பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நாடி – ஓடுங்கள்

Written by Pr Thomas Walker

April 21, 2008

இலக்கை நோக்கித் தொடருங்கள்


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!


பின்னோக்கிப் பார்ப்பது என்பது மிகவும் பெரிய ஆபத்து. பின்னோக்கிப் பார்க்கும் அனுபவம் கிறிஸ்தவ வாழ்வில் இருக்கக்கூடாது. “இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன். பின்னோக்கேன் நான், பின்னோக்கேன் நான்” எனப் பாடுகிறோம். பழைய பாவ வாழ்க்கையை, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதற்கு முன்னாக வாழ்ந்த பழையவற்றை (பின்னானவைகளை) நாம் மறக்க வேண்டும். மறக்காதது பாவம், கிறிஸ்தவ வாழ்வின் வெற்றியின் இரகசியம் என்னவென்றால் மறக்க வேண்டிய காரியங்களை மறந்து, மறக்க கூடாதவைகளை மறக்காமல் இருக்க வேண்டும். பிலி.3:13,14 வசனங்களில் பவுல் அப்போஸ்தலன் இவ்வாறு கூறுகிறார் “சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்”.

நாம் எந்த காரியங்களையெல்லாம் மறக்கக்கூடாது என்று சங்கீதத்தில் தாவீது கூறுவதை காணலாம்.

முதலாவதாக,
சங்.119:16ஆம் வசனத்தில் “உமது வசனத்தை மறவேன்” என்கிறார். தாவீது காலத்தில் முதல் 5 ஆகமங்கள் மட்டுமே இருந்தது. திரும்பத் திரும்ப வாசித்து, தன் உள்ளத்தில் எழுதி வைத்திருந்தார். கர்த்தருடைய வசனத்துக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்து வாழ்ந்தார். வசனத்துக்கு நடுங்கினார். வசனத்தை மறவேன் என்கிறார்.

இரண்டாவதாக,
சங்.119:141ல் “நான் சிறியவனும் அசட்டை பண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன்; ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன்”.
தாவீது தன் குடும்பத்தில் 8ஆவது பிள்ளையாக பிறந்தான். ஈசாயின் குடும்பம் ஏழை குடும்பம்தான். சாமுவேலின் பலி விருந்துக்குக்கூட அவன் தகப்பன் மற்ற சகோதரர்களை அழைத்திருந்தான். இவனோ காட்டில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். இவன் சகோதரரால் அசட்டைப் பண்ணப்பட்டாலும், தேவனுடைய வார்த்தையின் படியே நடந்தான். தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிய கீழ்ப்படிய மிகவும் உயர்ந்த நிலையில் அரசனாக உயர்த்தப்பட்டான்.

மூன்றாவதாக,
சங்.137:5ஆம் வசனத்தில் “எருசலேமே, நான் உன்னை மறந்தால் என் வலதுகை தன் தொழிலை மறப்பதாக.” தேவனுடைய சபைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழும் வாழ்க்கை, மேன்மையான ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும். திருச்சபையை மையமாக வைத்து வாழ்பவர்கள் ஓய்வு நேரங்களை சபைக்காக செலவிடுவார்கள். நற்கிரியை செய்வது, ஆத்தும ஆதாயம் செய்வது, ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தல் போன்ற ஆலய காரியங்களுக்கு முதலிடம் கொடுத்து எல்லா காரியத்திலும் பங்குபெற்று வாழும் வாழ்க்கை – எருசலேமின் வாழ்க்கை. தனக்காகவே தன்னை மையமாக வைத்து (ளுநடக உநவேசந டகைந) வாழும் வாழ்க்கை சரியான வாழ்க்கை அல்ல.
தேவனுடைய திருச்சபைக் கட்டப்படும்போது உன் வாழ்க்கைக் கட்டப்படும். திருச்சபை கட்டப்படுவது தேவனின் பிரியம். எருசலேம் வாழ்வு என்பது கன்மலையாகிய கிறிஸ்துவின் மேல் கட்டப்பட்ட வாழ்க்கை. தேவ சித்தம் செய்யும் வாழ்க்கை. எதை மறக்க வேண்டும்?

 முதலாவதாக,
பழைய வழிபாட்டை மறக்கவேண்டும்.
ஏசா.65:11ஆம் வசனத்தில் ஆனாலும் கர்த்தரை விட்டு, என் பரிசுத்த பர்வதத்தை மறந்து, காத் என்னும் தெய்வத்துக்குப் பந்தியை ஆயத்தம்பண்ணுகிறார்கள்.
இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரை விட்டுவிட்டார்கள். விக்கிரக வணக்கத்துக்கு திரும்பினார்கள். பழைய வழிபாட்டை பின்னானதை மறக்கவில்லை. ஒருவன் பின்வாங்கிப் போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிருப்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
1கொரி.9:24-27 வசனங்களில் பார்க்கும்போது பந்தயச்சாலையில் ஓடுகிறவர்கள் பந்தயத்தைப் பெற்றுக்கொள்ளத் தக்கதாக ஓடவேண்டும். பந்தயத்துக்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள். நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம.

