“புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்” (கொலோ.1:27)
நாம் இயேசு கிறிஸ்துவின் வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவது எப்படி? அதற்கு என்ன நம்பிக்கை இருக்கிறது? இயேசு கிறிஸ்து மகிமையின் நம்பிக்கையாய் நமக்குள் இருக்கிறார். ஆம், நாம் இயேசு கிறிஸ்துவின் வருகையில் எடுத்துக் கொள்ளப்படுவோம் என்பதற்கு நமக்குள்ளே இயேசு கிறிஸ்து வாசமாயிருப்பதே நம்பிக்கையாகும். மகிமை நிரம்பிய கர்த்தர், பூமியில் வாசம் பண்ணி நமக்காக தமது ஜீவனை கொடுத்தார் என்பது ஆச்சரியமாயிருக்கிறதல்லவா? ஆனால் அதைப் பார்க்கிலும் ஆச்சரியப்படத்தக்க காரியம் என்னவெனில், இயேசு கிறிஸ்து நமக்குள்ளே வாசம் பண்ணுகிறார். எத்தனை ஆச்சரியம்! எத்தனை பாக்கியம்!
“இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்” (வெளி.3:20)
இயேசு கிறிஸ்து நமது இருதயக் கதவைத் தட்டுகிறார். நாம் இயேசு கிறிஸ்துவுக்கு நமது இருதயக் கதவைத் திறப்போமா! இயேசு கிறிஸ்து நமது இருதயத்திற்குள் பிரவேசித்து நம்மோடு கூட போஜனம் பண்ணுவார். எத்தனை பாக்கியம்! இயேசு கிறிஸ்து உள்ளத்தில் இருந்தால், நாம் இயேசு கிறிஸ்துவின் வருகையிலே எடுத்துக்கொள்ளப் படுவோம். நமது இருதயத்திலே உலகம் குடிகொண்டிருக்க வேண்டாம். பாவம் குடிகொண்டிருக்க வேண்டாம். நமது இருதயத்தில் இயேசுவை கனம் பண்ணுவோம். உங்கள் இருதயம் எங்கே இருக்கிறதோ, அங்கே உங்கள் பொக்கிஷம் இருக்கிறது. உங்கள் இருதயம் இயேசுவின் மேல் இருக்கட்டும். அப்பொழுது இயேசு கிறிஸ்துவின் வருகை நமது வாஞ்சையாயிருக்கும். நாம் அவரது வருகைக்கு மகிழ்ச்சியோடு ஆயத்தப்படுவோம்.
இயேசு கிறிஸ்து நமது இருதயத்தில் இருக்கும்போது நாம் அவரது வருகையில் எடுத்துக்கொள்ளப்படாதிருப்பது எப்படி? ஆம், இயேசு கிறிஸ்துவே நமக்கு மகிமையின் நம்பிக்கை. அந்த மகிமையின் நம்பிக்கையாம் இயேசு கிறிஸ்து நமக்குள் வாசமாயிருப்பது எத்தனை மகிழ்ச்சி, எத்தனை இன்பம்! ஓ, இயேசு உமதன்பு எத்தனை பெரியது! எனக்குள் வாசமாயிருக்க என்னையும் தெரிந்துகொண்டீரே இயேசுவே உமக்கு நன்றி, உமக்கு மகிமை.
கர்த்தருடைய சத்துவத்தின் வல்லமையில் பலப்படுங்கள்
இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பிள்ளைகளுக்குப் போராட்டம் உண்டு. ஆனால் அந்தப் போராட்டத்தில் வெற்றி உண்டு. போராட்டத்தில் ஜெயிக்க தேவ வல்லமையை தரித்துக்கொள்ள வேண்டும். முதலாவது, கர்த்தரில் பலப்பட வேண்டும். ஆம்! இயேசுவைச் சார்ந்துகொள்ள வேண்டும். நமது சுய பெலத்தால் சத்துருவை மேற்கொள்ள முடியாது. அனுதினமும் இயேசுவைச் சார்ந்துகொள்ள வேண்டும். அவரது வல்லமையில் பலப்பட வேண்டும். அவரது சர்வாயுத வர்க்கங்களையும் தரித்துக்கொள்ள வேண்டும்.
