கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
தேவனே ஒவ்வொரு குடும்பத்திற்கும் புத்திரபாக்கியத்தை தருகிறார். வேதம் சொல்லுகிறது, “பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம். தேவன் கொடுக்கும் தலைசிறந்த ஆசீர்வாதம் ஒரு பெற்றோருக்கு பிள்ளைகளே”. “கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்” என்று வேதம் கூறுகிறது. பார்வோனின் குமாரத்தி மோசேயின் தாயிடம் “இந்தப் பிள்ளையை எனக்காக வளர்த்திடு நான் உனக்கு சம்பளம் தருகிறேன்” என்றாள். தேவனே பிள்ளைகளை பராமரிக்க பெற்றோருக்கு ஜீவன், சுகம் பெலன், ஆரோக்கியம், பொருளாதாரம், ஞானத்தை அருளுகிறார். பிள்ளைகளை நாம் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவ கிருபையிலும், மனுஷ தயவிலும் அதிகம் அதிகமாக விருத்தியடைந்து வளரும்படி தாழ்மையுள்ளவர்களாய் வளர்க்க கடமைப் பட்டுள்ளோம். தேவன் பெற்றோரிடம் எதிர்பார்ப்பது அவர் தந்த பிள்ளைகளை அவருக்காக, அவருடைய இராஜ்ஜியத்தின் மேன்மைக்காக வளர்த்துவிட வேண்டும் என்பதே. வேதத்தில் நாம் எப்படி தலைசிறந்த தலைவர்கள் உத்திரவாதமுள்ள உண்மையுள்ள பெற்றோர்களால் உருவாக்கப்பட்டார்கள் என்பதை காண்போம்.
பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து, அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான் என்று நீதி.22:6ல் வேதம் கூறுகிறது. பெற்றோர்களே பிள்ளைகளை சரியான பாதையில் நடத்த கடமைப் பட்டுள்ளார்கள். மோசேயின் பெற்றோர் மோசே பிறந்தபோது அவனுடைய தாய் தகப்பன்மார் அவனை அழகுள்ள பிள்ளையென்று கண்டு, விசுவாசத்தினாலே ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்று மாதம் ஒளித்து வைத்தார்கள். விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்தான் என்று எபி.11:23,24 வசனங்களில் பார்க்கிறோம்.
பார்வோன் குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்தான் என்று சொல்லும்போது எகிப்தின் அதிகாரம், ஆளுகை, செல்வாக்கு, செல்வம், மேன்மை யாவற்றையும் மோசே வெறுத்துவிட்டான். மோசேயின் தாய் அவனை அவன் ஒரு எபிரேயன் என்று கூறி வளர்த்தாள். தேவனுடைய பார்வையில் எகிப்தியனைவிட எபிரேயனே விசேஷமானவன். அவன் எகிப்தில் அடிமையாக வாழ்ந்தாலும், தேவமனிதன் ஆபிரகாமின் சந்ததி, பிரித்தெடுக்கப்பட்டவன் தேவனுக்குரியவன். நாமும் நமது பிள்ளைகளை தேவனுக்கென்று பிரித்தெடுக்கப்பட்டவர்களாய், அவர்களை தேவனுக்குரியவர்கள் என்று வளர்க்க வேண்டும். பிரதான ஆசாரியனாகிய ஏலி தன் பிள்ளைகளை சரியாக வளர்க்கவில்லை. ஆனால் சாமுவேலின் தாய் தன் பிள்ளையான சாமுவேலை வளர்க்கும்போது அவன் கர்த்தருடைய சுதந்திரம், கர்த்தரிடத்தில் கேட்டு பெற்றுக்கொண்டேன், அவனை கர்த்தருக்காகவே வளர்ப்பேன் என்ற மனஉறுதியுடன் வளர்த்ததால் சிறந்த தீர்க்கதரிசியாக தாண் முதல் பெயர்செபா மட்டும் அறியப்பட்டான். நம்முடைய பிள்ளைகளைக் குறித்து கர்த்தர் கணக்கு கேட்பார் என்ற தேவபயம் பெற்றோராகிய நமக்கு வேண்டும்.
