நாம் வளர வேண்டும்

Written by Pr Thomas Walker

November 22, 2012

கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
தேவன் தமது பிள்ளைகள் வளர வேண்டும் என்று விரும்புகிறார். மனிதன் தேவனை ஏற்றுக்கொண்டு மறுபடியும் பிறந்த அனுபவத்திற்குள் வருவது தேவன் அருளிய பெரிய சிலாக்கியம். தேவன் மனிதனின் நிலைமையை மாற்றி நீதிமானாக மாற்றுகிறார். அது அவனது ஆவிக்குரிய நிலை, பின்பு குணத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். பின்பு சுபாவம் மாற்றப்பட்டு தேவனுடைய குமாரனாகிய இயேசுவின் சாயலுக்கு ஒப்பாக மாற வேண்டும். பின்பு அவரின் சுவிகாரப் புத்திரராக மாறி அவரின் அதிகாரத்தைப் பயன்படுத்தும் வளர்ச்சியைப் பெற வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இஸ்ரவேலின் பரிசுத்தர் உங்கள் முன் செல்கிறார். அவர் சாத்தானை காலின் கீழ் மிதித்துப் போட்டார், எனவே நாம் ஜெயம் பெற வேண்டும், ஆவிக்குரிய வாழ்வில் வளர வேண்டும்.


தேவன் பேரில் நாம் காண்பிக்கும் அன்பு பூரண வளர்ச்சிக்கு அடையாளம். தேவ அன்பு நம் உள்ளங்களில் ஊற்றப்பட வேண்டும். தேவன் பேரில் பூரண அன்புள்ளவர்களாக மாற வேண்டும். கொரிந்து சபையில் அன்பு காணப்படவில்லை. ஆவிக்குரிய வளர்ச்சி இல்லை.
1கொரி.3:1 வசனத்தில், “மேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேச வேண்டியதாயிற்று” என்று பவுல் கூறுகிறார். கொரிந்து சபையினர் பெலவீனர்கள், மாம்சத்துக்குரியவர்கள், குழந்தைகள், ஆவிக்குரிய வளர்ச்சியில்லாதவர்கள் குடும்பத்தின் உறவுகளிலும், குணங்களிலும் மாற்றமில்லாதவர்கள்.
நாம் கிறிஸ்துவின் நிறைவான வளர்ச்சிக்கு நேராக வளர வேண்டும் என தேவன் விரும்புகிறார். கொரிந்து சபையினரை பெலவீனப்படுத்தின மாம்சத்தின் குணங்கள் என்னவென்றால், 1.பொறாமை, 2.வாக்கு வாதங்கள், 3.பேதங்கள் (1கொரி.3:3) மார்க்க பேதங்கள். எனவே தேவன் விரும்புகிற வளர்ச்சியை அவர்களால் பெற முடியவில்லை.


திருச்சபை மக்கள் கிறிஸ்துவின் நிறைவான வளர்ச்சியில் வளர வேண்டும். நாம் எந்த காரியங்களில் வளர வேண்டும் என்பதை ஆராய்ந்து பார்ப்போம்.

1. நல்ல கனி தரும் மரமாக வளர வேண்டும்
மத்.13:38 வசனத்தில், “நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்” என்று இயேசு நிலத்தின் களைகளைப் பற்றிய உவமையில் கூறுகிறார். நல்ல விதை இராஜ்ஜியத்தின் புத்திரர். நல்ல விதை முளைக்கும், நன்கு வளரும், நல்ல பலனைத் தரும். கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் கனி கொடுப்பது மிக அவசியம். பலனில்லாத வாழ்க்கை தேவன் விரும்பாதது. ஜீவனுள்ள விதை முளைத்து எழும்பி பலனைத் தருகிறது. நாம் பலன் கொடுப்பவர்களாக வளர வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.

