தேவன் எதற்காக கிட்டே (அருகில்) வர உன்னை அழைக்கிறார்

Written by Pr Thomas Walker

July 21, 2008

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!


ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கிறார். வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் யாரானாலும் சரி. நீங்கள் இயேசுவண்டை வந்தால் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் பெற்றுக்கொள்ளலாம். அவரின் குரலைக் கேட்ட பின்னும் தயக்கம், சோர்வு, பின்மாற்றம் ஏன்? ஆண்டவரை விட்டு விலகிப் போவதை அவர் விரும்பவில்லை. ஏசா.1:5,6 வசனங்களில் இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்பட வேண்டும்? அதிகமதிகமாய் விலகிப் போகிறீர்களே! என்று அங்கலாய்க்கிறார்.


அநேக விசுவாசிகளின் வாழ்க்கையில் பின்மாற்றம், தலையெல்லாம் வியாதி – சரியாக சிந்திக்க முடியவில்லை. தெளிந்த புத்தி இல்லை. தலைக்குப்பின் இருதயம் முக்கியமானது. இருதயம் – பலட்சயமாக இருக்கிறது. சிறு காரியத்தையும் சகிக்க முடியவில்லை. ஆத்துமாவில் ஆரோக்கியம் வேண்டும். தேவனுக்கு முன்பாக நம் வாழ்க்கை சரியாக, நேர்மையாக இருக்க வேண்டுமானால் எல்லா பகுதிகளிலும் சரியாக வேண்டும். உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும் அதிலே சுகமேயில்லை. அது காயமும், வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது. அது சீழ் பிதுக்கப் படாமலும், கட்டப்படாமலும் எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது. ஆம் பிரியமானவர்களே! ஆண்டவரிடம் நெருங்கி வரவேண்டும்! தூரமாய் நாம் விலகிப்போகக் கூடாது. தேவனுக்கும் நமக்கும் இடையே உள்ள இடைவெளி தூரமாகிறது. மேலும், தேவன் ஏசா.57:3,12 வசனங்களில் திருச்சபையில் உள்ள மக்களை இவ்வாறு மனந்திரும்பும்படி அழைக்கிறார். “நாள்பார்க்கிறவளின் பிள்ளைகளே, விபசாரனுக்கும் வேசிக்கும் பிறந்த சந்ததியாரே, நீங்கள் இங்கே கிட்டிவாருங்கள்… உன் நீதியையும் உன் கிரியைகளையும் நான் வெளிப்படுத்துவேன், அவைகள் உனக்கு உதவாது”
நாம் எதற்காக தேவனின் அருகில் நெருங்கி வரவேண்டும்? ஏன் தேவன் நம்மை “கிட்டே வாருங்கள்” என்று அழைக்கிறார்? என்பதை இன்று தியானிக்கலாம்.

 முதலாவதாகவழக்காடுவோம் வாருங்கள்
ஏசா.1:18 வசனத்தில் “வழக்காடுவோம் வாருங்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார். உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும். அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப் போலாகும். மேலும் தேவன் ஏசா.57:12 வசனத்தில் “உன் நீதியையும் உன் கிரியைகளையும் நான் வெளிப்படுத்துவேன், அவைகள் உனக்கு உதவாது” நீ தேவ நீதியால் நிரப்பப்படவில்லை. அவர் உன் சுயநீதியை உன்னைவிட்டு அகற்றி தேவ நீதியால் நீ மூடப்பட வேண்டும் என்று விரும்புகிறார். நமது நீதி அழுக்கான கந்தை. சுயநீதிகளை களைந்துபோட வேண்டும். தேவனுடைய கிரியைகளை (சித்தம்) செய்பவர்களாக இருக்க வேண்டும். அவரிடம் கற்றுக்கொண்டு தேவ சித்தம் செய்கிறவர்களாக மாற வேண்டும். இயேசுவை அனுப்பின பிதாவின் கிரியைகளை முடிப்பதே தேவனுடைய போஜனம்.

