கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
நீங்கள் அதி சீக்கிரமாக வெளிப்பட போகும் நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாக இருக்கிறீர்களா? நாம் கடைசி காலத்தில் வாழ்கிறோம். வருகையின் அடையாளங்களும் வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களும் நிறைவேறி வருகின்றன. எனவே சபையானது விழிப்போடு, ஆயத்தமாயிருக்க வேண்டும். மத்தேயு 24:44 வசனத்தில், “நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்” என்கிறார். நமது ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள் என்கிறார். எஜமான் வரும்போது விழிப்போடு காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான்.
இயேசுவின் இரண்டாம் வருகையில் மூன்று பகுதிகள் உள்ளன. (1) எடுத்துக்கொள்ளப்படுதல் (இரகசிய வருகை 1தெச.4:17) (2) அறுவடை அதாவது இரகசிய வருகைக்கு பின்னர் உபத்திரவ காலத்தில் இரத்த சாட்சிகளை சேர்க்கும்படியாக மேகத்தில் வருவார் (வெளி.14:14-16) (3) பகிரங்க வருகை (சக.14:1-5,9 வெளி.19:11-21).
மத்.25ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள 3 உவமைகளும் வருகையைக் குறித்து எச்சரிக்கின்றது.
1) பத்து கன்னிகைகள் வருகைக்கு ஆயத்தமாயினர் – 5 பேர் புத்தியில்லாதவர்களாய் கைவிடப்பட்டனர்.
2) தாலந்துகளைப் பற்றிய உவமை – ஐந்து தாலந்தை வாங்கியவனும், இரண்டு தாலந்தை வாங்கியவனும் உத்தமமும் உண்மையுமாக வாழ்ந்து தாலந்துகளை விருத்தி செய்தனர், ஒரு தாலந்தை வாங்கியவன் – பிரயோஜனமற்ற ஊழியக்காரனாய் புறம்பான இருளிலே போடப்பட்டான்.
3) செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறது போல ஜனங்களை இரண்டாகப் பிரித்து நற்கிரியை செய்தவர்களை பரலோக இராஜ்ஜியத்தை சுதந்தரிக்கும்படியாகவும், உதவி செய்யாதவர்களை நித்திய ஆக்கினையை அடையவும் நரகத்தில் போடுவார். எனவே விசுவாசிகளே! வருகை உண்டென்று அறிந்து பரிசுத்தமாக வாழ்ந்து நற்கிரியைகளைச் செய்யுங்கள்.
மேலும் 1யோவான் 3:2,3 வசனங்களில், “பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இன் எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்”
முதலாவதாக – ஜீவியத்தில் உண்மை
மத்.25:1-13 வசனங்களில் 10 கன்னிகைகள் மணவாளனின் வருகைக்கு ஆயத்தமாயிருந்தனர். ஆனால் அவர்களில் ஐந்துபேர் கைவிடப்பட்டனர். புத்தியில்லாத கன்னிகைகளின் கையில் எண்ணெயைக் கூட கொண்டுபோகவில்லை. பரிசுத்த ஆவியின் நிறைவு இல்லை. உலக சிநேகத்தோடு வாழ்ந்தவர்கள் மறுரூபமாக முடியாது. உலக சிநேகத்தை வேதம் விபசார பாவத்துக்கு ஒப்பிடுகிறது. கற்புள்ள மணவாட்டியாக தேவனைப் பின்பற்றும் கன்னிகைக்கும், உலக சிநேகத்துக்கும் ஒத்துப்போகாது. யாக்கோபு 4:4 வசனத்தில், “விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்”. புத்தியுள்ள கன்னிகைகள் உலகத்தை சிநேகிக்கிறவர்கள் அல்ல, நகை, உலக நாகரீகத்துக்கு ஏற்ற விதத்தில் உடை உடுத்துதல், விலையுயர்ந்த ஆபரணங்கள், உடைகள் அணிவது உலக சிநேகம். மனிதரையும், உலகத்தையும் பிரியப்படுத்தினால் தேவனைப் பிரியப்படுத்த முடியாது. புத்தியுள்ளவர்கள் தீவட்டிகளோடு கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டு போனார்கள். தீவட்டிகள் – புத்தியுள்ள கன்னிகைகளின் நற்கிரியைகளை குறிக்கிறது. அவர்கள் நற்சாட்சி மனிதருக்கு முன்பாக பிரகாசமுள்ளதாக இருக்கிறது. பாத்திரங்களில் எண்ணெய் என்பது அந்தரங்க வாழ்க்கையில் அபிஷேக எண்ணெய் உள்ளது. ரகசிய வாழ்க்கை தேவனுக்கு முன்பாக உண்மையும், உத்தமமுமாக உள்ளது. பாத்திரங்களில் எண்ணெய் இல்லாத புத்தியற்றவர்களின் வாழ்க்கை – ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றும் ஆவியின்படி நடக்கவில்லை. தேவ சித்தப்படி, தேவ ஆவியானவரால் நடத்தப்படவில்லை. எனவே பாத்திரத்தின் உட்புறத்தை சுத்தமாக்க வேண்டும். ஆவியின் அபிஷேகத்தால் ஜீவியம் நிரம்பி வழிய வேண்டும்.
