கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
ஒரு மனிதனுடைய முழு சரீரத்திலும் இருதயம் மிகவும் முக்கியமானது. அதைப் பற்றி வேதம் கூறுவது என்னவென்றால், எல்லாவற்றையும் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது. இருதயத்தில் தூய்மையுடன் காணப்பட்டால் தேவனை தரிசிக்கலாம். சுத்த இருதயமுள்ளவர்களுக்கு தேவன் நல்லவராகவே இருக்கிறார். இருதயத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளாவிட்டால் பரலோகம் போக முடியாது. பாவம் ‘நஞ்சு’ போன்ற விஷத் தன்மையுடையது. உணவில் நஞ்சு இருந்தால் சாப்பிட முடியாமல் போய்விடும், கொல்லும்.
வேதத்தில் 2இராஜா.4:38-40 வசனங்களில் எலிசா தன் வேலைக்காரனை நோக்கி, “நீ பெரிய பானையை அடுப்பிலே வைத்துத் தீர்க்கதரிசிகளின் புத்திரருக்குக் கூழ் காய்ச்சு” என்றான். ஒருவன் கீரைகளைப் பறிக்க வெளியில் போய், ஒரு பேய்க் கொம்மட்டிக் கொடியைக் கண்டு, அதன் காய்களை மடி நிறைய அறுத்து வந்து அவைகளை அரிந்து கூழ்ப்பானையிலே போட்டான். அது இன்னதென்று தெரியாதிருந்தது. நஞ்சு ஏற்பட்டது. சாப்பிட முடியவில்லை.“தேவனுடைய மனுஷனே, பானையில் சாவு இருக்கிறது” என்று கத்தினார்கள். தேவனுடைய மனுஷன் அதை சரிசெய்ய ஆலோசனை கொடுத்தார். அப்புறம் பானையிலே தோஷம் இல்லாமற்போயிற்று. இதுபோலவே இருதயத்தில் பாவம் இருக்குமானால் தோஷம், சாபம் வரும். இயேசு ஒருவர் தான் சாபத்தையும், மரணத்தையும் நீக்க முடியும்.
ஜீவ ஊற்றுகள் அடைப்பட்டிருக்கிறது ஏன்? இருதயம் திருக்குள்ளதும், கேடுள்ளதுமாக காணப்பட்டால் ஜீவ ஊற்றுகள் அடைப்பட்டுவிடும். எல்லா காவலோடும் இருதயத்தைக் காக்காவிட்டால் இருதயம் கேடுபடும். உணர்வு இல்லாமல் இருள் அடையும். நாம் நம்முடைய இருதயத்தை கெடுக்கக்கூடிய பாவங்களைப் பற்றி ஆராய்ந்து பார்ப்போம்.
1. பொருளாசை
சங்.119:36 வசனத்தில், “என் இருதயம் பொருளாசையைச் சாராமல், உமது சாட்சிகளைச் சாரும்படி செய்யும்” என்று தாவீது விண்ணப்பம் செய்கிறார். மேலும் 1தீமோ.6:10 வசனத்தில், “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்”
2. அநியாயமாய் சம்பாதித்தல்
நீதி.16:8 வசனத்தில், “அநியாயமாய் வந்த அதிக வருமானத்திலும், நியாயமாய் வந்த கொஞ்ச வருமானமே உத்தமம்” சங்.104:27 வசனத்தில், “ஏற்றவேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும்.” தேவன் கொடுக்கிறவர். அதை விசுவாசிக்க வேண்டும்.
2பேதுரு 2:15 பிலேயாம் செம்மையான வழியைவிட்டுத் தப்பி நடந்தது போல அவனின் வழியைப் பின்பற்றிப் போனவர்கள் அவன் அநீதத்தின் கூலியை விரும்பியது போல நடக்கிறார்கள். அவர்களுக்கு என்றென்றைக்குமுள்ள காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் நீதி.15:27 வசனத்தில் பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான். பரிதானங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான். மேலும் மத்.15:19 வசனத்தில் “இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகள்…புறப்பட்டுவரும்.”
3. இச்சை
யாக்.1:14,15 வசனங்களில் அவனவன் தன் தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும். பாவம் பூரணமாகும்போது மரணத்தைப் பிறப்பிக்கும். ஒரு மனிதனுக்கு கண் இச்சையின் வாசல்- வாய்-வாசல் இவற்றை காத்துக்கொள்ளாவிட்டால்… இருதயம் தீட்டுப்படும். மாம்சமும் மனதும் விரும்புகிறதைச் சாதிக்க விரும்புவது இச்சையாலேயே. மேலும் 1பேதுரு 1:4 வசனத்தில் இச்சையினாலுண்டான கேட்டுக்குத் தப்ப வேண்டும் என்று பேதுரு கூறுகிறார். ஆதி.3:6 வசனத்தில் ஏவாள் இச்சித்து, பார்த்து பறித்துப் புசித்தாள். இச்சையினால் ஜெயம் எடுக்க முடியாதவர்கள் தேவனை நோக்கி விண்ணப்பம் செய்தால் ஜெயம் கொடுப்பார்.
