ஆதி திருச்சபை மக்கள் எதற்காக ஜெபித்தார்கள்?

Written by Pr Thomas Walker

July 22, 2010

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
தேவனுடைய மக்கள் வல்லமை நிறைந்தவர்களாக வாழ வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். ஆதி திருச்சபை வல்லமையுள்ளதாகவும், மகிமை நிறைந்ததாகவும் இருந்தது. பேதுருவிடம் இயேசு “இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல் சபையை மேற்கொள்வதில்லை” என்றார். பாதாளமும் பிசாசு நடுங்கக்கூடிய ஒரே ஒரு சக்தி வாய்ந்த அமைப்பு எது என்றால் – சபை தான். இன்றைய சபைகள் வல்லமையிழந்து, வரங்கள், அற்புதங்கள் இல்லாமல் காணப்படுகிறது. வேதத்தில் புதிய ஏற்பாட்டில் பெந்தெகொஸ்தே நாளில் ஆரம்பிக்கப்பட்ட சபை – நாளுக்கு நாள் வளருவதாகவும், கிருபை நிறைந்ததாகவும் காணப்பட்டது. ஆதி திருச்சபை மக்கள் உபவாசிப்பதிலும் ஜெபம் பண்ணுவதிலும் உறுதியாக தரித்திருந்தனர். சுவிசேஷ ஊழியத்தை ஓய்வில்லாமல் செய்தனர். ஜெபம் செய்ததால் அற்புதங்கள், அடையாளங்கள் மூலம் தேவன் வல்லமையாய் கிரியை செய்தார். பரிசுத்தாவியானவர் சகல சத்தியங்களையும் போதித்து வழிநடத்தினார். இன்றைய திருச்சபைக்குத் தேவை – ஆதி திருச்சபையின் வல்லமையான ஜெபமே. பரிசுத்த ஆவியினால் சபையாரும், ஊழியரும் நடத்தப்பட வேண்டும்.


இந்த நூற்றாண்டில் சிறந்த முறையில் தேவனால் பயன்படுத்தப்பட்ட சுவிசேஷகர் பில்லிகிரகாம். சிறந்த ஜெபவீரர். சிறப்பான ஊழியத்தை உலகமெங்கும் செய்தார். அவர் பிரசங்கங்களில் அடிக்கடி கூறும் வார்த்தை ‘Bible says’ ‘வேதாகமம் கூறுகிறது’. வேதத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். வேத தியானமும், ஜெபமும் ஒரே சீராக இருக்க வேண்டும். தேவனுக்கு பரிசுத்தமாய் வாழ கிரயம் செலுத்த வேண்டும். சாட்சியை காத்துக்கொள்ள ஜெபம் மிகவும் முக்கியம். தானியேல் இடைவிடாமல் ஜெபிக்கிற மனிதனாக காணப்பட்டார். தேவனுக்கு பிரியமானவராகவும் நற்சாட்சியுடைய காரியங்கள் ஜெயமாக காணப்பட்டது.
புறஜாதி மக்களில் முதலாவது இரட்சிக்கப்பட்ட கொர்நேலியு எப்பொழுதும் ஜெபிக்கிற மனிதனாக காணப்பட்டார். அவர் யூதன் அல்ல. ரோமன். கொர்நேலியு தேவனை பிரியப்படுத்தினான். மனிதனை பிரியப்படுத்த அல்ல வாழ்க்கை. அவனுடைய இடைவிடாத ஜெபம் தேவ சமூகத்துக்குச் சென்றது. பதிலைக் கொண்டுவந்தது. அப்.10:2 வசனத்தில் கொர்நேலியு தேவ பக்தியுள்ளவனும் தன் வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தான் என்று கூறப்பட்டுள்ளது. தேவபக்தி, தேவபயம், தருமங்கள், எப்பொழுதும் தேவனிடம் ஜெபம் செய்தது தேவ ஆசீர்வாதத்தை கொண்டுவந்தது.
விசுவாசியே! நீ இடைவிடாமல், எப்பொழுதும் ஜெபிப்பாயானால் தேவனுடைய சமுகத்தையும் பிரசன்னத்தையும் உணரமுடியும். பதில் தரும் தேவனை தரிசிக்க முடியும். முகமுகமாய் பார்த்து பேசி பழக முடியும். எப்பொழுதும் ஜெபிக்கும்போது கர்த்தர் நமக்கு முன்பாகவே இருப்பார். நாம் அசைக்கப்பட முடியாது. ஆதி திருச்சபை மக்கள் ஜெபம் செய்வதில் உறுதியாக தரித்திருந்தனர். வல்லமையால் நிறைந்த சபையாக காணப்பட்டது. இரட்சிக்கப்பட்டவர்கள் அனுதினமும் சபையில் சேர்க்கப்பட்டனர். சபை வளர்ந்து பெருகியது.

