சில வருடங்களுக்கு முன்பு ஒரு சகோதரன், தன்னுடைய திருமண அழைப்பிதழை என்னிடம் கொடுத்தார். அதிலே அவர் “உயர்கல்வி” பயின்றதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அவர் அப்படிப்பட்ட கல்வியெல்லாம் கற்கவில்லை என்று எனக்கு உறுதியாகத் தெரியும். எனவே அவரிடம் “ஏன் தவறான கல்வித் தகுதியை” இங்கு குறிப்பிட்டு இருக்கிறீர்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர் “மணப்பெண்” உயர்கல்வி பயின்றவர். எனவே நானும் அதற்கு இணையாக, உயர்த்திக் காட்டியுள்ளேன் என்றார். இவர் தன்னை ஆண்டவர் ஊழியத்திலே உயர்த்த வேண்டும் என மிகவும் பிரயாசப்படுகிறார்.
ஆடுகள் மேய்த்தவனை அரசனாக்குவது ஆண்டவருக்குப் பிரியம். அரசனான தாவீது, தன்னை ஒருநாளும் மேட்டுக்குடி சீமானாகவோ, மெத்தப்படித்த ஞானியாகவோ காட்டிக்கொண்டதில்லை. “கறவலாடுகளின் பின்னாகத் திரிந்தவன்” எனத் தன்னை அடையாளங் காட்ட அச்சப்படவேயில்லை (சங்.78:71).
கோலியாத்தை வீழ்த்தும்படி, தாவீது செல்லும்போது, சவுல் அவனுக்கு தன்னுடைய வஸ்திரங்களையும், போராயுதங்களையும் தரிப்பித்துச் செல்லும்படி கூறியும், “இவைகளைப் போட்டுக்கொண்டு போகக்கூடாது” (1சாமு.17:39) எனக் கூறி, மறுத்து, ஒரு தடியையும், கூழாங்கல்லையும் கொண்டு, கோலியாத்தை வீழ்த்தி, கோலியாத்தின் பட்டயத்தாலேயே அவனைக் கொல்லவில்லையா?
இன்றைக்கு நாம் ஆண்டவருடைய வல்லமையை அசட்டைப் பண்ணுகிறோம். அநேக அடைமொழிகளை நாம் நமக்கு சேர்த்துக்கொண்டு, நம்முடைய திறமைகளும், செல்வாக்குகளுமே அநேக ஊழியம் நிறைவேறக் காரணம் எனக் கருதுகிறோம்.
நமது பலத்தை வெகுவாய் நம்பி, கோலியாத்தை எதிர்கொள்ளச் செல்கிறோம். கோலியாத்தைக் கண்டதும் சாஷ்டாங்கமாய் விழுந்து அவனை நமஸ்கரிக்கிறோம். உலக மேன்மைகள் அற்பமும் குப்பைகளுமாய் இருப்பதை நாம் நன்கு கண்டு, உணர்ந்த பின்பும், மீண்டும் மீண்டும் அவைகளின் பின்பாக ஓடுகிறோம்.
நம்மை விட்டு எடுபடாத, நல்லப் பங்கை தெரிந்துகொள்வோம். கர்த்தர் நம்மை வெகுவாய் உயர்த்துவார்.