக்கொண்டார். அவர் பேசிய விதமே ஒரு சினிமா நடிகரைப் போல் கவர்ச்சியாகயிருந்தது. இடையிடையே அவர் யோசேப்பின் அழகுடன் தன்னுடைய அழகையும் ஒப்பிட்டுக் கொண்டது மேலும் பிரசங்கத்திற்கு மெருகூட்டியது. போதாக்குறைக்கு, விசுவாசிகள் அனைவருக்கும் நாளுக்கு நாள் கவர்ச்சி கூடி வருவதையும் உறுதியுடன் கூறினார். மேலும் அவர் விசுவாசிகள் எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்து “நீங்கள் அழகாயிருக்கிறீர்கள்” என்று கூறும்படி உற்சாகமூட்டினார். விசுவாசிகளும் மிக்க மகிழ்ச்சியுடன் அவ்வாறு செய்தார்கள்.
இதற்கு மேல் பிரசங்கத்தை தொடர்ந்த அந்த பிரசங்கியார், வேதாகமம் சம்பந்தப்பட்ட ஒரு புராண கதையை கூறினார். அதன்படி யோசேப்பு, போத்திபாரின் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த நாட்களில், போத்திபாரின் மனைவி யோசேப்பின் அழகை வீட்டிலிருந்த அனைவருக்கும் காட்ட விரும்பினாளாம். அவள் யோசேப்பை, வீட்டின் ஒரு மையத்தில் உட்காரும்படி செய்து, அநேக இளம் பெண்கள் அவனை சுற்றிலும் அமர்ந்து, காய்கறிகளை வெட்டும்படி கூறினாளாம். இளம் பெண்களோ “யோசேப்பின் அழகிலே” மயங்கி, காய்கறிகளை வெட்டுவதற்கு பதிலாக தங்கள் கைகளை வெட்டிக்கொண்டார்களாம். இப்படித்தான் தேவ பிள்ளைகளுக்கு தேவன் விசேஷித்த அழகை கொடுத்திருக்கிறார் என்று சொல்லி முடிப்பதற்குள் மீண்டும் கரவொலி வானைப் பிளந்தது, சபையே அதிர்ந்தது என்றாலும் மிகையல்ல, இந்த வேடிக்கையை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு ஒன்று நன்றாகபட்டது, இனி எந்த பிரசங்கியாரும் இயேசுவின் அழகையும், அவருடைய சிலுவைப் பாடுகளையும் பற்றி பேசினால் அதிகம் ஏற்றுக்கொள்ளப்படப் போவதில்லை. இப்படிப்பட்ட பொய்யான புராணங்களுக்கே பெரும் மதிப்பும், வரவேற்பும் கிடைக்கும் என்பது புலனாயிற்று. “பிரசங்கப் பீடங்கள் கேலிக் கூத்தாடிகள், கட்டுக்கதைகளைப் பேசும் கொலைக் களமாகிப் போயின” உயிர்ப்பிக்கும் சத்தியத்தைப் பேசும், உயர்வான தேவ மனிதர் எண்ணமற்று போகின்றனர்.
“நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்” (1கொரி.1:23) என்று பறைசாற்றிய பவுலடியாரைப் போல, பூரண சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க ஆட்கள் வேண்டும். களங்கமற்ற வேத வசனத்தைப் போதிப்போரை ஆதரிக்க, திருச்சபைகளும் விசுவாசிகளும் முன்வர வேண்டும். வேத வார்த்தை, ஜனங்களின் பாவத்தை உணர்த்த வேண்டும். உயிர்மீட்சியடைந்த தேவ மனிதர் நாடெங்கும் சென்று, சுவிசேஷத்தைப் பரப்ப வேண்டும். கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக! ஆதி திருச்சபையின் அற்புதம் இன்றும் தொடர்வதாக!