கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
தேவனுடைய பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக காணப்பட வேண்டும். தேவனுடைய திருச்சபை மக்கள் மூலம் உலக மக்களை தேவன் ஆசீர்வதிக்க விரும்புகிறார். ஆனால் தடையாக இருப்பது “கெர்வம்” என்ற அகந்தை தேவ மக்களிடம் காணப்படுகிறது. அகந்தையை மனமேட்டிமை, பெருமை என்றும் கூறலாம். எசேக்.16:49 வசனத்தில் “இதோ, கெர்வமும், ஆகாரத் திரட்சியும், நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய இவைகளே உன் சகோதரியான சோதோமின் அக்கிரமம்;” என்கிறார். உலக பிரகாரமாக ஆசீர்வதிக்கப்பட்டதால் மனமேட்டிமை அடைகிறார்கள்.
மனமேட்டிமையுள்ளவர்களை தேவன் தூரத்திலிருந்து அறிகிறார். 1சாமு.2:3 வசனத்தில் “இனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்; அகந்தையான பேச்சு உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்;” என்கிறார் அன்னாள். மேலும் “துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்” என்று சங்கீதம் 10:4ல் கூறப்பட்டுள்ளது.
சாலமோன் ஞானி நீதிமொழிகளில் அகந்தையைப் பற்றி கடுமையாக எச்சரித்துப் பேசுகிறார். நீதி.11:2 வசனத்தில், “அகந்தை வந்தால் இலச்சையும் வரும்;” என்றும், நீதி.13:10 வசனத்தில், “அகந்தையினால்மாத்திரம் வாது பிறக்கும்;” என்றும், நீதி.16:18 “அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை” என்றும், மேலும் நீதி.18:12 வசனத்தில் “அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்” என்றும், நீதி.29:23 வசனத்தில் “மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்” என்றும் கூறுகிறார். எனவே நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
தேவனுடைய திருச்சபையில் காணப்பட வேண்டியது மனத்தாழ்மையே. மனத்தாழ்மையே விலையேறப்பெற்ற அணிகலன். 1யோவான் 2:16 வசனத்தில், “…மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்” ‘பெருமை’ பிதாவினாலுண்டானதல்ல. பரலோகத்துக்குப் போக முடியாது. அகங்காரிகள் பரலோகத்தில் இருக்கவே முடியாது. அகந்தைக்காரர் தேவனுடைய இராஜ்ஜியத்தை சுதந்தரிப்பது இல்லை. வேதாகமத்தில் யாரெல்லாம் அகந்தையுடன் காணப்பட்டு, தேவனுடைய கோபத்தையும், தண்டனையையும் பெற்றார்கள் என்று பார்ப்போம்!
1. பார்வோனின் அகந்தை
யாத்.5:2 வசனத்தில், “அதற்குப் பார்வோன்: நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? நான் கர்த்தரை அறியேன்; நான் இஸ்ரவேலைப் போகவிடுவதில்லை என்றான்.” யாத்.14:30 வசனத்தில் “கடற்கரையிலே எகிப்தியர் செத்துக்கிடக்கிறதை இஸ்ரவேலர் கண்டார்கள்” பார்வோனின் அகந்தையினால் இருதயக் கடினம் ஏற்பட்டு இஸ்ரவேலரை தொடர்ந்து, கொள்ளையாட வேண்டும் என்று வந்தார்கள். கர்த்தர் பார்வோனின் இரதங்களையும், அவன் சேனைகளையும் சமுத்திரத்திலே தள்ளிவிட்டார். அவனுடைய பிரதான சேனைகளையும் சமுத்திரத்திலே தள்ளிவிட்டார். அவனுடைய பிரதான அதிபதிகள் சிவந்த சமுத்திரத்தில் அமிழ்ந்து போனார்கள். பார்வோனின் அகந்தையால் தேசம் அழிக்கப்பட்டது.
