நீங்கள் தேவனுடைய புத்திரராகுங்கள்

Written by Pr Thomas Walker

August 22, 2011

கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
நாம் தேவனுடைய பிள்ளைகளாகும் பாக்கியத்தை தேவ குமாரனை ஏற்றுக்கொண்டு அவர் இரத்ததினால் கழுவப்பட்டதால் பெற்றோம். இரட்சிக்கப்பட்டபின் தேவனுடைய வீட்டில் அங்கத்தினராகிறோம். மனம் திரும்பி ஞானஸ்நானம் எடுத்தவர்கள் தேவனுடைய பிள்ளைகள் எனப்படுகின்றனர். தேவனுடைய பிள்ளைகள் பயப்பட தேவையில்லை. எதிர்காலத்தைக் குறித்து பயப்பட வேண்டாம். கலா.4:6 வசனத்தில் “மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாகத் தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.” தேவனுடைய எதிர்பார்ப்பு என்னவென்றால் நாம் சபையுடன் இணைந்து செயல்பட வேண்டும். 1யோவான் 2:12-14 வசனங்களில் யோவான் தேவனுடைய சபையில் உள்ள 3 விதமான மக்களை குறிப்பிடுகிறார். பிள்ளைகள், வாலிபர்கள், பிதாக்கள். பிதாக்கள் என்பவர்கள் தேவனை அறிந்தவர்கள். ஏனோக்கைப் போல தேவனோடு நடப்பவர்கள். பிள்ளைகள் பாவ மன்னிப்பை பெற்ற எல்லோருமே. வாலிபர்கள் பொல்லாங்கனை ஜெயித்தவர்கள். அவர்கள் பலவான்களாயிருந்து தேவ வசனத்தில் நிலைத்திருக்கிறார்கள். தேவ தூதர்கள் கூட வார்த்தையைக் கேட்டு வசனத்தின் படி செய்கிறார்கள். (சங்.103:20)


தேவன் உலகில் காணப்படும் எல்லா சக்திகளை விட பெரியவர். எல்லாவற்றையும் மேற்க்கொள்ளக்கூடிய, ஜெயிக்கக் கூடிய சக்தியுள்ளவர்தான் இயேசு. அவருக்கு ஒப்பான, நிகரான சக்தி ஒன்றுமில்லை. ஆவிக்குரிய வாழ்வில் ஒரு மனிதன் எவ்வளவு வரம் பெற்றாலும் அது ஓரளவு தான் வளர்ச்சியைக் கொடுக்கும். கனி கொடுக்கும்போது தான் உண்மையான வளர்ச்சி விசுவாசிகளுக்கு வரும்.


மேலும் கலா.4:1,2,3 வசனங்களில், சிறுபிள்ளை எதையும் அனுபவிக்க முடியாது. சிறுபிள்ளை வீட்டு விசாரணைக்காரருக்கு கீழ்ப்பட்டிருக்கிறான். சிறுபிள்ளை உலக வழிபாட்டுக்கு கீழ்ப்பட்டிருக்கும். புத்திரராக மாற்றப்பட்டவர்கள் இவ்வுலக வழிபாட்டுக்கு கீழ்ப்பட்டவர்கள் அல்ல. பிசாசை முகமுகமாய் எதிர்க்கிறவர்கள் பிசாசை ஜெயித்து மேற்கொள்பவர்கள்.

தேவனுடைய புத்திரராக சபையில் உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை கீழே ஆராய்வோம்
 
முதலாவதுகனி கொடுப்பவர்கள் தேவனுடைய புத்திரர்
மத்.13:38 வசனத்தில், “நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்” நல்ல விதை பலன் கொடுக்கும். தேவனுடைய ராஜ்யத்தின் புத்திரர் வசனத்தைக் கேட்கிறவனும், உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும், அறுபதாகவும், முப்பதாகவும் பலன் தருவார்கள்.

 இரண்டாவதாகவேத பிரமாணத்தை கைக்கொள்ளுகிறவன் தேவனுடைய புத்திரன்
நீதி.28:7 வசனத்தில், “வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன்;” வேதப் பிரமாணத்தின்படி தேவ சித்தம் செய்பவர்களே தேவனுடைய புத்திரர். இயேசு உலகில் வாழ்ந்தபோது எப்பொழுதும் தன் விருப்பம் செய்ய விரும்பவில்லை. பிதாவுக்கு பிரியமானதையே செய்தார். பெற்றோரைத் தெரிந்தெடுக்கும் உரிமை இயேசுவுக்கு இருந்தது. ஊர், தொழில், மரணம். ஆனால் தன் விருப்பம் செய்யாமல் ஒவ்வொன்றிலும் பிதாவின் சித்தம், அவர் காண்பித்ததையே செய்தார். எளிமையான வாழ்க்கையையே தெரிந்துகொண்டார். சுய விருப்பத்தை நாடாதவர், செய்யாதவர்.

