கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
தேவன் தமது பிள்ளைகளை சகல தீமையிலிருந்து பாதுகாக்கிறார். நம்மை காக்கிற தேவன் உறங்குவதுமில்லை, தூங்குவதுமில்லை. உன்னதமானவரின் நிழலில் தங்கும் விசுவாசிக்கு பாதுகாப்பு உண்டு. தேவன் நமக்கு அடைக்கலமும், கோட்டையுமானவர். எனவே தேவனுடைய பிள்ளைகள் பிசாசின் கிரியைகளைக் கண்டு பயப்பட தேவையில்லை. நம் பக்கத்தில் பதினாயிரம் பேர்கள் வந்தாலும் அது ஒரு தீங்கும் செய்ய முடியாது. சங்கீதம் 139:3 வசனத்தில், “நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்;” என்கிறார். எனவே பயப்படும் காரியம் வந்தாலும், தேவன் நம்மை தனிமையில் விட்டுவிட மாட்டார். அவர் நம் பக்கத்திலேயே நிழலாக இருக்கிறார். மேலும் சங்.18:4,5 வசனங்களில் தாவீது இவ்வாறு கூறுகிறார் “மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது; துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது”. பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது. மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தது, தாவீதை மரணக் கட்டுகள், துர்ச்சனப் பிரவாகம், பாதாளக் கட்டுகள் பிசாசின் தாக்குதல்கள் சூழ்ந்து பயப்படுத்தியது. மரணக் கண்ணிகள் போன்ற பிசாசின் போராட்டங்கள் அவனை அச்சுறுத்திய போதும் தேவன் அவனை சூழ்ந்துகொண்டு பாதுகாத்தார்.
சங்.116:3 வசனத்தில், “மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தது; இக்கட்டையும் சஞ்சலத்தையும் அடைந்தேன்” என்கிறார். இக்கட்டு, மரணம், சஞ்சலம் சூழ்ந்துகொண்டதாக கூறுகிறார். அதேபோல சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ வாழ்க்கையிலும் – மரணக் கட்டுகள் சூழ்ந்தபோதும் எரிகிற அக்கினி ஜுவாலையின் மத்தியிலும் தேவன் நான்காவது நபராக இறங்கி வந்து அக்கினியின் உக்கிரத்தை அழித்துப்போட்டார். பிசாசின் தாக்குதல்களை முறியடித்தார். அவைகள் ஒரு தீங்கும் செய்ய முடியாது.
மேலும் 2சாமு.22:5,6 வசனத்தில் “பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது” என்கிறார். மரண அலைகள் சூழ்ந்துகொண்டபோதும் தேவனை நோக்கி அபயமிட்டபோது அவர் கேட்டு விடுவித்ததாக கூறுகிறார். சங்.22:12 வசனத்தில், “அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை வளைந்துகொண்டது.” காளை, எருது போன்ற சக்திவாய்ந்த மனிதர்கள் நம்மைச் சூழ்ந்துகொண்டாலும் தேவன் தப்புவிக்கிறார்.
மேலும் சங்.22:16 வசனத்தில், “நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது” என்கிறார். தவறுதலான உபதேசம், பொல்லாத துன்மார்க்கன் சூழ்ந்துகொண்டாலும் தேவன் அவரை எல்லா தீங்கிலிருந்தும் விடுவித்தார். சங்.40:12 வசனத்தில் “எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது” என்கிறார். நிமிர்ந்து பார்க்கக் கூடாதிருக்கிறது. அவைகள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறது. என் இருதயம் சோர்ந்து போகிறது. ஆனாலும் தேவன் அவரை சகல தீமையிலிருந்தும் விடுவித்தார்.
முதலாவதாக – தேவன் நம்மை சூழ்ந்து பாதுகாக்கிறார்
தேவன் தம்முடைய பிள்ளைகளை பாளயமிறங்கி காக்க பரிசுத்த தூதர்களை அனுப்புகிறார்.அவரது மகிமையின் பிரசன்னம் சகல தீமையினின்றும், சத்துருவின் தாக்குதலிலிருந்தும் நம்மை விடுவிக்கிறது. சங்.109:3 வசனத்தில் “பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு, முகாந்தரமில்லாமல் என்னோடே போர்செய்கிறார்கள்” என்கிறார். துன்மார்க்கரின் பகையை உண்டாக்கும் துரோகப் பேச்சுகளால் நாம் பாதிக்கப்படும்போதும் பிசாசின் கிரியைகளை அழிக்கிறார். நாம் நித்திரை செய்யும்போதும் மனபாரங்கள் நம்மை அழுத்தி மேற்கொள்ளாத வண்ணம் நம்மைச் சூழ்ந்து பாதுகாக்கிறார்.
