ஜெப மாதிரி – கைலாச மகா ரிஷி

Written by Susila Walker

March 23, 2020

சாது சுந்தர் சிங் தமது ஊழிய காலத்தில் கைலாச மகாரிஷியைச் சந்தித்த போது, கைலாச மகாரிஷி தன்னைப் பற்றி கூறியது “கைலாச மகாரிஷியாகிய நான் எகிப்து தேசத்திலுள்ள அலெக்ஸாண்டியா என்னும் பட்டணத்தில் ஒரு வைராக் கியமுள்ள முகமதிய குடும்பத்தில் பிறந்து, மத வைராக்கியத்தில் வளர்க்கப்பட்டேன். தினந்தோறும் ஜெபம் செய்வதிலும், “கொர்ரான்” படிப்பதிலும் வெகுநேரம் செலவு செய்து வந்தேன். ஆனாலும் ஆத்துமாவில் திருப்தியுண்டாகவில்லை. ஆகையால் தன்னடக்கத்தோடு ஜீவியம் செய்ய தீர்மானித்தேன். அப்போது எனக்கு வயது 30. உலகத்தை வெறுத்தேன். துறவறம் பூண்டு கண் விழிப்பிலும், தியானத்திலும், உபவாசத்திலும் காலத்தைக் கழித்தேன். எனது ஆத்தும இரட்சிப்புக்காக ஒரு சந்நியாச மடத்திற்குச் சென்றேன். ஆறுதலில்லாமல், மனக்கிலேசம் வந்தது. உயிர் வாழ்வது பாரமாகத் தோன்றிற்று. மரணம் வந்து இந்த துன்பங்களிலிருந்து விடுவித்தால் நல்லது என எண்ணி அடிக்கடி தேவனிடம் வேண்டினேன்.

ஒருநாள் ஒரு கிறிஸ்தவ பக்தன் இந்தியாவிலிருந்து வந்து, ஆத்துமாவுக்கு விடுதலையளிக்க வல்ல பாவி களுடைய இரட்சகரைப் பற்றிக் கூறுவதாக அறிந்து, அவரிடம் சென்று எனது ஆத்தும நிலையை எடுத்துக் கூறினேன். அவர் என் நிலையை விளங்கிக்கொண்டு, அநுதாபங் கொண்டு, என்னை ஆற்றித் தேற்றி எனக்கு இளைப்பாறுதல் அளிக்க வல்லவரைப் பற்றி என்னுடன் பேசினார். ஒரு சிறிய புஸ்தகத்தைத் திறந்து “வருத்தப்பட்டுப் பாரஞ் சுமக்கிறவர்களாகிய நீங்கள் என்னண்டை வாருங்கள். நான் உங்களை முசிப்பாற்றுவேன்” என்ற பகுதியை வாசித்துக் காட்டினார். தேவன் தன்னுடைய ஒரே பேறான குமாரனைத் தந்து உலகத்தை நேசித்தார். இவை போன்ற சில வாக்கியங்களை வாசித்து விளக்கம் கூறினார். எனக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது. புதிய சந்தோஷம் தோன்றியது. தினந்தோறும் அப்பக்தரிடம் சென்று, பரம சந்தோஷத்தின் இரகசியங்களைக் கற்று வந்தேன். இயேசு பெருமானின் ஆச்சரி யமான இரட்சிப்பின் வல்லமையை அறிந்து கொண்டேன். பின் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவனானேன். கிறிஸ்துவைப் பற்றி பிரசங்கிக்க பெரிய ஆவல் உண்டானது. இருதயத்தில் தேவ அன்பு பற்றி எரிந்தது. சுவிசேஷத்தை எங்கும் அறிவிக்க என் குருவுடன் சென்றேன். என் குரு ஜெர்னாஸ் என்பவர். (பிரான்ஸிஸ் சவேரியாரின் உடன் பிறந்தார் மகள்) ஜெர்னாஸ் அக்பர் காலத்தில் இந்தியா வந்து பல தலைவர்களை கிறிஸ்துவண்டை நடத்தியவர். அவர் கரத்திலிருந்த புதிய ஏற்பாட்டு கொன்ஸ்தானதீன் சக்கரவர்த்தி காலத்தில் கையினால் எழுதப்பட்ட பண்டை காலத்துப் பிரதிகளில் ஒன்று. பிரான்ஸிஸ் சவேரியார் பயன்படுத்தியது. அவரது மரணத்துக்குப் பிறகு ஜெர்னாஸுக்குக் கிடைத்தது. ஜெர்னாஸ் தேசத்தை விட்டுப் போகும்போது என்னிடம் கொடுத்து, உலகமெங்கும் போய் சுவிசேஷத்தை அறிவி என்று கட்டளை கொடுத்தார்.

