யோசேப்பு கனிதரும் செடி

Written by Pr Thomas Walker

May 21, 2008

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!


கிறிஸ்தவ வாழ்க்கையின் முக்கியத்துவமே கனி கொடுப்பதில் உள்ளது. ஒவ்வொரு கிறிஸ்தவனும் தான் நாட்டப்பட்ட தோட்டத்தில் கனி கொடுப்பது மிகவும் அவசியம். மனந்திரும்பிய ஒவ்வொருவரும் மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளை கொடுக்க வேண்டும். அத்திமரம் கனியில்லாமல் பார்வைக்கு இலைகளோடு செழிப்பாக காணப்பட்டாலும் கனியில்லாத காரணத்தால் இயேசு அதை சபித்தார். சிலர் கசப்பான கனிகளை தருகின்றனர். ஏசா.5:2 வசனத்தில் தேவன் திராட்ச தோட்டத்திற்கு வேலியடைத்து நல்ல பழங்களைத் தருமென்று காத்திருந்தார். அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது. மேலும் உபா.32:32 வசனத்தில் திராட்சச் செடியின் பழங்கள் பித்தும் அவைகளின் குலைகள் கசப்புமாய் இருக்கிறது. மேலும் ஓசியா 10:1 வசனத்தில் “இஸ்ரவேல் பலனற்ற திராட்சச்செடி, அது தனக்குத்தானே கனிகொடுக்கிறது”. சுயநலமுள்ள கிறிஸ்தவர்கள் சபைக்கும் ஆண்டவருக்கும் பயனற்றவர்கள். நாம் இப்பொழுது யார் கனி கொடுக்க முடியும்? யோசேப்பு எப்படி கனிதரும் செடியாக விளங்கினார்? என்பதை ஆராய்ந்து பார்ப்போம்.


சபையாகிய தோட்டத்தில் ஆவிக்குரிய கனிகளைத் தேடியே தேவன் வருகிறார். ஆனால் அவர் காண்பதோ மாம்சத்தின் கனிகளே. மத்.7:17 வசனத்தில் “…நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்”. கெட்ட கனிகளை கொடுக்கும் மரத்தை தேவன் விரும்பமாட்டார். கெட்ட கனிகளைக் குறித்து கலா.5:20,21ஆம் வசனங்களில் “மாம்சத்தின் கிரியைகளைக் குறிக்கிறது”. அவற்றை செய்பவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பது இல்லை. நாம் ஆவியின் கனிகளைக் கொடுக்க வேண்டும். மிகுதியாகவும் கனிகளைக் கொடுக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
யோசேப்பு எப்படி கனி கொடுத்தான்? என்று பார்ப்போம்.

முதலாவதாக,
ஆதி.37:2 வசனத்தில் “யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான்” யோசேப்பு துன்மார்க்கத்தை வெறுக்கிறவனாய் இருந்தான். 12 ஆண் பிள்ளைகள் உள்ள அந்த யாக்கோபின் குடும்பத்தில் எல்லா பிள்ளைகளையும்விட நல்ல கனி கொடுத்தான். ஆதி.49:22ஆம் வசனத்தில் “யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி;” மேலும் சங்.1:1-3 வசனங்களில் துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமல் இருந்தால், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்தால் பாக்கியவானாய் இருப்பான். தன் காலத்தில் தன் கனியைத் தருவார்கள் என்று பார்க்கிறோம். எசேக்.47:12 வசனத்தில் “…மாதந்தோறும் புதுக்கனிகளைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும்” என்று பார்க்கிறோம். ஒவ்வொரு மாதமும் புதிய கனிகளைக் கொடுப்பவர்களாக காணப்பட வேண்டும்.
யோசேப்பு தேவனுடைய வெளிப்பாடுகளைக் கொண்ட மனிதனாக இருந்தான். தேவனுடன் தொடர்புள்ளவனாக இருந்தான்.

இரண்டாவதாக,
ஆதி.37:13ஆம் வசனத்தில், இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி, “உன் சகோதரர் சீகேமிலே ஆடுகளை மேய்க்கிறார்கள் அல்லவா? உன்னை அவர்களிடத்துக்கு அனுப்பப்போகிறேன், வா என்றான். அவன்: இதோ, போகிறேன் என்றான்” யோசேப்பு பெற்றோருக்குக் கீழ்ப்படிகிறவனாக இருந்தான். பொறாமையுள்ள தன் சகோதரரைப் பார்க்க கீழ்ப்படிந்து போனான். கீழ்ப்படிதல் உள்ளவர்களே கனிகொடுக்கிறவர்களாக இருப்பார்கள். வேத வசனத்தை அப்படியே ஏற்றுக்கொள்கிறவர்களால்தான் கனி கொடுக்க முடியும்.

