எது மிகவும் கடினமான காரியம்?

Written by Pr Thomas Walker

May 21, 2009

இன்றைய திருச்சபையிலும், உலகத்திலும் குடும்பங்களிலும் மிகவும் கடினமான காரியம் எது என்றால் உண்மையான மனிதனைக் கண்டுபிடிப்பதுதான். குணசாலியான ஸ்திரீயையும் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான காரியம் தான். அக்கினி ஜுவாலைப் போன்ற கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கின்றன. தேவன் தேடும் மனிதன் யார்? என்றால் உண்மையான மனிதன் தான். தேவன் உண்மையான மனிதனை சம்பூரணமாய் ஆசீர்வதித்து உயர்த்தும்படியாய்த் தேடுகிறார். நீதி.20:6 வசனத்தை வாசித்தால் “மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?” இந்த நாளில் நீங்கள் உங்களையே கேட்டுப் பாருங்கள். நீ உண்மையுள்ளவனா? நீ தேவன் தேடும் உண்மையுள்ள நபர் தானா? தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறதால் நம்மையும் அப்படி உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். தம் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவர். பொல்லாத தலைவன்கூட தன் காரியதரிசி உண்மையுள்ளவனாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறான்.

 
முதலாவதாகஆவியில் உண்மையுள்ளவனாய் இருக்க வேண்டும்
நீதி.11:13 வசனத்தில், “ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்” தேவன் தேடும் உண்மையுள்ள மனிதனுக்கு கபடமில்லாத ஆவி தேவை.

 இரண்டாவதாககொஞ்சத்திலும் உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும்
மத்.25:21 வசனத்தில், “அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்” நமக்கு கிடைக்கும் கொஞ்ச வருமானத்திலும், ஆஸ்தியிலும், வேலையிலும் நாம் உண்மையாய் இருக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். அப்பொழுதுதான் நாம் ஆசீர்வதிக்கப்படுவோம். நெருக்கத்தின் மத்தியில் நாம் முறுமுறுக்கக் கூடாது. நமக்கு நெருக்கத்திலிருந்து செழிப்பையும் விசாலமான பாதையையும் தருபவர் தேவனே.


(a) கொலோ.3:22 வசனத்தில், “வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள்” நம்முடைய எஜமான்களை ஏமாற்றினால் ஆசீர்வாதக் குறைவுதான் வரும்.

(b) எஜமான்களே உண்மையாயிருங்கள்
உபா.24:15 வசனத்தில், “(வேலைக்காரன்)அவன் வேலைசெய்த நாளில்தானே, பொழுதுபோகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்; அதைக் கொடாவிட்டால் அவன் உன்னைக்குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான்; அது உனக்குப் பாவமாயிருக்கும்.” எனவே எஜமானனே உண்மையாயிரு. கூலியை உடனே கொடு. கடத்தாதே. கடன்படாதே. பொழுது போகுமுன்னே கொடுத்துவிடு. யாக்.5:4 “இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக்காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக்குரலிடுகிறது;…” உண்மையுள்ள மனுஷன் நீசருக்கு முன்பாக நில்லாமல் ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.

 மூன்றாவதாகஉக்கிராண ஊழியத்தில் உண்மை
லூக்.16:10 வசனத்தில், “கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்” உக்கிராண ஊழியத்திலே உண்மை. ஒரு சொத்தை ஒப்புவித்துவிட்டு கணக்கு கேட்கும்போது உண்மையாக இருத்தல் வேண்டும். ஆஸ்தி, வீடு, நிலம், பிள்ளைகள் எல்லாவற்றையும் உண்மையான உக்கிரானைப் போல பராமரித்தல் (Stewardship) வேண்டும். மற்றவர்கள் பணத்தை உண்மையாய் உபயோகித்தல் வேண்டும். Riksha,Taxi,Auto போன்றவற்றை அதிகம் பயன்படுத்தக் கூடாது. ஆடம்பரமாக அதிகமாக செலவு செய்யக்கூடாது. தன் பணம் போல நினைத்து ஒவ்வொரு பணத்தையும் தேவனுக்கு பயந்து செலவிட வேண்டும். உன் சொந்த உழைப்பால் கிடைத்த பணத்தையும் தாறுமாறாக செலவழிக்காதே. எல்லாமே தேவனுடையது. It’s God’s money.You have to give account to God. ஆகவே நீ உண்மையுள்ள உக்கிராணக்காரனாயிரு.

