மாதிரியான குடும்பம் எப்படி இருக்க வேண்டும்?

Written by Pr Thomas Walker

May 22, 2010

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
இன்றைய திருச்சபையின் மாபெரும் தேவை என்ன? என்று கேட்டால், பல பதில்களை நீங்கள் தரலாம். பக்தியுள்ள, விழிப்புள்ள, தரமான கிறிஸ்தவ குடும்பங்களே நம் திருச்சபைகளுக்குத் தேவை. ஒவ்வொரு திருச்சபைகளிலும் விரல் விட்டு எண்ணக்கூடிய குடும்பங்களே மாதிரியான குடும்பங்களாக விளங்குகின்றன. சபைக்கு அஸ்திபாரம் போட்டவர் கிறிஸ்து. அநேக குடும்பங்கள் சேர்ந்தது தான் சபை. Many families make one church.எனவே நாம் தனிப்பட்ட குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவமும், கவனமும் செலுத்த வேண்டும். தனிப்பட்ட ஒவ்வொரு விசுவாசியும், தேவனுடைய குடும்பத்தில் இணைக்கப்பட்டுள்ளோம். ஆதித் திருச்சபைக் கிறிஸ்தவர்கள் சீஷர்களோடும், மற்ற மிஷனெரிகளோடும் சேர்ந்து இரட்சிப்பின் நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து, ஸ்தல சபைகளில் மக்களை சேர்த்தனர். சபைகள் தரத்திலும், எண்ணிக்கையும் வளர்ந்து பெருகின. மாதிரியான கிறிஸ்தவ குடும்பத்தின் குணாதிசயம் என்ன? வேத வசனங்களின் அடிப்படையில் சபையில் உள்ள குடும்பங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை இன்று தியானிப்போம்.


“…நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து, அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்” (எபே.2:19,20). மேலும் “நான் பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய கர்த்தராகிய இயேசு” (எபே.3:14)
நமது கிறிஸ்தவ குடும்பங்கள் தேவனுடைய வீடாக, மூலைக் கல்லான இயேசுவோடு அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டு வருகிறோம். எனவே நாம் இந்த உலகத்துக்கு அந்நியர், பரதேசிகள். பரலோக நகரத்துக்காக காத்திருக்கிறோம்.


மாதிரியான கிறிஸ்தவ குடும்பங்களின் ஏழு முக்கிய அம்சங்களை தியானிப்போம்.

 முதலாவதாககர்த்தருக்குப் பயப்படுகிற குடும்பம்சிப்போராள், பூவாள் என்ற மருத்துவச்சிகளின் குடும்பம்
யாத்.1:21 வசனத்தில் “மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்” மருத்துவச்சிகள், பார்வோனின் அதிகாரம், சட்டங்கள், ஆளுகைக்கு பயப்படவில்லை. தேவனுக்கும், அவர் வார்த்தைக்கும் முக்கியத்துவம் கொடுத்து கனப்படுத்தினர். உற்றார், உறவினர், பேய் பிசாசுக்கு பயந்து தேவனை விட்டு விலகக் கூடாது. தேவனுக்குரிய கனத்தையும், உரிய இடத்தையும் நம் வாழ்வில் கொடுக்க வேண்டும். அதுவே தேவனுக்குப் பிரியம். தேவனை கௌரவித்து, மதித்து நட. தேவனுடைய வார்த்தைகளையும், ஆலோசனைகளையும் அல்லத் தட்டாதே. தேவ பயமே ஜீவ ஊற்று. அதனால் மரண கண்ணிகளுக்கு தப்பலாம். தேவனுடைய ஞானமே ஆசீர்வாதம். நம்முடைய ஜீவன் அவருடைய ஜீவனுக்குள் மறைந்திருக்க வேண்டும். சிப்போராள், பூவாள் மருத்துவச்சிகளுக்கு, தேவனுக்குப் பயப்படாமல் – தவறு செய்ய சலுகைகள், சட்டம், உரிமை அரசாங்கமே தந்தது. வேலை உயர்வு, incentive,award,gift எல்லாம் கொடுத்து ஊக்குவித்தது. தேவனுடைய ஜனத்தை அழிக்க, கொலை செய்ய அரசாங்கமே செய்தது. ஆனால் தேவனுக்கு பயந்ததால் தேவன் குடும்பங்களை தழைக்கச் செய்தார். அவர்கள் தேவனுக்குப் பயந்து, ராஜ கட்டளையை மீறி எபிரெய குழந்தைகளை காப்பாற்றினர்.


