ஓய்வு நாளை பரிசுத்தமாய் ஆசரிப்போம்

November 23, 2011

1998ஆம் ஆண்டு, நான் மதுரையில், ஒரு நிறுவனத்தில் “தரக் கட்டுப்பாடு அலுவலராகப்” பணியாற்றி வந்தேன். மேலும் என்னுடையத் தகப்பனாரின் சபையில் “வாலிபர் கூட்டத்தையும்” நடத்தி வந்தேன்.


அந்நாட்களில், தரக்கட்டுப்பாடு அலுவலர், சான்றிதழ் வழங்கினால் மட்டுமே, பொருட்கள் விற்பனைக்காக தொழிற்சாலைக் கதவுகளைக் கடந்து வெளியேறும் சூழ்நிலை இருந்தது. நான் பொதுவாக “விடுப்பு” எடுக்கும் வழக்கம் இல்லாதவன் எனவே, எல்லா விற்பனைக்கும், சான்றிதழ் உடனுக்குடன் கொடுக்கப்பட்டு வந்தது.
ஒருமுறை எங்கள் தொழிற்சாலைக்கு, முதன் முதலாக ஒரு பெரிய “ஐரோப்பிய விற்பனை வாய்ப்பு” கிடைத்தது. தொழிற்சாலையிலுள்ள அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி. அனைவரும் முனைப்புடன் வேலை பார்த்தனர். கூடுதல் கவனத்துடன் தரம் கண்காணிக்கப்பட்டது. பொருட்களை அனுப்பி வைக்க வேண்டிய நாளும் வந்தது.
தூத்துக்குடி துறைமுகத்தில், கப்பல் திங்கட்கிழமை புறப்படுவதாக இருந்தபடியால், ஞாயிற்றுக் கிழமை, “தரக்கட்டுப்பாடு சான்றிதழ்” வழங்கவேண்டிய சூழ்நிலை வந்தது. நான் அதற்குத் திட்டவட்டமாக மறுத்துவிட்டேன். ஞாயிற்றுக் கிழமை ஆலயத்திற்குச் செல்லவேண்டும், கர்த்தருடைய நாளை அசட்டை செய்ய இயலாது என்றுக் கூறிவிட்டேன்.


என்னுடைய உயர் அதிகாரி ஒரு கிறிஸ்தவர். சிறந்த பிரசங்கியார். எனவே அவர் என்னுடைய நிலைப்பாட்டை புரிந்துக்கொள்வார் என எதிர்பார்த்தேன். ஆனால் அவரோ மிகவும் கோபப்பட்டார். என்னிடமிருந்த சான்றிதழ் வழங்கும் உரிமையை மற்றொரு நபரிடம் கொடுக்கும்படி பணித்தார். நானும் அவ்வாறாக செய்தேன். மன வேதனையும் அடைந்தேன்.
அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை நான் ஆலயத்தில் இருந்தேன். என்னுடைய அலுவலக நண்பர்களோ, முதல் ஐரோப்பிய ஏற்றுமதிக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். கண்டெய்னர் வந்தது, சரக்குகள் ஏற்றப்பட்டது, சான்றிதழ் வழங்கப்பட்டது. சரக்குகள் தூத்துக்குடி துறைமுகத்தை இரவு சென்றடைந்தது. மறுநாள் காலையில் கப்பலில் ஏற்றப்பட்டு, கப்பலும் புறப்பட்டு விட்டது.


மாலையில் அனைவருக்கும் சிறப்பு சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதிலே என்னுடைய உயர் அதிகாரி, என்னை மிகவும் தரக்குறைவாகப் பேசினார். “சிலர் கடவுள் பக்தி என்ற பெயரில் கடமையை மறக்கிறார்கள்” அவர்களுக்கும் இந்த நிர்வாகம் சம்பளம் கொடுக்கும் அவல நிலை உள்ளது என்றார். எல்லோரும் ஏளனமாகப் பார்த்தனர்.


ஒரு மாதம் சென்றது. அன்றுக் காலையில் தொழிற்சாலையே பதட்டமாகக் காணப்பட்டது. ஏனென்றால் கப்பல் ஐரோப்பா சென்றடைந்து, சரக்குகளைத் திறந்து பார்த்தால்… அவைகள் அனைத்தும் “கிழிந்த நிலையில்” காணப்பட்டன. இந்தக் கேவலமான சம்பவத்தைப் பற்றி விசாரிக்க குழுவும் நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரைப்படி, “தரக்கட்டுப்பாடு சான்றிதழ்” வழங்கியவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஏனெனில் அவர் “சரக்குப் பெட்டிகள்” இடையே வைக்கப்பட்ட பலகைகள், சரக்கு பெட்டிகளை கிழிக்கக்கூடிய அபாயம் இருப்பதைக் கவனிக்கத் தவறிவிட்டார் என்று கூறினர். அனைவரும் என்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நினைத்தனர். ஆனால் எடுக்கப்படவில்லை, ஏனெனில், நான் சரக்குகள் ஏற்றப்பட்ட நாளில், சம்பவ இடத்தில் இல்லை. மேலும் தரச் சான்றிதழில் கையொப்பமுமிடவில்லை.


தேவன் தம்முடைய பிள்ளைகளைக் காக்கிறார் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. ஓய்வுநாளைக் கனம் பண்ணுகிறவர்களுக்கு ஆண்டவரின் பாராட்டு,
“என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால், அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்;” (ஏசாயா 58:13,14)



Author

You May Also Like…

விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டர் (Scientist Louis Pasteur)(எளிமையும், தாழ்மையுமான ஆவிக்குரிய மனிதன்)

லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானி பிரான்சு தேசத்தில் உள்ள பிரபலமானவர்.  அவர் அநேக கண்டுபிடிப்புகளை மருத்துவத்துறையிலும்,...

Share This