கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
திருச்சபை மக்களை ஆசீர்வதிப்பதே தேவனுக்குப் பிரியம். தேவனுடையப் பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்பட்டால், உலக மக்களும் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். தேவப் பிள்ளைகள் தேவனுக்குப் பிரியமானதைச் செய்கிறார்கள். எனவே சாத்தானின் ஆளுகை இருந்தாலும், எதிர்ப்புகள் மத்தியிலும் தேவன் தன்னுடைய பிள்ளைகளையே ஆசீர்வதிக்கிறார். ஏதேன் தோட்டத்தில் இருமுறை ஆசீர்வதித்தார். அவர்கள் பலுகிப் பெருகி பூமியை நிரப்ப வேண்டும் என்று விரும்பினார். நோவாவை ஆசீர்வதித்து பலுகிப் பெருக வேண்டும் என்று ஆசீர்வதித்தார் (ஆதி.9:1). ஆனால் ஆதி.6:5 மனுஷருடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது, கொடுமை பெருகினது. எனவே தேவன் மனஸ்தாபம் அடைந்தார். அக்கிரமக்காரரை அழித்தார். நோவாவின் சந்ததி பெருகி பூமியை நிரப்பும்படி அவர்களோடு உடன்படிக்கை செய்து ஆசீர்வதித்தார். நீங்கள் பலுகிப் பெருகி பூமியிலே திரளாக வர்த்தித்து விர்த்தியாகுங்கள் என்றார் (ஆதி.9:7). மேலும் சகலவித பறவைகளையும், பிராணிகளையும் பூமியிலே திரளாக வர்த்தித்து, பூமியின் மேல் பலுகிப் பெருகக் கடவது (ஆதி.8:17) என்று ஆசீர்வதித்தார்.
2கொரி.8:7 வசனத்தில், “அல்லாமலும், விசுவாசத்திலும், போதிப்பிலும், அறிவிலும், எல்லாவித ஜாக்கிரதையிலும், எங்கள்மேலுள்ள உங்கள் அன்பிலும், மற்றெல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும்.” என்று பவுல் அப்போஸ்தலன் கொரிந்திய சபையாருக்கு எழுதினார்.
தேவப் பிள்ளைகள், ஆவிக்குரியப் பிரகாரமாகவும், சரீரப் பிரகாரமாகவும், பெருக வேண்டும் என்பது தேவனுடைய திட்டம். ஆதி.13:16 உன் சந்ததியைப் பூமியின் தூளைப் போல பெருகப் பண்ணுவேன். ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும் என்று தேவன் ஆபிரகாமை ஆசீர்வதித்தார். ஆதி.26:24 வசனத்தில், “அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன்” என்று ஈசாக்கை ஆசீர்வதித்தார். பின்பு யாக்கோபை ஆசீர்வதித்தார். ஆதி.32:12 வசனத்தில், “தேவரீரோ: நான் உனக்கு மெய்யாகவே நன்மைசெய்து, உன் சந்ததியை எண்ணிமுடியாத கடற்கரை மணலைப் போல மிகவும் பெருகப்பண்ணுவேன்…” என்றார்.
தேவனுடையப் பிள்ளைகள் பெருகுவதை சாத்தான் தடை செய்ய விரும்புவான். தேவனுடைய பிள்ளைகள் பலுகிப் பெருகுவதற்கு ஒடுக்கப்படுவதும் தேவையாயிருந்தது. யாத்.1:12 வசனத்தில், “அவர்களை (இஸ்ரவேலரை) எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள். ஆகையால் அவர்கள் இஸ்ரவேல் புத்திரரைக் குறித்து எரிச்சல் அடைந்தார்கள்”. உண்மையான தேவப் பிள்ளைகளை யாருமே தடுக்க முடியாது. எரே.23:3 வசனத்தில் “நான் என் ஆடுகளில் மீதியாயிருப்பவைகளைத் துரத்தியிருந்த எல்லாத் தேசங்களிலுமிருந்து சேர்த்து, அவைகளைத் திரும்ப அவைகளின் தொழுவங்களுக்குக் கொண்டுவருவேன்; அப்பொழுது அவைகள் பலுகிப் பெருகும். (எரே.23:3) இஸ்ரவேலர், பாபிலோன், சீரியா தேசங்களுக்கு சிறைப்பட்டு போனார்கள். பரிசுத்த சந்ததியை மீதியாயிருப்பவர்களை எல்லாத் தேசங்களிலுமிருந்து திரும்ப வரவழைத்து ஆசீர்வதிப்பார். (எசே.36:3-7)
தேவன் திருச்சபையை ஆசீர்வதித்து பெருகச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். நாம் எந்த காரியங்களில் பெருக வேண்டும் என்பதை ஆராய்ந்து பார்ப்போம்.
