நமக்கு ஏற்பட வேண்டிய மரணங்கள்

Written by Pr Thomas Walker

December 21, 2006

பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! வேதாகமத்தில் சில புருஷர்கள் அடையாள புருஷர்களாக இருக்கிறார்கள். சில சத்தியங்களை நமக்குப் போதிக்கிறார்கள். தேவ பிள்ளைகள் ஆசீர்வாதங்களை சுதந்தரிப்பதையே தேவன் விரும்புகிறார். ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை சுதந்தரிக்க நம்முடைய வாழ்க்கையில் சில ஆவிக்குரிய மரணங்கள் நடைபெற வேண்டும். ஆசீர்வாதத்தை சுதந்தரிக்க முடியாதபடி தடைசெய்த சில நபர்களைக் குறித்து நாம் இங்கு பார்க்கலாம்.

முதலாவதாகதேராகு மரிக்க வேண்டும்
“அவனுடைய (ஆபிரகாமுடைய) தகப்பன் மரித்தபின்பு, அவ்விடத்தை விட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இத்தேசத்திற்கு அவனை அழைத்துக்கொண்டுவந்து குடியிருக்கும்படி செய்தார்” என்று அப்போஸ்தலர் 7:4ல் பார்க்கிறோம். தேராகு மரித்தபின்புதான் ஆபிரகாம் தேவன் காண்பித்த தேசத்திற்குப் போய்ச் சேர்ந்தான். அதுவே தேவனால் அவன் பின் சந்ததிக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானான் தேசம். தேவன் ஆபிரகாமை அழைத்தபோது அவனோடு அவன் தகப்பனாகிய தேராகு, அவனது சகோதரனுடைய மகன் லோத்து ஆகியோர் கூடச் சென்றனர். வழியிலே செழிப்பான இடத்தைக் கண்டவுடன் அங்கேயே தங்கி விட்டார்கள் (ஆதி.11:31,32). காரணம் அவன் தகப்பனாகிய தேராகு ஆபிரகாம் கானானுக்குப் போவதை தடுத்துவிட்டான். இதைப்போலவே நமது ஆவிக்குரிய பிரயாணத்தை சில காரியங்கள் தடுக்கிறது. அவை மரணமடைய வேண்டும்.


உண்மையான ஆவிக்குரிய மனிதனை முன்னேற விடாதபடி தடுக்கிற தேராகு கூட்டமாகிய மாம்ச இச்சைகள், பழைய மனுஷன், புளித்தமா இருக்கும்வரை புதிய மனுஷன் எழும்ப முடியாது, முன்னேற முடியாது. தேராகு அன்பாக, பட்சமாக பேசி ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை தடை செய்வான். இலக்கை அடைய முடியாதபடி தடுப்பவனே தேராகு. இவன் மரிக்க வேண்டும், தேராகின் மாம்சமும் மனதும் நமக்குள் இருக்கும்வரை தரிசனம் நம்மில் இராது. தேராகு மரித்தபின்பே ஆபிரகாம் தேவனை நோக்கிப் பார்த்தான்.
இரண்டாவதாககீழ்ப்படியாமற் போன இஸ்ரவேலர் மரிக்க வேண்டும்
“கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போன எகிப்திலிருந்து புறப்பட்ட யுத்தபுருஷரான யாவரும் மாளுமட்டும், இஸ்ரவேல் புத்திரர் நாற்பதுவருஷம் வனாந்தரத்தில் நடந்து திரிந்தார்கள்; கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கும்படி அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை அவர்கள் காண்பதில்லை என்று கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தார்” என்பதாக யோசுவா 5:6ஆம் வசனத்தில் பார்க்கிறோம். கீழ்ப்படியாமற்போன கடைசி மனுஷன் மரிக்கும்வரை கானானுக்குள் பிரவேசிக்க முடியாது. கீழ்ப்படியாமையாகிய ஆமை நம் வாழ்வில் சாகவேண்டும். அது நம்மை கானான் பயணத்தை தொடரவிடாது. யோசுவா என்றால் ‘கிருபை’ என்று பொருள். அவன் ஒரு திறமைசாலி அல்ல, ஆனால் அவன் 31 ராஜாக்களை அழித்து, இஸ்ரவேல் புத்திரருக்கு கானான் தேசத்தை பங்கிட்டுக் கொடுத்தான். யோசுவா தேவனுக்கு கீழ்ப்படிந்து, அவருடைய கிருபையை சார்ந்திருந்தான். அவன் தன்னுடைய சுயநீதியை சார்ந்திருக்கவில்லை. “தேவனுடைய சத்தத்திற்கு கீழ்ப்படியாதவர்களில் கடைசி மனுஷன் மரித்த பின்பே” யோசுவாவால் கிரியை செய்ய முடிந்தது. தேவனுக்குக் கீழ்ப்படியும்போதே நாம் ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ள முடியும்.

