பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! “…தானியேலின் காரியம் ஜெயமாயிருந்தது” என்று தானி.6:28ல் பார்க்கிறோம். யார் இந்தத் தானியேல்? அவன் பாபிலோன் இராஜாவால் சிறைபிடித்துக் கொண்டு போகப்பட்ட ராஜகுலத்தைச் சேர்ந்த யூதன்; அழகானவன், ஞானத்தில் தேறினவன், அறிவில் சிறந்தவன், கல்வியில் நிபுணன், இராஜாவின் அரண்மனையில் சேவிக்கத் திறமையுள்ளவன் (தானி.1:3). சொப்பனங்களுக்கு அர்த்தத்தை தெரிவிக்கக் கூடிய ஞானத்தை தேவன் அவனுக்குக் கொடுத்திருந்தார் (தானி.1:17). தானியேல் தேவனுக்கு மிகவும் பிரியமானவனாயிருந்தான் (தானி.9:23). தானியேல் ஒரு தனி மனிதனாக இருந்து ஜெயம் பெற்றான். காரணம் என்ன? தானியேல் தேவனோடு தொடர்புள்ள ஒரு மனுஷனாயிருந்தான். தேவன் தனிப்பட்ட ஒரு மனிதனின் ஐக்கியத்தை நாடுகிறார்; தனிப்பட்ட ஒரு மனிதனைக் கொண்டு பெரிய காரியங்களைச் செய்ய விரும்புகிறார்; ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய சமூகத்தில் காத்திருக்க வேண்டும் என்று சித்தமுள்ளவராயிருக்கிறார். எந்த சூழ்நிலையில் ஜெயம் பெற வேண்டுமானாலும் தேவனையே சார்ந்துகொள்ள வேண்டும்.
ஏன் தானியேலின் காரியம் ஜெயமாயிருந்தது என்று இங்கு பார்க்கலாம்.
முதலாவதாக – தானியேல் எப்போதும் ஜெபிக்கிறவனாயிருந்தான்
தானியேல் தினமும் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபிக்கிறவனாயிருந்தான் (தானி.6:11). தேவனோடு உள்ள அவனது ஜெபத் தொடர்பை அறுக்க எந்த அதிகாரத்தினாலும் முடியவில்லை (தானி.6:10). தன் ஜனத்தாருக்காக தேவனிடத்தில் பரிந்துபேசி உபவாசித்து ஜெபிக்கிறவனாயிருந்தான் (தானி.9:3-5). உபவாசித்து ஜெபிக்கிற தேவ பிள்ளைகளின் காரியம் ஜெயமாக முடியும். பாபிலோன் ஞானிகளோடு தானும் தன் சிநேகிதரும் அழிக்கப் படாதபடி தேவனிடம் இரக்கத்திற்காக மன்றாடினான் (தானி.2:17).
ஜெபம் தேசத்தை அசைக்கக் கூடியது. நமது தேவன் ஜெபத்தைக் கேட்கிறவர், பதிலைத் தருகிறவர் (சங்.65:2); ஜெபத்தைத் தள்ளாதவர் (சங்.66:20). திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம் பண்ணாதவர் (சங்.102:16). நாம் அவரிடம் நம்முடைய விண்ணப்பங்களை ஏறெடுக்கும்போது நமது காரியங்களை ஜெயமாக மாறப்பண்ணுகிறார். கர்த்தர் நீதிமான்களின் ஜெபத்தையும், செம்மையானவர்களின் ஜெபத்தையும் கேட்கிறார் (நீதி.15:29, நீதி.15:8). வேதத்தைக் கேளாதவர்களின் ஜெபம் அவருக்கு அருவருப்பானது (நீதி.28:9).
இரண்டாவதாக – தானியேல் எந்த சூழ்நிலையிலும் தேவனே தன்னைக் காக்க முடியும் என்ற உறுதியான விசுவாசமுள்ளவனாயிருந்தான்
இராஜாவையோ, தனது உயர்ந்த பதவியையோ சார்ந்திருக்கவில்லை. தன் நம்பிக்கையை தேவன்மேலே வைத்திருந்தான். அதனால் அவன் சிங்கக்கெபியிலே போடப்பட்டபோதும் தேவன் அவனைக் காக்க வல்லவராயிருந்தார். “அவன் தன் தேவன்பேரில் விசுவாசித்திருந்தபடியால், அவனில் ஒரு சேதமும் காணப்படவில்லை” (தானி.6:23) என்று பார்க்கிறோம். “கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்” (எரே.17:7) என்று வேதம் கூறுகிறது. உறங்காமல் தூங்காமல் நம்மைக் காக்கும் தேவன்மேல் நமது விசுவாசத்தை வைக்கும்போது சூழ்நிலைகளைக் கண்டு பயப்பட தேவையில்லை.
