கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
நம் அன்றாடக வாழ்க்கையிலும், வீட்டிலும், அலுவலகத்திலும், சமுதாயத்திலும் நாம் பல நெருக்கடியான காரியங்களை சந்திக்கிறோம். நாம் விரும்பாத விதத்தில் பலர் நம்மை சிறுமைப் படுத்தி, துன்பப்படுத்துகின்றனர். தேவன் நம் வாழ்வில் வியாதி, கடன் பிரச்சனை, அடிமைத்தனம், ஏளனம், பரிகாசம், நண்பர்கள் விரோதிப்பது, நன்மையைச் செய்தபோது தீமையை அனுபவிப்பது போன்ற பல காரியங்களை அனுமதிக்கிறார். வேலையில்லா திண்டாட்டம், திருமணமாகாமல் தடை ஏற்படுதல், பிள்ளை இல்லாத வேதனை, வேலை மாற்றம் கிடைக்காதது போல பல காரியங்களை நாம் சந்தித்து, சிறுமைப்பட்டு வேதனையுடன் நாட்களை கழிக்கிறோமோ? தேவன் நமக்கு ஒரு நல்ல செய்தியை இன்று கூறுகிறார். “…உன்னை நான் சிறுமைப்படுத்தினேன், இனி உன்னைச் சிறுமைப்படுத்தாதிருப்பேன். இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் நுகத்தை முறித்து, உன் கட்டுகளை அறுப்பேன்” (நாகூம் 1:12,13).
அன்னாள் தேவனுடைய ஆலயத்தில் சென்று தனக்கு பிள்ளையில்லாததால் ஏற்பட்ட சிறுமையை எண்ணி கர்த்தரிடம் ஜெபித்தாள். தேவரீர் என் சிறுமையைப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளும் என ஜெபிக்கிறான் (1சாமு.1:11). ஆகார் சிறுமைப்படுத்தப்பட்டாள். தேவன் அனுமதித்தார். ஆபிரகாம் அவளையும் அவள் குமாரன் இஸ்மவேலையும் வெளியே அனுப்பிவிட்டார். தாவீதின் வாழ்க்கையிலும் தீராத வியாதி அவரைப் பிடித்தது. மிகவும் சிறுமைப்பட்டான். சங்.41:8 வசனத்தில் “தீராவியாதி அவனைப் பிடித்துக்கொண்டது; படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள்” நம் வாழ்வில் தேவன் அனுமதிக்கும் சிறுமைப்படுத்தப்படும் அனுபவங்கள் எல்லாமே மிக அருமையானது. அது நமக்கு விசேஷமான ஆசீர்வாதத்தை தேவனிடமிருந்து பெற்றுக் கொடுக்கும் தேவ தூதனாக அதை எண்ண வேண்டும்.
முதலாவதாக – தேவன் இஸ்ரவேலரை சிறுமைப்படுத்தினார்
அ) பாடம் கற்றுக்கொடுக்க
ஆ) அற்புதங்கள் செய்ய
உபா.8:2-6 வசனங்களில், “உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக” அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று உணர்த்தும்படியாக மன்னாவினால் போஷித்து அற்புதம் செய்தார்.
மற்ற மக்களின் நிலைமையை உணரும்படியாக குடும்பத்திலும், சரீரத்திலும் செயல்படுத்தி கற்றுக்கொடுக்கிறார். ஆகாரம் சரியில்லை – விரும்பிய பலவகை உணவுகளை வனாந்திரத்தில் பெற முடியாது. தண்ணீர் கசப்பாக இருந்தது.
யாத்.13:18ல் “சிவந்த சமுத்திரத்தின் வனாந்தர வழியாய் ஜனங்களைச் சுற்றிப் போகப் பண்ணினார். இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து அணியணியாய்ப் புறப்பட்டுப்போனார்கள்.” 40 வருடங்கள் வனாந்திரத்தில் இஸ்ரவேலர் சுற்றி நடந்தனர். உலகில் எத்தனையோ விதமான ஜாதிகள், மனிதர் இருந்தாலும் – தேவன் உன்னை நேசிக்கிறார். உன்னை ஆசீர்வதிக்க விரும்புகிறார்.
இரண்டாவதாக – பெருகப் பண்ணுவதற்காக சிறுமைப்படுத்துதல்
ஆதி.41:52ல் “நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப்பண்ணினார்…” தேவன் யோசேப்பை இஸ்ரவேலரை அடிமைத்தனத்திலிருந்து மீட்கும் ஒரு இரட்சகனாகவும், யாக்கோபின் குடும்பம் அழியாமல் பாதுகாக்கும் போஷகனாகவும் உயர்த்த விரும்பினார். எனவே உபத்திரவத்தின் பாதை வழியாகப் போக வேண்டியது யோசேப்புக்கு அவசியமாயிருந்தது. யோசேப்பின் சொப்பனம், தரிசனத்தைக் குறித்து சகோதரர்கள் பரிகாசம் செய்தனர். எகிப்து தேசத்துக்கு போகும் மீதியானியரிடம் அடிமையாக விற்றனர். பொய் குற்றம் சாட்டப்பட்டு சிறைச்சாலையில் தள்ளப்பட்டான். ஏணிப் படி போல சோதனைகள் படிப்படியாக, அடுத்து வந்து சோதித்து மிகவும் சிறுமைப்படுத்தப்பட்டான். 1,2,3,4,5 என்று சிறுமையின் படிகளை ஒவ்வொன்றாக தாண்டினான். தேவன் சிறுமையிலிருந்து உயர்த்தினார்.