மூன்றாவதாகசவுல் மரிக்க வேண்டும்
சவுல் ராஜா ஒரு பின்மாற்றக்காரன். கர்த்தருக்குக் கீழ்ப்படியாமல் அவருக்கு துரோகம் செய்தான், தாவீது சிங்காசனத்தை பெறமுடியாதபடி சவுல் தடையாயிருந்தான். அவன் மரித்த பின்பே கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்றவனாகிய தாவீது, அரியணையில் உட்கார முடிந்தது (1நாளாகமம் 10:13,14). தாவீது தேவனுடைய வேளை வரும்வரை 13 ஆண்டுகள் காத்திருந்தான். அந்த நாட்களில் தேவன் தாவீதை பக்குவப்படுத்தினார். வேதம் வாசியாதவன், ஜெபியாதவன், சாட்சியாக ஜீவியாதவன், கீழ்ப்படியாதவன், ஒழுங்கற்றவன், சரியான நேரத்தில் ஆலயத்தில் காணப்படாதவன், பின்மாற்றக்காரன், ஒழுங்கைத் தவற விடுவதால் காரியங்கள் கெட்டுப்போகின்றன. தேவன் நம்முடன் பேசாமலும் நம்மை ஆசீர்வதியாமலும் இருப்பதற்குக் காரணம் நமது பின்மாற்றம் தான்.
பின்மாற்றக்காரனாகிய சவுலோடு தேவன் பேசவில்லை. சவுல் மரிக்கும்வரை தாவீது ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கவில்லை.

நான்காவதாகநாபால் மரிக்க வேண்டும்
நாபால் ஒரு முரடன்; துராகிருதம் பண்ணுகிறவன், சிக்கலை உண்டு பண்ணுகிறவன், நன்றி கெட்டவன் (1சாமு.25:3,15), பேலியாளின் மனுஷன் (1சாமு.25:25). ஆனால் அபிகாயில் தேவ பக்தியுள்ளவள். இன்றும் நம்முடைய ஆத்துமா அபிகாயிலைப் போலிருக்கிறது; ஆனால் மாம்சமோ நாபாலைப் போலிருக்கிறது. அபிகாயில் கூறுவதை நாபால் கேட்கமாட்டான். அதுபோலவே நமது ஆத்துமா உணர்த்துவதை மாம்சம் கேட்பதில்லை. நாபால் செத்தபின்பே அபிகாயிலுக்கு விடுதலை உண்டானது. நமது துர்ச்சுபாவங்களுக்கு மரணம் வேண்டும். நமக்குள் துர்க்குணம் இருக்கும்வரை நமது ஆத்துமாவுக்கு விடுதலை இராது. “நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ் செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே” என்று ரோமர் 6:6,7 வசனங்களில் வாசிக்கிறோம். பாவத்திற்கு நாம் மரிக்க வேண்டும். அப்பொழுது நமது ஆத்துமாவிற்கு விடுதலை உண்டாகிறது.

ஐந்தாவதாகஉசியா மரிக்க வேண்டும்
உசியா ராஜா மரித்தபின்பே, ஏசாயா தேவ தரிசனங்களைப் பெற்றான் (ஏசாயா 6:1) தேவ மகிமையைக் கண்டான். தேவ வார்த்தையைக் கேட்டான். உசியா ராஜா மரணமடையும் வரை ஏசாயா பரம தரிசனங்களை இழந்தவனாயிருந்தான்.


உசியா மரித்தபின்பு ஏசாயா பரம தேவனை சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவராகக் கண்டான். முதலாவதாக ஏசாயா தேவ மகிமையைக் கண்டான்; இரண்டாவதாக பரலோகக் காட்சியைக் கண்டான்; மூன்றாவதாக தன்னைக் கண்டான்; நான்காவதாக தன்னுடன் உள்ள மனுஷரின் நிலையைக் கண்டான்; ஐந்தாவதாக தன்னை ஒத்துக்கொண்டு தாழ்த்தினான். தேவன் பலிபீடத்தின் அக்கினித் தழலால் அவனது நாவைத் தொட்டு சுத்திகரித்த பின்பு பேசினான். தேவ சத்தம் கேட்ட பின்பு தேவ சித்தம் செய்ய தன்னை ஒப்புக்கொடுத்தான். பெரிய காரியத்தை செய்ய தேவன் தன்னை அழைப்பதை உணர்ந்து அதை ஏற்றுக்கொண்டான். உசியா ராஜாவைப் போன்றவர்களை நம் உள்ளத்தில் வைத்திருக்கும் வரை தேவனுடைய அழைப்பை ஏற்று அவர் சித்தம் செய்ய முடியாது.

.






Author

You May Also Like…

Share This