சங்.115:13 வசனத்தில், “கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார்” தேவனுக்குப் பயப்படாமல் துணிகரமாக பாவம் செய்பவர்கள், தேவன் இல்லை என்று கூறும் மதிகெட்ட நாஸ்திகர்கள் ஆசீர்வதிக்கப்படுவதில்லை. பைத்தியமாகத் திரிவார்கள். அவமானத்தையும், நிந்தையையும் அடைவார்கள்.

 இரண்டாவதாககர்த்தரையே சேவிக்கிற குடும்பம்யோசுவாவின் குடும்பம்
கர்த்தரையே சேவிக்கும் குடும்பமாக காணப்பட்டது. யோசுவா 24:15 வசனத்தில், “நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்” என்றான். யாத்.20:23 வசனத்தில், “நீங்கள் எனக்கு ஒப்பாக வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்கவே வேண்டாம்” என்றார். சொரூப வழிபாடு, விக்கிரகங்களை வழிபடுவதை தேவன் விரும்பவில்லை. யோசுவா கர்த்தரையே சேவித்ததால் தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு தேசத்தை பங்கிட்டுக் கொடுக்க பயன்படுத்தினார். நீயும் கர்த்தரை மனப்பூர்வமாக சேவித்தால், உன் மூலம் மற்றவர்களும் ஆசீர்வதிக்கப்படுவார்கள். 2 இராஜா.5:17 வசனத்தில், “அப்பொழுது நாகமான்: …உமது அடியேன் இனிக் கர்த்தருக்கே அல்லாமல் அந்நிய தேவர்களுக்குச் சர்வாங்க தகனத்தையும் பலியையும் செலுத்துவதில்லை” என்றான். நாமும் தேவனை சேவிக்கும் வைராக்கியமுள்ள குடும்பமாக காணப்படுவோம்.

 
மூன்றாவதாககனி கொடுக்கும், தெரிந்தெடுக்கப்பட்ட குடும்பம்லேவியரில் ஆரோன் குடும்பம்
எண்.17:8 வசனத்தில், “… இதோ, லேவியின் குடும்பத்தாருக்கு இருந்த ஆரோனின் கோல் துளிர்த்திருந்தது; அது துளிர்விட்டு, பூப்பூத்து, வாதுமைப் பழங்களைக் கொடுத்தது”. ஆரோன் குடும்பம் தான் தேவனால் ஆசாரிய ஊழியத்துக்கு தெரிந்தெடுக்கப்பட்ட குடும்பம். ஆரோனே தேவனால் அங்கீகரிக்கப்பட்டு பரிசுத்த ஸ்தலத்துக்குள் பலிபீடத்தண்டை போக முடியும். 1பேதுரு 2:9 வசனத்தின்படி, நாமும் ராஜரீக ஆசாரியக் கூட்டமாகவும், பரிசுத்த ஜாதியாயும் தேவனால் அழைக்கப்பட்டுள்ளோம். பழைய ஏற்பாட்டு ஆசாரியர்கள் பலி செலுத்தும் ஆசாரியப் பணியை மட்டும் செய்தனர். நாமோ ராஜரீக ஆசாரியக் கூட்டம். எனவே நாம் பலியிட வேண்டும். புறா, ஆடு, மாடு போன்ற மிருகங்களை அல்ல. ஜீவனுள்ள தேவனுக்கு ஸ்தோத்திர பலி செலுத்த வேண்டும். உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியைச் செலுத்த வேண்டும். எபி.13:16 வசனத்தில், “அன்றியும் நன்மைசெய்யவும், தான தர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்”. மேலும் விசுவாசமாகிய பலி, கீழ்ப்படிதலாகிய பலி போன்ற வேலையைச் செய். இது ஆசாரியனின் வேலை.


முதலாவதாக, ஆரோனின் கோல் துளிர் விட்டது. துளிர்விட்டவுடன் பெருமை வந்துவிடக் கூடாது.

இரண்டாவதாக, பூப்பூத்தல் – சாட்சியுள்ள, வாசனை வீசும் கிறிஸ்தவ வாழ்க்கை வேண்டும். நம் வாழ்வில் கிறிஸ்துவின் நற்கந்தம் வீச வேண்டும்.

மூன்றாவதாக, கனி கொடுத்தது – கிறிஸ்தவன் ஒவ்வொருவரும் கனிகொடுக்க வேண்டும். பரிபூரணப்படுதல் வேண்டும்.