மூன்றாவதாக,
ஆதி.39:2ஆம் வசனத்தில் “கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்” கர்த்தர் யோசேப்போடே இருக்கிறார் என்றும் யாவையும் வாய்க்கப் பண்ணுகிறார் என்றும் எஜமான் கண்டான்.
யோசேப்பு கர்த்தர் தன்னோடு இருப்பதைக் கவனமாய் காத்துக்கொண்டான். காரிய சித்தி மனிதர்களின் கண்களில் ஏற்படும் தயவு கர்த்தரால் ஒரு மனிதனுக்கு கிடைக்கும் ஈவு. நாம் கர்த்தரோடு இருக்க பாவ வழிகளை விட்டு விலகினால் அவர் நம்மோடுகூட இருப்பார். பரிசுத்த வாழ்க்கை வாழ்வதாக இருக்க வேண்டும். யோவா.15:8 வசனத்தில், நீங்கள் தேவனில் நிலைத்திருந்தால் மிகுந்த கனிகளைக் கொடுப்பீர்கள். யோசேப்பின் கனியுள்ள வாழ்க்கைக்கு காரணம் அவன் தேவனில் நிலைத்திருந்தான். பாவத்துக்கு விலகி, தேவனுடன் இணைந்து இருந்ததே.

நான்காவதாக,
ஆதி.39:5ஆம் வசனத்தில், “கர்த்தர் யோசேப்பினிமித்தம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார்; வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டானவைகள் எல்லாவற்றிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்தது.” யோசேப்பின் நிமித்தம் கர்த்தர் அவன் வேலை செய்த எஜமான் குடும்பத்தை ஆசீர்வதித்தார். பொறாமை குணம் இருந்தால் நாம் ஆசீர்வதிக்கப்பட முடியாது. நமது மூலம் பிறர் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்ற விருப்பமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ஐந்தாவதாக,
யோசேப்பு தன்னை சுத்தமுள்ளவனாகக் காத்துக்கொண்டான். தன் அந்தரங்க வாழ்க்கையை கறைபடாதபடி பரிசுத்தமாய் காத்து வந்தான்.
ஆதி.39:9ஆம் வசனத்தில் “இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத்தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை. இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்” நம்முடைய பரிசுத்த வாழ்க்கை நம்மை தேவனுக்கு கனி கொடுக்கிறவர்களாக மாற்றும். கர்த்தரை எப்பொழுதும் தனக்கு முன்பாக நிறுத்தி சுத்தவானாக காத்துக்கொள்கிறவனே கனி கொடுப்பான்.

ஆறாவதாக,
ஆதி.39:21,22 “கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபைவைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார். சிறைச்சாலைத் தலைவன் சிறைச்சாலையில் வைக்கப்பட்ட யாவரையும் யோசேப்பின் கையிலே ஒப்புவித்தான்”
யோசேப்பு பொய்க் குற்றம் சாட்டப்பட்டு சிறைச்சாலையில் போடப்பட்டாலும் கர்த்தரோடு இணைந்து காணப்பட்டான். முறுமுறுப்பிற்கோ, பின்மாற்றத்துக்கோ இடம் கொடுக்கவில்லை. கர்த்தர் சிறைச்சாலையிலும் அவனோடு இருந்ததால் அவனால் கனி கொடுக்க முடிந்தது. சிறைக் கைதிகளுக்கும் ஆசீர்வாதமாக காணப்பட்டான்.
யோவா.15:2 வசனத்தில், “…கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்”. உபத்திரவங்கள் வழியாக சோதித்து பரிசுத்தப்படுத்தி தேவன் மேலும் கனி கொடுக்க கிருபை தருகிறார்.

ஏழாவதாக,
ஆதி.41:42-44 வசனங்களில் பார்வோன் யோசேப்பை எகிப்து தேசம் முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கினேன் என்றான். யோசேப்பு தனக்கு மட்டும் அல்ல, தேசத்திற்கே ஆசீர்வாதமாக மாறினான். ஒரு விசுவாசி தன் குடும்பத்துக்கு மட்டுமல்ல, முழு தேசத்துக்கும் ஆசீர்வாதமாக மாறுவான்.
ஆதி.41:55, 56ஆம் வசனங்களில் எகிப்து தேசமெங்கும் பஞ்சம் – எகிப்தியருக்கு தானியத்தை விற்றான். சகல தேசங்களிலும் பஞ்சம் கொடியதாயிருந்தபடியால் சகல தேசத்தார்களும், யோசேப்பினிடத்தில் தானியம் கொள்ளும்படி எகிப்துக்கு வந்தார்கள்.
யோசேப்பு தன் குடும்பத்தை பஞ்சத்தில் காத்தான். மனப்பூர்வமாக தன் சகோதரர்களை மன்னித்தான். மனப்பூர்வமாக மன்னித்தால் நாம் சொல்லிக் காட்டவே கூடாது. தன் வம்சம் அழியாதபடி பாதுகாக்கத்தான் தேவன் என்னை உயர்ந்த நிலையில் வைத்துள்ளார் என்று உணர்ந்து, பொறுப்புடன் தன் சகோதரரை பராமரித்து, எகிப்து தேசத்தின் சிறந்த நன்மைகளையும், செழிப்பான கோசேன் தேசத்தில் தங்கும்படி செய்தான்.