 மூன்றாவதாகஅசுத்தமானதை தொடாதவர்கள் தேவனுடைய புத்திரர்
2கொரி.6:17,18 வசனங்களில், “…நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்” பரிசுத்த வாழ்க்கைக்கு அழைக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகள் அவர் பரிசுத்தராக இருப்பதுபோல நாமும் பரிசுத்த வாழ்க்கை வாழ வேண்டும். பரிசுத்தமாகிறவன் இன்னும் பரிசுத்தமாக வேண்டும். பிதா பூரண சற்குணராக இருப்பது போல பூரண சற்குணராக மாற வேண்டும்.

 நான்காவதுசமாதானம் பண்ணுகிறவர்கள் தேவனுடைய புத்திரர்
மத்.5:9 வசனத்தில், “சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.” இயேசு கிறிஸ்துவைப் பற்றி பவுல் அப்போஸ்தலன் கூறும்போது சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படி சமாதானம் பண்ணி, பகையைச் சிலுவையினால் கொன்று அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார் (எபே.2:15,16). உலகத்தில் பாவத்தில் வாழும் மனிதர்களை தேவனோடு ஐக்கியம் உள்ளவர்களாக – தேவனோடு இணைக்கும் வேலையைச் செய்பவர்கள் ஆத்தும ஆதாயப் பணி செய்பவர்களே தேவனுடைய புத்திரர். தேவ சபையிலும் சமாதானம் இல்லாமல் இருக்கும் இருவரை தேவனோடு ஐக்கியப்படுத்தி அவர்களிடையே சமாதானத்தை உருவாக்குபவர்கள்.


(எ.கா) ஒரு தகப்பனும், மகனும், தாயும் இருந்தனர். மகன் துன்மார்க்கமாய் வாழ்ந்து தூர தேசம் போய்விட்டான். தாயிடம் மட்டும் தொடர்பு வைத்து பேசி வந்தான். தகப்பனை நேசிக்கவில்லை. தாய்க்கு மரண நேரம் வந்தது. வியாதி முற்றி மரணத்துக்காக போராடும் வேளையில் தகப்பனிடம் தன் மகனைக் காண விருப்பம் தெரிவித்தாள். தகப்பனுக்கு இஷ்டமில்லை. மகனும் தகப்பனுக்கு நீதி, இரக்கம் செய்ய கடிதம் எழுதினான். தாயைப் பார்க்க வருமாறு தகப்பன் மகனை அழைத்தார். மகன் வந்ததும் தகப்பனுடைய கரத்தையும், மகனுடைய கரங்களையும் இணைத்துவிட்டு தாய் மரித்தாள். தாய் மரணப் படுக்கையில் தகப்பனையும், மகனையும் ஒப்புரவாக்கினாள். இருவரையும் சமாதானப்படுத்தி மரித்தாள்.

 ஐந்தாவதுஅசாதாரணமானதைச் செய்பவன் தான் தேவனுடைய புத்திரன்
மத்.5:44,45 வசனங்களில், “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப் படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்;” என்கிறார் இயேசு.
(எ.கா) அமெரிக்காவில் தன் ஒரே மகனைக் கொன்றவனை நியாயாதிபதியிடம் கேட்டு அவனைத் தண்டனையிலிருந்து விடுவித்து தன் மகனுக்குப் பதிலாக சுவிகாரம் செய்து கொண்டாள். இது மாசற்ற தூய்மையான தேவ அன்பை வெளிக்காட்டும் செயல். ஓசியா 7:8 வசனத்தில், “எப்பிராயீம் அந்நியஜனங்களோடே கலந்திருக்கிறான்; எப்பிராயீம் திருப்பிப் போடாத அப்பம்.” தேவ புத்திரன் திருப்பிப் போடப்பட வேண்டியது அவசியம். செய்யக் கூடாததை செய்பவனே தேவ புத்திரன். (எ.கா) டேவிட் வில்கர்சன் என்ற போதகர் அமெரிக்காவில் போதை உண்போர் மத்தியில் ஊழியம் செய்தார். பலர் நிந்தித்து, அவமானமாய் தூஷித்த போதும் அவர் பெயரைக் கெடுக்க முயற்சித்தும் தொடர்ந்து ஊழியம் செய்து அநேகரை ஆதாயப் படுத்தினார். காடுகளில் ஜீம், எலியட், நேட், செயின்ட் போன்ற வாலிபர்கள் மிஷனெரிப் பணியை “ஆக்குவா” என்ற இனத்தவர் மத்தியில் செய்தபோது கொல்லப்பட்டனர். பிறகு இவர்களுடைய மனைவிமாரும், சகோதரியும் அதே இடத்திற்கு சென்று தைரியமாக ஊழியம் செய்தபோது தேவன் பெரிய அறுவடையை கட்டளையிட்டார். விமானம் ஓட்டிச் சென்று மரித்த மிஷனெரியின் மகன், அக்குவா மக்களின் தலைவன் தன் தகப்பனை கொன்ற – மனந்திரும்பி போதகராக வந்தபின் அதே ஆற்றில் அவனால் ஞானஸ்நானம் பெற்றான். என்ன ஆச்சரியம்! பகைவர்களை மன்னித்து கிறிஸ்துவின் அடியவர்களாக மாற்றினர்.