2. நாகமானின் அகந்தை
2இராஜா.5:11 வசனத்தில் “அதற்கு நாகமான் கடுங்கோபங்கொண்டு, புறப்பட்டுப்போய்: அவன் வெளியே வந்து நின்று, தன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் தொழுது, தன் கையினால் அந்த இடத்தைத் தடவி, இவ்விதமாய்க் குஷ்டரோகத்தை நீக்கி விடுவான் என்று எனக்குள் நினைத்திருந்தேன்” என்றான். எலிசாவின் வார்த்தைக்கு கீழ்ப்படிய மனது இல்லை. தேவ மனிதர்கள் தேவன் சொல்லும் வார்த்தைகளை மட்டுமே கொடுப்பார்கள். மனிதர்களைப் பிரியப்படுத்த மாட்டார்கள். தேவனுடைய மனிதர்களின் வார்த்தையை தேவனுடைய வார்த்தையாக ஏற்று செயல்பட்டால் ஆசீர்வதிக்கப்படலாம்.
நாகமானின் கர்வம் அவனை தேவனின் தெய்வீக சுகம் பெறுவதைத் தடுக்கக்கூடிய கொடிய நிலைக்கு கடைசிக் கட்டம்வரை கொண்டு போயிற்று. நாகமான் தன்னைத் தாழ்த்தியபோது தேவ சுகம் பெற்றான்.
3. உசியாவின் அகந்தை
2நாளா.26:16 வசனத்தில், “அவன்(உசியா) பலப்பட்டபோது, தனக்குக் கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம் மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து, தூபபீடத்தின்மேல் தூபங்காட்டக் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.”
ஆசாரியர் மட்டுமே தூபங்காட்ட முடியும். ஆனால் உசியா இராஜா தன் பெருமையால் தூபங்காட்ட போனான். ஏசாயாவும், உசியாவும் நெருங்கிய நண்பர்கள். உசியா தேவனுடைய ஆலயத்தில் நிற்கும்போதே குஷ்டரோகம் நெற்றியில் தோன்றியது. உசியா தன் மரண நாள் மட்டும் குஷ்டரோகியாயிருந்து ஒரு தனித்த வீட்டிலே குஷ்டரோகியாய் வாசம் பண்ணினான். உசியா மரித்தபின்பு தான் ஏசாயா தேவனை உயரமும், உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவராகக் கண்டான்.
4. எசேக்கியாவின் அகந்தை
2நாளா.32:25 வசனத்தில், “எசேக்கியா தனக்குச் செய்யப்பட்ட உபகாரத்திற்குத்தக்கதாய் நடவாமல் மனமேட்டிமையானான்; ஆகையால் அவன்மேலும், யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் கடுங்கோபமூண்டது.” தேவன் அவனைக் கைவிட்டார் (2நாளா.32:31). பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார். அவனது மகன் மனாசேயின் நாட்களில் அழிவு வந்தது.
5. ஆமானின் மனமேட்டிமை
எஸ்தர் 3:5 வசனத்தில், “ஆமான் மொர்தெகாய் தன்னை வணங்கி நமஸ்கரியாததைக் கண்டபோது, மூர்க்கம் நிறைந்தவனானான்.” ஆமான் மரியாதையை விரும்பினான். மரியாதை கொடுக்கப்பட வேண்டியதுதான். ஆமான் பெருமையால் அழிந்தான். தான் வெட்டின குழியிலே விழுந்தான். மொர்தெகாயை கொலைசெய்ய உண்டாக்கிய தூக்குமேடையில் அவன் தூக்கில் போடப்பட்டான்.
6. நேபுகாத்நேசாரின் அகந்தை
தானியேல் 4:30 இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால் என் மகிமைப் பிரஸ்தாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரண்மனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான். பாபிலோன் இராஜாவின் ராஜ்யபாரம் சிறப்பானது. மிகவும் அழகிய பட்டணம், நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்ற இந்த வார்த்தை ராஜாவின் வாயில் இருக்கும்போதே வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. நேபுகாத்நேச்சார் 7 ஆண்டுகள் புல் தின்றான். பின்பு அவன் உணர்ந்தபோது உயர்த்தப்பட்டான். பிரபுக்கள் தேடி வந்து அழைத்து திரும்பவும் இராஜாவாக்கினார்கள்.
