கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
சேனைகளின் தேவன் நம்மோடிருக்கிறார். தேவன் தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்தில் வாசம்பண்ணி அதை சந்தோஷிப்பிக்கிறார். தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். இந்த வருடத்திலும் நீங்கள் அமர்ந்திருந்து, அவர் உங்கள் நடுவில் செய்யும் பெரிய காரியங்களின் நிமித்தம் அவரே தேவன் என்பதை அறிந்துகொள்வீர்கள். வேதம் சொல்லுகிறது, “தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம் பண்ணுவார்” (சங்.46:5). தேவன் சபையில் எழுந்தருளியுள்ளார். தேவன் நம் நடுவில் இருப்பதால் நாம் அசைக்கப்படுவதில்லை. தேவன் ஏதேன் தோட்டத்தை உண்டாக்கி நடுவில் 2 விருட்சங்களை உண்டாக்கினார். ஆதாம், ஏவாளிடம் அதில் ஒன்றைப் புசிக்க வேண்டாம் என விலக்கினார். ஆனால் அவர்களோ விலக்கப்பட்ட நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியையே விரும்பினார்கள். அது அவள் பார்வைக்கு கவர்ச்சியாக இருந்தது. அதையே இச்சித்து புசித்தார்கள். அந்த இச்சை அவர்களை தேவனை விட்டு தூரமாக்கியது.
இயேசு நம் குடும்பத்தின் நடுவில் இருந்தால் குறைவில்லை. சீஷர்கள் படகில் சென்றபோது அவர்கள் நடுவில் இயேசு இருந்தார். ஆனாலும் சீஷர்கள் பயத்தாலும், திகிலினாலும் நிறைந்தவர்களாக நாங்கள் மடிந்துபோகிறோமே, உமக்கு கவலையில்லையா? என்றார்கள். சீஷர்கள் இயேசுவின் வல்லமையை அறியவில்லை. இயேசு காற்றையும், கடலையும் அதிகாரமாக அதட்டினார். அமைதலுண்டாயிற்று. இயேசு கொந்தளிக்கும் உன் வாழ்க்கையின் அலைகளையும், புயல்களையும் அடக்கி அமைதலுண்டாக்க வல்லவர். உங்கள் வாழ்க்கையில் சமாதானத்தைக் கொடுக்க இயேசு போதுமானவர்; உன் நடுவில் இருக்கும் இயேசுவை அழையுங்கள். அவர் உனக்கு உதவிசெய்ய விரும்புகிறார். அவர் உங்கள் குடும்பத்தின் நடுவில் இருக்க விரும்புகிறார்.
தேவன் நம் நடுவில் இருக்க என்ன செய்ய வேண்டும்?
முதலாவதாக – துதிக்க வேண்டும்
தேவன் துதிகளின் மத்தியில் வாசம் பண்ணுகிறவர். தேவன் இஸ்ரவேல் ஜனங்களை நடத்திக்கொண்டு போகும் வழியில் ஆராதிக்க கற்றுக்கொடுக்கிறார். எண்.2:17ஆம் வசனத்தில், “…ஆசரிப்புக் கூடாரம் லேவியரின் சேனையோடே பாளயங்களின் நடுவே பிரயாணப்பட்டுப் போகவேண்டும்” என்று பார்க்கிறோம். தேவன் ஆராதிக்கப்பட வேண்டியவர். துதிகளுக்குப் பாத்திரர். ஆராதனை நம் வாழ்வில் மையமாக இருக்க வேண்டும். கர்த்தரை துதிக்கும் துதி எப்பொழுதும் நம் குடும்பத்திலிருந்து எழும்ப வேண்டும்.