 நான்காவதாகதேவன் நமக்கு கொடுத்த தாலந்துகளைப் பயன்படுத்துவதில் உண்மை
மத்.25:20,21 வசனத்தில், “…ஆண்டவனே, ஐந்து தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான். அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்…” என்றார். தேவன் நம் ஒவ்வொருவருக்கும் தாலந்துகளை நம்பிக் கொடுத்திருக்கிறார். நாம் உண்மையாய் அவருடைய இராஜ்ஜியத்தைக் கட்ட பயன்படுத்த வேண்டும்.

 ஐந்தாவதாகபாடுகளில் உண்மையாக இருக்க வேண்டும்
வெளி.2:10 வசனத்தில், “…நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்” சிலர் அதிக உபத்திரவத்தில் தேவனை மறுதலிக்கின்றனர். பாடுகளில் உலகத்தை நேசித்து பின்மாற்றத்துக்கு இடம்கொடுத்து தேவனை விட்டு விலகி விடுகின்றனர். இதனால் கிரீடம் கிடைக்காது.
கம்யூனிஸ்ட் நாட்டில் 40 உண்மையான கிறிஸ்தவர்களை ஐஸ் கட்டி உறைந்துபோன ஒரு ஏரியில் நிறுத்தி விறைத்துப்போகும் மட்டும் சித்திரவதை செய்தனர். அந்த (general) சிறை அதிகாரி, இயேசுவை மறுதலித்தால் அந்த நபரை வெளிக் கொண்டுவந்து அனல்மூட்டி உயர்ந்த வேலைகள் தருவதாக ஆசை காட்டினான். இயேசுவை மறுதலித்து ஒரு மனிதன் வந்துவிட்டான். அந்த சமயம் அந்த சிறை அதிகாரியின் கண்களை தேவன் திறந்தார். பரலோகத்திலிருந்து 40 கிரீடங்கள் இறங்கி வந்தது. ஆனால் ஒரு கிரீடம் மட்டும் மேலே போவதும் வருவதுமாயிருந்ததைக் கண்டான். உடனே அந்த சிறை அதிகாரி அந்த மனிதன் வெளிவந்த இடத்தில் போய் நின்று தான் இயேசுவை உண்மையாக ஏற்றுக்கொள்வதாகக் கூறி, குளிரில் விறைத்துப்போய் மரித்து அந்த கிரீடத்தைப் பெற்றான். முடிவு பரியந்தம் இயேசுவுக்காக நிலைத்திருப்பவனே ஜீவகிரீடத்தைப் பெறுவான்.

 ஆறாவதாகமரணபரியந்தம் இயேசுவுக்கு உண்மையாயிரு
வெளி.20:4 “இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம் பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.” இயேசு கிறிஸ்துவைப் பற்றிய உண்மையிலிருந்து கடைசி மட்டும் விலகாதே. இயேசுவை ஒரு தீர்க்கதரிசியாக எண்ணுகிறவர்களும் உண்டு. தத்துவ புருஷனாக எண்ணுகிற கூட்டமும் உண்டு. ஆனால் இயேசுவே ஆண்டவர், அவரே வானத்திலும், பூமியிலும் சகல கனத்தையும், மகிமையையும், அதிகாரத்தையும் உடையவராக ஏற்றுக்கொள்பவர்கள் வெகு சிலர் தான்.