1. சீஷர்கள் பெருக வேண்டும்
அப்.6:7 வசனத்தில், “தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று; ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்” பரிசுத்தவான்கள் சபையை நிரப்ப வேண்டும். சீஷர்கள் யாரென்றால் அவரை உறுதியாக, ஒழுங்குடன் கடைசிவரை பின் செல்பவர்கள். சீஷர்கள் கற்றுக் கொள்பவர்கள், ஒழுங்குபடுத்த ஒப்புக்கொடுக்கும் பரிசுத்தவான்கள் பெருக வேண்டும். வசனம் பெருகும் போது சீஷர்கள் பெருகுவார்கள். நீங்கள் அறிவை வெளிப்படுத்த சத்திய வசனம் சபையில் பெருகும்போது சீஷர்கள் கூட்டம் பெருகும்.
2. சமாதானம், பக்திவிருத்தி, கர்த்தருக்குப் பயப்படுகிற பயம், ஆறுதல் சபையில் பெருக வேண்டும்
அப்.9:31, “அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்தஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின” தேவ பக்தியுள்ளவர்கள் சபையில் பெருக வேண்டும். தேவன் பேரில் உள்ள அன்பு நாளுக்கு நாள் கூடுதலாக பெருக வேண்டும். யாக்.1:26,27 ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னைத் தேவபக்தியுள்ளவனென்று எண்ணக்கூடாது. ஏழை எளியவர்களை விசாரிக்கிறவர்களாகவும், உலகத்தால் தன்னைக் கறைபடாமல் காத்துக்கொள்ள வேண்டும். இதுவே மாசில்லாத சுத்தமான பக்தி என்கிறார். யாக்கோபு அப்போஸ்தலர், அதிகம் பேச்சில் பாவம் வரும். நம்முடைய பேச்சுக்கள், கிருபை பொருந்தியதாகவும், உப்பால் சாரமேற்றப்பட்டதாகவும் இருக்க வேண்டும். தேவபக்தி என்பது 1. தேவன் மேல் உள்ள அன்பு, 2. இச்சையடக்கமுள்ள வாழ்க்கை, 3. நற்கிரியை செய்ய வேண்டும். அடிக்கடி பாவத்தால் கறைப்பட்டால் தேவபக்தி இல்லை என்பது பொருள். தேவபக்தி என்பது தேவனை எப்பொழுதும் கனப்படுத்தி வாழ வேண்டும்.
பரிசுத்தாவியானவர் ஆறுதல் அளித்து தன்த்தனியே ஒவ்வொருவரையும் தேற்றுவார். தேவனுக்கு கொடுக்கும் விஷயத்தில் தேவனை வஞ்சிக்கக் கூடாது. கொள்ளையடிக்கக் கூடாது. கொடுப்பதிலும் தேவனை கனப்படுத்த வேண்டும்.
3. கிருபை பெருக வேண்டும்
2கொரி.4:15, “தேவனுடைய மகிமை விளங்குவதற்கேதுவாகக் கிருபையானது அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே பெருகும்படிக்கு, இவையெல்லாம் உங்கள்நிமித்தம் உண்டாயிருக்கிறது”
அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே கிருபை பெருகும். தேவ குமாரனைப் பெற்றெடுக்கும் கிருபை மரியாளுக்கு கிடைத்தது. தேவனுடையப் பார்வையில் கிருபை கிடைத்தது. அடிமையாக தேவ சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். சங்.23:6 “என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்” தேவனுடைய வீட்டில் நிலைத்திருக்க வேண்டும். நன்மையும், கிருபையும் கூடவே தொடர்ந்து வர வேண்டும். துதியின் சிங்காசனத்தில் தேவன் அமர்ந்திருக்கிறார். துதி பெருகும்போது உணவில் ருசி கூட பெருகுகிறது. வாழ்வில் ஆசீர்வாதம் பெருகும். ஆதி.29:35ல் யூதா என்று பெயரிட்டாள். இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்றாள். யுத்தத்தில் கூட யூதா கோத்திரம் தான் முன்செல்ல வேண்டும். போராட்டங்கள், துன்ப நேரங்களில் துதிக்கும்போது தேவனுடைய கிருபை நம்மை தாங்கி வழி நடத்துகிறது. நாளுக்கு நாள் கிருபையின்மேல் கிருபை அடைய வேண்டும்.
