கர்த்தருக்குள் பிரியமானவர்களே! இன்றைக்கு நமது பிரதானமான வேலை இயேசுவோடு இணைந்து வேலை செய்வது தான். யோவான் 15:5ல் “நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” என்று பார்க்கிறோம். இயேசுவல்லாமல் எதுவும் செய்ய முடியாது. நீ தேவனோடு இணைந்து செயல்படு. உன் பிரயாசம், உன் கட்டுமானம் வீண் போகாது. அவரில்லாமல் தனித்து உன் சுயமாய் செயல்பட்டால் அனைத்தும் வீணாகப் போய்விடும்.
முதலாவதாக மத்தேயு 5:36 வசனத்தில் உன் சிரசின் பேரிலும் சத்தியம் பண்ண வேண்டாம். அதின் ஒரு மயிரையாவது வெண்மையாக்கவும் கறுப்பாக்கவும் உன்னால் கூடாதே. எனக்கும்கூட வாலிப வயதிலேயே தலைமுடி நரைத்துவிட்டது. நான் இதை மாற்ற முயலவில்லை. ஆனால் தேவன் அதை ஆசீர்வாதமாக மாற்றினார். நரைத்த முடியாயிருந்ததால் அநேகர் என்னிடம் தேவ ஆலோசனை கேட்க வந்தனர். அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்ட நம்முடைய வாழ்வில் சகலமும் நன்மைக்கு ஏதுவாய் நடக்கிறது.
இரண்டாவதாக ஆதியாகமம் 11:4 வசனத்தில் பார்க்கும்போது பிரியமானவர்களே! தேவன் ஜலப்பிரளயத்திலிருந்து காப்பாற்றிய நோவாவின் சந்ததியார் எவ்வளவு சீக்கிரம் துரோகியாக மாறினார்கள் என்று பாருங்கள். நாம் சிதறிப்போகாத படிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் என்று தங்கள் பெருமையை நிலைநாட்டப் பார்க்கிறார்கள். பெரிய அழிவிலிருந்து தங்களை காப்பாற்றிய தேவனைத் தள்ளிவிட்டு தங்கள் மனம்போல செயல்பட ஆரம்பித்தனர். பெரிய வெள்ளம் வந்தால் தப்ப நினைத்து கோபுரம் கட்டினார்கள். ஆனால் அவரின் ஆலோசனையில்லாமல் மனிதன் செய்யும் வேலைகளையும் பிரயாசங்களையும் பார்த்து தேவன் நகைக்கிறார். பாபேல் கோபுரம் கட்ட எல்லா பொருட்களும் (செங்கலும், நீலக்கீலும்) இருந்தது. வேலைக்கு தேவையான ஆட்களும் இருந்தனர். எல்லாக் காரியமும் கைக்கூடி வந்ததால் தேவசித்தம் என்று நினைத்தனர். ஆனால் அவர்கள் எண்ணம் தாறுமாறாக்கப்பட்டது. அவர்களை பூமியெங்கும் சிதறடித்தார். தேவனில்லாமல் செயல்பட்டால் உங்களுக்கு இது ஓர் எச்சரிப்பு.
மூன்றாவதாக ஆதியாகமம் 4:13-15 வசனங்களில் காயீன் தன் சகோதரன் ஆபேலுடைய இரத்தத்தை சிந்தியதால் தேவனுடைய சாபத்துக்குள்ளானான். தேவன் அவனிடம் “நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார்” என்றதும் காயீன் தேவனிடம் பாதுகாப்புக்காக அடையாளம் கேட்டான். அவன் சாபத்திற்குட்பட்ட பின்பும் தேவனிடம் அவன் ஒத்தாசை கேட்டபடியால் “காயீனைக் கொல்லுகிற எவன்மேலும் ஏழு பழி சுமரும்” என்று சொல்லி எவனும் அவனைக் கொன்றுபோடாதபடி அடையாளம் போட்டார். உன் வாழ்வில் வரும் எந்த பிரச்சனையானாலும், சாபமானாலும் அதை மாற்ற இயேசுவால் கூடும்.
நான்காவதாக யோவான் 6:40 வசனத்தில் “குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்”. மனுக்குலத்திற்கு இயேசு அல்லாமல் மீட்பு இல்லை. அவர் ஒருவரே நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள வழி, வேறு மார்க்கம் இல்லை.
ஐந்தாவதாக, சங்கீதம் 127:1 வசனத்தில் கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா. நமது முயற்சியில் நம் குடும்பத்தைக் கட்ட முடியாது. லூக்கா 5:5 வசனத்தை பார்த்தால் “…சீமோன்: ஐயரே, இரா முழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான்” என்று இயேசுவின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்தபோது காலியான படகு அதிக மீன்களினால் நிரப்பப்பட்டது. இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக தேவன் நிரப்பினார். நீ தேவனோடு இணைந்து செயல்பட்டால் தேவன் உன் பிரயாசங்களுக்கு அதிக பலனைக் கொடுக்க விரும்புகிறார்.
