கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
தேவன், திருச்சபையில் உள்ள விசுவாசிகளிடம் அவர்கள் பிரியமான பிள்ளைகளைப் போல தன்னைப் பின்பற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறார். எகிப்திலிருந்து வந்த பிதாக்களெல்லாரும் மோசேயினால் மேகத்தினாலும், சமுத்திரத்தினாலும் வழிநடத்தப்பட்டார்கள். எல்லாரும் ஒரே ஞான போஜனத்தைப் புசித்தார்கள். அவர்களோடே கூடச் சென்ற ஞானக் கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள். கிறிஸ்துவே அவர்களை வழிநடத்தினார். அப்படியிருந்தும், அவர்களில் அதிகமான பேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருக்கவில்லை, எனவே வனாந்திரத்தில் அழிக்கப்பட்டார்கள். நாம் பாவம் செய்யும் போது தேவனுடைய பிரியம் நம்மேல் இருக்காது.
நாம் மற்றவர்களுக்கு முன்பாக பக்தியுள்ளவர்களாகவும், வேதத்தை வாசிக்கிறவர்களாகவும், ஜெபிக்கிறவர்களாகவும் காட்டுகிறோம். இரட்சிக்கப்பட்ட பின்பும், பாவ அறிக்கை செய்து விசுவாசிகள் ஜெபிக்க வேண்டும். ஆதாமும், ஏவாளும் பாவம் செய்தபின்பு அதை தேவனிடம் ஒத்துக்கொள்ளாமல் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டியதால் தண்டனைக்குட்பட்டனர். ஏதேனில் அவர்களால் நீடித்து வாழ முடியவில்லை. நீதி.28:13 வசனத்தில் “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.” என்று கூறப்பட்டுள்ளது. தேவ பிரசன்னம் நம்மை விட்டு வலகுவதை உணர்ந்தால், உடனே அறிக்கை செய்து தேவனோடு ஒப்புரவு ஆக வேண்டும்.
வேதத்திலிருந்து பாவத்தை மறைத்து நஷ்டப்பட்டவர்களைப் பற்றியும், பாவத்தை அறிக்கை செய்து விடுதலையும், இரட்சிப்பையும் பெற்றவர்களைப் பற்றியும் காணலாம்.
1. சாராள் தான் நகைத்ததை மறைத்தாள்
ஆதி.18:12, “…சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள்.” கர்த்தர் ஆபிரகாமை நோக்கி, சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளை பெறுவது மெய்யோ என்று சொல்வானேன்? என்றார். ஆதி.18:15, “சாராள் பயந்து, நான் நகைக்கவில்லை என்று மறுத்தாள். அதற்கு அவர்: இல்லை, நீ நகைத்தாய் என்றார்.” பாவங்களை மறைக்க கூடாது. செய்த தவற்றை மறைக்காமல், ஒத்துக்கொண்டு அறிக்கை செய்ய வேண்டும். அப்பொழுது நமக்கு மேன்மை கிடைக்கும்.
2. யோசேப்பின் சகோதரர் தகப்பனிடம் மறைத்தனர்
ஆதி.38:31-34 வசனங்களில், “பல வருணமான அந்த அங்கியைத் தங்கள் தகப்பனிடத்துக்கு அனுப்பி: இதை நாங்கள் கண்டெடுத்தோம், இது உம்முடைய குமாரன் அங்கியோ, அல்லவோ, பாரும் என்று சொல்லச்சொன்னார்கள்” இவ்வாறு தங்கள் தகப்பனிடம் மறைத்தனர். சகோதரனை இஸ்மவேலர் கையில் 20 வெள்ளிக் காசுக்கு விற்றுப்போட்டதை மறைத்தனர். யாக்கோபு – யோசேப்பை பார்வோன் அரண்மனையில் 22 ஆண்டுகள் கழித்துச் சந்திக்கும் வரை உண்மை வெளிவரவில்லை. நிரபராதிகள் போல சமுதாயத்திலும், குடும்பத்திலும் நல்லவர்களாக நடித்தனர். யாக்கோபின் காலம் வரை குற்ற உணர்வுடன், பாவம் மன்னிக்கப்படாமல் தான் வாழ்ந்து வந்தனர். ஆதி.50:15-21 வசனங்களில் யோசேப்பின் சகோதரர், “…உமக்குப் பொல்லாங்கு செய்திருந்தாலும், அவர்கள் செய்த துரோகத்தையும் பாதகத்தையும் நீர் தயவுசெய்து மன்னிக்கவேண்டும்…” என்று சொல்லினர். யோசேப்பு மன்னித்தார், பராமரித்தார், அதுபோல் இயேசுவும் நம்மை மன்னித்து, ஆசீர்வதிக்கிறார்.