மூன்று பகுதிகளில் அந்தரங்க வாழ்வில் பரிசுத்தம் தேவை
உள்ளான ஜீவியத்தில், மறைவான வாழ்க்கையில் பரிசுத்தம் மிகவும் அவசியம் (ய) சிந்தனை வாழ்க்கை – வாடிரபாவ டகைந சிந்தை வாழ்க்கையில் தூய்மை (b) மனப்பான்மை – யவவவைரனந தூய்மையாக இருக்க வேண்டும் (உ) நோக்கம் – அடிவiஎநள நல்ல நோக்கத்துடன் தூய்மையாக எல்லாவற்றையும் செய்ய வேண்டும். தீய நோக்கம் பாவம் என்று வேதம் கூறுகிறது.
இரண்டாவதாக – ஊழியத்தில் உண்மை
மத்.25:14-30 தேவன் அவனவனுடைய திறமைக்குத் தக்கதாக தாலந்துகளைக் கொடுக்கிறார். ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக் கொடுத்தார். தாலந்துகளை கொடுத்த தேவன் நம்மிடம் கணக்கு கேட்பார். தாலந்துகள் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது. பணம், திறமை, சூழ்நிலைகள், வரங்கள் என்று பல தாலந்துகளை திறமைக்குத் தக்கபடி எல்லாமே தேவன் மனிதர்களுக்கு பகிர்ந்து கொடுக்கிறார். தாலந்துகளை பெருக்க வேண்டும். உபயோகிக்க வேண்டும். புதைத்து வைக்கிறவன் வருகையில் காணப்பட முடியாது. தாலந்துகளை விருத்தி செய். ஊழியம் செய், பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்த்து வை. உலகத்துக்காக செலவழிப்பது தாலந்துகளை புதைப்பதற்கு சமம். சுயநலத்துக்காக, தன்னலமாக உபயோகிப்பது தாலந்துகளை புதைப்பதற்கு சமம் தான். சங்.16:2,3 வசனங்களில், “என் நெஞ்சமே, நீ கர்த்தரை நோக்கி: தேவரீர் என் ஆண்டவராயிருக்கிறீர், என் செல்வம் உமக்கு வேண்டியதாயிராமல்; பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய்”.
தேவனுடைய பரிசுத்தவான்களுக்காகவும், சபைக்காகவும், தேவனுடைய இராஜ்ஜியம் கட்டப்படவும் நம் செல்வத்தையும், பணத்தையும் செலவு பண்ண வேண்டும். தன்னலமாக செலவு செய்தால் தாலந்துகளை புதைப்பதற்கு சமம். தாலந்துகளை புதைத்தவன் புறம்பான இருளில் – நரகத்தில் பங்கடைவான். தாலந்துகளை விருத்தி செய்தால் பரலோகத்தில் பங்கடையலாம். நம்முடைய ஒவ்வொரு திறமைகளையும் எப்படி பயன்படுத்தினோம் என்று தேவனுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.
