கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
தேவன் நீதியுள்ள நியாயாதிபதி. நீதியில் பிரியப்படுகிறார். கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது. நெருக்கப்படுகிறவர்களையும், சிறுமைப்படுத்தப் படுகிறவர்களையும் அவர் விடுவிக்கிறார். நெருக்கத்திலிருந்து கூப்பிடுகிறவர்களை விசாலத்தில் கொண்டுவந்து நிறுத்துகிறார். குடும்பத்தில் அற்பமாக எல்லாராலும் எண்ணப்பட்டு, மனிதர் புறக்கணித்தாலும், கர்த்தருடைய கண்களுக்கு நாம் மறைந்து போவதில்லை. கர்த்தர் நம்மை விசாரிக்கிறவர். நம்மேல் கரிசனையும், அன்பும், இரக்கமும் உள்ள தேவன். அவரைப் பற்றி உத்தம இருதயத்தோடு இருக்கிறவர்களுக்கு அவர் தம்முடைய வல்லமையை வெளிப்படுத்துவார். ஆதி.29:31 வசனத்தில் யாக்கோபின் மனைவி “லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்” டுநயஉh றயள nடிவ டடிஎநன லெ hநச hரளயெனே. லேயாள் உதாசீனப்படுத்தப்பட்டாள். ஆனால் யாக்கோபு லேயாளை அற்பமாய் எண்ணினாலும், தேவன் லேயாள் பக்கமாக இருந்தார். யாக்கோபு ராகேலை அதிகமாக நேசித்தான். தேவன் நீதியுள்ள நியாயாதிபதி. யாக்கோபு ராகேலின் அழகினால் அவளை அதிகம் நேசித்தான். லேயாள் கூச்சப் பார்வையுடன் இருந்ததால் அவளை அற்பமாக எண்ணினான். ஆனால் தேவன் சிறுமைப்படுத்தப் பட்டவர்களை விசேஷமாக கண்காணிக்கிறார். அவளை ஆசீர்வதித்தார். அவள் யாக்கோபுக்கு 6 குமாரரையும், குமாரத்தியையும் பெற்றெடுத்தாள். அவளுடைய பிள்ளைகளில் லேவி – ஆசாரிய ஊழியம் செய்யும்படி தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டவன். யூதா – ஆளுகை செய்யும்படி அபிஷேகம் செய்யப்பட்டவன். இயேசுவும் யூதா கோத்திரத்தில் தான் வந்தார்.
ராகேலுக்கோ 2 பிள்ளைகள் தான். அவளது இரண்டாம் குழந்தை பென்னியமீன் பிறந்ததும் அவள் மரித்துப்போனாள். கானானுக்குப் போகும் வழியில் மரித்ததால், பிதாக்களுடைய கல்லறையில் அவளை அடக்கம் செய்யவில்லை. முறைப்படி யாக்கோபின் அருகில் பிதாக்களுடைய கல்லறையில் புதைக்கப்பட்டதும் லேயாள்தான். இந்த பாக்கியம் ராகேலுக்கு கிடைக்கவில்லை. நன்மையான ஈவுகளும், வேதனையில்லாத ஆசீர்வாதங்களையும் கொடுப்பவர் தேவனே. தேவன் லேயாளின் நிந்தையை புரட்டிப் போட்டார்.
தேவன் இன்றும் சபைகளில் அற்பமாய் எண்ணப்பட்டவர்களை உயர்த்துகிறார். தேவன் நமக்காக வழக்காடுகிறார். தேவன் புறக்கணிக்கப்பட்டவர்களை உயர்த்துகிறார். குடும்பத்தில் புருஷனால் அற்பமாய் எண்ணப்பட்டாலும், தேவன் உன் பக்கம் நின்று உனக்காக வழக்காடுவார். தேவன் பயங்கரமான பராக்கிரமசாலியாக உன் பக்கம் ஆதரவாக இருப்பார். நாம் வேதத்தில் அற்பமாக எண்ணப்பட்டவர்களை எவ்வாறு ஆசீர்வதித்தார் என்று பார்ப்போம்.