 இரண்டாவதாகதடவிப் பார்த்து கண்டுபிடிக்க கிட்டே வரும்படி அழைக்கிறார்
ஆதி.27:21 வசனத்தில், “அப்பொழுது ஈசாக்கு யாக்கோபை நோக்கி: என் மகனே, நீ என் குமாரனாகிய ஏசாதானோ அல்லவோ என்று நான் உன்னைத் தடவிப்பார்க்கும்படி கிட்ட வா என்றான்”. விசுவாசிகளின் வாழ்க்கையில் இரட்டை வாழ்க்கை வாழ்வதை தேவன் விரும்பவில்லை. வெளியே பார்க்க வேறு விதம். ஆனால் உள்ளான வாழ்க்கை வேறுபட்ட வாழ்க்கை. சொல் ஒன்று செயல் மற்றொன்று. அநேகர் யாக்கோபைப்போல தகப்பனிடம், போதகரிடம் பொய் சொல்லுகிறார்கள். “கைகளோ ஏசாவின் கைகள், சத்தமோ யாக்கோபின் சத்தம்” தேவன் கையைத் தடவி பார்த்து உன்னை கண்டுபிடிக்க கிட்டே வரும்படி அழைக்கிறார். உன்னுடைய இரட்டை வாழ்க்கை மாய்மாலமான போலி வாழ்க்கையை நீ விடும்படி கிட்டே அழைக்கிறார்.

 மூன்றாவதாகதம்மை உனக்கு வெளிப்படுத்த கிட்டே வரும்படி அழைக்கிறார்
ஆதி.45:4 வசனத்தில், “அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: என் கிட்ட வாருங்கள் என்றான். அவர்கள் கிட்டப்போனார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்” என்றான். யோசேப்பு தன் சகோதரர்களை கிட்டே வரும்படி அழைத்து தன்னை அவர்களுக்கு வெளிப்படுத்தினான். தேவன் நமக்காக என்ன வைத்துள்ளார் என்பதைக் கூற, தேவ திட்டங்களைத் தெரிவிக்க தேவனின் கிட்டே வரும்படி உங்களை அழைக்கிறார். தேவன் நம்மேல் வைத்துள்ள அன்பையும், திட்டங்களையும் நாம் அறிந்து அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். தேவன் நம்மைக் குறித்து வைத்துள்ள திட்டங்களை அவர் வெளிப்படுத்தும்படி அவர் கிட்டே செல்வோம். தேவன் நெருக்கத்தில் உள்ள உனக்கு உதவிசெய்வார். திகைத்துப் போய் தடுமாற்றத்தில் உள்ள உனக்கு உதவிசெய்ய விரும்புகிறார். அவர் கிட்டே வா. உன் எதிர்காலத்தைக் குறித்து உள்ள அவரின் நல்ல திட்டத்தை உனக்கு வெளிப்படுத்துவார். நெருங்கி அவர் அருகில் வா. விலகிப் போகாதே.

 நான்காவதாகஆழ்ந்த சத்தியங்களைப் போதிக்க கிட்டே வாருங்கள் என்று அழைக்கிறார்
மாற்.10:42 வசனத்தில் இயேசு சீஷர்களை கிட்டே வரச்செய்து: “புறஜாதியாருக்கு அதிகாரிகளாக எண்ணப்பட்டவர்கள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், அவர்களில் பெரியவர்கள் அவர்கள் மேல் கடினமாய் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்”. இயேசு தன் சீஷர்களை கிட்டே வர அழைத்து ஆழ்ந்த சத்தியங்களை போதிக்கிறார்.
முதலாவதாக பெரியவனாக விரும்பினால் பணிவிடைக்காரனாக இருக்க வேண்டும். (கால்களைக் கழுவி) இரண்டாவதாக முதன்மையானவனாயிருந்தால் எல்லாருக்கும் ஊழியனாக இருக்க வேண்டும் (மத்.20:25,26,27) என்று கூறுகிறார்.

 ஐந்தாவதாகபலிபீடத்தை செப்பனிட கிட்டை வரும்படி அழைக்கிறார்
1இராஜா.18:30 வசனத்தில், அப்பொழுது எலியா சகல ஜனங்களையும் நோக்கி: என் கிட்டே வாருங்கள் என்றான்; சகல ஜனங்களும் அவன் கிட்டே வந்தபோது, தகர்க்கப்பட்ட கர்த்தருடைய பலிபீடத்தை அவன் செப்பனிட்டான். பலிபீடம் செப்பனிடப்பட வேண்டும். உடைந்து கிடக்கிறது. வானத்திலிருந்து அக்கினி இறங்கும். ஆசீர்வாதத்தின் அக்கினி இறங்க வேண்டும். வல்லமையின் அக்கினி இறங்க வேண்டும். நமது பலிபீடத்தில் தேவ அக்கினி இறங்க வேண்டும். நாம் மனிதரிடமும், தேவனிடமும் ஒப்புரவாக வேண்டும். தேவன் பரலோகத்தின் பரிசுத்த அக்கினியை நம்மீது இறக்க விரும்புகிறார். இயற்கைக்கு மேற்பட்ட வல்லமையைப் பெற்று அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் தேவனே பெரியவர் என்று ஜாதிகளும், தேசங்களும் அறிய நம்மை பயன்படுத்த விரும்புகிறார்.

