என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை

Written by Pr Thomas Walker

February 21, 2008

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
தேவன் நம்மீது அதிக அக்கறையும், அன்புள்ளவராகவும், நம்மை விசாரிக்கிறவராகவும் இருக்கிறார். நம்மை உருவாக்கினவர். சிருஷ்டித்தவர் நம்மை பராமரித்து, வழிநடத்தி வருகிறவருமாக உள்ளார். ஒரு தாயைவிட அதிக அன்புடன் நம்மேல் நினைவாயிருக்கிறார். அப்படிப்பட்ட தேவனை நாம் மறந்து, அந்நிய தெய்வத்திற்குப் பின்னால் செல்வது, அவரைத் தொழுது கொள்ளாமல் சிருஷ்டியை, அவர் படைத்த மிருகங்களை, மனிதர்களை வழிபடுவதை அவர் வெறுக்கிறார். “ஒரு பெண் தன் ஆபரணத்தையும், ஒரு மணவாட்டி தன் ஆடைகளையும் மறப்பாளோ? என் ஜனங்களோ எண்ணிமுடியாத நாட்களாய் என்னை மறந்துவிட்டார்கள்” (எரே.2:32) என்கிறார். இரட்சிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகள், தேவனுக்கும் அவருடைய இராஜ்ஜியத்தின் மேன்மைக்கும் முதலிடம் கொடாமல், ஆலயத்துக்குப் போகாமல், வேதத்தை வாசியாமலும், கேளாமலும், உபவாசிக்காமலும், ஜெபிக்காமலும், தேவனுக்கு கொடுக்காமலும், பின்மாறி சுயநலக்காரர்களாய், தங்கள் உலக பிரகாரமான காரியங்களுக்கு முதலிடம் கொடுத்தால் விளைவு என்ன? வேதத்தை மறந்தால், தேவனை மறந்தால் ஒரு மனிதனின் நிலைமை என்ன ஆகும்? சிந்தியுங்கள்.
ஏசா.49:15,16 “ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது” என்கிறார். தேவன் நம்மை ஒருநாளும் மறக்காமல், நம்முடைய துக்கத்திலும் இன்பத்திலும் பங்குகொள்கிறார். நாம் அவருடன் இணைந்து அவருடன் வாழவேண்டும் என்று விரும்புகிறார். சங்.40:17 “நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்; தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்” என்கிறார் பக்தன் தாவீது.
தேவனை மறந்த மக்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட விளைவுகள் எவை? என்று தியானிப்போம்

 முதலாவதாக – 1சாமு.12:9 தேவனை மறந்தவர்களை அந்நியர் கையில் விற்றுப்போட்டார்
“அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்துபோகிறபோது, அவர் அவர்களை ஆத்சோரின் சேனாபதியாகிய சிசெராவின் கையிலும், பெலிஸ்தரின் கையிலும், மோவாபிய  ராஜாவின் கையிலும் விற்றுப்போட்டார்; இவர்கள் அவர்களுக்கு விரோதமாக யுத்தம் பண்ணினார்கள்”

நாம் தேவனை மறந்தால் விரும்பப்படாதவர்களிடம் பிடித்துக்கொடுக்கப் படுகிறோம். இழிவான பேச்சு வாங்கும் நிலைமை, கொடுமை, நஷ்டம் ஏற்படும். துஷ்டர்களும், பாவிகளும் நம் தலைமேல் ஏறிப்போகும்படி செய்வார். பெலிஸ்தர் கையிலும், தேவனற்ற, புறஜாதிகள் நம்மை நெருக்கும்படியாகவும், தூஷித்து, இழிவுபடுத்தும் படியாக தேவன் நம்மை விற்றுப்போடுவார். உன்னுடைய கையின் பிரயாசத்தை அவர்கள் சாப்பிடுவார்கள். அப்படியில்லாவிட்டால் புறஜாதிகள் நமக்கு விரோதமாய் எழும்பி கலகம் பண்ணுவார்கள்.

 இரண்டாவதாகதேவனை மறந்தால் துக்கமும் கடும் வேதனையும் அவர்கள் அறுப்பாயிருக்கும்
ஏசா.17:10,11 “உன் பெலமாகிய கன்மலையை நீ நினையாமல், உன் இரட்சிப்பாகிய தேவனை மறந்தாய்; ஆதலால் நீ நேர்த்தியான நாற்றுகளை நட்டாலும், அந்நிய தேசத்துக் கன்றுகளை வைத்தாலும், பகற்காலத்திலே உன் நாற்றை வளரவும், விடியற்காலத்திலே உன் விதையை முளைக்கவும் பண்ணினாலும், பலனைச் சேர்க்கும் நாளிலே துக்கமும் கடும்வேதனையுமே உங்கள் அறுப்பாயிருக்கும்” என்கிறார்.