முதலாவதாக
ஆதி.16:4 வசனத்தில், “அவள் (ஆகார்) தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள்.” சாராள் (நாச்சியார்) ஆகாரின் எஜமாட்டி அற்பமாயெண்ணப்படுகிறாள். ஆகாரின் உயர்வுக்கு காரணம் சாராள் தான். ஆனால் உயர்த்தப்பட்ட பின்பு, காரணமாயிருந்த எஜமாட்டியை அற்பமாக எண்ணினான். தேவன் சாராள் பக்கம் தான் நிற்கிறார். தேவன் சாராளிடம் அக்கறை உள்ளவராய் இருக்கிறார். ஆதி.16:8 வசனத்தில், “சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்.” ஆதி.16:9ல் “நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார்.” கர்த்தருடைய தூதன் அவளிடம் ஆபிரகாமின் மறுமனையாட்டி என்று கூப்பிடவில்லை. ஆகார் ஆபிரகாமுக்கு மனைவியாயிருந்து பிள்ளை பெற்றெடுத்தது உண்மைதான். ஆனால் தேவன் ஆகாரை சாராயின் அடிமைப் பெண்ணாகத்தான் பார்த்தார். ஆதி.21:12 வசனத்தில், கர்த்தர் ஆபிரகாமிடம் “அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்” என்றார். தேவன் அங்கீகரித்தது சாராளின் சந்ததியையே. ஆகாரையும் அவள் பிள்ளையையும் புறக்கணித்தார்.
இரண்டாவதாக
நியாயாதிபதி 11:1 வசனத்தில், யெப்தா பலத்த பராக்கிரமசாலியாயிருந்தான். அவன் கீலேயாத்தியன். அவன் பர ஸ்திரியின் மகன். அவன் தகப்பன் கீலேயாத் அவனைப் பெற்றான். அவன் சகோதரர்கள் உனக்கு எங்கள் தகப்பன் வீட்டிலே சுதந்தரம் இல்லை. நீ அந்நிய ஸ்திரியின் மகன் என்று சொல்லி அவனைத் துரத்தினார்கள். பிறப்பினால் அற்பமாய் எண்ணப்பட்டு சகோதரரால் யெப்தா வெறுக்கப்பட்டான். ஆனால் நியாயாதிபதி 11:11 வசனத்தில், “…யெப்தா கீலேயாத்தின் மூப்பரோடே கூடப்போனான்; ஜனங்கள் அவனைத் தங்கள்மேல் தலைவனும் சேனாபதியுமாக வைத்தார்கள்.” தேவன் யெப்தாவோடு இருந்தார். வேசிகளும் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பார்கள். சீஷர்கள்கூட சமாரியப் பெண்ணுடன் இயேசு பேசியதை விரும்பவில்லை. சமாரியர் யூதருக்கு அருவருப்பானவர்கள், தாழ்ந்தவர்கள். ஆனால் இயேசுவோ அவள் ஆத்துமா கெட்டு நரகம் செல்லக்கூடாது என்று அவளிடம் அன்புகூர்ந்து, நித்திய ஜீவனை சுதந்தரிக்க வழிகாட்டினார். மேலும் சீமோன் வீட்டிற்கு இயேசு விருந்துக்குச் சென்றபோது ஒரு பாவியான ஸ்திரீ, இயேசுவின் பாதத்தை கண்ணீரால் நனைத்து, தலைமயிரால் துடைத்து பரிமள தைலம் பூசினாள். மற்ற ஜனங்கள் அவளை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இயேசுவோ அவளுடைய அன்பின் பணிவிடையை ஏற்றுக்கொண்டு, அவளுடைய பாவங்களை மன்னித்தார்.
