ஆக்கினைக்குள்ளான வேதாகம குடும்பங்கள்

Written by Pr Thomas Walker

April 22, 2010

விசுவாசியே! நீ இப்படி இருக்கக்கூடாது


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
இன்றைய கிறிஸ்தவ உலகில் ஒவ்வொரு நபரும் விரும்புவது என்னவென்றால் – ஆசீர்வாதம். ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பம் நல்ல குடும்ப வாழ்க்கையை விரும்பாதோர் யாருமே இல்லை. ஆசீர்வதிக்கப்பட்ட குடும்ப வாழ்க்கையின் அஸ்திபாரம் நாம் தேவனோடு வைத்திருக்கும் நல்ல உறவில் தான் உள்ளது. வேதாகமத்தில் அநேக குடும்பங்களைப் பார்க்கிறோம். சில குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும், சில குடும்பங்கள் ஆக்கினைக்குள்ளான குடும்பங்களாகவும் மாறின, ஏன்? நாம் ஆரம்பத்தில் தேவன் மேல் வைத்த விசுவாசம், அன்பு வைராக்கியத்தை முடிவு பரியந்தம் காத்துக்கொள்ள வேண்டும். நாம் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். மறுபடியும் பிசாசினால் வஞ்சிக்கப்பட்டு பாவச் சேற்றில் விழுந்து தேவ தண்டனையையும் சாபத்தையும் சம்பாதிக்க கூடாது. தேவ கோபாக்கினைக்குட்பட்டால் மிகவும் ஆபத்து. உன் குடும்பம் ஆக்கினைக்குள்ளான குடும்பமாக மாறிவிடும். விசுவாசியே! நீ இப்படி இருக்கக் கூடாது.

 முதலாவதாக
வேதத்தில் கூறப்பட்டுள்ள சில ஆக்கினைக்குட்பட்ட குடும்பங்களைக் காணலாம்.
உபா.11:6 வசனத்தில், “பூமி தன் வாயைத் திறந்து, எலியாப் என்னும் ரூபன் குமாரனுடைய மக்களான தாத்தானையும் அபிராமையும், அவர்கள் குடும்பங்களையும், அவர்கள் கூடாரங்களையும், இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் அவர்களுக்கு இருந்த அவர்களுடைய சகல பொருள்களையும் விழுங்கும்படி செய்ததையும், அறியாமலும் காணாமலும் இருக்கிற உங்கள் பிள்ளைகளுடன் நான் பேசவில்லை; இன்று நீங்களே அறிந்துகொள்ளுங்கள்” என்று தேவன் இஸ்ரவேல் ஜனங்களிடம் ஆக்கினை அடைந்த தாத்தான், அபிராம் குடும்பங்களைப் பற்றி மீண்டும் எச்சரித்தார். மேலும் எண்.16 அதிகாரத்தில் மீண்டும் மோசேக்கு விரோதமாக எதிர்த்து நின்ற கோராகு தாத்தான், அபிராம் கூட்டங்களை பூமி பிளந்து விழுங்கிப் போட்டது. உசியா ராஜா 2நாளா.26:18,19 வசனங்களில் ஆசாரியர்களின் வேலையான தூபங்காட்டுதலை செய்ததால் குஷ்டரோகியாக மாறினான் என்று கூறப்பட்டுள்ளது. முதல் அரசன் சவுல் பலி செலுத்தினதால் இராஜ்ஜியபாரம் பறிபோனது. சபையில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு வரம்பையும் எல்லையையும் தேவன் கொடுத்துள்ளார். விசுவாசிகள் தங்கள் எல்லையை மீறி துணிந்து செயல்படக் கூடாது. தேவன் சபையின் பக்திவிருத்திக்காக அப்போஸ்தலர்கள், மேய்ப்பர்கள், போதகர்கள், சுவிசேஷகர்கள், தீர்க்கதரிசிகள் என ஒவ்வொருவருக்கும் ஒரு ஊழியத்தையும் பொறுப்பையும் கொடுத்துள்ளார். விசுவாசிகளுக்கு சில பொறுப்புகளும் உத்திரவாதங்களும் உண்டு. தங்கள் வரம்பில், எல்லையில் நின்றுகொள்ள வேண்டும்.