தேவனை மறந்தால் துக்கம், கடும் வேதனை உண்டாகும். ஆடு, மாடு, பயிர், தொழில் இவற்றில் ஆசீர்வாதம் வராது. தேவனை மறந்தால் லாபமே இருக்காது. வயலில், வியாபாரத்தில் செலவழித்ததற்கு ஏற்ற பலன் கிடைக்காது. காலையில் தேவ சமூகத்தில் அமர்ந்து ஜெபி, தேவனைத் தேடு, யாக்கோபின் சந்ததியாயிரு. அப்படியில்லாவிடில் அந்நியர் உன் பிரயாசத்தின் பலனை சாப்பிடுவார்கள்.

 மூன்றாவதாகஉன் பிள்ளைகளை மறந்து விடுவேன்.
ஓசியா 4:6 “என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்து விடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்”. தேவனே ஞானம், அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு ஞானத்தையும், அறிவையும் தருகிறார். உண்மையான அறிவு வேதத்தை கைக்கொள்வதில் தான் கிடைக்கிறது.

 நான்காவதாகதேவனை மறக்கிறவர்கள் நரகத்தில் தள்ளப்படுவார்கள்
சங்.9:17 “துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்” தேவனை மறக்கிறவர்கள் அனைவரும் வெட்கப்பட்டு போகும் நியாயத்தீர்ப்பின் நாள் ஒன்று உள்ளது. தேவனை முழு இருதயத்தோடும் நம்பினால் வெட்கப்பட்டு போவதில்லை.
தேவனை மறப்பது என்றால் பொருள் என்ன?
1) சங்.78:11 “அவருடைய செயல்களையும், அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள்”
சவுல் தேவனை ஸ்தோத்தரிக்கவில்லை. அவருடைய கிரியைகளை மறந்துவிட்டான். தான் ஸ்திரப்பட்ட போது பெருமையடைந்தான். தேவனை மறந்தான். சங்.103:21,22 தாவீது கர்த்தரை எக்காலத்திலும் ஸ்தோத்தரித்து மகிமைப்படுத்தினான். சங்.103:2 வசனங்களில், “ என் ஆத்துமாவே ….அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே” என்கிறார்.

எகிப்திலே பெரிய கிரியைகளையும் காமின் தேசத்திலே அதிசயங்களையும், சிவந்த சமுத்திரத்தண்டையிலே பயங்கரமானவைகளையும் செய்தவராகிய தங்கள் இரட்சகரான தேவனை மறந்தார்கள். சிலர் பணம், வசதி, செல்வாக்கு இருக்கும்போது தேவனைத் தேடுவது இல்லை. பெரிய வியாதி டாக்டர் கைவிட்டால் என்று வருவார்கள். சிறிய வியாதி என்றால் தேவனை அசட்டை செய்து டாக்டரிடம் போகும்போது தேவனை மறக்கிறோம்.

2) ஓசியா 2:13, உபா.4:23 வசனங்களில் தேவனோடு செய்யும் உடன்படிக்கையை மறந்து விடுகிறோம். ஓசியா தீர்க்கதரிசி மூலமாய் இஸ்ரவேலருடன் பேசும் போது, “…தன் நேசரைப் பின் தொடர்ந்து, என்னை மறந்துபோன நாட்களினிமித்தம் அவளை விசாரிப்பேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். உபா.4:23 வசனங்களில், “நீங்கள்… உங்கள் தேவனாகிய கர்த்தர் வேண்டாம் என்று விலக்கின எவ்வித சாயலான விக்கிரகத்தையும் உங்களுக்கு உண்டாக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்” பிரதிஷ்டை, ஞானஸ்நானம், திருமணம் போதுதான் நாம் தேவனோடு உடன்படிக்கை செய்கிறோம். தேவன் உடன்படிக்கையை காக்கிற தேவன். மனிதன் தான் மீறுகிறான்.