மூன்றாவதாக
1சாமு.1:6 வசனத்தில், “கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி, அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள்” அன்னாளின் கணவன் எல்க்கானா என்பவன். அன்னாள் அற்பமாயெண்ணப்பட்டாள். தேவன் அவள் நிந்தையை மாற்றினார். தேவ சமூகத்தில் அவள் கண்ணீரோடு ஜெபித்தாள். அன்னாள் தன்னை சரியாய் ஒப்புக்கொடுக்க தேவன் விரும்பினார். பிரதிஷ்டையை ஆழமாக தேவன் விரும்பினார். வேதத்தில் சிம்சோனுக்காக பெற்றோர் திராட்ச ரசத்தை விலக்கினார்கள் என்று பார்க்கலாம். அதேபோல இருதயத்தை ஒப்புக்கொடுத்து அன்னாள் பொருத்தனை பண்ணும்படி செய்தார். 1சாமு.3:20, “சாமுவேல் கர்த்தருடைய தீர்க்கதரிசிதான் என்று தாண் முதல் பெயெர்செபா மட்டுமுள்ள சகல இஸ்ரவேலருக்கும் விளங்கினது.” அன்னாளை தேவன் ஆசீர்வதித்து ஒரு தீர்க்கதரிசியை பெற்றெடுக்கும் பாக்கியத்தை தந்தார். அவள் பொருத்தனை பண்ணி ஜெபித்ததால் தேவன் மேலும் 5 பிள்ளைகளை தந்து ஆசீர்வதித்தார். சாமுவேல் தீர்க்கதரிசியின் தாய் என்ற பெருமையையும் புகழையும் தந்தார். தேவன் நம்மோடு போராடுகிறவர்கள் முன்பாக நம் வழக்கை விசாரித்து நம்மை மேன்மைபடுத்தி வைப்பார்.”
நான்காவதாக
நெகேமியா 4:2,3,4 வசனங்களில், நெகேமியா எருசலேமின் அலங்கத்தைக் கட்டுகிற செய்தியைக் கேட்டு எதிரிகள் கோபித்து, எரிச்சலடைந்து, கேலியாகவும் அற்பமாகவும் பேசினார்கள். “அந்த அற்பமான யூதர் செய்கிறது என்ன, அவர்களுக்கு இடங்கொடுக்கப்படுமோ, பலியிடுவார்களோ, ஒருநாளிலே முடித்துப்போடுவார்களோ,…. அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல் மதில் இடிந்துபோகும்” என்று சன்பல்லாத் நிந்தித்தான். தேவனுக்காக அலங்கம் கட்டுகின்றபோது இஸ்ரவேலரும் நெகேமியாவும் பரியாசம் செய்யப்பட்டனர். இன்றும் சபை கட்டும் போதகர்களையும், ஊழியர்களையும் நிந்திக்கிற சன்பல்லாத் தொபியா என்ற பரியாசக் கூட்டங்கள் உள்ளது. உன் வேலையைக் குறித்தும், உன் ஊழியத்தையும் மக்கள் அற்பமாக எண்ணலாம். ஆனால் தேவன் உன் பக்கம் இருந்தால் உன்னை மேன்மைப்படுத்துவார். உன் ஊழியத்தை அங்கீகரித்து நிலை நிறுத்துவார். பாதாளத்தின் தீய வல்லமைகள் மேற்கொள்ளாது.
ஐந்தாவதாக
எஸ்தர் 7:4 வசனத்தில், எஸ்தர் ஜனங்களுக்காக எவ்வாறு அகாஸ்வேரு ராஜாவிடம் பரிந்துபேசி மன்றாடினாள் என்று பார்க்கிறோம். “எங்களை அழித்துக் கொன்று நிர்மூலமாக்கும்படி நானும் என் ஜனங்களும் விற்கப்பட்டோம்; அடிமைகளாகவும் வெள்ளாட்டிகளாகவும் விற்கப்பட்டுப்போனாலும் நான் மவுனமாயிருப்பேன்; இப்பொழுதோ ராஜாவுக்கு உண்டாகும் நஷ்டத்துக்கு அந்தச் சத்துரு உத்தரவாதம்பண்ண முடியாது” என்றாள். அகாஸ்வேரு ராஜா ஆமானின் சதி திட்டத்தைப் புரிந்துகொண்டு யூதர்களை அழிக்க வேண்டும் என்ற திட்டத்தை மாற்றி அமைத்தான். மேலும் எஸ்தர் 9:25 வசனத்தில் பார்த்தால், யூதருக்கு விரோதமாய் அவன் நினைத்த அவனுடைய பொல்லாத யோசனை அவனுடைய தலையின்மேல் திரும்பும்படி கட்டளை பிறப்பித்ததினாலே ஆமானையும் அவன் குமாரரையும் மரத்திலே தூக்கிப் போட்டார்கள். தேவனுடைய ஜனங்களாகிய மொர்தெகாயையும் யூத ஜனத்தையுமே அழிக்க திட்டமிட்டவர்களை தேவன் பழி வாங்கினார்.
