பல வருடங்களுக்கு முன்பு, நான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் வட இந்திய விநியோகஸ்தர் திரு.மல்கோத்ரா என்பவரைக் காணும்படியாக புது டெல்லி சென்றிருந்தேன். அச்சமயம் அவர் ஒரு புதிய அலுவலகக் கட்டிடத்தை, பல கோடி செலவில் கட்டித் திறந்திருந்தார்.
அந்த பிரமாண்டமான கட்டிடம் மிகவும் சிறப்பாக கிரானைட் கற்களால் கட்டப்பட்டு இருந்தது. அதின் முற்புறத்தில், அழகுக்கு அழகு சேர்க்கும் வண்ணம் ஒரு எழில்மிகு திண்ணை இருந்தது. அதிலே நான், ஒரு அலங்கோலமானக் காரியத்தைக் கண்டேன்…
கட்டிடத்தின் முற்புறத் திண்ணையில், ஒரு செருப்பு தைக்கும் வயோதிக மனிதன், தன்னுடைய கிழிந்த பையுடன், அழுக்கு உடையணிந்து, சில பழைய செருப்புகளோடு, அந்தக் கட்டிடத்தின் அழகையே கெடுக்கும் வண்ணம் அமர்ந்திருந்தான்.
இதைக் கண்ட நான், மல்கோத்ராஜி, இந்த செருப்பு தைப்பவரை வேறு இடத்தில் போய் உட்காரச் சொல்லக் கூடாதா? என வினவினேன்? அதைக் கேட்ட அவிசுவாசியான என்னுடைய விநியோகஸ்தர் கூறிய பதில், என்னை சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது. மேலும் அது என்னுடைய மனக் கண்ணையும் திறந்துவிட்டது….
அவர் கூறினார்… இம்மானுவேல்ஜி, இறைவன் தான் இந்த செருப்பு தைக்கும் வயோதிகரை, என்னுடைய பராமரிப்பில் இருக்கும்படி வைத்திருக்கிறார். நான் இவருக்கு எப்படி உதவி செய்கிறேன் எனக் கவனித்தும் பார்ப்பார். எனக்கு இவ்வளவு அதிகமான செல்வத்தைக் கொடுத்த இறைவன், நான் இந்த வறியவனுக்கு உதவவேண்டும் என விரும்பமாட்டாரா? எனவே நான், இவருக்கு என்னுடைய கட்டிடத்தின் மூலம் பிழைப்பு நடத்தும்படி, உதவக்கூடிய வாய்ப்பு கிடைத்ததற்காக சந்தோஷப்படுகிறேன், பெரும்பாக்கியமாகவும் கருதுகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனுக்கு நன்றி சொல்லுகிறேன் என்றார்.
இன்றைக்கு நம்மில் அநேகருக்கு, அருகில் உள்ளவருக்குக் கூட உதவிசெய்யும் மனப்பான்மையில்லை என்றைக்கு நாம் அந்நியரை சேர்த்துக்கொள்ளப் போகிறோமோ தெரியவில்லை.
வேதத்தில், நாம் இரக்கஞ் செய்யாதவனுக்கு, இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும், நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மை பாராட்டும் (யாக்.2:13) எனக் காண்கிறோம்.
நம்மால் மிகவும் கேவலமாக வர்ணிக்கப்படும் ஐசுவரியவான் கூட, தன்னுடைய மாளிகையின் வாசலருகே, பருக்கள் நிறைந்த தரித்திரன் லாசருவை, காலமெல்லாம் வாழும்படி அனுமதித்து உண்ண ஆகாரமும் கொடுத்திருக்கிறான்… (லூக்கா 16:19-21)
நாமோ பசியுள்ளோருக்கு, ஆகாரம் கொடுப்பதற்கு பதிலாக ஆத்திரம் கொள்கிறோம்; தாகமாயிருப்போருக்கு தண்ணீர் கொடுப்பதற்கு பதிலாக, கண்ணீர் வடிக்க வைக்கிறோம்; அந்நியராயிருப்போரைச் சேர்த்துக்கொள்வதற்கும் பதிலாக, அறியாதவர் போல் நடந்துகொள்கிறோம்; வஸ்திரமில்லாதவர்களுக்கு, வஸ்திரம் கொடுப்பதற்குப் பதிலாக, வசைபாடித் திரிகிறோம்.
வியாதியாயிருப்போரை விசாரிக்கச் செல்லாமல், வியாதிக்கு வியாக்கியானம் சொல்லுகிறோம்; காவலிலிருப்பவரைக் காணச் செல்லாமல், கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகிறோம்.
நம்மைப் பார்த்து ஆண்டவர் எப்படி மெச்சிக் கொள்ள முடியும்? சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என எவ்வாறு நற்சான்று வழங்கமுடியும்? எல்லாவற்றிற்கும் மேலாக எப்படி நமக்கு பரலோகில் இடம் தர இயலும்? (மத்தேயு 25:34-40) நியாயத்தீர்ப்புக்கு முன்பாக, இரக்கம் மேன்மை பாராட்டும்.