4. நம்பிக்கை பெருக வேண்டும்
ரோமர் 15:12,13 வசனங்களில், “ஈசாயின் வேரும் புறஜாதியாரை ஆளும்படிக்கு எழும்புகிறவருமாகிய ஒருவர் தோன்றுவார்; அவரிடத்தில் புறஜாதியார் நம்பிக்கை வைப்பார்கள் என்று ஏசாயா சொல்லுகிறான். பரிசுத்தஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.”
தேவ வசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது. வேத வசனங்களை ஆராய்ந்து பொறுமையினாலும், ஆறுதலினாலும் தேவன்மேல் நம்பிக்கை பெருக வேண்டும். பரிசுத்த ஆவியின் பலத்தினாலும் தேவனிடத்தில், நம்பிக்கை பெருக வேண்டும்.
5. விசுவாசம் பெருக வேண்டும்
2தெச.1:3 வசனத்தில், “சகோதரரே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காகத் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்; உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறபடியினாலும், நீங்களெல்லாரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறபடியினாலும், அப்படிச் செய்கிறது தகுதியாயிருக்கிறது. கிறிஸ்துவுக்குள் நாம் வளர, வளர நம்முடைய விசுவாசம் மிகவும் பெருக வேண்டும். தேவன் நம் விசுவாசத்தை வர்த்திக்கும்படி ஜெபிக்க வேண்டும்.
6. நற்கிரியைகளில் பெருக வேண்டும்
2கொரி.9:8 “மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்” நற்கிரியைகளில் நாம் பெருகுகிறவர்களாயிருக்க வேண்டும். பாலஸ்தீன நாட்டில் உள்ள கலிலேயாக் கடல் போலிருக்க வேண்டும். அதிலிருந்து தண்ணீர் வெளியே செல்வதால் தண்ணீர் சுத்தமாகவும், மீன்கள் வாழ்வதற்கும், அநேகருக்கு பிரயோஜனமாயிருக்கும். சவக்கடல் உப்புத் தன்மை அதிகமாயிருப்பதால், ஒரு ஜீவராசிக்கும் பயன்தராது. தண்ணீர் வெளியே செல்லாது. நாம் சுயநலமுள்ள கிறிஸ்தவர்களாக ஒருவருக்கும் எந்த நற்கிரியையும் செய்யாத சவக்கடலாக இருக்க கூடாது. கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும், கொடுப்பவர்களே அதிகம் பெருகுவார்கள். விருத்தியடைவார்கள். கொடுப்பவர்களுக்கே தேவனும் கொடுப்பார்.
7. தர்ம காரியத்தில் பெருக வேண்டும்
2கொரி.8:7 வசனத்தில், “அல்லாமலும், விசுவாசத்திலும், போதிப்பிலும், அறிவிலும், எல்லாவித ஜாக்கிரதையிலும், எங்கள்மேலுள்ள உங்கள் அன்பிலும், மற்றெல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும்” பவுல் கொரிந்திய சபையாருக்கு எழுதும்போது தர்ம காரியத்தில் மற்றவர்களுக்கு சகாயம் உண்டாக, கொடுக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் தாராளமாய் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார். கொடுப்பது கிருபை.
இதை வாசிக்கும் அன்பரே! தேவனுடைய காரியங்களில் சபையில் உள்ள பரிசுத்தவான்கள் பெருக வேண்டும். சீஷர்கள் சபையில் பெருக வேண்டும். வசனம் பெருக வேண்டும். தேவபக்தி, சமாதானம் பெருக வேண்டும். சபையில் உள்ள விசுவாசிகள் கிருபையில் பெருக வேண்டும். தேவனைப் பற்றிய நம்பிக்கையில் பெருகவேண்டும். விசுவாசம் நாளுக்கு நாள் வளர்ந்து பெருக வேண்டும். நற்கிரியை நாளுக்கு நாள் வளர்ந்து பெருக வேண்டும். நற்கிரியைகளில் பெருக ஐசுவரியவான்களாக மாற வேண்டும்.
பரிசுத்தவான்களுக்கு உற்சாகத்துடன் தாராளமாய் தர்ம காரியங்கள் செய்வதில் பெருக வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். தேவன் சகலவித ஆசீர்வாதங்களாலும், நம்மை பெருகச் செய்து தேவ ராஜ்ஜியம் கட்டப்பட ஒவ்வொருவரையும் பயன்படுத்துவாராக. ஆமென்.




