கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! யாத்திராகமம் என்பது யாத்திரை + ஆகமம் என்று பொருள்படும். யாத்திராகமம் இஸ்ரவேலரின் யாத்திரையை வர்ணிக்கிற புத்தகம். இஸ்ரவேலர் எகிப்திற்கு எந்த சூழ்நிலையில் சென்றார்கள், அவர்கள் எப்படி எகிப்திலிருந்து மீட்கப்பட்டார்கள், எங்கெல்லாம் பிரயாணம் செய்தார்கள், இஸ்ரவேலர் பத்துக் கற்பனைகளைப் பெற்றுக்கொண்ட விதம் மற்றும் ஆசரிப்புக்கூடாரம் உருவாக்கப்பட்ட விதம் ஆகியவற்றைப் பற்றி யாத்திராகமம் புத்தகத்தில் வாசிக்கிறோம்.
இஸ்ரவேலர் தேவனை ஆராதிக்க முடியாதபடி பார்வோன் அவர்களுக்கு சத்துருவாயிருந்தான். தேவ பிள்ளைகளுக்கு விரோதி பிசாசு. பிசாசு எப்படிப்பட்டவன் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். பிசாசு பொய்யன், பொய்களுக்குப் பிதா, அவன் அந்தகார லோகாதிபதி, (எபேசியர் 6:12); இவ்வுலகத்தின் அதிபதி ஆகாயத்து அதிகாரப் பிரபு, (எபே.2:2); பொல்லாங்கன் (மத்தேயு 13:19); அவன் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டவன் (2கொரி.11:14) கள்ளத்தீர்க்கதரிசனம் கூறுவான், போலியான அற்புத அடையாளங்களை செய்வான். அந்நிய பாஷைகூட பேசுவான். ஆனால் அவைகள் போலியானவைகளாயிருக்கும். பிசாசை இனங் கண்டுகொண்டு அவனோடு போராடி மேற்கொள்ள தேவன் தரும் சர்வாயுத வர்க்கங்களை தரித்துக்கொள்ள வேண்டும். தேவனால் முன்குறிக்கப்பட்ட ஜனங்கள் பிசாசின் அடிமைத்தனத்தில் இருக்கிறார்கள். அவர்கள் விடுபட முடியாதபடி பிசாசினால் தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். பிசாசின் நோக்கம் என்ன என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
தேவ ஜனங்கள் பெருகக்கூடாது என்பது பிசாசின் நோக்கமாயிருக்கிறது
எகிப்தியர் இஸ்ரவேலரை ஒடுக்கினார்கள் (யாத்.1:11). கொடுமையாக வேலை வாங்கினார்கள் (யாத்.1:13). அவர்களுக்கு அவர்கள் ஜீவனையும் கசப்பாக்கினார்கள் (யாத்.1:14). ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் எவ்வளவாய் ஒடுக்கப்பட்டார்களோ, அவ்வளவாய் பலுகிப் பெருகினார்கள் (யாத்.1:12). பிசாசின் கிரியைகளை அழிக்கவே தேவ குமாரன் இந்த உலகத்திற்கு வந்தார். ஒடுக்கப்படுகிற யாவருக்கும் கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார் (சங்.103:6). தேவ ஜனங்கள் பிசாசை எதிர்க்க வேண்டும். பரிசுத்தம் இல்லாமல் பிசாசை எதிர்க்க முடியாது; பிசாசின் கிரியைகளை அழிக்கமுடியாது. பிசாசு அக்கினியாஸ்திரத்தை எடுத்து வரும்போது தேவனுடைய சர்வாயுத வர்க்கமணிந்து அவனை எதிர்க்க வேண்டும். பார்வோன் கட்டளையிட்டபோது தேவனுக்குப் பயந்ததினால் எகிப்திய மருத்துவச்சிகள் எபிரேய ஆண்பிள்ளைகளைக் கொல்லவில்லை (யாத்.1:17). ஆனால் இஸ்ரவேல் புத்திரர் பார்வோனுடைய கட்டளைக்குப் பயந்து தங்கள் ஆண்பிள்ளைகளை நைல் நதியில் போட்டனர். அவர்கள் தேவனை சார்ந்திருக்கவில்லை. பார்வோனை எதிர்த்து ஜெயம் பெறவில்லை. தேவனுடைய பலத்தைப் பெற்றுக்கொண்டு பிள்ளைகளை கர்த்தருக்காக வளர்க்க வேண்டும். ஆவிக்குரிய நிலையில் செத்துக்கொண்டிருக்கும் பிள்ளைகளைக் காப்பாற்ற தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தைத் தரித்துக்கொண்டு பிசாசுடன் போராடி மேற்கொள்ள வேண்டும்.
தேவனை ஆராதிக்க தேவஜனங்கள் புறப்பட்டுப் போகக்கூடாது என்பது பிசாசின் நோக்கமாயிருக்கிறது.