தேவனுடைய சர்வாயுத வர்க்கங்களைப் பார்க்கும்போது சத்தியம் நீதி, விசுவாசம் என்ற மேன்மையான காரியங்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இவைகள் யாவும் கர்த்தருடைய வசனத்திலே வரும். கர்த்தருடைய வசனத்தை சாந்தத்தோடு ஏற்றுக்கொண்டு அதன்படி நடப்பதே வாழ்க்கையில் பாதுகாப்பு. பிரியமானவர்களே, கர்த்தருடைய வசனத்தை வாசித்து தியானித்து அதை கைக்கொள்வதே பாக்கியம். அதனால்தான் நீங்கள் காக்கப்பட முடியும். தேவ வசனமாகிய ஆவியின் பட்டயம் என்பது ஒரு ஆயுதமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவும் வசனத்தைக் குறித்தாலும் பரிசுத்த ஆவியானவர் உணர்த்திக் காண்பிக்கும் ஒரு வசனம் ஆயுதமாய் மாறி சத்துருவை வதைக்கிறது. துரத்துகிறது. ஆவியின் பட்டயத்தைப் பெற கர்த்தரிடத்தில் காத்திருங்கள். நீங்கள் இயேசுவின் படையில் யுத்த வீரன். நீங்கள் உங்களுக்காக மாத்திரமல்ல. சகல பரிசுத்தவான்களுக்காகவும் இயேசுவின் படையில் நிற்கும் ஸ்தானாபதி. உங்கள் குடும்பத்திற்காக நண்பர்களுக்காக சபைக்காக தேசத்திற்காக ஊழியர்களுக்காக ஆவியின் பட்டயத்தை ஏந்தி நிற்கும் வீரன். அது மட்டுமல்ல, ஆவியினாலே ஜெபம் பண்ணி விழித்திருங்கள்.
வேதத்தில் சொல்லப்பட்ட விழித்திருங்கள் என்ற பதத்தின் பொருள் இதுதான். ஆவியிலே ஜெபம் பண்ணுவோம். நீங்கள் சர்வாயுத வர்க்கத்தைத் தரிக்காமல் பண்ணும் ஜெபம் வீண். வேதத்தை கேளாதவன் ஜெபமும் அருவருப்பானது. கர்த்தருடைய வசனத்தின் படி சர்வாயுத வர்க்கத்தைத் தரித்துக்கொள்வோம்.இந்தக் கடைசி நாட்களில் இப்படி விழித்திருப்பது மிகவும் அவசியம். அதற்கான தேவ வல்லமையைப் பெற்றுக்கொள்ள ஜெபிப்போம்.
“பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலே மிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்” (அப்.1:8)
பரிசுத்த ஆவியானவர் இல்லாமல் நம்மால் வல்லமையாய் பெலனுள்ள வாழ்க்கை வாழமுடியாது. எனவே எப்பொழுதும் நாம் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையில் பெலப்பட வேண்டும். பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் உள்ளான மனுஷனிலே பெலப்பட வேண்டும்.
“நீங்கள் அவருடைய ஆவியினலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும்,” (எபே.3:16)
பரிசுத்த ஆவியானவர் தாமே நம்மை பெலப்படுத்துகிறார். நம்மை ஆவியானவர் பெலப்படுத்தும்படியாக வேண்டிக்கொள்வோம். கர்த்தருடைய ஆவியானவர் சிம்சோனைப் பெலப்படுத்தினார். அது மாம்சத்துக்கடுத்த யுத்தம் செய்வதற்குப் பெலன். அதுபோலத்தான் ஆவிக்குரிய யுத்தம் செய்வதற்கு பெலன் பரிசுத்த ஆவியானவர்தான், சிம்சோன் பரிசுத்த ஆவியானவரின் பெலத்தால் சிங்கத்தைக் கிழித்துப் போட்டான். தாவீது சிங்கத்தையும் கரடியையும் கொன்றான். எப்படி? பரிசுத்த ஆவியானவரின் பெலத்தினால் தான். அப்படித்தான் நமக்கும் கர்த்தர் சிங்கமாகிய சாத்தானை வதைக்கும் வல்லமையை பரிசுத்த ஆவியானவரின் மூலமாய் தந்திருக்கிறார். ஆகவே பரிசுத்த ஆவியானவரால் பெலப்படுவோம்.
இப்படி பரிசுத்த ஆவியானராகிய எண்ணையைப் பெற்று எரிகிற தீபங்களாய் புத்தியுள்ள கன்னிகைகளாய் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தப்படுவோம்.
ஜெயங்கொள்கிறவன்
நமக்கு இருக்கும் போராட்டத்திலே வெற்றி பெற்று கர்த்தரின் வருகையில் இடம்பெற விழித்திருக்க வேண்டும். நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் ஜெயம் கொள்ளுகிறவர்களாய் மாறுவோம். பிரியமானவர்களே, இன்னும் கொஞ்ச காலந்தான். இயேசு கிறிஸ்து மெய்யாகவே சீக்கிரமாய் வருகிறார். இயேசு கிறிஸ்து வரும் நாளில் அவருக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாகும்படி ஜெபம் பண்ணி விழித்திருப்போம். ஆம்! இயேசு கிறிஸ்து வல்லமையோடு வருகிறார். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமை பலமாய்க் கிரியை நடப்பிக்கும். பரிசுத்தவான்கள் உயிரடைவார்கள். மறுரூபமாவார்கள். இயேசு கிறிஸ்து மகிமையிலே வெளிப்படுவார். நாம் அவரைக் காண அவரிடத்தில் செல்ல நாம் ஆயத்தப்படுவோம், நம்மை பரிசுத்தமாக்குவோம்.