 இரண்டாவதாக,
உலகத்தின் மேன்மை – சாப்பாடு, உடையை மறக்க வேண்டும்
எண்.11:5ல் “நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப் பூண்டுகளையும் நினைக்கிறோம்”.
வானத்தின் மன்னாவை வெறுத்தார்கள். மகிமைக்கு நேராக ஓடுகிறதை மறந்து, உலகத்தின் மகிமையையே நாடுகிறார்கள். கிறிஸ்தவ ஓட்டத்தில் இயேசுவை நோக்கி, பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கி ஓட வேண்டும். அடிமைத்தன பாவ வாழ்க்கையை நினைத்துப்பார்க்க கூடாது.

 மூன்றாவதாக,
பழைய வாழ்வை மறக்க வேண்டும்
வெளி.5:10ல் தேவன் நம்மை சகல ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று தம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை இராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர். நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.
இராஜா – அதிகாரமுள்ளவன் – ஆளுகையை குறிக்கிறது. ஆசாரியன் – பரிந்து பேசுகிறவன். விசுவாசிகள் பழைய பாட்டு, பஞ்சப்பாட்டு, சினிமா பாட்டை வீட்டில் பாடுகிறார்கள். ஆலயத்திலோ புதிய பாட்டைப் பாடுகிறார்கள். பழைய காரியங்களை பின்னானவைகளை மறக்க வேண்டும்.

 நான்காவதாக,
நம்முடைய தரிசனம் – புதிதாக வேண்டும்
தேவனுடன் வாழும் வாழ்க்கை, ஆத்துமபாரம், பரலோக இராஜ்ஜியத்தின் மகிமையைக் கண்டு அதைப் பெற்றுக்கொள்ள ஆசையாய் தொடர வேண்டும். அவரோடு 1000 வருடம் அரசாள வேண்டும். வருகையில் காணப்பட வேண்டும் என்ற வாஞ்சை வேண்டும். வெளி.20:4,6 வசனங்களில் மிருகத்தையாவது, அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களைக் கண்டேன். அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனே கூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள். பிசாசுக்குக் கீழ்ப்படியாதவர்கள் தேவனுடன் ஆளுவார்கள். முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்.
ரோம.8:17 வசனத்தில் அவருடன்கூட பாடுகளைப்பட்டால் அவரோடுகூட ஆளுவோம்.

 ஐந்தாவதாக
2தீமோ.4:7,8 நல்ல போராட்டத்தைப் போராடினேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். விசுவாசத்தைக் காக்க பின்னானதை மறக்க வேண்டும்
எகிப்தை மறக்கவேண்டும். பாவ வாழ்க்கையை மறக்க வேண்டும். உலகத்தின் ஆடம்பரம், பொருளாசையை வெறுக்க வேண்டும். இஸ்ரவேலர் எகிப்தில் அடிமைகளாக இருந்தனர். பாவ ஜீவியத்தில் இருந்த மகிமை, மேன்மையையும் வெறுக்கவில்லை. இன்றைய விசுவாசிகளிடம் வளர்ச்சியில்லை. காரணம் பழையவைகளை மறக்கவில்லை. வனாந்திர வாழ்க்கையில் பின்னோக்கிப் பார்த்த ஒரு இஸ்ரவேலரும் கானானுக்குள் பிரவேசிக்கவில்லை.
வரப்போகிற மகிமையைப் பற்றிய தரிசனம் அவர்களுக்கு இல்லை. கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கையில் வெற்றி, தோல்வி, மாறி மாறி வருகிறது. ஜெப ஜீவியம் செய்யாத, செய்ய முடியாதவர்களாகிறார்கள்.
கலா.4:9,10 வசனங்களில், “இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க, அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி?”
நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே.
கலாத்தியர் பழைய ஆராதனை, பழைய பாரம்பரியங்களையும் விட்டுவிட வில்லை. பின்னானவைகளை மறக்கவில்லை. உலகத்தைப் பற்றிய பயம் உள்ளது.
ஆதி.19:26 வசனத்தில், “அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள்.”


உலகம், மாமிசம், பிசாசு அவைகளின் கிரியையை விட்டுவிட்டு ஓட வேண்டும். பாரமான யாவையும் தள்ளிவிட்டு ஓட வேண்டும். மேகம் போன்ற திரளான சாட்சிகளாகிய நாம் எப்படி ஓடுகிறோம் என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே நாம் ஓடுகிற ஓட்டத்தில் பொறுமையாக ஓட வேண்டும்.


எபி.10:38 வசனத்தில், “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்”


ஆம், பிரியமானவர்களே! கிறிஸ்துவுக்குள் மனப்பூர்வமாக ஒருவரையொருவர் மன்னித்து மறப்போம்! பின்னான, பழைய வாழ்வை மறப்போம்! பின்னானதை மறந்து முன்னானதை நாடி ஓட வேண்டும். எப்படியாயினும் அவர் வரும் நாளில் அவருக்கு ஒப்பாக மறுரூபமாக வேண்டும். தேவ மகிமையின் மேல் மகிமையடைந்து, தேவ சாயலாக மாறி தேவனோடு என்றென்றும் வாழும் பாக்கியம் பெற வேண்டும்.
மாரநாதா! ஆமென்! அல்லேலூயா!






Author

You May Also Like…

Share This