டிசம்பர் மாதம் முதல் வாரத்தில், நான் நமது பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களிலுள்ள பணித்தளங்களை பார்வையிடவும், நமது ஊழியர்கள் மற்றும் பொறுப்பாளர்களை உற்சாகப்படுத்தவும் சென்றிருந்தேன்.ஹரியானா மாநிலத்தில் “பானிபட்” என்ற இடத்தில் நமது இயக்கத்தின் பொறுப்பாளர், என்னை அருகிலிருந்த மற்றொரு ஸ்தாபனத்தைச் சேர்ந்த திருச்சபைக்கு பிரசங்கம் செய்யும்படி அழைத்துச் சென்றார்.
அந்த சபையின் போதகர் 8 ஆண்டுகள் முன்பு சென்னையிலிருந்து மிஷனரியாக “பானிபட்” வந்தவர். அநேக துன்பங்கள் நடுவே தியாகமாய் ஊழியம் செய்பவர், சிறந்த ஆத்தும ஆதாய வீரன். இவர் ஊழியத்தின் மூலம் அநேகர் புதிதாக சந்திக்கப்பட்டாலும், “11 மாதம்” ஒருமுறை வீட்டை மாற்றவேண்டிய சூழ்நிலை ஏற்படுவதால் வருடா வருடம், புதிய சபையை, புதிய இடத்தில் உருவாக்கும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார்.
இவரும் பல வருட ஊழியத்தின் பலனாக… வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி ஒரு சிறிய நிலத்தை வாங்கிவிட்டார். ஆனால் அதில் ஒரு சிறிய ஆலயம் கட்ட வசதியில்லை. இந்த சூழ்நிலையில் சபையிலுள்ள வாலிபர்கள் ஒரு ஆலோசனை கூறினார்கள். அதன்படி, போதகரும் டெல்லி வரை சென்று “கிறிஸ்துமஸ் மரங்களை” ரூ.100/- என்ற வீதம் வாங்கி ரூ.125/-க்கு விற்று அதன்மூலம் கிடைக்கும் லாபத்தில் ஆலய கட்டுமானத்தை தொடர திட்டமிட்டார். ஆனால் கிறிஸ்தவர்களோ மிகவும் குறைவாக வசிக்கும் ஹரியானா மாநிலத்தில் “கிறிஸ்மஸ் மரங்கள்” வாங்க எவரும் முன்வரவில்லை.
தென்னிந்தியாவிலுள்ள தனது நண்பர்கள், இனத்தார், போதகர்கள் என பலருக்கும் தனது சூழ்நிலையை விளக்கி கடிதங்கள் எழுதினார். பதில் எதுவும் வரவுமில்லை.
தமிழகத்திலோ ஆயிரங்கள் செலவழித்து “கிறிஸ்மஸ் மரங்கள்” வாங்கப்படுவதும், பதினாயிரங்கள் செலவழித்து அலங்காரம் செய்யப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.
தூரத்தில் இருக்கும் சகோதரனின் அங்கலாய்ப்பை கேட்க செவிகளில்லை… ஆனால் கண் காணா தேவனை நேசிப்பதாக நினைத்து ஆடம்பரங்களில் செலவு செய்ய உள்ளமெல்லாம் ஏங்குகிறது, என்று இந்த அவலநிலை மாறுமோ அன்று இந்த தேசத்தில் சுவிசேஷ வெள்ளம் பிரவாகித்து ஓடும்.
ஆதரவு கேட்கும் வட இந்திய ஊழியர்களை நேசிப்போம்!
அவர்கள் குறையை நீக்குவோம்!!
ஆண்டவர் நம்மை வெகுவாய் மெச்சிக் கொள்வார்!!!
மாரநாதா! இயேசு சீக்கிரம் வருகிறார்!!