ஆரோன் குடும்பம்
ஆரோனின் குடும்பத்தில் நடந்தது என்ன தெரியுமா?
ஆரோனின் குமாரர்கள் துணிந்து தேவ சமூகத்தில் அந்நிய அக்கினியைக் கொண்டு வந்தனர். நாதாபூம் அபியுவும் தேவ தண்டனைக்குள்ளாகி மரித்தனர். ஆனால் பிரதான ஆசாரியனான ஆரோன் அழக்கூடாது. பாகையை கழற்றக் கூடாது. துக்க வஸ்திரம் தரிக்க கூடாது. ஆசாரியர் கர்த்தருக்கு பரிசுத்தமானவன், ஆசாரியன் தேவனுடைய விதிகளை மாற்ற முடியாது. ஆரோன் பரிசுத்த வஸ்திரம் தரித்தவன், பிணத்தால் தீட்டுப்படக் கூடாது.


இன்றைக்கும் சபைகளில் சிலர் அந்நிய அக்கினியைக் கொண்டுவருகின்றனர். பெருமை வரும்போது துணிந்து செயல்படுகின்றனர். ட்ரம்-ஐ கொட்டி எழுப்புதலைக் கொண்டு வரலாம் என எண்ணாதே. இப்படி துணியாதே. எழுப்புதல் தேவ சமுகத்திலிருந்து நமக்குள் இருந்து வரவேண்டும். ஆவியில் ஏவுதலினால் நிரம்பி வாழவேண்டும். மாம்சத்தின் கிரியைகளால் ஆக்கினை தான் வரும்.

மிரியாம்
எண்ணாகமம் 12ஆம் அதிகாரத்தில் பெருமைக்கு இடம் கொடுத்து ஆரோனும், மிரியாமும் மோசேயை அவருடைய மனைவியினிமித்தம் தூஷித்தனர். மோசேயின் அதிகாரத்திற்குட்பட்டு வாழ விரும்பவில்லை. மோசேயை நிந்தித்ததால் மிரியாம் குஷ்டரோகியானாள். தனிப்பட்ட மக்கள் வாழ்க்கையிலும், குடும்பமாகவும் ஆக்கினைக்குட்பட்ட மக்களை நாம் பார்த்தோம். இது நமக்கு எச்சரிப்புக்காக எழுதப்பட்டுள்ளது.

 இரண்டாவதாக
ஆகானின் குடும்பம் யோசுவா 7:24ல் குடும்பமாக ஆக்கினை அடைந்தனர்.
“அப்பொழுது யோசுவாவும் இஸ்ரவேலரெல்லாருங்கூடச் சேராகின் புத்திரனாகிய ஆகானையும், அந்த வெள்ளியையும் சால்வையையும் பொன்பாளத்தையும், அவன் குமாரரையும் குமாரத்திகளையும், அவன் மாடுகளையும் கழுதைகளையும் ஆடுகளையும், அவன் கூடாரத்தையும், அவனுக்குள்ள யாவையும் எடுத்து, ஆகோர் பள்ளத்தாக்குக்குக் கொண்டுபோனார்கள்” இஸ்ரவேலரெல்லாரும் அவன்மேல் கல்லெறிந்து அவைகளை அக்கினியில் சுட்டெரித்து கற்களினால் மூடினார்கள் என்று வாசிக்கிறோம்.

அ) ஏன் ஆகானின் குடும்பம் ஆக்கினையை அடைந்தது?
சாபத்தீடானது வீட்டில் இருந்தது. வேண்டாத பொருள், அடுத்தவன் பொருள் – சாபம் தான்.

ஆ) தன் பாவங்களை மறைத்த குடும்பம்: சாபம் தான் நம்முடைய பாவங்களை மறைத்து, இரகசிய பாவங்களையும், அந்தரங்கமான பாவங்களையும் துணிகரமாகச் செய்து வந்தால் ஆக்கினைக்குத் தப்ப முடியாது.

 மூன்றாவதாக
பஞ்சத்தினால் வருந்துகிற குடும்பம்
ஆதி.42:19 வசனத்தில், “நீங்கள் நிஜஸ்தரானால், சகோதரராகிய உங்களில் ஒருவன் காவற்கூடத்தில் கட்டுண்டிருக்கட்டும்; மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்துக்குத் தானியம் கொண்டு போய்க் கொடுங்கள்” என்று யோசேப்பு தன்னைத் தேடி வந்த சகோதரர்களை பார்த்துக் கூறினார்.