ஆறாவதாக மாற்கு 4:38 ஆண்டவர் கப்பலின் பின்னணியத்தில் தலையணையை வைத்து நித்திரையாயிருந்தார். சீஷருடன் இயேசு படகில் தான் இருந்தார். ஆனால் அவர்கள் அவரிடம் எந்த உதவியையும் பெறவோ, அவரை தங்கள் வாழ்க்கையில் செயல்படவோ அனுமதிக்கவில்லை. அவரை அவர்கள் பிரச்சனையில் தேடவில்லை. தனது பணம், பெலன், பிரயாசம், உழைப்பு இவற்றில் அதிக நம்பிக்கை. சில கிறிஸ்தவரிடம் இயேசுவின் படம், விளக்குகள், வேதம், பாட்டுப்புத்தகம், ஜெபமாலை எல்லாம் உண்டு. அதைக் குறித்து அதிக பெருமை பாராட்டுகிறார்கள். கூhநல யசந யீசடிரன டிக வை! ஆனால் தன் வாழ்க்கையில் பிரச்சனை நேரத்தில் தேவனிடம் போராடி ஜெபிக்கவோ, அவருடன் தனித்து பேசவோ காலைப்பிடித்து இரக்கத்துக்காக மன்றாடுவதோ இல்லை. சீஷர்கள் தங்களோடு இருந்த இயேசுவிடம் பிரச்சனைகளை தெரிவிக்காமல் இருந்ததுபோல நீயும் அசதியாக இராதே! அவரை நோக்கிக் கூப்பிடு.
ஏழாவதாக 2நாளா.20:12ல் யோசபாத் ராஜா தேவனோடு இணைந்து செயல்பட்டதால் பெரிய வெற்றியை பெற்றான் என்று பார்க்கிறோம். “…இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை;… ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது” என்று அவர் முற்றிலும், தன்னைத் தாழ்த்தி தேவனை சார்ந்துகொண்டதால், தேவன் மாபெரும் ஜெயத்தை கட்டளையிட்டார். உன் பெலத்தையோ, செல்வாக்கையோ நம்பாதே, தேவனையே சார்ந்துகொள்.
எட்டாவதாக தானி.3:25 வசனத்தில் “நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்”. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினி சோதனையில் களிம்பு நீங்க புடமிடப்பட்டது போல சோதிக்கப்பட்டனர். கூhநல றநசந வநளவநன லெ கசைந! ஆனால் தேவன் அவர்கள் வைராக்கியத்தையும், விசுவாசத்தையும் கனப்படுத்தி அக்கினி சூளையில் கூடவே நடந்தார், மகிமைப்பட்டார். நீ வியாதியில், அக்கினி போன்ற சோதனையில் புடமிடப்படும்போது தேவனை விசுவாசித்து உறுதியாக நின்றால் ஜெயம் தருவார்.
ஒன்பதாவதாக, யோவான் 15:4 “நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்” கர்த்தர் நம்முடன் இல்லாவிட்டால் கனி தர முடியாது. புளிப்பான, கசப்பான, மேலும் கனியேயில்லாத தன்மைதான் காணப்படும். நாம் கனிகொடுக்கும்படியாய் அவர் கிளை நறுக்கி நம்மை அவர் சுத்திகரிக்கும்படியாய் அவர் கையில் ஒப்புக்கொடுப்போம்.
பத்தாவதாக உபா.1:40-42 வசனங்களில் இஸ்ரவேல் ஜனங்களை தேவன் சிவந்த சமுத்திரத்தின் வழியாய் வனாந்திரத்திற்குப் பிரயாணப்பட்டு போகச்சொன்னார். அவர்களோ யுத்தம் பண்ண மலையில் ஏற ஆயத்தமானார்கள். தேவன் பாவிகளிடம் இருப்பது இல்லை. அவர் வார்த்தைக்கு செவி கொடாமல் தன் மனம்போல செயல்படுபவரிடம் அவர் இருப்பது இல்லை.
பதினொன்றாவதாக யோவான் 6:44 “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்” கிறிஸ்துவின் ஆவி நமக்குள் இருந்தால் சாவுக்கு ஏதுவான சரீரம் எக்காள சத்தம் கேட்டதும் உயிர்ப்பிக்கப்படும். இயேசு இல்லாமல் உயிர்த்தெழுதல் கிடையாது.
இதை வாசிக்கும் பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக் கூடாது என்ற இயேசுவோடு இணைந்து செயல்படுவோம். தேவன் வாழ்வில் மகிமையாய் வெற்றி சிறப்பார். கிறிஸ்துவுக்குள் நாம் படும் பிரயாசம் ஒருநாளும் வீணாய் போகாது. தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக.
ஆமென்! அல்லேலூயா!