2. வேத வசனத்தின்படி ஜீவிக்கிறவர்களாக வளர வேண்டும்
நீதி.28:7 வசனத்தில், “வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன்” 1பேதுரு 2:3 “நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்” வேத வசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலில் வாஞ்சையாயிருந்தால் வளர முடியும். வசனத்தைக் கேட்கிறவர்களாக மாத்திரமல்லாமல் அதின்படி ஜீவிக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும். வேதத்தைக் கைக்கொள்ள தேவ பெலனும் தேவ ஒத்தாசையும் நமக்கு தேவை. தேவனிடம் கேட்டு, தேவனால் சத்துருவை மேற்க்கொள்ளுவோம்.
இஸ்ரவேலர்கள் வேத வசனத்தை கைக்கொள்ளுவோம் என உறுதி கூறினாலும், கைக்கொள்ளவே இல்லை. தேவ மணவாட்டியாக வாழாமல், ஆவிக்குரிய வேசித்தனம் பண்ணுகிறார்கள். தேவனைவிட்டு விலகுகிறவர்கள் தான் ஆவிக்குரிய வேசி ஆவார்கள்.

3. வேறுப்பட்ட பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கையில் வளர வேண்டும்
2கொரி.6:17,18 “ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்” தேவன் நம்மை உலகத்திலிருந்து பிரித்தெடுத்து சபையில், அங்கமாக்கியுள்ளார். உலகத்தார் செய்வது போல செய்யாமல் உலகத்தை வெறுத்து தேவனைப் பற்றிக்கொள்ள வேண்டும். பிரிந்து புறப்பட்டு வேறுப்பட்ட வாழ்க்கை வாழ்வது அவசியம்.
ஆதி.6:2,3 தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள். தேவ பிள்ளைகள் உலக மக்களைக் கண்டு விவாகம் பண்ணி உலகத்தோடு கலக்கும்போது இராட்சதர்கள் தோன்றுவார்கள். 2தீமோ.3:1-5 வசனங்களில் கடைசி கால மக்கள் வேறுபாடு அல்லாமல் தற்பிரியராயும்… தேவ பக்தியின் வேஷத்தை தரித்து பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள் என்று பவுல் கூறுகிறார். மனச்சாட்சியோடு தேவப்பிள்ளைகள் நடக்க வேண்டும். லோத்து உலகத்தோடு வாழ்ந்த வாழ்க்கை, வேறுபிரிக்கப்படாத மக்களுக்கு அடையாளம். லோத்தின் மனைவி, உலகத்தை பின்னிட்டுப் பார்ப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை ஸ்தம்பம். சாலமோன் ராஜா விக்கிரக ஆராதனை செய்த அந்நியப் பெண்களை திருமணம் செய்ததால் கடைசி நாட்களில் அவன் பின்வாங்கிப் போக ஏதுவானது. சாலமோன் ஒரு எச்சரிக்கை ஸ்தம்பம். யூதாஸ் காரியோத் வேத பாரகர் பரிசேயரோடு தொடர்புடன் வாழ்ந்ததால் இயேசுவையே காட்டிக் கொடுக்கும் துரோகியாக மாறினான். யூதாஸ் ஒரு எச்சரிக்கை ஸ்தம்பம். ஆவிக்குரிய வளர்ச்சியை விரும்பும் தேவனுடைய பிள்ளைகள் பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கையில் வளர வேண்டும்.

4. ஆத்தும ஆதாயம் செய்பவர்களாக வளர வேண்டும்
மத்.5:9 வசனத்தில், “சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.” என்று மலைப் பிரசங்கத்தில் இயேசு கூறினார். சமாதானம் பண்ணுகிறவர்கள் என்ற கூறும்போது ஒப்புரவாக்குதலின் ஊழியம் செய்பவர்கள், தேவ பிள்ளைகள் சமாதானத்துக்கு காரணராக இருக்க வேண்டும். தேவனுடன் மனுக்குலத்தை ஒப்புரவாக்குவது பெரிய சிலாக்கியமாகும். ஆத்தும ஆதாயம் செய்பவர்கள் வளர்ச்சியடைந்தவர்கள் ஆவார்கள்.