இரண்டாவதாக – தேவனுடைய தூதர் நம்மைச் சூழ்ந்திருக்கிறார்
சங்.34:7 வசனத்தில், “கர்த்தருடைய தூதர் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்” கர்த்தருக்கு பயப்படும் தேவ பிள்ளைகளுக்கு தூதர்களுடைய ஒத்தாசை, பாதுகாப்பு கிடைக்கும். தீய சக்திகளுக்கும் பொல்லாத சாத்தானின் செயல்பாடுகளுக்கும், நாம் பயப்பட வேண்டியது இல்லை. ஆபிரகாம் தேவனுக்கு பயப்படுகிற மனிதனாக இருந்ததால் தேவ தூதர்கள் அவனுடைய வீட்டிற்கு அடிக்கடி வந்தனர். தேவ பயமும், பணிவிடை செய்யும் குணமும் விசுவாசிகளுக்கு அவசியம். எபி.1:14 வசனத்தில் “இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?” தேவனுடைய பிள்ளைகளுக்கு பணிவிடை செய்யும்படி தேவன் தம்முடைய தூதர்களை வைத்திருக்கிறார்.
மூன்றாவதாக – தேவனுடை கிருபை நம்மை சூழ்ந்துகொள்ளுகிறது
சங்.32:10 வசனத்தில், “துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்”. சங்.94:18ல் “என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, நமது கிருபை என்னைத் தாங்குகிறது”. தேவன் தமது கிருபையினால் நாம் சோர்ந்துபோகாமல் பாதுகாக்கிறார். சோதனை வேளைகளில் தப்பித்துகொள்ளும்படி ஒரு மனித உதவி, ஒரு ஐனநய (or) plan, ஏற்ற வேளையில் கிடைக்கும் ஆலோசனைகள், ஒரு பிடிமானம் போன்றவை தேவனால் அவரை சார்ந்து வாழும் அவருடைய பிள்ளைகளுக்கு கொடுக்கும் ஈவுகளே. ஸ்தோத்திர ஜெபத்தினால் கிருபைகள் பெருகுகிறது.
நான்காவதாக – இரட்சண்ய பாடல்கள் சூழ்ந்துகொள்ளும்
சங்.32:7 “நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக் காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர்” ஒரு நீதிமானின் வீட்டில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் இருக்க வேண்டும். இரட்சணிய பாடல்கள் அவனை சூழ்ந்துகொள்ளுகிறது and not other songs. தேவ ஜனங்கள் தேவனை துதித்துப்பாடி மகிமைப்படுத்த வேண்டும். தேவனுடைய பிரசன்னம் நமது கூடாரங்களை மூடும். தேவ பிரசன்னத்தினால் சத்துருவின் கிரியைகள் அழிக்கப்படும். தேவ பிரசன்னம் விசுவாசிகளின் வீட்டில் தங்கியிருந்து பாதுகாக்கும்.
ஐந்தாவதாக – பரிசுத்தவான்கள் நம்மைச் சூழ்ந்துகொள்வார்கள்
எபி.12:1 “ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்கிறது” என்கிறார். இந்த விசுவாச ஓட்டத்தில் நாம் மட்டும் ஓடவில்லை. மேகம் போன்ற திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டு நாம் எப்படி நமது ஓட்டத்தை ஓடிக்கொண்டிருக்கிறோம் என கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். பரிசுத்தவான்கள், தூதர்கள், பரலோக சேனை நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஓட்டம் முடித்த பரிசுத்தவான்கள், நம் முற்பிதாக்கள், நாம் கிறிஸ்தவ வாழ்க்கையில் எப்படி பிசாசை எதிர்த்து முன்னேறுகிறோம் என்று ஆசையாய் நம்மை கவனிக்கிறார்கள். ஆனால் அவர்களால் நமக்கு உதவிசெய்ய முடியாது. But they can not heal us. நாம் புனிதர்களிடம், மரித்த பரிசுத்தவான்களிடம் ஆபத்து நேரத்தில் உதவிக்காக ஜெபிப்பது வீணானது. எலியா, பாகால் தீர்க்கதரிசிகளுக்கு எதிராக நின்றபோது, தான் மட்டும் தனியே நிற்பதாக நினைத்தார். ஆனால் பாகாலுக்கு முன்பாக முழங்கால் படியிடாத 7000 பேர் உள்ளதாக கர்த்தர் சொன்னார். உலகத்தில் நாம் மட்டும் பிசாசை எதிர்த்து போராடவில்லை. அநேக பரிசுத்தவான்கள் வாழ்கிறார்கள். பரிசுத்தவான்களின் ஐக்கியம், உதவி, அவர்கள் ஜெபம், விசுவாசிகளுக்கு மிகுந்த பாதுகாப்பை தருகிறது. கிறிஸ்தவ வாழ்க்கை ஓட்டத்தை தனியே நாம் ஓடி முடிக்க முடியாது.
