விசுவாசியே! நீ கிறிஸ்துவின் சுதந்திரம் எனவே அவருடைய பாடுகளுக்கு பங்காளி

Written by Pr Thomas Walker

September 21, 2009

இயேசு கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார். கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால் நீங்களும் அப்படிப்பட்டச் சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள் என்கிறார் பேதுரு அப்போஸ்தலன். நாம் கிறிஸ்துவைப் பின்பற்றுவது இம்மைக்கான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள மாத்திரம் அல்ல. கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள் என்கிறார் பேதுரு. ரோம.8:17 வசனத்தில், “நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்” நாம் கிறிஸ்துவின் சுதந்திரராக இருக்கிறபடியால் அவருடைய பாடுகளிலும் பங்குபெற வேண்டும். மேலும் 2தீமோ.2:12 வசனத்தில் “அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்;” நாம் அவரை மறுதலித்தால் அவரும் நம்மை மறுதலிப்பார். நாம் நமக்கு வரும் பாடுகளை பொறுமையோடு சகித்தால் மேன்மையான ஆசீர்வாதம் உண்டு. முறுமுறுப்போடு அல்ல. அவரோடுகூட பாடுபடுதல் என்பதிலிருந்து நாம் பாடுபடும்போது கிறிஸ்துவும் நம்மோடு பாடுகளில் பங்கு பெறுகிறார். நம்மோடு இருக்கிறார் என்பது தெளிவாகிறது அல்லவா? சவுலிடம், “நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே” என்று கூறியதிலிருந்து ஆதிக் கிறிஸ்தவர்கள் படும் பாடுகளை அவரும் கூடவே இருந்து அனுபவித்தார் என்பது உறுதியாகிறது. நுகத்தடியின் ஒரு பக்கம் இயேசு, மறுபக்கம் நாம். எனவே சேர்ந்துக் கிறிஸ்துவுடன் பாடுபட வேண்டும். நுகத்தைச் சுமக்க வேண்டும், கிறிஸ்து நன்மை செய்துப் பாடு அனுபவித்தது போல நாமும் நன்மை செய்துப் பாடுகளை அனுபவிக்க வேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

விசுவாசி எப்படிப்பட்ட பாடுகளைச் சகிக்க வேண்டும்? என்று பார்ப்போம்.

 முதலாவதாக அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய் சகிக்க வேண்டும்
1பேதுரு 2:19,20 வசனங்களில், “…தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும்” மேலும் “நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும்” இதற்காக நாம் அழைக்கப்பட்டுமிருக்கிறோம். கிறிஸ்துவும் நமக்காகப் பாடுபட்டு நாம் அவருடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி நமக்கு மாதிரியைப் பின்வைத்துப் போனார். பாடுகளை சந்தோஷத்துடனும் பொறுமையுடனும் சகிக்க வேண்டும். அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களை பொறுமையோடு சகிக்க வேண்டும்.

 
இரண்டாவதாகசோதனையை பொறுமையோடு சகிக்க வேண்டும்
யாக்கோபு 1:12 வசனத்தில், “சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்”. தேவன்மேல் உள்ள நம் விசுவாசம் சோதிக்கப்படும். ஆபிரகாமை தேவன் சோதித்தார். எபி.11:18,19 வசனங்களில், “ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்துமெழுப்பத் தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி, தனக்கு ஒரே பேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்;” ஈசாக்கு மரித்தாலும் தேவன் அவனை எழுப்புவார் என்று நம்பினார். மேலும் யோபுவை கர்த்தர் சோதிக்கும்படி சாத்தானுக்கு அனுமதிக் கொடுத்தார். உத்தமன் என்று விளங்கும் வரை சோதனை உண்டு. பிறகு யோபுவைப் பற்றி இவ்வாறு தேவனே சாட்சிக் கொடுத்தார். பிறகு எல்லாக் காலத்து மக்களுக்கும் மாதிரியான மாதிரிப் புருஷனாக உயர்த்தினார். நம்மையும் அவர் உபத்திரவத்தின் குகையிலேப் புடமிட்டு சுத்தமானப் பொன்னாக மாற்றுவார். ஒரு சிறந்த மாதிரிப் புருஷனாக மாறச் சோதனை அவசியம்.

 மூன்றாவதாகதேவன் தம் சொந்தப் பிள்ளைகளைச் சிட்சிக்கிறார், தேவனின் சிட்சையைப் பொறுமையோடே சகிக்க வேண்டும்
எபி.12:7 வசனத்தில், “நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?” உங்களுக்கு சிட்சைக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப் பிள்ளைகளாயிருப்பீர்கள். நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க நாம் பிழைக்கும்படியாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்க வேண்டும். தேவன் நம் பரிசுத்தத்துக்குப் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார். எந்த சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணப்படாமல் துக்கமாகத்தான் காணப்படும். ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதானப் பலனைத் தரும்.