மூன்றாவதாக – உடன் விசுவாசிகளுக்கு உதவி செய். நற்கிரியைகளை செய்ய வேண்டும்
மத்.25:31-46 வரை பார்த்தால் மனிதர்கள் செய்யும் நற்கிரியைகள் அடிப்படையில் இரண்டு பிரிவாக தேவன் பிரிக்கிறார். செம்மறி ஆடு, வெள்ளாடு என்று செம்மறியாடுகளைத் தமது வலது பக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடது பக்கத்திலும் நிறுத்துவார். வலது பக்கத்தில் நிற்பவர்கள் – பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் – உலகம் உண்டானது முதல் அவர்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்ஜியத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். ஆறு காரியங்களில் நற்கிரியைகளைச் செய்யலாம். பசி என்று சொல்லும் போது ஆவிக்குரிய சரீரம் பிரகாரமான பசியை குறிக்கிறது. பசியுள்ள ஆத்துமாவுக்கு நாம் உதவ வேண்டும், தாகம் என்று சொல்லும்போது – ஆவிக்குரிய தாகம், ஆத்தும பாரம், சுவிசேஷ தாகம், சரீர பிரகாரமாக தண்ணீர் தாகம் தீர்க்கப்பட வேண்டும். அந்நியரை உபசரித்தல், சேர்த்துக்கொள்ளுதல், வஸ்திரம் இல்லாதவர்களுக்கு கொடுத்தல்,
வியாதியுள்ளவர்களையும், காவலிலிருக்கிறவர்களையும் கண்டு விசாரித்தல், உதவி செய்தல் போன்றவற்றைச் செய்தால் – மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை தேவனுக்கே செய்ததாக கூறுகிறார்.
வில்லியம் பூத் சிறந்த ஊழியர். அநேகரை கிறிஸ்துவண்டை நடத்தியவர். ஓய்வுநாள் பள்ளியின் ஆசிரியனாகவும், வியாதியஸ்தரைச் சந்தித்து நற்கிரியை செய்பவராகவும் இருந்தார். அவர் எந்த கிரியைகளையும் மாய்மாலத்திற்காகவோ, சுயநலமாகவோ செய்யவில்லை. இவ்வாறிருக்கையில் அவர் எவ்வித எச்சரிக்கையுமின்றி திடீரென்று நோய்வாயுற்று மரணத்தின் விளிம்பிற்கு வந்துவிட்டார். ஒருநாள் தன் சுயநினைவை இழந்து விட்டார். பரலோகில் சென்று பல காட்சிகளையும் தரிசனங்களையும் கண்டார். இச்சமயத்தில் தேவன் உலகத்தை எங்ஙனம் காண்கிறாரோ அதைப் போலவே தானும் காணும்படி உலகத்தின் காட்சிகள் அவர் கண்களுக்கு முன்பாகத் தோன்றின. அப்பொழுது தான் வாழ்ந்த வாழ்க்கையை தேவன் எவ்விதம் கண்டார் என்பதை நித்தியத்தில் தன்னால் காண முடிந்தது என்கிறார். அதைக் குறித்து அவரே கூறுகிறார். “ஐயோ! முற்றிலும் சுயநலமான வாழ்க்கை அல்லவோ வாழ்ந்திருக்கிறேன்” என்ற உணர்வு என்னை வாட்டியெடுத்தது. மிகுந்த வியாகுலத்தோடு “நான் வீணாக்கிய ஜீவியத்தை மீண்டும் சென்று என்னால் ஜீவிக்க முடியுமென்றால்….” என ஏங்கினேன். ஆனால் …..