ஆறாவதாக
யோபு 19:18,19,20,25,26 வசனங்களில் யோபுவின் வாழ்க்கையில் பெரிய சோதனைகள் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக வந்தது. பிள்ளைகள் பத்து பேரும் ஒரே நாளில் மரித்தனர். ஆஸ்தி, வீடுகள், ஆடு மாடுகள் போன்ற செல்வம் அனைத்தையும் இழந்தான். கடைசியில் சரீரத்தில் வியாதி, மனைவியும் வெறுப்புடன், “தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்” என்று கூறினாள். நண்பர்கள் வந்து குற்றம் சாட்டினார்கள். பிள்ளைகளைக் குறித்து செல்வத்தைக் குறித்து பெருமையாக இருந்தான் என்று பழி சுமத்தினார்கள். யோபு 19:18 வசனத்தில், “சிறுபிள்ளைகளும் என்னை அசட்டைபண்ணுகிறார்கள்; …அவர்கள் எனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள்” என் பிராண சிநேகிதர் எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள். நான் சிநேகித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள். சரீரத்திலும் பாதிப்புடன் – எலும்புகள் தோலுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறது. என் பற்களை மூடக் கொஞ்சம் தோல் மாத்திரம் தப்பினது என்கிறார். ஆனாலும் தேவனிடம் நம்பிக்கையுடன் வாழ்ந்தார். “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்” என்றார். சோதனைகளிலும் நிந்தைகளிலும் சோர்ந்துபோகாமல் உறுதியுடன் நின்றதால் தேவன் அவர் பக்கமாக நின்றார். சாத்தானின் சோதனைகளை முறியடித்து வெற்றி வாகை சூட உதவினார். சோதனையில் யோபுவை இன்னும் அதிகமாக பரிசுத்தப்படுத்தி இரண்டு மடங்காக ஆசீர்வதித்தார். யோபு தான் இழந்துபோன அனைத்தையுமே திரும்பப் பெற்றுக்கொண்டார்.
ஏழாவதாக
மத்.21:42 வசனத்தில், “இயேசு அவர்களை நோக்கி: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது…” என்று கூறினார். இயேசுவை யூதர்களும், வேதபாரகரும், ஆசாரியரும், பரிசேயரும் பரியாசம் செய்தனர், வெறுத்தனர். அவரைக் கொலை செய்தனர். அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய மகன் அல்லவா? நாசரேத்திலிருந்து நன்மை பிறக்குமோ? ஒரு தீர்க்கதரிசி நாசரேத்திலிருந்து தோன்றுவாரா? என்று அற்பமாக நினைத்தனர். தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார். எல்லாரும் ஆகாது என்று தள்ளின இயேசுவையே தேவன் – பரலோகத்துக்குச் செல்லும் வழியாக, வாசலாக வைத்துள்ளார். அவரையல்லாமல் ஒருவனும் பிதாவினிடம் செல்ல முடியாது. குமாரனை உடையவனே நித்திய ஜீவனைப் பெறமுடியும். எல்லா நாமங்களுக்கும் மேலாக தேவன் அவரை உயர்த்தினார்.
இதை வாசிக்கும் பிரியமானவர்களே! நீங்கள் மற்றவர்களால் நிந்திக்கப்படலாம், தூஷிக்கப் படலாம். அற்பமாக, துடைத்துப் போடப்படும் குப்பையைப் போலவும், கந்தையாகவும் எண்ணப்படலாம். தேவன் உங்கள் நிந்தையைப் புரட்டிப் போடுவார். உங்கள் கந்தையை துதியின் ஆடையாக மாற்றுவார். உங்கள் இரட்டு வஸ்திரத்தையும் துக்கத்தையும் மாற்றி மகிழ்ச்சியினால் நிரப்புவார். தேவன் நம் பக்கத்தில் இருந்தால் ஒருவனும் நமக்கு முன்பாக எதிர்த்து நிற்க முடியாது! அல்லேலூயா! ஆமென்!