 ஆறாவதாகதேவைகள் சந்திக்கப்பட கிட்டே வாருங்கள்
லூக்.18:40,41ல் அவன் கிட்ட வந்தபோது, அவர் அவனை நோக்கி, நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன் ஆண்டவரே, ‘நான் பார்வையடைய வேண்டும்’ என்றான். ‘குருடன்’ கிட்ட வந்தபோது நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தேவன் கேட்டார். உன் தேவைகள் சந்திக்கப்பட ‘கிட்டே வரவேண்டும்’. ‘எந்த மனிதனையும் நோக்கி பாராதே. சிங்காசனத்திலுள்ள இயேசுவைப் பார்க்க கிட்டே வா’ என்று அழைக்கிறார்.

 ஏழாவதாகஉன்னை ஆசீர்வதிக்க கிட்டே அழைக்கிறார்
ஆதி.48:9 வசனத்தில் “யோசேப்பு தன் தகப்பனை நோக்கி: இவர்கள் இவ்விடத்தில் தேவன் எனக்கு அருளின குமாரர் என்றான். அப்பொழுது அவன்: நான் அவர்களை ஆசீர்வதிக்கும்படி அவர்களை என் கிட்டக் கொண்டுவா என்றான்”.


யாக்கோபு ஆசீர்வதிக்கும்படி கிட்டே கொண்டுவா என்றதும், தகப்பனின் கரங்கள் தலையின் மேல்படும்படி கிட்டே கொண்டு வந்தான். தேவ ஆசீர்வாதங்களைப் பெறும்படி விரும்பினால், அவர் கிட்டே வரவேண்டும். நம்மை ஆசீர்வதிப்பதே தேவனுக்குப் பிரியம். அவருடைய பலத்த கரத்தினுள் அடங்கியிருக்க வேண்டும். தேவன் நம்மை தொடக்கூடிய இடத்தில் இருக்க வேண்டும். வானத்தின் ஆசீர்வாதங்களையும் பூமிக்குரிய ஆசீர்வாதங்களையும் பெற அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியுங்கள். லூக்.18:16 வசனத்தில் இயேசுவோ சிறு குழந்தைகளை என்னிடத்தில் வருகிறதற்கு இடம் கொடுங்கள். அவர்களைத் தடை பண்ணாதிருங்கள். தேவனுடைய இராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்றார். தேவன் நமது பிள்ளைகளை ஆசீர்வதிக்கும்படி அவர்களை நம் தேவனிடம் கொண்டுவர வேண்டும். தேவன் சிறுபிள்ளைகளை ஆசீர்வதிக்க பிரியப்படுகிறார். நமது பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்பட தேவ ஆலயத்திற்கு சிறு வயது முதல் கொண்டு வருவோம்.


தேவனிடம் ஒவ்வொரு விசுவாசியும் நெருங்கிய ஐக்கியமுள்ளவர்களாக வாழ தேவன் விரும்புகிறார். ஒரு தகப்பனுடன் மகனுக்கு நெருங்கிய ஐக்கியம் இருப்பதுபோல நாம் அவருடன் நெருங்கிய ஐக்கியத்துடன் வாழவேண்டும்.

இதை வாசிக்கும் அன்பு நேயரே! ஆதி.27:26 வசனத்தில், “…அவன் தகப்பனாகிய ஈசாக்கு அவனை நோக்கி: என் மகனே, நீ கிட்ட வந்து என்னை முத்தஞ்செய் என்றான்”. நாமும் அவர் பாதத்தில் அமர்ந்து வசனத்தை கேட்பவர்களாக மட்டுமல்லாது, பிரியமான பிள்ளைகளைப் போல அவருக்கு அன்பின் பணிவிடைகள் செய்து, அவர் பாதத்தை முத்தம் செய்ய வேண்டும். உன்.1:2 வசனத்தில் “அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக: உமது நேசம் திராட்சரசத்தைப் பார்க்கிலும் இன்பமானது”. மணவாட்டியாக ஆயத்தப்படும் சபையின் விசுவாசிகள் அவருக்கு பிரியமானவர்களாக வாழவேண்டும். ‘நேசர் என்னுடையவர், நான் அவருடையவள்’ என்ற நெருங்கிய ஐக்கியத்துடன் வாழ்ந்தால் வருகையில் அவருடன் காணப்படலாம்.
மாரநாதா! அல்லேலூயா!






Author

You May Also Like…

Share This