இரண்டாவதாக – தேவனுடைய மகிமை தங்கிய ஆலயமே நம் வாழ்வின் மையமாக இருக்க வேண்டும்
தேவனை ஆராதிக்கவே நாம் ஆலயம் செல்கிறோம். தேவனுக்கு கொடுக்கவேண்டிய மகிமையை நாம் அவருடைய ஆலயத்துக்கும் கொடுக்க வேண்டும். தேவன் சபைக்கு தலையாக உள்ளார். தேவனை கனப்படுத்துவது போலவே அவருடைய தேவாலயத்தையும் கனப்படுத்த வேண்டும். தேவனுடைய மகிமையின் பிரசன்னம் எப்பொழுதும் அவர் ஆலயத்தில் தங்கியிருக்கிறது. ஆசரிப்பு கூடாரத்தின் மேலாக அக்கினி ஸ்தம்பம், மேகஸ்தம்பம் காணப்பட்டது. இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில்தான் ஆசரிப்புக் கூடாரம் போடப்பட வேண்டும். இஸ்ரவேலர் எப்பொழுதும் ஆலயத்தைச் சுற்றியே வாசம் செய்தார்கள். ஒவ்வொரு பக்கத்திலும் 4 கோத்திரங்கள் வீதம் 3 பக்கத்திலும் இஸ்ரவேலின் 12 கோத்திரங்களும் குடியிருந்தனர். இஸ்ரவேலர் மேகஸ்தம்பம் எழும்பும்போது புறப்பட்டார்கள். ஆசரிப்புக் கூடாரத்தில் எப்பொழுதும் தேவனுடைய பிரசன்னம், மகிமை தங்கியிருந்ததால் தேவனுடைய ஆசீர்வாதம் எப்பொழுதும் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கிடைத்தது. தேவனுடைய ஆசரிப்புக் கூடாரத்தைச் சுற்றி தேவனுடைய ஆசாரியர்கள், லேவியர்கள் வாசம் பண்ண வேண்டும்.
மூன்றாவதாக – தேவ பிரசன்னமும் ஊழியர்களும் நம்முடன் இருக்க வேண்டும்
யோசு.3:17 வசனத்தில், சகல ஜனங்களும், யோர்தானைக் கடந்து தீருமளவும், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள், யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலரெல்லாரும், தண்ணீரற்ற உலர்ந்த தரை வழியாய்க் கடந்துபோனார்கள். யோர்தானைக் கடக்கும்போது லேவியர்கள் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து நடுவில் நிற்கவேண்டும். பின்பு ஜனங்கள் கடந்துபோனார்கள். உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் கால்பட்டவுடன் யோர்தான் பின்னிட்டுத் திரும்பியது. தேவ பிரசன்னத்தை (உடன்படிக்கை பெட்டியை) சுமக்கிற லேவியர் நடுவில் நின்றார்கள்.
நான்காவதாக – தேவனுடைய நாமத்தின்படி சென்றால் தேவன் கூட வருவார்
சங்.46:5 வசனத்தில், “தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது” சீயோன் நகரம் அசைக்கப்பட முடியாத நிலையில் இருக்க வேண்டுமானால் தேவன் நடுவில் இருக்க வேண்டும். எந்தச் சூழ்நிலையிலுமே தேவன் நடுவில் கூட இருப்பாரானால் நாம் அசைக்கப்படுவதில்லை. கோலியாத்தைக் கண்டபோது தாவீது பயப்படவில்லை. தேவனுடைய நாமத்தில் வெற்றி பெற்றான். தேவனுடைய நாமமே பலத்த கோட்டை, துருகம்.
ஐந்தாவதாக – தேவனுக்காக வைராக்கியமாக வாழ்பவர்கள் நடுவில் இருப்பார்
தானி.3:25,26 வசனங்களில், “இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன்; அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது” நேபுகாத் நேச்சார் அக்கினி ஜூவாலையின் நடுவில் 4 பேர் உலாவுகிறதைக் காண்கிறேன் என்றான். மக்கள் 90 அடி உயரமான பொன்னால் செய்யப்பட்ட சிலையை வணங்கினார்கள். ஆனால் 3 வாலிபர்கள் மட்டுமே வணங்கவில்லை. அக்கினியை முழுவதுமே 7 மடங்கு சூடாக்கி அவர்களைத் தூக்கிப்போட்ட போதும் தேவன் நடுவில் நின்றார்.
ஆறாவதாக – நாம் பரிசுத்தமாக வாழ்ந்தால் தேவன் கூடவே இருப்பார்
உபா.23:14 வசனத்தில், பாளையம் எங்கும் தேவன் உலாவுகிறார். நாம் அற்புதத்தை காண வேண்டுமானால் நம்மைப் பரிசுத்தம் செய்ய வேண்டும். நம்மைப் பரிசுத்தப்படுத்தும்போது நம்மைச் சுற்றிலும் உள்ள பாளையத்தையும் (வீடு, வீட்டில் உள்ள ஆட்கள்; பொருட்கள் – எல்லா தீட்டான காரியங்களையும்) பரிசுத்தப்படுத்தி, தேவையில்லாதவற்றை அகற்ற வேண்டும். தேவன் நடுவில் வந்து தங்கி வாசம் செய்ய விரும்புகிறார். நமது ஜீவியத்தின் எல்லை முழுவதும் பரிசுத்தம் என்று எழுதப்பட வேண்டும். தேவன் நடுவில் இருந்து அற்புதம் செய்ய வேண்டுமானால் நமது ஜீவியம் பரிசுத்தமாக பாதுகாக்கப்பட வேண்டும். “தேவன் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னைவிட்டுப் போகாதபடிக்கு உன் பாளயம் சுத்தமாயிருக்கக் கடவது”.