ஆதி.45:5,7 வசனங்களில், “…நீங்கள் சஞ்சலப்பட வேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார். பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்” என்று ஆறுதலாக தன் சகோதரரிடம் பேசினான். நமது குடும்பங்களிலும் நாம் உயர்ந்த நிலையில் தேவன் உயர்த்தும்போது, எளிய நம் சகோதரருக்கு நாம் அன்பு பாராட்டி பராமரித்தால் நாமும் கனியுள்ள வாழ்க்கை வாழ முடியும்!
பிரியமான விசுவாசிகளே! திருச்சபையில் தேவன் உங்களை இணைத்து வைத்திருப்பது அவருடைய வேலையைச் செய்ய. அவருடைய இராஜ்ஜியத்துக்கு உதவும்படி. உங்களுடைய பிரதான வேலை சபையின் வளர்ச்சிக்காக பாடு படுவதே. சபையில் மற்ற விசுவாசிகளுடன் சகோதர அன்புடன் நடந்து, அவர்களை பராமரித்தால் – நாமும் கனி கொடுக்க முடியும். ஆதி.45:15 வசனத்தில் யோசேப்பு “…தன் சகோதரர் யாவரையும் முத்தஞ்செய்து, அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதான்.” – ஆம், பிரியமானவர்களே! நீங்களும் சகோதர அன்புள்ளவர்களாக காணப்படுங்கள். சகோதரருடைய நன்மையைத் தேடுகிறவர்களாக காணப்படுங்கள். ஆதி.47:27ஆம் வசனத்தில் “இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலுள்ள கோசேன் நாட்டிலே குடியிருந்தார்கள்; அங்கே நிலங்களைக் கையாட்சி செய்து, மிகவும் பலுகிப் பெருகினார்கள்” யோசேப்பு பார்வோனிடம் பேசி தன் சகோதரரின் வாழ்க்கைக்காக நல்ல தேசத்தை வாங்கி கொடுத்தான். தன் ஜனத்தின் நன்மையைத் தேடினான், அவர்களின் சுகவாழ்வுக்காக பிரயாசப்பட்டான். தேவனுடைய வம்சம் – பரிசுத்த ஜாதி பலுகிப் பெருக காரணமாயிருந்தான். விசுவாசியே! நீ ஆசீர்வதிக்கப்படும்போது எத்தனை சகோதரர்களுக்கு ஆசீர்வாதமாக மாறியுள்ளாய்? சபையில் தேவன் உன்னை வைத்துள்ளார். நீ திருச்சபைக்கு நன்மையை தேடுகிற நபரா? உன்னால் உன் திருச்சபை வளர்ந்து பெருகுகிறதா? எண்ணிக்கையிலும், பொருளாதாரத்திலும் சபைக்கு ஆசீர்வாதமாக காணப்படுகிறாயா? அல்லது சகோதரருக்கு சஞ்சலமாகவும், இடறலாகவும் உன் வாழ்க்கை காணப்படுகிறதா?


ஆதி.50:25ஆம் வசனத்தில் யோசேப்பு தன் சகோதரரிடம் தான் மரணமடையும் முன்பு “தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக…” என்று ஆணையிடுவித்துக் கொண்டான். அந்நிய தேசத்தில் உயர்ந்த பதவியிலிருந்தாலும், அவனது வாஞ்சை தன் எலும்புகள் தன் முற்பிதாக்களுடன் கல்லறையில் கானான் தேசத்தில் காணப்பட வேண்டும் என்பதே! பிரியமானவர்களே! உலகத்தில் உயர் பதவியிலிருந்தாலும் நமது வாஞ்சை பரம கானான் சென்று சேர்வதைப் பற்றியதாக இருக்க வேண்டும். அவர் வருகையின் நாளை எதிர்நோக்கி பரிசுத்தமாய் வாழ்வோம்! யோசேப்பைப் போல கனியுள்ள வாழ்க்கை வாழ தேவன் கிருபை செய்வாராக!


மாரநாதா! ஆமென்! அல்லேலூயா!






Author

You May Also Like…

Share This