3) உபா.9:7 “நீ வனாந்தரத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினதை நினை, அதை மறவாயாக”
நாம் தேவனுக்கு கடுங்கோபம் உண்டாக்குதல், முறுமுறுத்தல், இதை நினைவுகூர்ந்தால் மற்றவர்களுக்கு மன்னிக்க முடியும். மற்றவர்கள் மேல் மனவருத்தமும், இரக்கமும் வரும். மற்றவர்கள் நமக்குச் செய்த தப்பிதங்களை மன்னிக்க முடியும். ஜெபிக்க முடியும். நாம் கடந்து வந்த பாதையை நினைத்துப் பார்க்க வேண்டும். இப்பொழுது நாம் பரிசுத்தவானாக இருக்கலாம். ஆனால் மற்றவர்களை வழிநடத்த, உன் பழைய பாதையை நினைத்துப் பார்க்க வேண்டும்.

4) யாத்.17:8-16; உபா.25:19 வசனங்களில் “…நீ அமலேக்கின் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்கு அழியப்பண்ணக்கடவாய்; இதை மறக்கவேண்டாம்”
யாத்.17:8-16 வசனங்களில் அமலேக்கியருடன் இஸ்ரவேலருக்கு யுத்தம் நடந்தது – மோசே மலையுச்சியில் தன் கையை ஏறெடுத்து ஜெபித்ததால் அமலேக்கு வெற்றி பெறவில்லை. யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப் போட்டான். அமலேக்கு – பழைய மனிதனையும், மாமிச வாழ்க்கையையும் காட்டுகிறது. மாமிசத்தை மேற்கொள்ள வேண்டுமென்றால் தொடர்ந்து ஜாக்கிரதையாக ஜெபிக்க வேண்டும்.

5) சங்.119:109 வசனத்தில், வேதத்தை மறக்கக்கூடாது “என் பிராணன் எப்பொழுதும் என் கையில் இருக்கிறது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறவேன்” வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டு. சங்.1:2,3.
நீதி.3:1 “என் மகனே, என் போதகத்தை மறவாதே” என்கிறார். வேதத்தின்படி நடக்க வேண்டும். துன்மார்க்கரின் ஆலோசனைபடி நடக்கக் கூடாது. ஒரு விசுவாசி சபையின் போதனை, தாயின் போதனை, தகப்பனின் போதனை, முதியவர்களின் போதனையை கேட்டு நடக்க வேண்டும். இதை மறக்கும்போது தேவனை மறக்கிறோம் என்று பொருள்.

6) சங்.137:5 “எருசலேமே, நான் உன்னை மறந்தால் என் வலதுகை தன் தொழிலை மறப்பதாக”
எருசலேம் தேவனுடைய ஆலயத்தையும், வீட்டையும் குறிக்கும். தேவன் தங்கும் வாசஸ்தலம். சபை தேவ பிள்ளைகள் கூடுகிற இடம். கர்த்தரை நேசிப்பவர்கள் தேவனுடைய ஆலயத்தை பராமரிக்க வேண்டும்.

7) எபி.13:1,2,16 சகோதர சிநேகம் நிலைத்திருக்கக் கடவது. அந்நியரை உபசரிக்க மறக்க கூடாது. “அன்றியும் நன்மைசெய்யவும், தான தர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்” இவைகளைச் செய்ய மறந்தால் தேவனை மறக்கிறோம் என்பது தான் பொருள்படும்.


இதை வாசிக்கும் அன்பான நேயரே! நம்முடைய வாழ்க்கையில் அநேக நேரங்களில் நாம் நம்பினவர்கள் கைவிடலாம். ஆனால் தேவன் நம்மை மறப்பதில்லை. கைவிடுவதில்லை. நாமும் அவர் கற்பனைகளின்படி பிரியமாய் நடக்க வேண்டும். அவருடைய அதிசயங்களையும், அற்புதங்களையும் மறக்காமல் நன்றியுடன் அவரை மகிமைப்படுத்த வேண்டும். தேவனோடு நாம் பண்ணின உடன்படிக்கையை மறக்கக் கூடாது. வேதத்தையும் தேவனுடைய ஆலயத்தையும், போதனைகளையும் பரிசுத்தவான்களின் ஐக்கியத்தையும் மறக்காமல் வாழ்ந்தால் தேவன் நம்மேல் பிரியமாய் இருப்பார். தேவனை மறந்தால் சத்துருக்கள் மேற்கொண்டு மகிழ்வார்கள். நரகத்தில் தள்ளப்படுவோம். தேவன் செய்த உபகாரங்களையும் மறவாமல் அவரை துதியுங்கள். அவர் கிருபை உங்களுடன் எப்பொழுதும் இருக்கும்! ஆமென்.






Author

You May Also Like…

Share This