நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்

Written by Pr Thomas Walker

January 22, 2012

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
நம்முடைய தேவனுக்கு ஒப்பான தேவன் ஒருவருமில்லை. நித்திய பிதா நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். அவரது அறிவு ஆராய்ந்து முடியாதது. தேவன் மனிதனை நித்தியத்தை சுதந்தரித்து என்றென்றும் அவருடன் வாழ வேண்டும் என்று படைத்திருக்கிறார். ஆனால் உலக வாழ்வில், மனிதன் பலவித பாடுகளையும், இன்னல்களையும் சந்திக்க வேண்டியது உள்ளது. பலவிதமான வேதனைகளையும், துன்பங்களையும் சந்தித்து நெருக்கப்படும் வேளையில் மனிதன் யாராவது நம்மை காப்பாற்றுவார்களா? யார் நமக்கு இரங்குவார்கள்? யார் நம்மை தேற்றுவார்கள்? யார் நம்மை விடுவிப்பார்கள்? என்று அங்கலாய்த்து வேதனைப்படுகிறான். ஆனால் வானத்தையும், பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள தேவன் நம்மைப் பார்த்து கூறுகிறார். “நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்” ஏசா.41:10 என்று கூறி நம்மைத் தேற்றுகிறார். நாம் கஷ்டப்படும் வேளைகளில் அவருடைய கிருபை நம்மைத் தாங்குகிறது. அவருடைய வாக்குத்தத்தங்கள் நம்மைத் தேற்றுகிறது.


1பேதுரு 5:10 வசனத்தில், கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக.” தேவன் விசுவாசிகளை நிலைநிறுத்த விரும்புகிறார். நிலைநிறுத்தப்பட வேண்டுமானால் தேவபிள்ளையை தேவன் பலப்படுத்த விரும்புகிறார். நாம் பலப்படுத்தப்படுவதற்கு பல வழிகளை தேவன் வைத்துள்ளார். 2சாமு.22:35, “வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.” என்று தாவீது கூறுகிறார்.
தேவன் நம்மை எவ்வாறு பலப்படுத்துகிறார் என்பதை ஆராய்ந்து பார்ப்போம்?

1. கர்த்தருடைய நாமமே நமக்கு பெலன்
சங்.144:2 வசனத்தில் பார்க்கும்போது, தேவனே நம் பெலன், கோட்டை, கர்த்தருடைய நாமமே பலத்த பெலனாகும். அவருடைய நாமத்தை தியானிக்கும்போதே பெலன் உண்டாகிறது. நீதி.18:10 வசனத்தில், “கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்” மேலும் 1சாமு.17:45 வசனத்தில், “…சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்” என்று தேவனுடைய நாமத்திலே சென்றதால் கோலியாத்தை வீழ்த்த முடிந்தது. தாவீது தன்னுடைய பெலத்தைச் சார்ந்து கொள்ளவில்லை. சாத்தானுடன் உள்ள போராட்டத்தில் தேவனுடைய பெலனையே நாம் சார்ந்துகொள்ள வேண்டும்.

2. பரிசுத்த ஆவியானவர் பெலப்படுத்துகிறார்
அப்.1:8, “பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைவீர்கள்…” இயேசுவின் சிலுவைப் பாடுகளின்போது பேதுருவினால் வேலைக்காரிக்கு முன் நிற்க முடியவில்லை. நீயும் கலிலேயனா? உன் பேச்சு அப்படி உள்ளது என்றதும், (மத்.26:69,74) 3 முறைகள் அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும், சத்தியம் பண்ணவும் தொடங்கினார். ஆனால் பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியின் வல்லமையால் நிறைந்தபோது பலப்பட்டு சாட்சியாக மாறினார். பரிசுத்த ஆவியைப் பெற்றபின் எருசலேமிலே பிரசங்கித்தபோது 3000 பேர், 5000 பேர் என்று ஜனங்கள் திருச்சபையில் சேர்ந்தனர்.
எபே.6:10 வசனத்தில் “…கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்” ஏனெனில் சத்துருவானவனை எதிர்க்க பெலன் வேண்டுமானால் தேவ வசனத்தால் பலப்பட வேண்டும். தேவனையும், வசனத்தையும் விசுவாசிப்பதால் பெலன் வரும்.

