அப்போஸ்தலர் காலத்துக்குப்பின் தோன்றிய பக்தர்கள் எல்லாரையும் விட ஜாண் பிளெச்சர் மிகவும் பரிசுத்தம் வாய்ந்தவர் என டிக்ஸன் என்ற பெரியார் கூறுகிறார். பூலோக வாழ்விலேயே பரலோக சஞ்சாரியாயிருந்த பரிசுத்தவான் இவர்.
1729ஆம் வருஷம் ஜெனிவாவுக்கு அருகில் லெமான் ஏரி என்ற அழகிய ஊரில் பிளெச்சர் பிறந்தார். பெற்றோர் பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சிறு பிராயத்திலேயே சுத்த மனச்சாட்சியுள்ளவர். 7 வயதாக இருக்கும்போது பிளெச்சர் செய்த ஒரு தப்பிதத்திற்காக, இவரது தாதி, பிசாசு எல்லா துஷ்டக் குழந்தைகளையும் கொண்டு போவான் என்று தெரியுமா என்று கூறினாள். பிளெச்சர் பயந்து நடுங்கி, கடவுளிடம் மன்னிப்பு கிடைக்கும் வரை ஜெபித்தார். பின்பு இவரது வாழ்க்கை நல்ல முன் மாதிரியாக இருந்தது. 1755ல் பிளெச்சர் இங்கிலாந்து சென்று ஆங்கிலம் கற்றார். அங்கிருந்த நாட்களில் பூரண இரட்சிப்புக்குள் நடத்தப்பட்டார். ஒரு இரவு சொப்ப னத்தில், தேவ நியாயத்தீர்ப்பைப் பற்றிக் கண்டார். அதன் மூலம் எழுப்புதலடைந்தார். தன் நீதியெல்லாம் அழுக்கான கந்தை என உணர்ந்து, தன் பாவங்களையெல்லாம் மீண்டும் அறிக்கை செய்து, தேவ சமுகத்தில் உபவாசித்து ஜெபித்தார். ஒருநாள் இரவு முழுவதும் பகல் 1 மணி வரை தொடர்ந்து ஜெபத்திலேயே தரித்திருந்தார். தேவன் சில வாக்குத்தத்தங்களுடன் பேசினார். “நீங்கள் என் நாமத்தில் எதைக் கேட்டாலும் செய்வேன்” என்ற வார்த்தையில் மிகவும் ஆறுதலடைந்தார். தேவனிடம் மரண பரியந்தம் ஸ்திரமான இருதயமும் தேவ கிருபையும் தனக்கு வேண்டும் என வேண்டினார். மிகுந்த சந்தோஷம் அவரை நிரப்பியதை உணர்ந்தார். கடவுளின் பூரண அன்புக்காக அவர் ஊக்கமாக ஜெபிக்கும்போது, தரையில் முகம் குனிந்து மன்றாடி ஜெபிப்பார்.
ஒருமுறை விசுவாச கண்கள் மூலம் இரட்சகரை சிலுவையில் கண்டதாகவும் அவருடைய வசனங்கள் இருதயத்தில் தொனித்ததாகவும் தெரிவித்தார். பின்பு அவருடைய கட்டுகள் யாவும் நீங்கி, கிறிஸ்துவுக்குள் பூரண வெற்றி பெற்றார். தெய்வீக அன்பை அதிகம் உணர்ந்தார். வல்லமையான தேவ பிரசன்னத்தை உணர நேரிட்டது. பிளெச்சர் தேவனை நோக்கி, ஜெபித்துக் கொண்டிருந்தார். ஆவியும் சரீரமும் பிரிந்து விடுமோ என்று எண்ணும்படி நேரிட்டது. பின்பு ஊழியம் செய்ய மிகுந்த ஆவலுண்டாயிற்று. எவ்வளவாய் பரிசுத்த ஆவியின் நிறைவை பெறுகிறோமோ அவ்வளவாய் ஒரே சிந்தையும் ஒரே நோக்கமும் உண்டாகிறது. வல்லமையாக பேசவும் முடிகிறது என்பார். பிளெச்சர் ஆவியில் பேசி, நடந்து ஜீவித்தார். வாக்குவாதங்களுக்கும் உலக பிரஸ்தாபத்திற்கும் விலகி ஜீவித்தார். ஒவ்வொரு நிமிடத்தையும் பிரயோஜனமாக செலவு செய்தார். பாவத்தைக் குறித்து தைரியமாய் கண்டித்து உணர்த்துவார். சில காலம் வேதாகம கல்லூரியில் தலைவராக இருந்தார். மாணவர்கள் இவரது போதனையால் இழுக்கப்பட்டவராக பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டனர். ஒரு சமயம் ஆவியானவர் வல்லமையாய் இறங்கி நிரப்பினார். பிளெச்சர் தேவனை நோக்கி “கர்த்தாவே உமது கரத்தை எடுத்துக்கொள்ளும், இல்லாவிட்டால் பாத்திரம் நொறுங்கி விடும்” என சத்தமிட்டார். தொடர்ந்து மாணவர்கள் ஆவியின் நிறைவைப் பெற்றனர்.