மூன்றாவதாக – தானியேல் தன்னை இராஜாவின் போஜனத்தால் தீட்டுப்படுத்தாமல் காத்துக்கொண்டான்
தேவபிள்ளை தேவனையே சார்ந்திருக்கும்போது கறைபடமாட்டான். தான் எடுத்த தீர்மானத்தில் தானியேல் வைராக்கியமுள்ளவனாயிருந்தான் (தானி.1:8). தானியேல் தேவனுடைய காரியங்களில் வைராக்கியமாய் இருந்தபடியால் தேவன் அவனுக்கு அதிகாரிகளின் கண்களில் தயவும், இரக்கமும் கிடைக்கப் பண்ணினார் (தானி.1:9). “…உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது” என்று யாக்.1:27 கூறுகிறது. ஜெபிக்கிற வாலிபனாகிய தானியேல் தேவனோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்தபடியால் இராஜாவின் போஜனத்தால் தீட்டுப்படாதபடி தன்னைக் காத்துக்கொண்டான். உலகத்தோடு ஒத்துப்போகக் கூடாது. உலகத்தின் வேஷம் கடந்துபோகிறது. வாலிபர்கள் கண்களின் காட்சியிலும், நெஞ்சின் வழிகளிலும் நடவாமல் தங்களைக் காத்துக்கொள்ளும்போது தேவன் அவர்களைக் கொண்டு பெரிய காரியங்களைச் செய்கிறார்.
நான்காவதாக – தானியேல் தன் சகோதரர் பேரில் அக்கறையுள்ளவனாயிருந்தான்
இராஜாவிடம் தன் சகோதரருக்காக பரிந்து பேசினான் (தானி.2:49). தன் சமுதாயம் (யூத குலம்) பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து விடுபட வேண்டும் என்று உபவாசித்து ஜெபித்தான் (தானி.9:1-3). தன் வசதிகளைக் கருதாமல், உண்மையாக தேவ ஜனங்களின் விடுதலைக்காக ஜெபித்தான். பாபிலோனில் இருந்தாலும் அவன் எண்ணம் முழுவதும் தேவனுடைய நகரமாகிய எருசலேமின் மேலேயே இருந்தது. எருசலேம் என்பது தேவசித்தம் செய்யப்படும் இடம்; எளிய வாழ்வுள்ள இடம்; சாத்தானின் அதிகாரமில்லாத இடம். ஆனால் பாபிலோன் சாத்தானின் ஆதிக்கமுள்ள இடம்; உலக ஆசீர்வாதங்கள் நிறைந்த இடம். தானியேல் எருசலேமின் வாழ்வையே நாடினான். எருசலேமின் வாழ்வையே, நாடி, வாஞ்சித்து, காத்து, துடிக்க வேண்டும். உலகத்திலிருந்தாலும் உலகத்தாரல்ல என்ற உணர்வு வேண்டும்.
ஐந்தாவதாக – தானியேல் சொல்ல வேண்டியதை ராஜாவிடம் சொல்லும் தைரியம் உள்ளவனாயிருந்தான்
தேவன் வெளிப்படுத்திய காரியங்களை ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடம் தைரியமாய் தெரிவித்தான். இராஜாவைப் பற்றிய நல்ல காரியங்களை மாத்திரமல்ல, இராஜாவைக் குறித்த ஆக்கினைத் தீர்ப்பையும் வெளிப்படுத்தினான் (தானி.4:19-27). இராஜாவின் ஆத்துமாவைத் தொடக்கூடிய ஆலோசனைகளைக் கூறினான் (தானி.4:27). இராஜாவாகிய பெல்ஷாத்சாருக்கும் ஆலோசனைகளைக் கூறினான். சடுதியில் அவனுக்கு நேர்ந்த அழிவை முன்னறிவித்தான் (தானி.5:18-28). இராஜாவின் சமூகத்தில் அவனுக்கு விரோதமான காரியங்களைக் கூறினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும், ஆனால் தானியேல் தேவன் வெளிப்படுத்தியவைகளை தைரியமாய் இராஜ சமூகத்தில் தெரிவித்தான்.
தேவனுடைய காரியங்களில் வைராக்கியமாக இருந்த தானியேலின் காரியம் ஜெயமாக இருந்தது. நாமும் தேவனுக்காக வைராக்கியமாக வாழ நல்ல தீர்மானங்களை எடுத்துக்கொள்வோமாக.