நீ மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க விரும்புகிறாயா? நிச்சயம் சிறுமைப்படுவாய், சோர்ந்து போகாதே, நிச்சயம் ஆசீர்வாதம் உண்டு. மோசேயின் வாழ்க்கையிலும் அரண்மனையில் இருந்த அவன், 40 வருடங்கள் வனாந்திரத்தில் ஆடு மேய்த்தான். சிறுமைப்படுத்தப்பட்டான். தேவன் இஸ்ரவேலரை அடிமைத்தனத்திலிருந்து மீட்கும் இரட்சகனாக உயர்த்தினார்.
ரோம.5:3,4 வசனங்களில் “…உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்டுகிறோம்.”
மூன்றாவதாக – சிறுமையானவர்களை விசாரிக்கிறார்
யோபு 36:6 வசனத்தில், “சிறுமையானவர்களின் நியாயத்தை விசாரிக்கிறார்” என்று யோபு கூறுகிறார். யோபு வாழ்க்கையிலே அவர் எவ்வளவாய் சிறுமைப்படுத்தப்பட்டார். நண்பர்கள் குறை கூறினர். மனைவி கூட தூஷித்து ஜீவனை விடக் கூறினாள். ஆனால் தேவன் யோபுவை விசாரித்தார். இரண்டு மடங்கு ஆசீர்வதித்தார். தாவீது வாழ்க்கையிலும் தாவீதை மிகவும் சிறுமைப்படுத்தினார். 2சாமு.16:12 வசனத்தில் “ஒருவேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார் என்றான்.” சீமேயி தாவீதை தூஷித்தான்.
சங்.72:4, “ஜனத்தில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார்.” மேலும் “உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும் தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.”
சங்.9:9ல் “சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்.” தேவன் அனுமதித்த சிறுமை சமாதானத்தைக் கெடுக்காது.
சங்.41:1ல் “சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.” சிறுமைப்பட்டவர்களுக்கு நேராக உன் கண் திருப்பப்பட உன்னை இந்தப் பாதையில் நடத்துகிறார்.
ஏசா.61:1 “சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்…” மேய்ப்பர்கள் ஊழியத்தை தரிசனத்துடன் செய்ய வேண்டும். அந்நியர், பரதேசிகளின் உபத்திரவத்தை நினைக்க இஸ்ரவேலரை சிறுமைப்படுத்தி இந்த வனாந்திரப் பாதையில் நடத்தினார்.
நான்காவதாக – சரியான பாதையில் நடக்க சிறுமைப்படுத்துகிறார்
சங்.119:67,71 வசனங்களில், “நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன். நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்” என்கிறார் தாவீது. எண்.22:28 வசனத்தில், “உடனே கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்; அது பிலேயாமைப் பார்த்து: நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன்” என்றது. தீர்க்கதரிசிக்கு புத்தி வர பேசாத மிருகம் பேசிற்று. தீங்கு செய்யும்படி வழியிலே நின்று உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்திருக்கிற கர்த்தருடைய தூதனைக் கண்டதும் பணிந்தான்.
ஐந்தாவதாக – பின் நாட்களில் உனக்கு நன்மை செய்யும்படியாக சிறுமைப்படுத்துகிறார்
உபா.8:15 வசனத்தில், “உன்னுடைய பின்நாட்களில் உனக்கு நன்மை செய்யும்பொருட்டு, உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைச் சோதிக்கிறார்…”
ஆறாவதாக – சிறுமைப்பட்டவர்களின் கூக்குரலைக் கேட்கிறார்
யோபு 34:27 வசனத்தில், “எளியவர்களின் கூக்குரல் அவரிடத்தில் சேரும்படி செய்ததினாலும், சிறுமையானவனுடைய கூக்குரலைக் கேட்கிற அவர்,” என்று யோபு புத்தகத்தில் எலிகூ கூறுகிறார். தேவனை நோக்கி கூப்பிடும்போது மனித உதவிகளை நமக்கு கட்டளையிடுகிறார். உன்னை மீட்கும் காலம் வந்தது. இஸ்ரவேலர் எகிப்தில் இருக்கும்போது தேவனை நோக்கி கூக்குரலிட்டனர். தேவன் கூக்குரலைக் கேட்டு மோசேயை அனுப்பினார். கூக்குரல் வரும் வரை தேவன் கிரியை செய்யவில்லை.
ஏழாவதாக – சிறுமைப்பட்ட, துன்பப்பட்ட நாள்களுக்கு ஈடாக திருப்தியாக்குகிறார்
ஈடு செய்வதற்காக சிறுமைப் படுகிறாய், சங்.90:15 “தேவரீர் எங்களைச் சிறுமைப் படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்.” யோவேல் 2:25 “…வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்” என்கிறார்.
இதை வாசிக்கும் அன்பு நேயரே! கர்த்தர் சிறுமைப்பட்ட நம்மை மகிழ்ச்சியாக்குகிறார். நமது கூக்குரலை கேட்கிறார். நம் கண்ணீரை விசாரித்து பலன் அளிப்பார். நம் கட்டுகளை அறுத்து நம்மை விடுவிப்பார். கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள்! அல்லேலூயா!