ஆறாவதாக – தேவனுடைய காருண்யம் நம்மைச் சூழ்ந்துகொள்கிறது
சங்.5:12 வசனத்தில், “கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்ளுவீர்”. கர்த்தரே நமக்கு அடைக்கலம், அவரது காருணியமே நம்மைப் பெரியவர்களாக மாற்றும். உலகப் பிரகாரமான கேடகம் – (பாதுகாப்பு) பிரயோஜனப்படாது. உலகப்பிரகாரமான கனம், மகிமை, அந்தஸ்து கெடுதியையே தரும். நாம் நம்மைச் சூழ்ந்துள்ள பலவான்களையும் கேடகமாக நினைத்தால், சேதமும், நஷ்டத்தையும் அடைவோம். ஆஸ்தியும், பொருளும் நமக்கு கேடகமாக நமது ஜீவனைப் பாதுகாக்காது. தேவனுடைய இரக்கமும், காருண்யமுமே ஒரு விசுவாசிக்கு பாதுகாப்பையும், நித்திய ஜீவனையும் தருகிறது.
ஏழாவதாக – நீதிமான்கள் நம்மைச் சூழ்ந்துகொள்ளுவார்கள்
சங்.142:7ல் “உமது நாமத்தை நான் துதிக்கும்படி, என் ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்; எனக்கு நீர் தயவு செய்யும்போது நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள்” ஒரு விசுவாசிக்கு நீதிமான்களின் ஜெபம் தேவை. 2நாளா.13:13,14 வசனத்தில், “யெரொபெயாம் அவர்களுக்குப் பின்னாக வரத்தக்கதாக ஒரு பதிவிடையைச் சுற்றிப்போகப்பண்ணினான்; அப்படியே அவர்கள் யூதாவுக்கு முன் இருந்தார்கள்; அந்தப் பதிவிடை அவர்களுக்குப்பின் இருந்தது. …முன்னும் பின்னும் யுத்தம் நடக்கிறதைக் கண்டு, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; ஆசாரியர்கள் பூரிகைகளை முழக்கினார்கள்”. “…தேவன் யெரொபெயாமையும் இஸ்ரவேலனைத்தையும் அபியாவுக்கும் யூதாவுக்கும் முன்பாக முறிய அடித்தார்.” இஸ்ரவேல் புத்திரர் யூதாவுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.
தேவன் விசுவாசிகளின் வாழ்வில் இக்கட்டான சூழ்நிலைகளை அனுமதிக்கிறார். ஆசாரியர்கள் ஜெபத்தால் வெற்றி பெறலாம். ஆசாரியர்கள் பூரிகைகளை ஊதியபோது பெரிய வெற்றி கிடைத்தது.
இதை வாசிக்கும் அன்பு நேயரே! ஒரு விசுவாசி பலவிதமான பாடுகள், உபத்திரவங்கள் வழியாக தேவனுடைய இராஜ்ஜியத்தை சுதந்தரிக்க அழைக்கப்பட்டுள்ளார். ஆனால் நம் கூடாரத்தில் துதியின் ஒலி, கெம்பீர சத்தம் கேட்கும்போது இக்கட்டுகளும், மரண கட்டுகளும் மாறிவிடும். பவுலும், சீலாவும் பிலிப்பி பட்டணத்தில் பாடி துதித்தபோது பெரிய வெற்றி கிடைத்தது. பேதுரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டபோது சபையாரின் – பரிசுத்தவான்களின் ஊக்கமான ஜெபத்தால் விடுதலை பெற்றார். சிறைச்சாலையில் தேவன் தூதனை அனுப்பினார். கட்டுகளும் இருப்பு சங்கிலிகளும் தெறிப்புண்டு விழுந்தது. தேவன் நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் பெரிய வெற்றி தருவார். விசுவாசிகளும் தேவன் நமக்கு கிருபையாக கொடுத்துள்ள பாதுகாப்புக்கான வேலிகளை காத்து நடப்போம்! கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்! அல்லேலூயா!