ஆதி திருச்சபை மக்கள் எதற்காக ஜெபித்தார்கள் என்று பார்ப்போம்:-

 முதலாவதாகஆதி திருச்சபை மக்கள் பரிசுத்த ஆவிக்காக காத்திருந்து ஜெபித்தார்கள்
அப்.1:14 வசனத்தில், “அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங் கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்” பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றவர்களாயிருந்தாலும் தேவனுடைய சமுகத்தில் காத்திருப்பது அவசியம். உதாரணமாக Baterry-ஐ பயன்படுத்தும் அளவுக்கு ஏற்ப அடிக்கடி ஊhயசபந பண்ண வேண்டும். ஆத்துமா சோர்வுறும்போதும் ஊழியம் தடைபடும் போதும் ஜெபிக்க வேண்டும். ஒருமனப்பட்டு 10 நாட்கள் காத்திருந்ததால் வல்லமையாய் நிரப்பப்பட்டனர். வல்லமையான ஊழியத்தைச் செய்தனர்.

 இரண்டாவதாகசரியான காரியத்தை தெரிந்துகொள்ள வழிநடத்துதலுக்காக ஜெபம் செய்தனர்
அப்.1:25 வசனத்தில், “இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும்” என்று ஜெபம் பண்ணினார்கள். நாம் சரியாக தெய்வீக வழிநடத்துதலைப் பெற ஜெபிக்க வேண்டும். ஒரு நல்ல result-ஐ பெற்றுக்கொள்ள ஒரு நபரை தெரிந்தெடுக்க – திருமணம், வேலைக்கு, ஊழிய சம்பந்தமாக ஜெபித்து தேவ சித்தம் அறிந்து செய்ய வேண்டும். அப்.6:6 வசனத்தில், பந்தி விசாரிப்பு வேலையைச் செய்ய பரிசுத்த ஆவியும், ஞானமும் நிறைந்த நற்சாட்சி பெற்றவர்களை அப்போஸ்தலருக்கு முன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம் பண்ணி, அவர்கள் மேல் கைகளை வைத்தார்கள். ஊழிய காரியங்களில், சபை காரியங்களில் பொறுப்பான நபரை நியமிக்க தேவ ஆலோசனையைப் பெற வேண்டும்.

 மூன்றாவதாகஊழியத்தில் அற்புதங்கள் அடையாளங்கள் நடக்க ஜெபிக்க வேண்டும்
அப்.4:30 வசனத்தில், “உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள்”. அற்புதங்களும் அடையாளங்களும் நடக்க அப்போஸ்தலர்கள் ஜெபித்தனர். அப்படியே நடந்தது, திரளான ஜனங்கள் தேவனிடத்தில் விசுவாசம் வைத்தனர்.

 நான்காவதாகஊழியக்காரர்கள் முழு தைரியத்தோடும் வசனத்தைச் சொல்ல வேண்டும் ஜெபித்தனர்
அப்.4:30 வசனத்தில், ஆதி திருச்சபை மக்கள் ஊழியக்காரர் வசனத்தை தைரியமாகச் சொல்ல வேண்டும் என்று ஜெபித்தனர். அவர்கள் ஜெபம் பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு தேவ வசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள். திருச்சபைகளிலும் போதகர்களுக்காகவும், ஊழியக்காரர்களுக்காகவும் வசனம் தைரியத்தோடும் விடுதலையோடும் பிரசங்கிக்க ஜெபிக்க வேண்டும்.