இந்த யாக்கோபின் குடும்பத்தில் உள்ள ஒருவன்தான் எகிப்தில் எல்லோருக்கும் உணவு கொடுக்கிறான். ஆனால் கானானில் அவன் தகப்பன் யாக்கோபு குடும்பமோ பஞ்சத்தில் வருந்துகிறது. ஏன்? இந்த வறுமை யாக்கோபு குடும்பம் பஞ்சத்தில் வருந்தக் காரணம் என்ன?

அ) யோசேப்பை வெறுத்தார்கள். அதேபோல் தான் இஸ்ரவேலர் ஜீவனுக்கு அதிபதியான இயேசுவை வெறுத்தனர். இயேசு வேண்டாம். பரபாஸ் வேண்டும். எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இரத்தப் பழிகள் சுமரட்டும் என்றனர். கர்த்தரின் பெரிய இரக்கத்தாலும் இஸ்ரவேலரும், யாக்கோபு வம்சமும் பாதிப்புகளை அடைந்தாலும் தப்பினர். கிருபையினால் அவர்களை அழிவிலிருந்து காத்தார்.

ஆ) யோசேப்பை விற்றுப் போட்டனர். இதைப்போலவே இஸ்ரவேலரும் இயேசுவை விற்றுப் போட்டனர். இயேசுவை இன்றும் அநேகர் விற்றுப் போடுகின்றனர். உலகத்தின் சலுகைகளுக்காக, மனிதனின் புகழுக்காக, வேலைக்காக, படிப்புக்காக – தங்கள் பெயரையே கிறிஸ்தவர்கள் இந்துக்களாக மாற்றி இயேசுவையே விற்றுப் போடுகின்றனர். யோசேப்பு இரக்கத்தினால் தன் குடும்பத்தாரை போஷித்தான். தன் சகோதரர்கள் அவர்கள் செய்த குற்றத்தை உணர்ந்து அறிக்கையிட வேண்டும் என்று விரும்புகிறான் – ஆனால் அவர்கள் உணரவில்லை. வாழ்க்கையில் தவறு செய்தபின் உணர்ந்து மனந்திரும்பாதவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் பெலனடைய முடியாது. ஆத்துமா வறுமையடையும், செழுமையடையாது.

இ) யோசேப்பு மனம் திரும்பும்படி சிட்சைகள் கொடுத்தான். பட்டினி போட்டும், கட்டி வைத்து சிறையில் போட்டும் – அவர்களுக்கு செய்த தவறு என்ன? ஏன் இந்த பாதிப்பு என்ற உணர்வு வரவில்லை. யோசேப்பிடம் பொய் சொன்னார்கள். மறுபடியும் ஆகார குறைவு, பஞ்சம், வறுமை, ஏன் அநேக குடும்பங்களில் வறுமை, வாழ்வில் முன்னேற்றம் இல்லை?

ஈ) பாவத்தை மறைத்தனர்
பாவத்தை வெளியரங்கமாக ஒத்துக்கொண்டு அறிக்கை செய்து விட்டுவிட்டு இரக்கம் பெற மனதில்லை ஆதி.43:5 வசனத்தில் “அனுப்பாவிட்டால், நாங்கள் போக மாட்டோம்; உங்கள் சகோதரன் உங்களோடேகூட வராவிட்டால், நீங்கள் என் முகத்தைக் காண்பதில்லை என்று அந்த மனிதன் எங்களோடே சொல்லியிருக்கிறான் என்றான்”. பாவத்தை மறைத்தனர். தங்களை வெளிப்படுத்த விரும்பவில்லை. யோசேப்பு தன்னை வெளிப்படுத்தி காட்டினான். ஆதி.45:1,2 யாவரையும் என்னைவிட்டு வெளியே போகப்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டான். யோசேப்பு தன் சகோதரருக்குத் தன்னை வெளிப்படுத்துகையில், ஒருவரும் அவன் அருகில் நிற்கவில்லை. யோசேப்பு தன் சகோதரருக்காக பார்வோனின் சமுகத்தில் பரிந்துபேசுகிறவனாய் காணப்பட்டான். தன் குடும்பம் முழுவதையும் போஷித்து பராமரிக்கிறவனாக காணப்பட்டான். செழிப்பான தேசத்தை தன் சகோதரருக்கு சுதந்திரமாகக் கொடுத்தான். இயேசுவும் தன் பாவத்தை மறைக்காமல் அறிக்கையிட்டு விட்டுவிட்டால், செழிப்பான பரலோக சுதந்திரத்தை தருவார்.