5. நீதியுள்ளவர்களாக வளர வேண்டும்
மத்.5:45 வசனத்தில், “இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்” 1.சத்துருவை சிநேகிக்க வேண்டும், 2.சபிக்கிறவர்களை ஆசீர்வதிக்க வேண்டும், 3.பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும், 4.துன்பப் படுத்துகிறவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். நிந்திக்கிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ண வேண்டும். இப்படிச் செய்தால் பரம பிதாவின் புத்திரராகவும், நீதியுள்ளவர்களாகவும் வளர முடியும்.

6. சிட்சையை சகிக்கிறவர்களாக வளர வேண்டும்
எபி.12:7,8 வசனங்களில், “நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே”
சிட்சைகளைச் சகிக்கிறவர்கள் தேவ புத்திரர்கள், ஏன்? என்ற கேள்வியைக் கேட்காமல், சகித்து தேவ சாயலாக மாற வேண்டும். மேலும் நீதி.3:12 வசனத்தில், “தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்” “தேவன் நம்மேல் அன்பு கூர்ந்ததினாலே தான் சிட்சிக்கிறார்” கர்த்தருடைய சிட்சையை மதித்து அற்பமாக எண்ணாமல் நடப்பது அவசியம். அப்படி நடப்பதால் வளர்ச்சியடைவார்கள்.

7. தேவ ஆவியினால் நடத்தப்படுகிறவர்களாக வளர வேண்டும்
ரோம.8:14 வசனத்தில், “மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்” தேவ ஆவியினால் நடத்தப்படுகிறவர்கள், அநேகரை நீதிக்கு உட்படுத்துவார்கள். பரிசுத்த ஆவியானவர் பிலிப்புவை கந்தாகே மந்திரியிடம் பேச இரதத்தோடு ஓடச் சொன்னார். சேர்ந்த பின் ஏசாயா 53ஆம் அதிகாரத்தை விளக்கி கூறி ஞானஸ்நானம் கொடுக்க உதவினார். பிலிப்பு ஞானஸ்நானம் கொடுத்தபின்பு ஆவியானவரால் எடுத்துக்கொண்டு போகப்பட்டார். ஆவியானவரின் மெல்லிய சத்தத்துக்குச் செவி கொடுப்பவர்கள் உலகத்துக்கு ஆசீர்வாதமாக மாறுவார்கள். ஆவியானவர் பேசும் போது கடினப்படுத்தாமல் கீழ்ப்படிவோம். கலா.4:6 வசனத்தில், “மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிற படியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாகத் தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்” பரிசுத்த ஆவியினால் நடத்தப்படுகிறவர்கள், அப்பா பிதாவே என்று தேவனுடன் பேசுகிறவர்களாக இருப்பார்கள். புத்திர சுவிகார ஆவியை உடையவர்களாக இருப்பதால் மாம்சத்தின்படி நடவாமல், ஆவியின்படி நடப்பவர்கள் தான் வளர்ச்சியடைந்தவர்கள். ஒவ்வொரு விசுவாசியும் தேவ ஆவியினால் நடத்தப்படுகிறவர்களாக வளர வேண்டும் என்று விரும்புகிறார்.


இதை வாசிக்கும் அன்பு நண்பரே! தேவனுடைய காரியங்களில் எப்படி சபையில் உள்ள பரிசுத்தவான்களாக வளர வேண்டும் என்று பார்த்தோம். நாம் நல்ல கனி கொடுக்கிறவர்களாக வளர வேண்டும், வேத வசனத்தின்படி ஜீவிக்கிறவர்களாக வளர வேண்டும், வேறுபட்ட பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கையில் வளர வேண்டும். ஆத்தும ஆதாயம் செய்கிறவர்களாக வளர வேண்டும். நீதியுள்ளவர்களாக வளர வேண்டும். சிட்சையை சகிக்கிறவர்களாகவும், தேவ ஆவியினால் வழிநடத்தப்படுகிறவர்களாக வளர வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். தேவபிள்ளைகள் ஆவிக்குரிய வாழ்வில் பசுமையான ஒலிவ மரத்தைப் போல வளர்ந்து தலைமுறை, தலைமுறையாக சபையில் நிலைத்து கனி கொடுக்க தேவன் கிருபை செய்வாராக! ஆமென்.





Author

You May Also Like…

Share This