 ஐந்தாவதாகபேதுருவுக்காக (சிறையிருப்பில் உள்ள) ஊழியருக்காக ஜெபித்தனர்
அப்.12:5 வசனத்தில், “அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்”. தேவன் ஜெபத்தைக் கேட்டு தூதனை அனுப்பி பேதுருவை சிறைச்சாலையிலிருந்து மீட்டார். சிறைப்பட்டு போன பரிசுத்தவான்களுக்காக சபையார் ஜெபிக்க வேண்டும். கம்யூனிஸ்ட்டு, முஸ்லீம் நாடுகளில் சிறையிருப்பில் உள்ள ஊழியர்களுக்காகவும், விசுவாசிகளுக்காகவும் ஜெபிக்க வேண்டும்.

 ஆறாவதாகவெளிப்படுத்துதலுக்காக ஜெபித்தனர்
அப்.13:2 வசனத்தில், “அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிற போது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம்பற்றினார்” அதன்படியே உபவாசித்து ஜெபம் பண்ணி அவர்கள்மேல் கைகளை வைத்து அவர்களை அனுப்பினார்கள். ஊழியர்களிடம் குறி கேட்பதற்காக செல்லக்கூடாது. தேவனுடைய இரகசியங்களையும், வெளிப்பாட்டையும் அறியும்படி செல்ல வேண்டும். பரிசுத்த ஆவியானவர் இரகசியங்களை வெளிப்படுத்துவார். சபை பக்திவிருத்தி அடைய வெளிப்படுத்துதல் வரம் அவசியம்.

 ஏழாவதாகமூப்பர்களை ஏற்படுத்தி அவர்களை கர்த்தருக்கு ஒப்புவித்தார்கள் (சபை ஊழியங்களுக்காக ஜெபித்தல்)
அப்.14:23 வசனத்தில், “அல்லாமலும் அந்தந்தச் சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்தி வைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் விசுவாசித்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள்” ஆதி திருச்சபை அப்போஸ்தலர்கள் ஊழியம் வளரவே ஒவ்வொரு இடங்களிலும் ஜெபித்து மூப்பர்களை ஏற்படுத்தினார்கள். அவர்கள் தங்களை மனப்பூர்வமாய் தேவனுக்கு ஒப்புவித்து அந்த இடங்களிலிருந்து ஊழியக் காரியங்களை கவனித்து வந்தார்கள். சபைகள் ஊழியர்களை ஜெபத்தில் தாங்க வேண்டும்.


இதை வாசிக்கும் அன்பு நேயரே! ஆதி திருச்சபையாரைப் போல நாமும் இடைவிடாமல் தேவனிடம் ஜெபிக்க வேண்டும். அவர்கள் உபவாசத்திலும் ஜெபத்திலும் தரித்திருந்து தேவ வல்லமையால் நிறைந்து ஊழியம் செய்தனர். அற்புதங்கள் அடையாளங்கள் மூலம் தேவன் மகிமைப்பட்டார். சுவிசேஷ ஊழியம் இடைவிடாமல் விசுவாசிகள் மூலமாகவும், ஊழியர்கள் மூலமாகவும் செய்யப்ட்டது. ஆவியின் வழிநடத்துதலைப் பெற்று தேவ ஆவியானவரால் நடத்தப் பட்டனர். இன்றைய திருச்சபையின் தேவை பரிசுத்தாவியின் வல்லமையும், ஜெபமுமே. தேவன் ஒரு பெரிய பின்மாரி வல்லமையை சபைகளில் ஊற்றி ஒவ்வொருவரையும் பயன்படுத்துவாராக! ஜெப ஆவியும் விண்ணப்பத்தின் ஆவியும் நம்மேல் ஊற்றப்பட ஜெபிப்போம்.
அல்லேலூயா!





Author

You May Also Like…

Share This