 நான்காவதாகசவுல் குடும்பம்வரவர பலவீனப்பட்டு போன குடும்பம்
யோசுவா 2:12,13 வசனத்தில், “இப்போதும், நான் உங்களுக்குத் தயவுசெய்தபடியினால், நீங்களும் என் தகப்பன் குடும்பத்துக்குத் தயவுசெய்வோம்” என்று கர்த்தர்பேரில் எனக்கு ஆணையிட்டு ராகாப் அடையாளத்தை வேவுகாரரிடம் வாங்கிக் கொண்டாள். இதினிமித்தம் ராகாபின் குடும்பம் தப்புவிக்கப்பட்டது. விசுவாசியே! உன் குடும்பம் அழிவிலிருந்து தப்பிய குடும்பமாக இருக்க வேண்டும்.


ஆதி.19:20-22ல் லோத்து சோவாருக்குப் போனதால் சோவார் கவிழ்க்கப்பட்டு போகவில்லை. நீதிமான் ஒருவனுக்காக ஒரு ஊரையே தேவன் பாதுகாத்தார். மேலும் எஸ்.6:1 வசனத்தில், “அந்த ராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால்…” மொர்தெகாய்க்கு தூக்குமரம் செய்யப்பட்ட அதே இரவில் தேவன் மொர்தெகாய்க்காக செயல்பட்டார்.
யோசேப்பை உயர்த்தும்படியாய் பார்வோன் கண்ட சொப்பனம் ஒருவராலும் விளக்கப்பட முடியாமல் போயிற்று. தேவ ஆவி பெற்ற யோசேப்பே விளக்க முடிந்தது. ஆதி.45:5 யாக்கோபின் ஒரு குடும்பம் பஞ்சத்தில் அழிக்கப்படாமல் செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார். யோசேப்பு தான் மட்டும் பிரதமர் பதவியை அனுபவித்து சந்தோஷப்பட அல்ல. யோசேப்புக்கு கொடுக்கப்பட்டது, தேவனுடைய ஜனத்தைப் பாதுகாக்க கொடுக்கப்பட்டுள்ளது. யோசேப்பு சாதாரண வேலையில் இருந்தால் யாக்கோபு குடும்பம் பஞ்சத்தில் இரட்சிக்கப்பட முடியாது. தேவனுடைய பரிசுத்தவான்களின் குடும்பத்துக்கு உதவிசெய்ய வேண்டும் என்றுதான் தேவன் உனக்கு நல்ல வேலையைக் கொடுத்துள்ளார்.

 ஐந்தாவதாகநன்றி செலுத்தும் குடும்பமாக இருக்க வேண்டும்
உபா.12:5-7 வசனங்களில், “உங்கள் தேவனாகிய கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி, உங்கள் சகல கோத்திரங்களிலும் தெரிந்துகொள்ளும் ஸ்தானமாகிய அவருடைய வாசஸ்தலத்தையே நாடி, அங்கே போய், அங்கே உங்கள் சர்வாங்க தகனங்களையும், உங்கள் பலிகளையும், தசமபாகங்களையும், உங்கள் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், உங்கள் பொருத்தனைகளையும், உங்கள் உற்சாகபலிகளையும், உங்கள் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் கொண்டுவந்து, அங்கே உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியிலே புசித்து, நீங்கள் கையிட்டுச் செய்ததும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதித்ததுமான யாவுக்காகவும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சந்தோஷப்படுவீர்களாக”. இஸ்ரவேலரில் ஆண்கள் வருடத்திற்கு 3 முறை எருசலேமில் வந்து தேவ சமூகத்தில் பலிகளைச் செலுத்த வேண்டும் என்பது தேவனுடைய கட்டளை. நாம் தேவனை ஆராதித்து காணிக்கைகளையும், தசம பாகங்களையும் கொடுக்கும் குடும்பமாக இருக்க வேண்டும்.

 ஆறாவதாகவில்லும், ஈட்டியும் பிடித்திருக்கிற குடும்பம்விழித்திருந்து ஜெபிக்கிற குடும்பம்
நெகே.4:13 வசனத்தில், “அப்பொழுது நான்: அலங்கத்துக்குப் பின்னாக இருக்கிற பள்ளமான இடங்களிலும் மேடுகளிலும், பட்டயங்களையும், ஈட்டிகளையும், வில்லுகளையும் பிடித்திருக்கிற ஜனங்களைக் குடும்பங் குடும்பமாக நிறுத்தினேன்”. இஸ்ரவேல் ஜனங்கள் அலங்கத்தை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது வேலையும் செய்தனர், காவலையும் காத்தனர். விழிப்போடு காணப்பட்டனர். ஜெபிக்கிற குடும்பம், சத்துரு உட்புகாதபடி ஜெபித்தல், முன்னணியில் நிற்கும் குடும்பமாக இருக்க வேண்டும். எதிரியாகிய சாத்தானோடு போராடும் விஷயத்தில் வீரத் தழும்பை உன் சரீரத்தில் ஏற்றிருக்கிறாயா? கிறிஸ்துவுக்காக பாடுபடும் குடும்பமாக உன் குடும்பம் உள்ளதா?