 ஆறாவதாகபுத்திரனுக்கு சிட்சை உண்டு. சிட்சையை சகித்தால் தேவ புத்திரர்
நீதி.3:12 “தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.” எபி.12:5-11 வசனங்களை வாசித்துப் பாருங்கள்.
எபி.12:7 வசனத்தில், “நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?” தேவ புத்திரர்கள் தேவனுடைய சத்தத்துக்கும் தேவனுடைய சிட்சைக்கும் உணர்வுடையவர்களாய் இருப்பார்கள்.
(எ.கா) West Germany-ல் கானான் என்ற மடத்தை பேசியாசிலிங்க் என்ற அம்மையார் நிறுவினார்கள். விசுவாச ஜீவியத்துடன் ஜெபத்தில் எல்லா தேவைகளையும் பெற்று அதில் உள்ள சகோதரிகள் வாழ்ந்து வந்தனர். பணத்தேவைகள், மாடு, வேன், கட்டிடங்கள், தங்கள் அன்றாட தேவைகளுக்கும் தேவனையே சார்ந்து வாழ்ந்தனர். இவர்களில் இரண்டு சகோதரிகளுக்கு மன வருத்தம், கருத்து வேறுபாடு வந்தால்கூட ஜெபத்திற்கு பதில் வராது, தேவைகள் சந்திக்கப்படாது. எனவே அவர்கள் தேவ சிட்சையை உணர்ந்து தங்கள் வாழ்க்கையின் குறைகளை திருத்தி எப்பொழுதும் தேவனை பிரியப்படுத்தியே வாழ்கின்றனர்.


ஊழியத்தில் ஈடுபடும் தேவ புத்திரர் மன வருத்தம், கசப்பு, வைராக்கியம் இல்லாமல் – சமாதானம் பண்ணி ஒருமனதுடன் வாழ்ந்தால் நிறைவான நன்மை வரும்.

 ஏழாவதாகதேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறவர்களே தேவனுடைய புத்திரர்
ரோம.8:14 “மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.” (எ.கா) ஆப்பிரிக்க தேசத்தில் மிஷனெரிகள் சிலர் ஒரு கிராமத்திலிருந்து மறு கிராமத்திற்கு ஊழியம் செய்யப் போனபோது ஆற்றைக் கடக்க முயற்சித்தபோது முதலைகள் அநேகம் இருப்பதைக் கண்டு, கரையில் முழங்காலில் நின்று ஜெபித்தபோது கர்த்தர் பெரிய அற்புதத்தை செய்தார். பெரிய மரம் ஆற்றின் குறுக்கே சாய்ந்து விழுந்தது. மிஷனெரிகள் மரத்தின் வழியாக மறுகரை சென்றனர். தேவ பிள்ளைகள் ஆற்றைக் கடக்க பரிசுத்த ஆவியானவர் உதவி செய்தார். சாது சுந்தர்சிங் வாழ்க்கையில் கூட ஒரு நபர் மறுகரையிலிருந்து வந்து அவரை ஆற்றுவெள்ளத்தில் சுமந்து வந்து மறுகரை சேர்த்ததும் மறைந்து போனார். இவ்வாறு தேவனுடைய புத்திரர்களை தேவன் தமது ஆவியினால் அற்புதமாக வழிநடத்துகிறார்.


அன்பு நண்பரே! நீங்களும் உங்கள் வாழ்வில் பிள்ளை என்ற அனுபவத்திலிருந்து தேவ புத்திரராக வாழ உங்களை ஒப்புக்கொடுங்கள். தேவ புத்திரரைப் போல கனி கொடுப்பவர்களாகவும், தேவ பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்து தேவ சித்தம் செய்பவர்களாகவும், அசுத்தமானதை தொடாதவர்களாக பரிசுத்த வாழ்க்கை வாழ்பவர்களாகவும், சமாதானம் பண்ணுகிறவர்களாகவும், தேவனுக்காக அசாதாரணமான காரியங்களை செய்கிறவர்களாகவும், தேவனுடைய சிட்சையை சகிக்கிறவர்களாகவும், தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறவர்களாகவும் இருந்தால் தேவன் நம் வாழ்வில் மகிமைப் படுவார். எபே.5:1,2-ல் சொல்லப்பட்டது போல, “…நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போலத் தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, ….அன்பிலே நடந்துகொள்ளுங்கள்” தேவன் நம் வாழ்வில் மகிமைப்படுவாராக! ஆமென்.





Author

You May Also Like…

Share This