நம் வாழ்வில் தேவன் சிட்சைகளை அனுமதிக்கிறார். வீண் செலவு, நஷ்டம், காயங்கள், வியாதி, விபத்துகள், வலிகள், வேதனைகள் – இவை யாவும் சும்மா நமக்கு வருவதில்லை. ஒரு காரணத்துடன் பரிசுத்தத்துக்கு நேராக நம்மை நடத்தும்படியும், நாம் தேவனுக்குப் பயந்து நடக்கும்படியும் வருகிறது. நாம் பொறுமையுடன் அவற்றைச் சகிப்பதுடன், தேவன் சிட்சையை எதற்காக அனுமதித்தார் என்பதையும் உணர்ந்து நம் பொல்லாத வழிகளைவிட்டு திரும்ப வேண்டும். 1கொரி.10:13ல் “உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” சாத்தானின் சோதனை பலமாய் தாக்கும்போது அந்த சோதனையில் இருந்து எப்படித் தப்பி, எளிதாக ஜெயிக்க முடியும் என்று ஜெபத்துடன் தேவ ஆலோசனைப் பெற்றுத் தப்பிச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். மேலும் யாக்.1:2,3 வசனங்களில், “…நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” சோதனைகளும், பரீட்சைகளும் நம் வாழ்க்கையில் பொறுமையையும், தாழ்மையையும் உருவாக்குகின்றது. மேலும் வெளி.3:10 “என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைகாலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்” என்கிறார். கடைசி காலத்தில் வரப்போகும் கொடிய சோதனைகளுக்குத் தப்ப, தேவனுடையச் சிட்சைகளையும் சோதனைகளையும் சகித்து ஜீவ கிரீடத்தைப் பெற ஆயத்தமாவோமாக.

 
நான்காவதாகபுத்தியில்லாதவர்கள், சோம்பேறிகள் மூடர்களை வைத்து சோதிக்கிறார், அதை சகிக்க வேண்டும்
நீதி.10:26 “பற்களுக்குக் காடியும், கண்களுக்குப் புகையும் எப்படியிருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்” சில வேளைகளில் சோம்பேறிகளை வைத்து நமக்குப் பாடம் கற்பிக்கிறார். ஆத்திரப்படாமல், எரிச்சல் அடையாமல் நிதானமாகவும், பொறுமையுடனும் செயல்பட கற்றுக்கொடுக்கிறார். 2கொரி.11:19,20 வசனங்களில் “நீங்கள் புத்தியுள்ளவர்களாயிருந்து புத்தியில்லாதவர்களைச் சந்தோஷமாய்ச் சகித்திருக்கிறீர்களே. ஒருவன் உங்களைச் சிறையாக்கினாலும், ஒருவன் உங்களைப் பட்சித்தாலும், ஒருவன் உங்களைக் கைவசப்படுத்தினாலும், ஒருவன் தன்னை உயர்த்தினாலும், ஒருவன் உங்களை முகத்தில் அறைந்தாலும் சகித்திருக்கிறீர்களே” புத்தியில்லாதச் சகோதரனை “மூடனே” என்று கூறி கோபப்பட்டால் எரிநரகத்துக்குப் போக வேண்டும். சில சமயங்களில் மூடர்களையும், புத்தியில்லாதவர்களையும் வைத்து தேவன் சோதிக்கிறார். ஒருவன் நம்மை சிறையாக்கினாலும், பட்சித்தாலும், சிறுமைப்படுத்தினாலும், முகத்தில் அறைந்தாலும், கிறிஸ்து நமக்காக பாடுகளைச் சகித்ததுபோல நாமும் நமக்கு வரும் பாடுகளை பொறுமையுடன் சகிக்க வேண்டும்.

 ஐந்தாவதாகஅநியாயத்தை சகித்துக்கொள்ள வேண்டும்
1கொரி.6:1,7,8 வசனங்களில், “உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடே வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடத்தில் போகாமல், அநீதக்காரரிடத்தில் போகத் துணிகிறதென்ன? நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை? நீங்களே அநியாயஞ்செய்கிறீர்கள், நஷ்டப்படுத்துகிறீர்கள்; சகோதரருக்கும் அப்படிச் செய்கிறீர்களே” என்கிறார். அநியாயத்தை சகித்துக்கொள்ள வேண்டும். அதனால் ஏற்படும் நஷ்டத்தையும் சகித்துக்கொள்ள வேண்டும் என்று போவது நல்லதல்ல. லோத்துடைய மந்தை மேய்ப்பருக்கும், ஆபிரகாமின் மந்தை மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வந்து பிரிய நேர்ந்தபோதும் ஆபிரகாம் பெரியவன் விட்டுக்கொடுத்தான். லோத்து சோதோம், கொமோராவின் செழிப்பைக் கண்டு மயங்கி அந்த இடத்தை தெரிந்தெடுத்தான். வாக்குவாதம், சண்டைகள், போராட்டத்துக்கு இடம் கொடுக்காமல் தேவனிடத்தில் நமது பிரச்சனைகளை விட்டுவிட்டு பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.