 ஏழாவதாகபேழையை உண்டுபண்ணும் குடும்பம்பேழைக்குள் பிரவேசிக்கும் குடும்பம்
பேழை – கிறிஸ்துவுக்கும், திருச்சபைக்கும் அடையாளமாக உள்ளது. சபையை எழுப்புகிறாயா? உன் திறமைகளை, தாலந்துகளை கிறிஸ்துவுக்காக, அவரது இராஜ்ஜியத்தின் மேன்மைக்காக செலவு செய்து திருச்சபையை உருவாக்குகிறாயா? அல்லது இடிக்கிறாயா? சபை எளிமையாக, சிறியதாகவோ, பெரிய கட்டிடம் இல்லாமல் கூட இருக்கலாம். மரத்தடியில் கூட ஆராதிக்கலாம். ஆனால் நீ அதைக் கட்டி, உருவாக்க வேண்டும். உடைக்கக் கூடாது, சபைக்குள் இசைவாக, சமாதானத்துடன் கட்டுப்பாட்டுடன் காணப்பட வேண்டும். எபி.11:7 வசனத்தில், “விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்துத் தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்”
நியா.9:8-15 வசனங்களில் “…முட்செடியானது மரங்களைப் பார்த்து: நீங்கள் என்னை உங்களுக்கு ராஜாவாக அபிஷேகம்பண்ணுகிறது மெய்யானால், என் நிழலிலே வந்தடையுங்கள்; இல்லாவிட்டால் முட்செடியிலிருந்து அக்கினி புறப்பட்டு லீபனோனின் கேதுரு மரங்களைப் பட்சிக்கக்கடவது” என்றது. இன்னும் சபைகளில் முட்செடிகளைப் போன்றவர்கள் பெருகி உள்ளனர். தன் பக்கம் ஒரு கூட்டம் ஆட்களை சேர்க்கின்றனர். இல்லாவிட்டால் அக்கினியால் சபையையே பட்சிப்பேன் என்று கூறி மக்களை திசை திருப்புகின்றனர். ஆனால் நோவாவோ தன் குடும்பத்தைக் காப்பாற்றினான். உன் குடும்பம் சபையைக் கட்டும் குடும்பமாக இருக்க வேண்டும். முட்செடிக்கு ஒப்பாக சபைக்கு இடறல் உண்டுபண்ணும் குடும்பமாக இருக்கக் கூடாது.


இதை வாசிக்கும் அன்பு நேயரே! நாமும் திருச்சபைக்கு மாதிரியான குடும்பங்களாக மாற நம்மை அர்ப்பணிப்போம்! சிப்போராள், பூவாள் என்ற மருத்துவச்சிகளைப் போல கர்த்தருக்கு பயந்து தழைத்து ஓங்கும் குடும்பமாகவும், கர்த்தரையே சேவித்த யோசுவாவின் குடும்பமாகவும், தேவனால் சேவைக்கு தெரிந்தெடுக்கப்பட்ட ஆரோனின் குடும்பமாக பலி செலுத்துபவர்களாகவும் மாறுவோம். ஆக்கினைக்குத் தப்புவிக்கப்பட்ட ராகாப் குடும்பமாக வரப்போகும் அழிவிலிருந்து நம் குடும்பம் முழுவதும் இரட்சிக்கப்பட பிரயாசப்படுவோம். தேவனிடத்திலும், தேவ ஊழியர்களுக்கும் நன்றியுள்ளவர்களாக காணிக்கைகளையும் தசம பாகங்களையும் கொடுத்து சபையை ஆதரிப்போம். சபைக்குள் சத்துரு உட்புகாதபடி பாதுகாத்து ஜெபித்து உபவாசிக்கிறவர்களாய் விழித்திருப்போம். பேழையைக் கட்டும் நோவா குடும்பத்தைப் போல தேவன் உங்கள் குடும்பம் மூலம் அநேக குடும்பங்களை நித்திய அழிவிலிருந்து பாதுகாத்து இரட்சிக்க பயன்படுத்துவாராக! ஆமென்! அல்லேலூயா!





Author

You May Also Like…

Share This