மறுபடியும் ஒரு வாழ்க்கை வாழ சாத்தியமாகாதே! ஐயோ! பூமியில் நான் பெற்றிருந்த சந்தர்ப்பங்கள் அத்தனையும் இழந்துபோனேனே என தவிப்புற்றேன். என் தவிப்பின் குமுறல், “ஓ என் தேவனே! நான் கிறிஸ்துவுக்காய் முற்றிலுமாய் அர்ப்பணம் செய்து வாழும் வாழ்விற்கென என்னிடம் எதைக் கேட்டிருந்தாலும் (யலேவாiபே) கொடுத்திருப்பேனே” என்ற தாமதமான ஜெபமாய் என்னில் பொங்கி வழிந்தது. நான் எனக்காகவே வாழ்ந்தேன், மற்றவர்களுக்காக வாழவில்லை என்று உணர்ந்தேன். ஒரு பரிசுத்தவான் தன் மகனைக் குறித்து என்னிடம் கேட்டார். அவருடைய மகன் என் வீட்டிற்கு அருகில் தான் ஜீவித்தான். பூமியில் ஓர் முரட்டாட்டமான, ஜீவியத்தைச் செய்து வந்தான். சற்று தயங்கி குரலில் அவர், “கிறிஸ்துவைக் குறித்து என் மகனிடம் நீங்கள் சொன்னீர்களா?…… அவன் இரட்சிக்கப் படுவதற்கு ஏதேனும் நம்பிக்கை உண்டா? என்று கேட்டார். ஆனால் நானோ இதுபோன்ற அவனுடைய கஷ்டங்களிளெல்லாம் தலையிட்டுக் கொள்ள விரும்பாமல் அப்பையனை அலட்சியப்படுத்தி விட்டேன்” இரண்டாவதாக, பூமியில் விதவையாக வாழ்ந்தவர், அவர் மிகுந்த துயரத்தின் மத்தியில் போராடி ஜீவித்து தன் கடைசி மகளைத் தவிர எல்லா பிள்ளைகளையும் கிறிஸ்துவுக்குள் நடத்திவிட்டார். கடைசி மகள் இரட்சிக்கப்படவில்லை. எனவே துயரத்தோடு என்னிடம், “யாராகிலும் அவளுக்கு கிறிஸ்துவின் அன்பைக் காட்டியிருந்தால், இப்போது அவளுடைய கண்கள் திறந்திருக்கக் கூடுமே!” என எதிர்பார்ப்போடு கூறினார்கள். அவர்கள் என்னிடம் என் மகள்தான் உங்களுக்குத் தெரியுமே! நீங்கள் அவளிடம் நேரம் செலவழித்தும் பேசியதுண்டா? என ஆர்வத்துடன் கேட்டார்கள். நான் மௌனமாயிருந்தேன். மூன்றாவதாக பூமியில் ஓர் “நீக்ரோவாக” ஜீவித்தவர். அவர் முதலாவதாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பூமியில் அவர் விட்டுவந்த கிறிஸ்தவக் குழுவைக் குறித்தும் அவரது தோழர்களைக் குறித்தும் வினவினார். “வில்லியம்பூத், நான் ஊழியம் செய்த குழுவினருக்கு நீங்கள் உதவி செய்ய முற்பட்டதுண்டா? எனக் கேட்டார். மேலும் “உங்கள் ஜீவியம் அவர்களுக்கு மாதிரியாக இருந்திருக்குமல்லவா? அங்கிருந்த மனந்திரும்பாத தோழர்களை இரட்சிப்பிற்குள் நடத்த நீங்கள் ஏதேனும் முயற்சி செய்ததுண்டா? என்று ஏக்கத்தோடு கூறினார். நானோ அவர்களுக்கு எவ்வித உதவியும், உற்சாகமும் செய்ததில்லை, ஏன் என்றால் அவர்கள் என் குழுவைச் சார்ந்தவர்களல்ல, என்னிலிருந்து பல காரியங்களில் வேறுபட்டவர்கள் என்று உதவி செய்யவில்லை. இப்பொழுது மிகத் தெளிவாக பிரகாசம் நிறைந்த இந்த பரலோக ஒளியில் “நான் இவ்வளவு ஆவிக்குரிய பெருமையினால் நிறைந்திருந்தேன்” என்பதைக் கண்டேன் என்கிறார். நாம் மற்றவர்களுக்காக தியாகமாய் உதவிசெய்ய வேண்டும்.
இதை வாசிக்கும் அன்பு நேயரே! நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார். அவரைச் சந்திக்க ஆயத்தமா? அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்து அவர் சுத்தமுள்ளவராயிருப்பது போல நம்மையும் சுத்திகரிப்போம். நாம் ஆயத்தப்படுவோம், மற்றவர்களையும் ஆயத்தப்படுத்துவோம்.




