நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம்

Written by Pr Thomas Walker

February 21, 2007

பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! தாவீது தன்னைத் தானே ஆராய்ந்து பார்க்கிற ஒரு மனுஷனாயிருந்தான். “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்” (சங்.139:23) என்பது தாவீதின் விண்ணப்பமாயிருந்தது. இன்று நாம் எப்படி ஜீவிக்கிறோம்? தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு தினந்தோறும் நம்மை நாமே ஆராய்ந்து பார்க்கிறோமா? நம்மை சரி செய்ய வரும்படி, நமது இருதயக் கதவை திறந்து அவரை வருந்தி அழைக்கிறோமா? நமது வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளும் அவருக்கு முன்பாக திறந்த புத்தகமாயிருக்கிறதா?
தாவீது எந்தெந்த காரியங்களில் தன்னை ஆராய்ந்து பார்த்தார் என்பதை இங்கு பார்க்கலாம்.

முதலாவதாகதாவீது கர்த்தருடைய வழிகளை கைக்கொள்ளுகிற ஒரு மனுஷனாயிருந்தான் (சங்.18:21)
கர்த்தருடைய வழிகளை ஒருமுறை தாவீது மீறியபோது, தன்னை தேவனுக்கு முன்பாக ஆராய்ந்து சரிசெய்தான். தேவனே உமது கிருபையின்படி எனக்கு இரங்கும் என்று கெஞ்சுகிறான் (சங்.51:1). “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்” (சங்.51:10) என்று தாவீது மன்றாடினான். தாவீது தன் சுய வழியில் நடவாமல், தாறுமாறாக ஓடாமல், இலக்கை நோக்கி ஓடினான். “வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்” (சங்.139:24) என்பது தாவீதின் விண்ணப்பமாயிருந்தது.
தாவீது பாவிகளின் வழியில் நிற்கவில்லை. அவன் தன் வழிகளை கர்த்தருக்கு ஒப்புவித்திருந்தான் (சங்.37:5). பொய்யான வழிகளை தாவீது வெறுத்தான் (சங்.119:128). இன்று நாம் மாயையான வழியில் நடவாமல் சத்திய வழியில் நடக்கிறோமா? “…நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்” (சங்.143:8) என்று தாவீதைப் போல விண்ணப்பம் பண்ணுகிறோமா?

இரண்டாவதாகதாவீது தேவனுக்கு துரோகம் பண்ணினதில்லை (சங்.18:21)
“துரோகிகளோ வறண்ட பூமியில் தங்குவார்கள்” என்ற (சங்.68:6)ல் குறிப்பிடுகிறார். துரோகிகள் ஒருபோதும் தேவனுடைய ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக்கொள்ள முடியாது. ‘துரோகிகள் பூமியிலிராதபடி நிர்மூலமாவார்கள்’ என்று நீதி.2:22ல் பார்க்கிறோம். நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம். சகோதரருக்கு துரோகம் செய்கிறோமா? (மல்.2:10); மேய்ப்பர்களே! கர்த்தருக்கு விரோதமாக துரோகம் செய்கிறீர்களா? (எரே.2:8). மனைவியே! உன் புருஷனுக்கு துரோகம் செய்கிறாயா? (எரே.3:20). புருஷனே! உன் உடன்படிக்கையின் மனைவிக்கு துரோகம் பண்ணுகிறாயா? (மல்.2:14). தாவீதைப் போல நம்மை ஆராய்ந்து நம்மை சரிசெய்வோமாக.

மூன்றாவதாகதேவனுடைய நியாயங்களை தனக்கு முன்பாக வைத்திருந்தான் (சங்.18:22)
கர்த்தருடைய நியாயங்களால் கவரப்பட்டு அவருக்குப் பயந்து நடந்த மனிதன் தாவீது. “கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது” (சங்.19:8). “கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது” (சங்.19:9). தேவனுடைய நியாயங்கள் மேல் தாவீது வாஞ்சையுள்ளவனாயிருந்தான் (சங்.119:20). அது அவனுக்கு மகிழ்ச்சியையும் தெளிவையும் கொடுத்தது. இன்று நமது வாஞ்சை எதன் மேலிருக்கிறது?

