கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
இன்றைய திருச்சபைகளிலும், ஒவ்வொரு கிறிஸ்தவனின் வாழ்க்கையிலும் தேவன் விரும்பாத அருவருப்புகள் மலிந்து காணப்படுகின்றன. ஆவிக்குரிய ஜீவியத்தில் பரிசுத்தம் காணப்படாமல் அசுத்தத்துக்கு ஒப்புக்கொடுத்து வாழ்கிறார்கள். விக்கிரகங்கள் நிறைந்த இந்த இந்திய தேசத்திலே தேவன் நம்மை கிருபையாய் தெரிந்தெடுத்துள்ளார். நாம் அவரைத் தெரிந்துகொள்ளவில்லை. அவரே நம்மைத் தெரிந்தெடுத்தார். விசேஷ விதமான நோக்கத்தோடு வேறுபிரித்து நடத்தி வருகிறார். ஆகவே வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் பரிசுத்தம் காணப்பட வேண்டும். இரட்டை வாழ்க்கை வாழக்கூடாது. நம்மை அந்தகாரத்திலிருந்து வேறுபிரித்த தேவன் நம்மை உணர்த்தி எச்சரித்து நடத்துகிறார். விக்கிரகங்களை உண்டாக்குவதும், நமஸ்கரிப்பதும், சேவிப்பதும் தவறான காரியம். தேவனுடைய பார்வையில் இது அருவருப்புகள். நம் வாழ்வில் உள்ளதா? என ஆராய்ந்து அறியவேண்டும். விக்கிரகங்கள், பொருளாசை, பண ஆசை, மனிதனையே தெய்வமாக வழிபடுதல், சுயம், தன்னலமான வாழ்க்கை, விபச்சாரம், மேட்டிமை, ஆகாமியம் போன்றவை தேவன் விரும்பாத அருவருப்புகள் தான்.
1. மோசேயின் ஆகமங்களில் எவை அருவருப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது?
உபா.7:25,26 வசனங்களில், “…அவைகளில்(விக்கிரகங்களில்) இருக்கிற வெள்ளியையும் பொன்னையும் இச்சியாமலும், அதை எடுத்துக்கொள்ளாமலும் இருப்பாயாக; அவைகள் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவைகள். அவைகளைப்போல நீ சாபத்துக்குள்ளாகாதபடி அருவருப்பானதை உன் வீட்டிலே கொண்டுபோகாயாக; அதைச் சீ என்று வெறுத்து முற்றிலும் அருவருக்கக் கடவாய், அது சாபத்திற்குள்ளானது” என்கிறார். உபா.12:31 வசனத்தில், “கர்த்தர் வெறுக்கிற அருவருப்பான யாவையும் அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்து, தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தங்கள் தேவர்களுக்கு அக்கினியிலே சுட்டெரித்தார்களே.” பிள்ளைகளைக் கொல்லுவது பிள்ளையை தீக்கடக்கப் பண்ணுவது போன்றவை தேவன் வெறுக்கும் அருவருப்பான செயல்கள். லேவி.18:20,21 வசனங்களில், “பிறனுடைய மனைவியோடே சேரும்படி சயனித்து, அவளால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளவேண்டாம். நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகுக்கென்று தீக்கடக்கும்படி இடங்கொடாதே; உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே; நான் கர்த்தர். பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ணவேண்டாம்; அது அருவருப்பானது.” என்கிறார் கர்த்தர்.
மிருகத்தோடே புணரும்படி அதற்கு முன்பாக நிற்கலாகாது. அது அருவருப்பான தாறுமாறு.
2. எஸ்றாவின் புத்தகத்தில் பார்க்கும்போது
எஸ்றா 9:11,12,13 “அந்நியரோடே ஐக்கியம் (சம்மந்தம்) கொள்ளக் கூடாது” என்கிறார்.
கர்த்தருடைய பிள்ளைகள் “தனித்தன்மையைக் காத்துக்கொள்ள வேண்டும். நாம் ‘பரிசுத்த ஜாதி’ என்பதை மறக்கக் கூடாது.”
3. உபாகமத்தில் பார்க்கும்போது
உபா.22:5 வசனத்தில், “புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.” என்கிறார்.
உபா.18:9-12 வசனங்களில், புறஜாதிகளின் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக்கொள்ள வேண்டாம்.
1. தன் மகனையாவது, தன் மகளையாவது தீக்கடக்கப் பண்ணுகிறவன்
2. நாள் பார்க்கிறவன்
3. அஞ்சனம் பார்க்கிறவன்
4. சூனியக்காரன்
5. மந்திரவாதி சன்னதக்காரன்
6. மாயவித்தைக் காரன்
7. செத்தவர்களிடத்தில் குறி கேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்க வேண்டாம்.”
இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன். நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக உத்தமனாயிருக்கக் கடவாய். உத்தமமும், நேர்மையுமான வாழ்க்கை வாழ வேண்டும்.
4. சாலமோன் ஞானி நீதிமொழிகளில் தேவனுக்கு அருவருப்பானது என்று சில காரியங்களை குறிப்பிடுகிறார்
நீதி.3:32 வசனத்தில், “மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்;” என்கிறார்.
நீதி.11:20 “மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்;” என்கிறார்.
நீதி.6:17 வசனத்தில், “ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை, துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால், அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே” என்கிறார்.
நீதி.12:22, “பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்;” என்கிறார்.
நீதி.11:1 வசனத்தில், “கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது;” என்கிறார்.
நீதி.20:10 வசனத்தில், “வெவ்வேறான நிறைகல்லும், வெவ்வேறான மரக்காலும் ஆகிய இவ்விரண்டும் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்” என்கிறார்.
நீதி.15:8 வசனத்தில், “துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது;” என்கிறார். மேலும் நீதி.15:9வசனத்தில், “துன்மார்க்கனுடைய வழி கர்த்தருக்கு அருவருப்பானது;” என்கிறார். மேலும் நீதி.17:15 “துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்” என்கிறார்.
நீதி.28:9 வசனத்தில், “வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.” என்கிறார்.
தேவனை பிரியப்படுத்தி வாழும் அன்பு நேயரே! தேவன் விரும்பாத அருவருப்புகளை நம் வாழ்விலிருந்து அகற்றுவோம். தேவன் நம்மை சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி தமது மாசற்ற சன்னிதானத்தில் குற்றமற்றவர்களாக நிலைநிறுத்துவாராக! மணவாளன் இயேசுவுக்கு நியமிக்கப்பட்ட கற்புள்ள கன்னிகையாக நாம் மாறி வருகையில் காணப்படும் பாக்கியம் பெறுவோம்! மாரநாதா!