நான் அப்பிரதியைப் பெற்று, 75 வருடங்களாக இரட்சிப்பின் சுவிசேஷத்தை அறிவித்து வந்தேன். எனக்கு 21 பாஷைகள் தெரியும். எனக்கு 105 வயது ஆன பின்பு, சரீரத்தில் பெலன் குன்றியதால் மிஞ்சிய காலத்தைத் தனித்து தேவனுடன் ஐக்கியம் கொண்டு, தியானித்து, துதித்து, ஜெபிக்க எண்ணினேன். மனித சஞ்சாரமற்ற இந்தப் பகுதியைத் தெரிந்துகொண்டு தனித்து வாழ எண்ணினேன். இங்கு பலவித மூலிகைகளும் பழங்களும் உண்டு. அவைகளை உண்கிறேன். குளிர் அதிகமாயுள்ள காலங்களில் காட்டுக் கரடிகளும் எனது குகைக்குள் வந்து தங்கும். எல்லாருமே ஒன்றாகப் படுத்து உஷ்ணப்படுத்திக்கொள்வோம். சிலவித மூலிகைகளை உண்ணும்போது உஷ்ணம் உண்டாகிறது. சில வருஷங்கள் இவ்விதமாகக் கழித்தேன். ஒருநாள் திடீரென்று குகை முழுவதும் தேவ பிரசன்னத்தால் நிறைந்தது. எனது ஞானக் கண்கள் திறந்தது. இயேசு என் அருகில் நின்றார். என்னைத் தொட்டு, என் உண்மையுள்ள ஊழியக்காரனே, உனக்கு நித்திய ஜீவன் அளிக்கப்பட்டது. நீ மரணத்தைக் காணமாட்டாய். அதிக மகிமையோடு சீக்கிரத்தில் சம்பவிக்கப் போகிற எனது 2ஆம் வருகை மட்டும் நீ இந்த சரீரத்தில் இருப்பாய். பிசாசோடும், அவனது கூட்டாளியோடும் பயங்கரப் போர் புரியும் உண்மையான ஊழியர்களுக்காக ஜெபம் செய்வதும் வேண்டிக்கொள்வதுமே இனி உனது வேலை என்றார். புதிய இருதயம் ஒன்றைத் தந்தார். வானசேனை பின்தொடர திருநகரத்திற்கு திரும்பிச் சென்றுவிட்டார். பிறகு ஓட்டம் முடித்த அநேக பரிசுத்தவான்கள் வந்து, எனக்கு அபூர்வமாக அருளப்பட்ட சிலாக்கியத்தைக் குறித்து மகிழ் கொண்டாடினர். அதுமுதல் பரிசுத்தவான்கள் அவரிடம் வந்து சம்பாஷித்துச் செல்வார்கள். உலகத்திலுள்ள பல இடங்களுக்கு ஆவியிலே போய் அங்குள்ள சபை, தேவ பிள்ளைகளுடைய போராட்டங்களை அறிந்துவந்து அவைகளுக்காக பரிந்து மன்றாடி ஜெபிக்கும் வேலையைச் செய்து வருகிறேன். நான் ஆவியில் போகும்போது என் சடலம் குகைக்குள் கிடக்கும். மற்றவர்களுக்காக பரிந்துபேசி ஜெபிக்கும் வேலையை தேவன் தந்தார். பவுல் கொலோ.2:3ல் கூறுவதும் அதுவே” என்று சாது சுந்தர் சிங்கிடம் கூறினார்.






Author

You May Also Like…

விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டர் (Scientist Louis Pasteur)(எளிமையும், தாழ்மையுமான ஆவிக்குரிய மனிதன்)

லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானி பிரான்சு தேசத்தில் உள்ள பிரபலமானவர்.  அவர் அநேக கண்டுபிடிப்புகளை மருத்துவத்துறையிலும்,...

Share This