சங்.15:1-5 வசனங்களில், யார் கர்த்தருடைய கூடாரத்தில் தங்குவான்? யார் பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்? என்று கூறி குணாதிசயங்களை தெளிவாக தாவீது கூறுகிறார். யார் அசைக்கப் படுவதில்லை என்றால் – பரிசுத்தவான் என்று கூறப்படுவதற்கு ஏற்ற இந்த குணங்களைப் பெற்றிருப்பவனே என்கிறார். உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து மனதாரச் சத்தியத்தைப் பேச வேண்டும். தன்னை வேத வசனத்துக்கு முன்பாக நிறுத்தி சரி செய்பவனே அசைக்கப்படுவதில்லை. தேவனுடைய வார்த்தையைக் கேட்டு சுத்திகரிக்கிறவன் அசைக்கப்படுவதில்லை.
பரிசுத்த ஆவியின் நிறைவினால் வாழ்வில் செழுமை உண்டாகும். நம்முடைய வாழ்க்கை வளமாக மாறும். ஆதி.28:15 வசனத்தில், “நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பி வரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்”. தேவனை மையமாகக் கொண்ட வாழ்க்கைக்கு பலன் தேவன் கூடவே வருவார்.
தேவன் விசுவாசிகளுக்கு கொடுத்துள்ள ஒரு பெரிய ஆயுதம் “ஜெப ஆயுதம்”. ஜெபிக்கிறவன் எந்த சூழ்நிலையிலும் தைரியமாய் நிற்கக் கூடும். ஏசா.43:2, “நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.”
எந்தச் சூழ்நிலையிலும் தேவன் நடுவில், கூடவே இருப்பதால் ஜெயம். தேசத்தின் இராஜா அபிமெலேக் ஆபிரகாமைப் பார்த்து, உன்னோடுகூட தேவன் இருக்கிறார் எனக் கூறி அவனோடுகூட உடன்படிக்கை செய்தான். தேவன் ஆபிரகாமோடு இருந்து ஆசீர்வதிப்பதை அபிமெலேக்கு கண்டான். தேவன் நம் நடுவில் இருந்தால் எந்தச் சூழ்நிலையும் நம்மை பாதிப்பதில்லை. ஆபிரகாமை ஆசீர்வதித்து, அனைவருக்கும் ஆசீர்வாதமாக்கியவர் உன்னையும் ஆசீர்வதிப்பார்.
ஏழாவதாக – தேவனுடைய உபதேசங்களைக் கைக்கொள்ளும்போது தேவன் கூடவே இருப்பார்
மத்.28:20, “நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்றார். தேவ ஜனங்கள் தேவனின் உபதேசங்களைக் கைக்கொள்வதே அவசியம். தேவன் கூடவே இருப்பார்.
ஏசா.12:6, “சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்” தேவன் நம் தேவைகள் எல்லாவற்றையும் சந்திப்பார்.
ஆம், பிரியமான தேவனின் பிள்ளைகளே! தேவன் உன்னை இரட்சித்திருக்கிறார். இரட்சிப்பின் சந்தோஷம் உனக்கு உண்டு. இந்த வருடம் முழுவதும் தேவன் உன்னோடே இருந்து நடத்துவார். வனாந்திரமான இடத்திலும் உன்னை போஷிப்பார், உன் காலை இடறலுக்கும், உன் கண்ணை கண்ணீருக்கும் தப்புவிப்பார். பெலமுள்ளவனுக்கும், பெலவீனமுள்ளவனுக்கும் உதவிசெய்வது அவருக்கு இலேசான காரியம். பெரிய தேவன் உன் வாழ்க்கையில் வரும் எவ்வளவு பெரிய தேவைகளையும் சந்திப்பார். அவர் உன் நடுவில் பெரியவராய் இருந்து உன்னை அநேகருக்கு ஆசீர்வாதமாய் வைப்பாராக!
ஆமென்! அல்லேலூயா!




