எனதருமை தம்பி தங்கைகளுக்கு இந்த மாதம் எதைப்பற்றி எழுதலாம் என்று எனக்குள் யோசித்துக்கொண்டிருந்தபோது, என்றோ எப்போதோ வாலிபத் தம்பி ஒருவர் கேட்டக் கேள்வியை என் நினைவுகள் கைது செய்து, என் சிந்தனைச் சிறைக்குள் கொண்டுவந்து தள்ளியது. என்னண்ணே ஆரம்பமே ரொம்ப அமர்க்களமா இருக்குதுங்ரீங்ளோ! சரி சரி கேள்வியைச் சொல்லிடறேன்!
அண்ணன்! ஜெபி (Pray), ஜெபின்னு சொல்றாங்க! ஜெபிக்கிறேன் கடமைக்காக, ஆனால் உண்மையில் ஜெபத்தின் மீது ஆசையில்லையே? பேசாம எங்களை விட்டிருங்க, Compel பண்ணாதீங்க! எங்களுக்கா எப்ப ஜெபிக்கனுன்னு தோணுதோ அப்ப ஜெபிச்சுக்குறோம்!
மேலே சொன்ன கேள்வி என்பது அந்தத் தம்பிக்கும் மாத்திரமல்ல, உங்கள் உள்ளங்களில் கூட அடிக்கடி ஊற்றெடுக்கும் கேள்வி என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்திருக்க வாய்ப்பில்லை.
பொதுவாக, பெற்றோரின் கண்டிப்பினால்தான் நிறைய பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லுகிறார்கள். படிக்கிறார்கள். படித்துமுடித்து நல்ல வேலையில் சேர்ந்து கைநிறைய சம்பாதிக்கிறார்கள்.
அதுவரை பெற்றோர் படி படின்னு கஷ்டப்படுத்துறாங்களே என்று நினைத்தவர்கள், தான் சமூகத்தில் நல்ல நிலைக்கு வந்ததற்கு தன் பெற்றோரின் கண்டிப்பும், நச்சரிப்புமே காரணம் என்பதை காலம் கடந்து புரிந்துகொள்கிறார்கள். இஷ்டமிருந் தால் பள்ளிக்குச் செல், படியென்று பெற்றோர் கைவிட்டிருந்தால், எத்தனை பேரின் வாழ்க்கை நடுத்தெருவில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும்?
எனவே, உங்களையே கட்டுப்படுத்தி, கட்டாயப்படுத்தி தினமும் ஜெபியுங்கள், வேதம் வாசியுங்கள். ஆலயத்திற்குச் செல்லுங்கள். தேவனை ஆராதியுங்கள், தேவனு டைய வார்த்தையைக் கேளுங்கள்.
நாளொன்று வரும், பரிசுத்த ஆவியானவர் உங்களை நிரப்பித் தன் ஆளுகைக் குள் கொண்டுவரும்போது, உங்கள் ஜெபவேளை பரவசமான நேரங்களாய் மாறிவிடும். வேதம் வாசிக்கும்போது உள்ளத்தில் சந்தோஷம் ஊற்றெடுக்கும். இதுவரை கடினமாய் இருந்த ஜெபநேரங்கள் சுவை மிகுந்ததாய் மாறிவிடும். கடமைக்குச் செய்யப்பட்ட ஜெபங்கள் விருப்பமுடன் ஏறெடுக்கப்படும் ஜெபங்களாய் மாறிவிடும்.
அன்னை தெரெசா அம்மையாரைப் பற்றி நவீன் சௌலா என்னும் I.A.S. அதிகாரி (முன்னாள் இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி) ஒரு புத்தகத்தில் எழுதியிருந்ததை உங்களுக்குத் தருகிறேன்.
“நான் ஒரு இந்துவாக இருந்தாலும், அன்னை தெரெசா அம்மையாரின் ஆத்மீக சீடனாக வாழ்ந்தேன். கிறிஸ்தவர்களின் வழிபாட்டு முறையெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், அம்மாவைக் காணச் செல்லும்போது பலமுறை அவர்கள் ஜெபத்தில் இருந்ததைப் பார்த்து, அவர்களுக்காக காத்திருப்பேன்.
முழங்காலிலே நின்று ஜெபிப்பார்கள். கையில் ஜெபமாலை, அருகில் பைபிள் இருக்கும். கரங்களை உயர்த்தி, கண்களில் கண்ணீரோடு பலமணி நேரம் ஜெபிப்ப தைப் பார்த்திருக்கிறேன். சில நாட்கள், நான்கு ஐந்து மணிநேரங்கள் முழங்காலில் நின்று ஜெபிப்பதையும், பைபிள் வாசிப்பதையும் பார்த்திருக்கிறேன்.அந்த நேரங்களில் எல்லாம், எனதருமை தாயாரின் முகத்தில் தெய்வீக சந்தோஷமும், சமாதானமும் ஒருசேர கரைபுரண்டு ஓடும். சுருங்கச் சொன்னால், ஒரு மீனானது தண்ணீரில் ஆனந்தமாய், மூழ்கி, நீச்சலடிப்பதைப் போல இருக்கும்” என்று எழுதியிருந்தார்.
“இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்” (கொலோசெயர் 4:2)