4. அகந்தை
மனமேட்டிமை அல்லது பெருமை என பல பெயர்கள் உண்டு. நீதி.16:18 வசனத்தில், “அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.” பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார். தானி.5:22,23 “அவருடைய குமாரனாகிய பெல்ஷாத்சார் என்னும் நீரோவென்றால், இதையெல்லாம் அறிந்திருந்தும், உமது இருதயத்தைத் தாழ்த்தாமல், ….தம்முடைய கையில் உமது சுவாசத்தை வைத்திருக்கிறவரும், உமது வழிகளுக்கு எல்லாம் அதிகாரியுமாகிய தேவனை நீர் மகிமைப்படுத்தாமல் காணாமலும் கேளாமலும் உணராமலும் இருக்கிற வெள்ளியும் பொன்னும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தீர்”
நேபுகாத்நேச்சார், பெல்ஷாத்சார் போன்ற பாபிலோனிய ராஜாக்கள் பெருமையால் தன்னை தாழ்த்தாமல் தேவனை மகிமைப்படுத்தாமல், கல்லால் செய்யப்பட்டவைகளைப் புகழ்ந்தார்கள். தாலந்துகள், அழகு, நல்ல பெற்றோர், ஜாதியைக் குறித்து பெருமை பாராட்டாதே. அவை தேவன் இலவசமாக அருளிய ஈவு. ஏசாயா 14:13,14 தேவ சிருஷ்டிப்பின் உன்னத நிலையில் சிருஷ்டிக்கப்பட்டவனே! பிசாசு, பெருமையாய் தன்னை உயர்த்தினான். இருதயத்தில் நினைத்ததை தேவன் அறிவார். மேட்டிமையானதை தேவன் தூரத்திலிருந்து அறிகிறார். பிசாசு பெருமையினால் தான் விழுந்தான்.
5. பொறாமை
ரோம.1:29-32 வசனங்களில் தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்… பொறாமையினாலும்… இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்கு பாத்திரராயிருக்கிறார்கள். ஆதி.37:4,5,11 வசனங்களில் தகப்பன் யோசேப்பிடம் அதிக அன்பாக நேசித்ததால் யோசேப்பை அவன் சகோதரர் பகைத்தார்கள். பொறாமை கொண்டார்கள், குழியில் போட்டார்கள், விற்றுப் போட்டார்கள். 1சாமு.18:7-11 வசனங்களில் ஜனங்கள் தாவீது கோலியாத்தை கொன்றதும் “சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம்” என ஆடிப்பாடியதால் சவுல் பொறாமை கொண்டான். நீதி.14:30ல் பொறாமையோ எலும்புருக்கி என்கிறார் சாலமோன் ஞானி. நீதி.27:4 வசனத்தில் “பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?” மேலும் யாக்.3:16 வசனத்தில், “வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச் செய்கைகளுமுண்டு.” என்கிறார் யாக்கோபு அப்போஸ்தலன்.
6. கசப்பு
எபி.12:15 “ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்… எச்சரிக்கையாயிருங்கள்” கசப்பை உடனே நீக்க வேண்டும். யாரால் கசப்பு வருகிறதோ அவர்களைப் பற்றி தேவனைத் துதிக்க வேண்டும். அவைகளுக்காக ஸ்தோத்திரபலி செலுத்த வேண்டும்.
கசப்பு தேவக் கிருபையை இழக்கச் செய்கிறது. அநேகரைத் தீட்டுப்படுத்துகிறது. சீர்கெட்டுப் போகச் செய்கிறது. வாயின் கீழ் விஷம் இருக்கிறது. ரோம.3:13,14 வசனத்தில் “அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது; அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது;”
இதை வாசிக்கும் பிரியமானவர்களே! நம் இருதயத்தை எல்லா காவலோடும் காத்துக்கொள்வோம். அதினிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும். நல்ல மனிதனுடைய இருதயம் நல்ல பொக்கிஷம், அதிலிருந்து நல்லவற்றையே மற்றவர்களிடம் எடுத்துச் சொல்லுவான். நம் இருதயத்தை பாவங்கள் போகக் கழுவி சுத்தமாக காத்துக்கொள்வோம். மணவாளன் இயேசுவைச் சந்திக்க ஆயத்தப்படுவோம்! மாரநாதா!