முதலாவதாக,
“பிள்ளைகளுக்கு உலகத்தை வெறுக்க கற்றுக்கொடுக்க வேண்டும்” உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை. உலகமும், அதின் ஆசை இச்சைகளும் ஒழிந்துபோகும் (1யோ.2:17) (1யோ.2:15,16) வசனங்களில் உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும், அன்பு கூராதிருங்கள். ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல. அவைகள் உலகத்தினாலேயே உண்டானவைகள். உலகத்தை நேசிப்பவன் ஒருபோதும் தேவனை நேசிக்க முடியாது.
இரண்டாவதாக,
எதைத் தெரிந்துகொள்ள வேண்டும்? என கற்றுக்கொடுக்க வேண்டும். எபி.11:25ஆம் வசனத்தின்படி அநித்தியமான பாவ சந்தோஷங்களை அனுபவிக்கக் கூடாது என்று கற்பிக்க வேண்டும். தேவனுக்காக பாடனுபவிப்பது சிலாக்கியம் என போதிக்க வேண்டும். ஆண்டவருக்காக துன்பம் அனுபவிப்பது பாக்கியம். பொய்யாய் குற்றம் சாட்டப்படும்போது அது பாக்கியம் என்று கற்றுக்கொடுக்க வேண்டும். யோசேப்பு பொய்க் குற்றம் சாட்டப்பட்டும் தூய வாழ்க்கை வாழ்ந்ததால் தேவனால் உயர்த்தப்பட்டார்.
மோசேயின் வாழ்க்கையில் அவன் கண்முன்பு இரண்டுவிதமான வாழ்க்கை, ஒன்று மோசே விரும்பினால் அரண்மனையிலே வாழலாம். அடுத்தது வருங்காலத்தில் எகிப்தின் அரசனாக மாறலாம். ஆனால் மற்றொரு சவாலோ தேவனுக்காக பாடுபடவேண்டும், அடிமைக்காக அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட பாடுபட வேண்டும். மோசே எகிப்தின் பாவ வாழ்க்கையை வெறுத்து தேவனோடு தேவ மக்களுக்காக பாடு அனுபவிப்பதையே தெரிந்துகொண்டான்.
உலகத்தின் போக்கில் போகாமல், மீன் குஞ்சு எதிர்நீச்சல் போட்டு, நீரோட்டத்தில் முன்னேறிச் செல்வது போல நாம் உலகத்துக்கு எதிர்நீச்சல் போட்டு கிறிஸ்தவ பாதையில் முன்னேற வேண்டும். இதுவே கிறிஸ்தவ வாழ்க்கை.
நாம் கிறிஸ்துவுக்காக நிந்தை, துன்பம், பாடுகளை சகித்தால் நித்தியமான மகிமையை அடைவோம்.
மூன்றாவதாக,
தேவனைத் தரிசிப்பதில் உறுதியாயிருந்தான் “தேவனைத் தேட, தேவனுடன் உறவாட, ஜெபிக்க நம் பிள்ளைகள் நேரம் எடுக்கிறார்களா என்று கவனிக்க வேண்டும்”. தேவன் பயன்படுத்தும் பாத்திரமாக தேவனின் கரத்தில் பயன்பட தேவன் அவர்களை உருவாக்க தேவனின் பலத்த கரத்தில் அடங்கியிருக்க கற்றுக்கொடுக்க வேண்டும். எபி.11:27 வசனத்தில், “விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல…” என்று பார்க்கிறோம். தேவ தரிசனத்தோடு நமது பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.