 ஆறாவதாகஎல்லா சூழ்நிலைகளிலும் மனரம்மியமாக திருப்தியாக இருக்க வேண்டும்
பிலி.4:11,12 “என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மன ரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்”.
தேவன் நம்மை எந்தச் சூழ்நிலையில் வைத்தாலும் தரித்திரமான சூழ்நிலையிலும், செல்வச் செழிப்பாக, ஐசுவரியமாக வைக்கப்பட்டாலும் கிறிஸ்துவின் அன்பை விட்டுப் பிரியாமலும் தேவனை முறுமுறுக்காமலும், அசட்டைப் பண்ணாமலும் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். எல்லாச் சூழ்நிலையிலும் சகிக்கும் தன்மையுடன் இருக்க வேண்டும்.

 ஏழாவதாகரோமர் 14:1,2,3-6 வசனங்களில் – விசுவாசத்தில் பலவீனமுள்ள வர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்
சிலர் எந்தப் பதார்த்தத்தையும் புசிக்கலாமென்று நம்புகின்றனர். பலவீனனோ மரக்கறிகளை மாத்திரம் புசிக்கிறான். ஒருவன் ஒரு நாளை விசேஷமாக எண்ணுகிறான். மற்றவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான். அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்க வேண்டும். நாம் விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒருவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள் என்கிறார் பவுல். சிலர் ஆடு, மாடு, மீன் போன்றவற்றை சாப்பிடுகிற பழக்கம் உள்ள சூடிn-ஏநபநவயசயைn ஊழியராகவோ, விசுவாசிகளாகவோ இருக்கலாம். சிலர் மரக்கறி ஏநபநவயசயைn உணவு உட்கொள்பவராக இருக்கலாம். சிலர் அதிகம் சாப்பிடலாம். சிலர் குறைவாகச் சாப்பிடுவார்கள். யோவான் ஸ்நானகன் பழங்களையும், தேனையும் மட்டுமே சாப்பிட்டார். உணவு வகைகளை சாப்பிடவில்லை. இயேசுவோ மீன் போன்ற உணவு வகைகளை சாப்பிட்டார். அவரைப் போஜனப்பிரியன் என்றனர். உடைகளை வைத்தோ, உணவு மற்றும் நாள் பார்ப்பது போன்றக் காரியங்களை வைத்து தரக்குறைவாகப் பேசாமல் ஒருவரை ஒருவர் பொறுத்துச் சகிக்க வேண்டும்.


1. 1கொரி.13:7 வசனத்தின்படி அ) அன்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும் ஆ) அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.

2. பின்பு வரும் மகிமையையும், சந்தோஷத்தையும் நினைத்து சகிக்க வேண்டும்
எபி.12:2 வசனத்தில், “அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்”. மேலும் ஏசா.53:11 வசனத்தில், “அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்” அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன். பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக் கொள்வார். இயேசு சிலுவையைச் சுமக்கும்போது தமக்கு முன்பாக இருந்த மகிமையை நினைத்துப் பார்த்தார். அநேகப் பாவிகள் மனந்திரும்பி அவர் பிள்ளைகளாக மாறுவதைக் கண்டார். பிதா – இயேசுவைப் போல பரிசுத்தமான பிள்ளைகள் பரலோகம் வருவதைக் கண்டார். இயேசு நமது மூத்த சகோதரன் – நாமும் அவரைப் போல மாறி ஒருநாள் தேவ சந்நிதியில் நிற்போம்.Our earthly suffering is not equal to the glory if the Heaven.



3. நாம் பாடுகளை சகிக்க வேண்டுமானால் பலவிதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்.
எபி.12:3 வசனத்தில், “…நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்”


இதை வாசிக்கும் பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! நாம் பலவிதமானப் பாடுகளின் வழியாக கடந்துபோகும்போது நமக்கு முன் அடிச்சுவடுகளை வைத்துப்போன இயேசுவையே நோக்கிப் பார்க்க வேண்டும். நம்மை மீட்க இயேசு சிலுவையில் அவமானப்பட்டார். மரியாள் கூட இயேசுவை பெற்றெடுக்கும்போது சத்திரத்தில்கூட தங்க வசதியில்லை. இடமுமில்லை. மாட்டுத் தொழுவத்தின் முன்னணையில் இயேசு வைக்கப்பட்டிருந்தார். இயேசுவின் வாழ்க்கை முழுவதும் கஷ்டம், நெருக்கம், பாடுகள் நிறைந்த இருக்கமான பாதையாகவே காணப்பட்டது. சிலுவை மரணம் கூட கொடிய வேதனை நிறைந்ததாகக் காணப்பட்டது. மத்.10:22 வசனத்தில், “என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்” என்கிறார். எனவே விசுவாசியே! பதறாதே! கலங்காதே! நீ கிறிஸ்துவின் சுதந்தரம் அவரால் கிரயத்துக்கு கொள்ளப்பட்டவன். நீ மகிமைக்காகத் தெரிந்தெடுக்கப்பட்டவன். எனவே நீ அவருடையப் பாடுகளுக்கும் உடன் பங்காளியாக உன்னைத் தெரிந்தெடுத்துள்ளார். நீ முடிவு பரியந்தம் அவர் அன்பில் நிலைத்திருந்து ஜீவக் கிரீடத்தைப் பெற்றுக்கொள். அல்லேலூயா!






Author

You May Also Like…

Share This