என்னுடைய இரண்டாவது மகள் கணக்கிலே புலி, இரண்டாம் வகுப்புதான் படிக்கிறாள். மிகவும் கடினமான கணக்குகளைக் கூட எளிதாக புரிந்து செய்து விடுவாள். எனது தாயாரும் கூட ஒரு கணக்கு டீச்சர் அல்லவா.கணக்கு, சமூக அறிவியல், ஆங்கிலம் போன்ற பாடங்கள் அவளுக்கு மிக நன்றாக வந்தாலும், தமிழ் பாடம் மட்டும் சரியாக புரிவதில்லை. பள்ளியில் குறைவோ அல்லது இவருடைய குறைவோ, சரியாகத் தெரியவில்லை. ஆனால் இவள் தமிழ் புத்தகத்தைக் கண்டவுடன் கண்ணீர் வடிப்பாள்.என்னதான் அவள் அழுதாலும், என் மனைவி அவளை விடுவதில்லை. தமிழைப் படிக்கச் சொல்லி வாட்டி எடுப்பாள். எல்லாப் பாடங்களிலும் அவள் நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும், தமிழில் நல்ல மதிப்பெண்கள் பெறவில்லையே என்று அவள் வருத்தப்படுவது உண்டு. “தாயாரின் கவலையைக் கண்ட பிஞ்சு உள்ளம், பெரிதாகவே பாதிக்கப்பட்டு விட்டது” போல…
ஒருநாள் தமிழ் தேர்வு வந்தது. பின்பு விடைத்தாளும் கொடுக்கப்பட்டது. எல்லோருக்கும் மிக்க ஆச்சரியம், ஏனென்றால்… அவள் தமிழில் 100/100 வாங்கிவிட்டாள். எனக்கும் சந்தோசம். ஆனால் என் மனைவிக்கோ சற்று சந்தேகம். அவள் என் மகளிடம், எப்படி இவ்வளவு மதிப்பெண் எடுத்தாய் என்று துருவி, துருவி கேட்டாள்.
பிஞ்சு உள்ளமோ “அம்மா, எனக்கு சில கேள்விகள் சரியாகத் தெரியவில்லை” நான் மார்க் குறைவா எடுத்தா, நீங்க ரொம்ப கவலைப்படுவீங்க, “அதனால நான் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு பிள்ளையைப் பார்த்து கரெக்டா எழுதிட்டேன்” என்று சொன்னாள்.உடனே என் மனைவி அவளிடம் “அப்படியெல்லாம் செய்யக் கூடாது” டீச்சர் உன்னைப் பார்க்காவிட்டாலும் ஜீஸஸ் உன்னைப் பார்த்துக்கிட்டே இருப்பாரு, நீ மார்க் குறைவா வாங்கினா, நீ அவருகிட்ட சொல்லு, அவர் உனக்கு உதவி செய்வார்னு சொன்னாள். பிள்ளையும் பின்பு பார்த்து எழுதுவதை நிறுத்திவிட்டாள்.
இப்படித்தான், நம்மில் சில பேர் செய்கிறார்கள். வாழ்க்கையில் வியாபாரத்தில், அலுவலகத்தில், ஊழியத்தில் ஏதாவது குறைவு வந்துவிட்டால்… தாங்களாகவே, தங்களுக்குத் தெரிந்தபடி, எப்படியோ நிவிர்த்தி செய்ய முயற்சிக்கிறார்கள். கர்த்தருக்கு காத்திருக்கும் அனுபவம் இல்லை. சுய விருப்பத்தையோ, மனித ஆலோசனைகளையோ அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.
இப்படித்தான் ஆபிரகாம் ஐயாவிடம், ஆண்டவர் ஒருநாள் “ஈசாக்கு பிறப்பான்னு” வாக்குத்தத்தம் கொடுத்தார். பத்து வருஷமா ஒன்னும் நடக்கல. அம்மா சாராள் பார்த்தாக, திடீரென ஆகாரை குடும்பத்தில் ஐக்கியப்படுத்திட்டாக, இன்னைக்கி வரைக்கும் பிரச்சனை ஓய்ந்தபாடில்லை.
கர்த்தருக்கு காத்திருப்போம்! ஈசாக்கை பெற்றெடுப்போம்!!
ஈசாக்கிலே அவர் சந்ததி விளங்கும்!!! தேவ நாமம் மகிமைப்படும்!!!