சில மாதங்களுக்கு முன்பு, நான் சகோதரி சாராள் நவரோஜி அவர்கள் ஆராதனையில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
சிறந்த பரிசுத்தவாட்டியாகிய அவர்களின் பாடல்களும், பிரசங்கமும் மிகவும் நேர்த்தியாக இருந்தது. சபை ஆராதனை மதியம் 3.00 மணிக்கு முடிந்தாலும், முறுமுறுக்காமல், தேச சமூகத்தை அனுபவிக்கும் பலரைக் காணவும் முடிந்தது.
பிரசங்க வேளையில் சகோதரி அவர்களின் முகத்தில் காணப்பட்ட பிரகாசம், அவர்களுக்கும் தேவனுக்கும் உள்ள உறவின் மேன்மையைக் காட்டியது. இவ்வளவு சிறப்புக்களையும் காணப்பெற்றது, ஓர் பெரிய சிலாக்கியம் என்றால் மிகையல்ல.
ஆராதனை முடிந்து வெளியே வந்தபோது, அங்கே சில சகோதரிகள் பாடல் சி.டி,க்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். விலையும் குறைவு தான், அந்தச் சகோதரிகள்…. சகோதரி சாராள் நவரோஜி அவர்களுடன் இணைந்து ஊழியம் செய்பவர்கள். அநேகர் உயர்கல்வி பயின்றவர்கள். ஊழிய வாஞ்சையால் தங்கள் “பட்டப்படிப்பு சான்றிதழ்களைக் கூட” தீயில் எரித்து ஊழியத்தில் இணைந்தவர்கள்….
இன்று இச்சகோதரிகள் ஆலயத்தில் வரும் கொஞ்ச வருமானத்திலும், சி.டி.விற்று கிடைக்கும் பணத்திலும் விசுவாச ஊழியம் செய்து வருகிறார்கள்.
அநேகர் இந்த அருமையான பாடல் சி.டி.க்களை வாங்க முன்வரவில்லை. நான் 10 சி.டி. கொண்ட அந்த தொகுப்பை ஆர்வமுடன் வாங்கினேன். “அந்த சகோதரிகள் முகத்திலோ மிக மகிழ்ச்சி”. சில நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்தேன். அவர்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. இவைகள் காலத்தை வென்ற பாடல்கள் அல்லவா!
பயனுள்ள செயல்களைச் செய்வோம்!
பரலோகில் பலனைப் பெறுவோம்!!