 ஏழாவதாகஉடன்படிக்கையில் உண்மை
யாத்.19:5 வசனத்தில், “இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது” என்கிறார். தேவன் உடன்படிக்கையில் உண்மையுள்ளவர். கணவன், மனைவி இருவரும் திருமண நாளில் செய்த உடன்படிக்கையில் இருவரும் மரண பரியந்தம் உண்மையாக இருக்க வேண்டும். உபா.7:9 வசனத்தில், “…உன் தேவனாகிய கர்த்தரே தேவன் என்றும், தம்மில் அன்புகூர்ந்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைமட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன்…” நாம் தேவனோடு பண்ணின ஞானஸ்நான உடன்படிக்கையிலும் உண்மையாயிருக்க வேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் உடன்படிக்கையை மீறினதால் அவர்களை புறஜாதிகளிடம் விற்றுப்போட்டார். கொள்ளை நோய்க்கு ஒப்புக்கொடுத்தார்.


இதை வாசிக்கும் அன்பு நேயரே! எது மிகவும் கடினமான காரியம்? உண்மையாக இருப்பது தான். தேவன் உண்மையாக இருப்பதால், நாமும் எந்த காரியங்களில் எல்லாம் உண்மையாக இருக்கவேண்டும் என்று பார்த்தோம். அழிந்துபோகிற உலகக் காரியத்தில் உண்மையாயிருந்தால் தான் பரம காரியங்களையும், நித்திய ஜீவனையும் தருவார். நாத்தான்வேலைப் போன்று கபடற்ற உத்தம இஸ்ரவேலனாக உண்மையாயிருந்தால் தேவன் நம்மை உயர்த்துவார். ஈசாயின் குடும்பத்தில் பலி விருந்துக்கு சாமுவேல் தீர்க்கதரிசி வந்தபோது ஆடுகளை மேய்த்து வந்த தாவீது தகப்பனாலும், சகோதரராலும் மறக்கப்பட்டுப் போனாலும், தேவன் அவனை மறந்துபோகவில்லை. பேரிலும் அவன் உண்மையுள்ளவன் என்று தேவன் கண்டுபிடித்ததால் தாவீதை அவர்கள் நடுவில் இராஜாவாக அபிஷேகித்து உயர்த்தினார். தாவீது கர்த்தரை எக்காலத்திலும் பாடித் துதித்தான். காட்டில் தன் வசம் இருந்த ஆடுகளைக் குறித்து அதிக ஜாக்கிரதையாக இருந்தான். சிங்கம், கரடி வாயிலிருந்து அந்த ஆடுகளைக் காப்பாற்றினான். வேலையில் உண்மையாயிருந்த தாவீதை தேவன் உயர்த்தினார். பவுல் – மனந்திரும்புவதற்கு முன்பு சீஷர்களைத் துன்பப்படுத்தினான். ஆனால் தேவன் அவனை உண்மையுள்ளவனாகக் கண்டு அழைத்தார். கடைசி வரை பெற்றுக்கொண்ட பரம தரிசனத்துக்கும், தேவனுக்கும் உண்மையாக இருந்தான். எலிசா தீர்க்கதரிசியைப் பின்பற்றுவதில் கடைசி வரை அக்கினி ரதமும், குதிரைகளும் பிரித்துக்கொண்டு போகும்வரை, அவரேயே பின்பற்றி வந்ததால் இரட்டிப்பான வரம் பெற்றான். எலியாவின் மேலிருந்த அந்த சால்வையும் அபிஷேகமும் கிடைத்தது. தேவனால் வல்லமையாக பயன்படுத்தப்பட்டார். நாமும் உண்மையும் உத்தமமுமான விசுவாசிகளாக சபையில் வருகை மட்டும் நிலைத்திருந்து தேவனுடைய இரக்கத்தை பெறுவோமாக! ஆமென்.
அல்லேலூயா!






Author

You May Also Like…

Share This