 நான்காவதாக
சவுல் குடும்பம் – வரவர பலவீனப்பட்டு போன குடும்பம்
2சாமு.3:1 “சவுலின் குடும்பத்துக்கும் தாவீதின் குடும்பத்துக்கும் நெடுநாள் யுத்தம் நடந்தது, தாவீது வரவரப் பலத்தான்; சவுலின் குடும்பத்தாரோ வரவரப் பலவீனப்பட்டுப்போனார்கள்” சவுல் தேவ வல்லமையை இழந்தான்.


1. தேவனுக்காக வைராக்கியமான வாழ்க்கை வாழ வேண்டியவன், தேவ ஆலோசனையை மீறி நடந்தான். ஆடம்பரத்தை விரும்பினான். எளிய வாழ்க்கை வாழ விரும்பவில்லை.
எளிய வாழ்க்கை கர்த்தருக்காக வாழ்ந்தால் பரலோகத்தில் பலனுண்டு. எளிய வாழ்க்கைதான் மேலான ஆவிக்குரிய வாழ்க்கை.
2. வர வர குடும்பம் பெலன் அடையவில்லை
ஆவிக்குரிய வாழ்க்கை சரியில்லை. ஆசீர்வதிக்கப்படவில்லை என்று பொருள். தேவனுடைய பிள்ளை பெலத்தின்மேல் பெலனடைய வேண்டும். கிருபையின் மேல் கிருபை. மகிமையின் மேல் மகிமையடைய வேண்டும். சீயோனில் தேவ சந்நிதியில் காணப்பட வேண்டும்.

சவுல் குடும்பம் பெலவீனப்பட காரணம்
1. தேவ சித்தம் செய்யாதது: அநேக விசுவாசிகள் தேவ சித்தம் செய்ய முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. தேவன் குறித்த இடத்தில் குடியிருப்பது இல்லை.
2. தேவன் ஏற்படுத்திய மனிதன் மேல் பொறாமை. தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் மேல் பொறாமை, பகை, கொலைசெய்யத் திட்டமிடுதல், சவுல் தாவீதை வெறுத்தபடியால் நெடுநாள் யுத்தம் இரண்டு குடும்பத்துக்கும் நடந்தது. நாம் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட தாவீதின் குடும்பமாக இருக்க வேண்டும்.


யோனா 1:3 வசனத்தில் “அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலி கொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்”. யோனா தேவசித்தம் செய்யாமலிருக்க கூலி கொடுத்தான். அநேக விசுவாசிகள் யோனாவைப் போல தேவ சமுகத்தைவிட்டு விலகிப் போகிறார்கள். தேவ சித்தம் செய்கிறவன் என்றைக்கும் நிலைத்திருப்பான்.


இதை வாசிக்கும் அன்பு நேயரே! நாம் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையிலும், குடும்பத்திலும் ஆக்கினையோ, சாபமோ வராமல் நம்மை கிறிஸ்துவுக்குள் காத்துக்கொள்ள வேண்டும். யோனாவைப் போல துணிந்து தேவசமுகத்தை விட்டு விலகி ஓடக்கூடாது. சவுலைப் போல தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட தேவ மனிதர்களை நாம் பகைக்கக் கூடாது. கோராகைப் போல மோசேக்கு எதிர்க்க கூடாது. தேவ மனிதர்களை எதிர்த்த தாத்தான், அபிராம் குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்பட வில்லை. தாவீது குடும்பத்தைப் போல நாமும், வரவர பெலப்பட்டு, சீயோனிலே தேவ சமுகத்தில் காணப்படுவோம்! அல்லேலூயா!





Author

You May Also Like…

Share This