பாவ சிறைக்குள் பிசாசின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஜனங்கள் அதிகம், அவர்கள் மீட்கப்பட வேண்டும். அவர்கள் பிசாசின் ராஜ்ஜியத்தை விட்டுப் புறப்பட வேண்டும். தேவனை ஆராதிப்பதற்கு சாத்தான் நான்கு வித தடைகளைக் கொண்டு வருவான்.
முதலாவதாக – ‘தேசத்திலே தானே பலியிடுங்கள்’ என்ற தடை (யாத்.8:25)
எகிப்து அடிமை வாழ்வைக் குறிக்கிறது. அது பாவம் நிறைந்த இடம். அங்கு இருந்துகொண்டு இஸ்ரவேலர் கர்த்தரை ஆராதிக்க முடியாது. எகிப்து விக்கிரகங்கள் நிறைந்த இடம் (எசே.20:7). அங்கு இருந்துகொண்டு இஸ்ரவேலர் கர்த்தரை ஆராதிக்க இயலாது. தேவன் விரும்பாத பாவங்கள் நம்மைவிட்டு அகல வேண்டும். அப்பொழுதுதான் தேவன் நமது ஆராதனையை அங்கீகரிப்பார். பிரித்தெடுக்கப்பட்ட வாழ்வு நமக்குத் தேவை. தேவனும் வேண்டும்; உலகமும் வேண்டும் என்று இருக்கக் கூடாது. இரண்டு எஜமான்களுக்கு ஒருபோதும் ஊழியம் செய்ய முடியாது. தேவனை பிரியப்படுத்துகிறவர்களாக அவருக்கு உரிய ஆராதனையைக் கொண்டுவர வேண்டும்.
இரண்டாவதாக அதிக தூரம் போக வேண்டாம் என்ற தடை (யாத்.8:28)
கர்த்தரை ஆராதி, நல்லது. ஆனால் உபவாசம், ஜெபம், தியானம் என்று அதிக ஆழத்தில் காலை வைக்காதே என்று பிசாசு உபதேசிப்பான். மேலோட்டமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு கர்த்தரை உண்மையாக ஆராதிக்க முடியாது. அவரை முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும் ஆராதிக்க வேண்டுமானால் தேவன் குறித்த இடத்திற்கு நாம் கடந்துசெல்ல வேண்டும். உலகத்தையும் பிசாசையும் எதிர்த்து தைரியமாக போராட வேண்டும். தேவன் குறித்த நிபந்தனைகளை மாற்ற பிசாசு நினைப்பான். ஆனால் நாம் தைரியமாக அவனை எதிர்க்க வேண்டும்.
மூன்றாவதாக புருஷராகிய நீங்கள் போய் கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் என்ற தடை (யாத்.10:11)
குடும்பமாக ஆராதிப்பதை பிசாசு தடை செய்கிறான். பிள்ளைகளுக்கு ஆராதனைக்குரிய ஒழுக்கங்களைக் கூறி வளர்க்க வேண்டும். நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் என்று யோசுவா தைரியமாக கூறியதுபோல நம்மால் கூற முடிகிறதா? குடும்ப ஜெபம், குடும்ப வேத தியானம் நம்முடைய குடும்பங்களில் உண்டா? குடும்பமாக நாம் ஆராதனைக்குச் செல்கிறோமா? குடும்பமாக கர்த்தரை ஆராதித்து கர்த்தருடைய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வோமாக.
நான்காவதாக – நீங்கள் போய் கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள். உங்கள் ஆடுகளும் உங்கள் மாடுகளும் மாத்திரம் நிறுத்தப்பட வேண்டும் என்ற தடை (யாத்.10:24)
பலியில்லாத ஆராதனையை தேவன் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பது பிசாசுக்குத் தெரியும். எனவே அவன் தேவ ஜனங்களை பலியில்லாத ஆராதனைக்குத் தூண்டுவான், பலி தேவனோடு மனிதன் செய்யும் உடன்படிக்கையைக் காட்டுகிறது (சங்.50:5). ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான் என்று சங்.50:23ல் பார்க்கிறோம். பிசாசு தேவனுக்கு மகிமையைக் கொண்டுவரும் பலியை தடை செய்கிறான். அவனை மேற்கொண்டு தேவனுக்கு உகந்த பலிகளை செலுத்த வேண்டும்.
சாத்தானுடைய தந்திரங்களை நாம் புரிந்துகொண்டு, தேவனுக்கு முழுமையாக ஆராதனையைக் கொண்டுவர தேவனையே நாம் முழுமையாக சார்ந்துகொள்ள வேண்டும். தேவனை நோக்கிப் பார்க்கும் போது தேவபெலனை பெற்றுக்கொண்டு நாம் பிசாசை மேற்கொண்டு வெற்றி வாழ்க்கை வாழலாம்.