தானி.5:23 நேபுகாத்நேசாரின் குமாரனாகிய பெல்ஷாத்சார் தனது இருதயத்தைத் தாழ்த்தாமல் பரலோகத்தின் ஆண்டவருக்கு விரோதமாக தன்னை உயர்த்தினான். தேவாலயத்தின் பாத்திரங்களைக் கொண்டுவந்து தவறுதலாக பயன்படுத்தினான். கையுறுப்பு தோன்றி எழுதியது முடிவுண்டானது. அன்று இரவே கொலை செய்யப்பட்டான்.
7. யோபுவின் அகந்தை
யோபு 33:9,10 நான் மீறுதல் இல்லாத சுத்தன், நான் குற்றமற்றவன், என்னில் அக்கிரமமில்லை. இதோ என்னில் அவர் குற்றம் பிடிக்கப் பார்க்கிறார். என்னைத் தமக்குச் சத்துருவாக எண்ணிக்கொள்கிறார் என்றார் யோபு. ஆவிக்குரிய பெருமை, நான் மீறுதல் இல்லாத சுத்தன் என்று பெருமையாக கூறுகிறார். தன்னைத் தான் புகழுகிறவன் உத்தமன் அல்ல. தன்னைப் பற்றி தானே பேசுவது தவறு. நமது குறைகளை உணர்ந்து தேவ சமூகத்தில் தாழ்த்துவதினால் விடுதலை, இரட்டிப்பான நன்மைகள் கிடைக்கும். நம்மை தேவனுக்கு முன்பாக தாழ்த்துவதையே தேவன் விரும்புகிறார்.
8. யூதர்களின் பெருமை
லூக்.3:8 வசனத்தில், “ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்” ஆபிரகாமின் சந்ததி என்ற “ஜாதிப் பெருமை” யூதர்களிடம் உண்டு. தேவப் பிள்ளைகளிடம் ஜாதி, பெருமை இருக்கக் கூடாது. யூதர்கள் தங்களைப் பற்றிப் பெருமை பாராட்டினார்கள். யோவான் 8:33, “ஆபிரகாமின் சந்ததி” என்றும் யோவான் 9:28ல் கூறியபடி, “மோசேயினுடைய சீஷர்” என்றும் தங்களைக் குறித்து பெருமையாக எண்ணி வந்தனர்.
9. பரிசேயனின் பெருமை
தான் ஆணாக இருப்பதைப் பற்றிய பெருமை. ஜெபிப்பது மற்றும் தசமபாகம் கொடுப்பது பற்றிய பெருமை. லூக்.18:11 வசனத்தில், நின்று ஜெபித்த பரிசேயன் இவ்வாறு ஜெபித்தான். தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப் போலவும் இந்த ஆயக்காரனைப் போலவும், இராததினால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன் என்று பெருமையாக ஜெபித்தான். தேவன் அவன் ஜெபத்தை அங்கீகரிக்கவில்லை.
இதை வாசிக்கும் அன்பு நண்பரே! லவோதிக்கேயா சபையும் தன்னை பெருமையாக நினைத்தது. வெளி.3:17 வசனத்தில், நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத் தக்கவனும் தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல் நான் ஐசுவரியவானென்றும், திரவிய சம்பன்னனென்றும் எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறது. ஆனால் தேவன் லவோதிக்கேயா சபையை சுமந்துகொண்டு சிட்சிக்கின்றார். ஜாக்கிரதையாயிருந்து மனந்திரும்பும்படி அழைக்கிறார். நாமும் ஆவிக்குரிய பெருமையோடு யோபு பக்தனைப் போலவும் பரிசேயனைப் போல தன்னை நீதிமான் என்றும் மற்றவர்களைக் குற்றப்படுத்தியும் பேசினால் பெருமையுள்ளவர்கள் தான். தேவனிடம் நம்மை தாழ்த்தி இரக்கத்திற்காக மன்றாடுவோம். மனத் தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் கிருபை அளிப்பார், இரங்குவார். அல்லேலூயா!