நான்காவதாகதாவீது தேவனுடைய பிரமாணங்களை தள்ளிப்போடவில்லை (சங்.18:22)
தேவனுடைய காரியங்களை தள்ளிப்போடுவது, விலக்கி வைப்பது கூடாது. மண்ணுக்காக மாணிக்கத்தை ஒருபோதும் இழக்கக்கூடாது. தாவீது தேவனுடைய பிரமாணங்களை கைக்கொள்ளுவதில் மனமகிழ்ச்சியாயிருந்தான் (சங்.119:16). கர்த்தருடைய பிரமாணங்களை தாவீது தினந்தோறும் தியானித்தான் (சங்.119:23,48). கர்த்தருடைய பிரமாணங்கள் தாவீதின் கீதங்களாயிருந்தன (சங்.119:54). இன்று நாம் கர்த்தருடைய பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறோமா? அதை தியானிக்கிறோமா?

ஐந்தாவதாகதாவீது கர்த்தருக்கு முன்பாக மனவுண்மையாயிருந்தான் (சங்.18:23)
‘கர்த்தாவே, எண்ணிலுள்ள உண்மையின்படி எனக்கு நியாயஞ்செய்யும்’ (சங்.7:8) என்று தாவீது தைரியமாக கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணுகிறான். இதிலிருந்து அவன் கர்த்தருக்கு முன்பாக எவ்வளவு மனவுண்மையாயிருந்தான் என்பது புலனாகிறது. “…உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்” என்று சங்.145:18ல் பார்க்கிறோம். உண்மை பேசும் மனிதன் கர்த்தரோடு நெருங்கிய ஐக்கியம் வைத்துக் கொள்கிறான். கர்த்தர், நாம் உள்ளத்தில் உண்மையாயிருக்க வேண்டுமென்று விரும்புகிறார். இன்று நாம் எப்படியிருக்கிறோம்? நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம்.
ஆறாவதாகதாவீது துர்க்குணத்துக்கு தன்னை விலக்கிக் காத்துக்கொண்டான் (சங்.18:23)
நாம் துர்க்குணத்தில் தான் உருவாகிறோம் (சங்.51:5). நமது ஜென்ம சுபாவங்கள் தலைதூக்காமலிருக்க நம்மை தேவனுக்கு முன்பாக முற்றிலும் சமர்ப்பிக்க வேண்டும். தாவீது தன்னை துர்க்குணத்துக்கு விலக்கிக் காத்துக்கொண்டான். துர்க்குணம் என்னும் புளித்தமாவை நம்மைவிட்டு களைவோமாக (1கொரி.5:8). வைராக்கியமும் விரோதமும் சகல துர்ச்செய்கைகளுக்கும் காரணமாயிருக்கிறது. நம்மிடம் இக்குணங்கள் காணப்படுகிறதா? நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம்.

ஏழாவதாகதாவீது கைகளில் சுத்தமுள்ளவனாயிருந்தான் (சங்.18:24)
“என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்” என்று தாவீது 2சாமுவேல் 22:21ல் குறிப்பிடுகிறார். கைகளில் சுத்தமுள்ளவர்களே, கர்த்தருடைய பர்வதத்தில் ஏறமுடியும். அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருக்க முடியும் (சங்.24:3,4). நம் பணத்தை வட்டிக்குக் கொடுக்கிறோமா? பரிதானம் வாங்குகிறோமா? அப்பொழுது நாம் எப்படி அவருடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ண முடியும். தேவன் சுத்தமுள்ளவர். நாமும் நம்மை நாமே சுத்திகரித்துக்கொள்ள வேண்டும் (1யோவான் 3:3).


தாவீதைப் போல நம்மை ஆராய்ந்து சரிசெய்துகொள்வோமாக!

.






Author

You May Also Like…

Share This