3. யாக்கோபு தவறை ஒத்துக்கொண்டு தேவனோடு போராடினான்
ஆதி.32:20-32 வசனங்களில், யாக்கோபு தன் சகோதரனுக்கு வெகுமதிகளை அனுப்பிவிட்டு, தேவனிடம் போராடினான். நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிட மாட்டேன் என்று போராடி ஆசீர்வாதத்தைப் பெற்றான்.
4. குற்றத்தை மறைத்த ஆகான் – அழிந்தான்
யோசுவா 7:20-25 வசனங்களில், ஆகான், தேவன் விலக்கின சாபத்தீடான பொருட்களை இச்சித்து, எடுத்து, தன் கூடாரத்தில் மறைத்து வைத்தான். வெள்ளியையும், பொன்னையும் கர்த்தரின் பொக்கிஷத்தில் சேர வேண்டியதை தனக்காக எடுத்துக்கொண்டான். யாரிடமும் தன் இரகசிய பாவத்தை வெளிப்படுத்தவில்லை. பாவ அறிக்கை செய்ய பிந்திவிட்டான். யோசுவா கேட்பதற்கு முன்னர் தான் தேவனுக்கு முன்பாக மறைந்திருக்க முடியாது என்பதை உணரவில்லை. எனவே ஆகான் குடும்பம் முழுவதும் கல்லெறிந்து கொலை செய்யப்பட்டனர்.
சங்.139:7-10 வசனத்தில், “உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? ….உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்.” என்று தாவீது சொல்கிறார். தேவனுக்கு முன்பாக யாரும் எதையும் மறைக்க முடியாது. கர்த்தரின் கண்கள் பூமியெங்கும் நம்மை நோக்கி உலாவிக் கொண்டிருக்கிறது.
ஆகான் சந்தர்ப்பம் கிடைத்தும் உணர்வடையவில்லை. உடனே பாவ அறிக்கை செய்யவில்லை. எனவே தன் குடும்பம் அழிக்கப்பட காரணமாக மாறினான். நமது நல் வாழ்விற்கு தடையாயிருக்கும் பாவங்களை கல்வாரியில் அறிக்கைசெய்து விட்டுவிட வேண்டும். அப்பொழுது கர்த்தர் நமக்கு இரங்குவார்.
5. தாவீது பாவத்தை உணர்ந்து, மறைக்காமல் இரக்கத்துக்காக மன்றாடினான்
2சாமு.12:13 வசனத்தில், “அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான்.” நாத்தான் தாவீதை நோக்கி, “நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார்.” தாவீதின் பாவம் நாத்தான் தீர்க்கதரிசியினால் உணர்த்தப்பட்டவுடன், அவர் அறிக்கை செய்தார்.
மேலும் 2சாமு.24:17 வசனங்களில், “ஜனத்தை உபாதிக்கிற தூதனை தாவீது கண்டபோது, அவன் கர்த்தரை நோக்கி: இதோ, நான்தான் பாவஞ்செய்தேன்; நான்தான் அக்கிரமம்பண்ணினேன்; இந்த ஆடுகள் என்னசெய்தது? உம்முடைய கை எனக்கும் என் தகப்பன் வீட்டுக்கும் விரோதமாயிருப்பதாக என்று விண்ணப்பம்பண்ணினான்.” நாத்தான் சொன்னதுபோல உன் பிள்ளைகள் உனக்கு விரோதமாய் எழும்புவார்கள் என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறிற்று, ஆனாலும் தாவீது உரிமையை கேட்காமல் இரக்கத்துக்காக கெஞ்சினார்.
அன்பு நேயரே! பாவத்தை மறைக்காமல் அறிக்கைசெய்து பாவத்தை விட்டுவிட்டால் தேவனிடம் இரக்கம் பெறுவோம். பாவங்களை மறைத்து, வெளி உலகத்துக்கு நல்லவர்கள் போல நடித்தால் ஆகானைப் போல தண்டனை பெறுவோம். அவன் பாவத்தால் குடும்பமே அழிக்கப்பட்டது. எபி.4:16ல் சொல்லப்பட்டதுபோல “ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.” என்ற தேவ வார்த்தைக்கு வாழ்க்கையை அர்ப்பணிப்போம். மனதுருக்கமுள்ள நமது தேவன் நல்லவரும், மன்னிக்கிறதற்கு தயவு பெருத்தவருமாய் இருக்கிறார். அல்லேலூயா!