3. தேவனுடைய சர்வாயுத வர்க்கங்களால் பெலன் உண்டு
எபே.6:13-18 வசனங்களில் பிசாசை எதிர்த்துப் போராடி ஜெயிக்க தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தை தரித்துக்கொள்ளுங்கள். மேலும் 2கொரி.12:9-10 வசனங்களில் “என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார்” என்று வேதம் சொல்லுகிறது. தேவனுடைய கிருபையினால் நாம் பெலப்படுத்தப்படுகிறோம்.

4. பிரதிஷ்டையை உடையவனுக்கு பெலன் உண்டு
நியாய.16:17 நீ தானியேலைப்போல பிரதிஷ்டை உள்ளவனாக இரு, உனக்கு வெற்றியும் பலனும் உண்டு, தேவனுடைய மனுஷனாகிய சிம்சோன் பிரதிஷ்டையில் இருந்து விலகியதால் பலத்தை இழந்தான். உலகமாகிய தெலிலாளின் மடியில் படுத்த சிம்சோன் தன் பிரதிஷ்டையை மாற்றியதால் அவனுடைய பெலன் அவனைவிட்டுப் போய்விட்டது. கண்கள் பிடுங்கப்பட்டு பெலிஸ்தியர்களால் ஏளனமாக பரிகாசமாக பேசப்பட்டான். சிம்சோன் பிரதிஷ்டைய இழந்ததால் எதிரிகளிடம் மாட்டினான்.

5. ஜெபிக்கிற மனிதன் வாழ்வில் பெலன்
2சாமு.22:7 “எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார்; என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று.” ஜெபிக்கிற மனிதனுக்கு வெற்றி உண்டு, பெலன் உண்டு, இடைவிடாமல் ஜெபித்த தானியேலின் வாழ்க்கை வெற்றியுள்ளதாயிருந்தது.

6. துதிக்கிறவர்கள் வாழ்க்கையில் பெலன் உண்டு
நியா.1:2-4 “அதற்குக் கர்த்தர்: யூதா எழுந்து புறப்படக்கடவன்; இதோ, அந்த தேசத்தை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்” என்றார். நியா.1:4 வசனத்தில், “யூதா எழுந்துபோனபோது, கர்த்தர் கானானியரையும் பெரிசியரையும் அவர்கள் கையிலே ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் பேசேக்கிலே பதினாயிரம்பேரை வெட்டினார்கள்.” யூதா என்றால் துதி. யூதா முன்னால் போகும்போதே வெற்றி உண்டானது. துதியால் உனக்கு பெலனுண்டு. துதியின் வாழ்க்கையால் நம்முடைய பெலன் பெருகும். வெற்றி கிடைக்கும், சத்துரு தலை கவிழ்ந்து ஓடும்படி தேவன் கிரியை செய்வார்.

7. கர்த்தருக்காக காத்திருக்கிறவர்களுக்கு பெலன்
ஏசா.40:31 வசனத்தில், “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்” மேலும் சங்.40:1-3 வசனங்களில் “கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.” நம் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளுக்காக நாம் அவருடைய வேளைக்காக (நேரம்) பொறுமையுடன் அவர் சமூகத்தில் காத்திருந்தால், புதுப்பெலன் பெற்று கழுகுகளைப் போல எழும்புவோம். தேவனுடைய சமூகத்தில் நீண்ட நேரம், வருடங்கள் காத்திருப்பவர்கள் மிகுந்த பெலனைப் பெறுவார்கள்.


இந்தப் புதிய ஆண்டிலும் தேவன் உங்களைப் பலப்படுத்தி, உங்களுக்கு சகாயம் பண்ணுவாராக! எபே.6:18 வசனத்தில் சொல்லப்பட்டது போல, எந்த சமயத்திலும் சகல விதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் விழித்துக்கொண்டிருங்கள். தேவன் உங்களுக்கு புதிய பெலனையும், புதிய கிருபைகளையும் தந்து இந்த வருடம் முழுவதும் பாதுகாத்து வழிநடத்துவார். பிசாசின் சக்திகளை மேற்கொள்ளும் வல்லமையையும் பெலனையும் தந்து ஆசீர்வதிப்பாராக! ஆமென்.





Author

You May Also Like…

Share This