யோவான் ஸ்நானகனின் தாய் எலிசபெத் – ஒரு ஆசாரியனின் மனைவி அவள் ஒரு தீர்க்கதரிசி. அவள் தன் மகனை ஸ்திரீகளில் பிறந்தவர்களில் அவனைப்போல சிறந்தவன் இல்லை என்று இயேசு புகழும் அளவு மாதிரி மனிதனாக வளர்த்த பெருமை தாயையே சாரும். கர்த்தருக்கு வழியை செவ்வைப்படுத்துபவனாக எரிந்து பிரகாசிக்கும் விளக்காக, திரளான ஜனங்களை இரட்சிப்பின் வழியில் நடத்துபவனாக ஒரு தீர்க்கதரிசியாக, வளர்த்து தேவ மனிதனாக உலகுக்குக் கொடுத்தார்கள் சகரியா – எலிசபெத் தம்பதியினர்.
நான்காவதாக,
நமது பிள்ளைகள் 1.உலகம், 2.மாமிசம், 3.பிசாசு ஆகிய மூன்றும் நமது எதிரிகள் என்று பிள்ளைகள் நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். உலகம் என்றால் கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை, ஜீவனத்தின் பெருமை. இது தேவனுடையது அல்ல. எகிப்தின் பாவ வாழ்க்கை. உலக ஆடம்பரங்களை ஆசாபாசங்களை வெறுக்க வேண்டும். பாவ சந்தோஷங்களை வெறுக்க நாம் பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும். நமது குடும்பங்களிலிருந்து பரிசுத்தவான்கள் உருவாகவேண்டும் என்ற தீர்மானம் பெற்றோரின் உள்ளங்களில் வேண்டும்.
ஐந்தாவதாக,
எபிரெயர் 11:28ஆம் வசனத்தில் “விசுவாசத்தினாலே, முதற்பேறானவைகளைச் சங்கரிக்கிறவன் இஸ்ரவேலரைத் தொடாதபடிக்கு, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான்” என்று பார்க்கிறோம். மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ள மனிதனாக காணப்பட்டான். தேவனின் நியமங்களைக் கற்றுக்கொடுத்தான். இரத்தம் பூசும் நியமத்தைக் கற்பித்தான்.
நமது பிள்ளைகள் தேவ சித்தம் செய்கிறவர்களாக, தேவனின் கரத்தின் ஆயுதமாக, கனத்துக்குரிய பாத்திரமாக, தேவனால் பயன்படுத்தப்பட ஜெபித்து உருவாக்க வேண்டும்.
இதை வாசிக்கும் அன்பு நேயரே தேவன் நமக்கு கொடுத்த ஒவ்வொரு பிள்ளையைக் குறித்து அக்கறையுடன் இந்தப் பிள்ளையை நான் எப்படி வளர்க்க வேண்டும். ஒருநாள் தேவனுடைய சமூகத்தில் அவர்களைப் பற்றி கணக்கு தேவனிடம் ஒப்புக்கொடுக்க வேண்டும் என்ற தேவ பயத்தோடு பிள்ளைகளை வளர்ப்போம். நல்ல மாதிரியான வாழ்க்கை வாழ தேவன் கிருபை செய்வாராக. தேவனுடைய மனிதனான ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர் இருந்தனர். ஒருவன் வாக்குத்தத்தத்தின்படி பிறந்த ஈசாக்கு, மற்றொருவன் இஸ்மவேல் – இஸ்மவேல் மாம்சத்துக்குரியவன். ஈசாக்கு ஆவிக்குரியவன். ஈசாக்கில் தேவ சந்ததி விளங்கியது. ஈசாக்கு தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவனாக விளங்கினான். பெற்றோர் தன் பிள்ளைகளை ஆவிக்குரியவர்களாக வளர்க்க வேண்டும். தேவனிடம் பெற்றுக்கொண்ட நமது பிள்ளைகளை நாம் தேவனுக்காக வளர்க்க வேண்டும்.
அன்பு நேயரே, நீங்கள் எப்படி வளர்க்கிறீர்கள்? யாருக்காக வளர்க்கிறீர்கள்? கணக்கு கொடுக்க வேண்டும் என்ற உணர்வுடன் உத்திரவாதத்தோடு உங்கள் பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.




