உண்மை உங்களிடம் உண்டா?

Written by Pr Thomas Walker

June 21, 2006

பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! “உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்” என்று நீதி.28:20ல் பார்க்கிறோம். தேவன் தரும் ஆசீர்வாதங்களைப் பெற சில நிபந்தனைகள் உண்டு. ஆசீர்வாதங்களிலும் ‘பரிபூரண ஆசீர்வாதத்தை தேவன் தருகிறார்’. ஆனால் அந்த ஆசீர்வாதங்கள் உண்மையும் உத்தமமும் உள்ள தேவ பிள்ளைகளுக்கே கிடைக்கும்.
தேவ ஆசீர்வாதங்களைப் பெற எவைகளில் உண்மையாக இருக்க வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.

முதலாவதாகவேலையில் உண்மையாயிருக்க வேண்டும்
யோசேப்பின் எஜமான் அவனைத் தன் வீட்டிற்கும் தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் விசாரணைக்காரனாக்கும் அளவிற்கு யோசேப்பு தன் வேலையில் உண்மையுள்ளவனாயிருந்தான் (ஆதி.39:4). அவன் தேவனாகிய கர்த்தர் அவனோடிருந்தபடியால் அவன் காரிய சித்தியுள்ளவனாயிருந்தான். தேவன் நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்த வேலையில் உண்மையுள்ளவர்களாயிருக்கிறோமா? தன் வேலையில் உண்மையாயிருக்கிற மனுஷனை உலகம் காணாமற் போகலாம். ஆனால் தேவன் அவனைக் கண்டு அவனை ஆசீர்வதிக்கிறார். தேவன் கொடுத்த சிறிய வேலையை உண்மையாகச் செய்யாமல் உதாசீனப்படுத்தும் போது தேவனால் நம்மை ஆசீர்வதிக்க முடியாது. “தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்” (நீதி.22:29).

இரண்டாவதாககடமையில் உண்மையாயிருக்க வேண்டும்
நமது வயதான பெற்றோருக்குச் செய்யவேண்டிய உதவிகளைச் செய்து அவர்களை கனப்படுத்த வேண்டியது நமது கடமை. பிள்ளைகளைக் கர்த்தருக்குப் பிரியமாக வளர்ப்பது நமது கடமை. ஏழைகளுக்கு இரங்க வேண்டியது நமது கடமை. “…அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே” என்ற பிர.12:13ல் பார்க்கிறோம். கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டியது நமது தலையாய கடமை (மத்.28:19,20). கர்த்தர் நமக்குக் கொடுத்த கடமைகளைச் செய்வதில் உண்மையுள்ளவர்களாயிருக்க வேண்டும். அப்பொழுது கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.

மூன்றாவதாகசரீரத்தைப் பாதுகாக்கும் உண்மை
ஒவ்வொரு கணவனும் தன் மனைவிக்கும் ஒவ்வொரு மனைவியும் தன் கணவனுக்கும் உண்மையாயிருக்க வேண்டும். “என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?” என்று யோபு 31:1ல் பார்க்கிறோம். தேவனுடைய ஆலயமாகிய சரீரத்தை மனதிலும், எண்ணத்திலும், செய்கையிலும், இச்சையில்லாமல் பரிசுத்தமாய் காக்க வேண்டும். சரீரத்தை பரிசுத்தமாய்க் காத்து ‘கன்னியின் ஜீவியம்’ செய்து, கிறிஸ்துவின் மணவாட்டியாக பரிசுத்தமாய் நம்மைக் காத்துக்கொள்வதில் உண்மை வேண்டும். கிறிஸ்துவும் “கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்” (எபே.5:27).
நான்காவதாகதேவனுக்கு நேராக உண்மை
தேவ ஆராதனை, ஜெபம், வேத வாசிப்பு, சபை ஐக்கியம் இவைகளில் உண்மையாயிருக்க வேண்டும். தானியேல் ஒரு நாளைக்கு மூன்று முறை தன் தேவனை ஆராதிப்பதில் உண்மையுள்ளவனாயிருந்தான். தேவனை ஆராதிப்பதற்கு சோதனை வந்தபோதும் தானியேல் ஆராதிப்பதை விடவில்லை (தானி.6:13). அன்று எலியா தீர்க்கதரிசியின் காலத்திலே பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ் செய்யாதிருக்கிற வாய்களையுடைய ஏழாயிரம் பேரை இஸ்ரவேலில் மீதியாக வைத்திருப்பதாக தேவன் கூறகிறார் (1இராஜா.19:18). இன்று உலக நேசமாகிய பாகாலை சேவியாதவர்கள் எத்தனை பேர் உண்டு. கர்த்தருக்கடுத்த காரியங்களில் உண்மையுள்ளவர்களாயிருக்க வேண்டும். தம்மைத் தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும், உண்மையோடும் தொழுதுகொள்ள வேண்டும் என்று பிதாவானவர் விரும்புகிறார் (யோவான் 4:23).

ஐந்தாவதாககர்த்தருக்குக் கொடுப்பதில் உண்மையுள்ளவர்களாயிருக்க வேண்டும்
தேவனுக்குக் கொடுப்பதில் உண்மையற்றவர்களாக, கபடஸ்தர்களாக, வஞ்சகர்களாக இருக்கக்கூடாது. “தன் மந்தையில் கடா இருக்கையில் கெட்டுப்போனதை ஆண்டவருக்கு நேர்ந்துகொண்டு பலியிடுகிற கபடஸ்தன் சபிக்கப்பட்டவன்” என்று மல்.1:14ல் பார்க்கிறோம். தேவனுக்குக் கொடாமலிருப்பதும், நசல் கொண்டதை கொடுப்பதும், அனனியா சப்பிராளைப் போல ஒரு பங்கை வஞ்சித்து வைத்துக்கொண்டு கொடுப்பதும் தேவனுடைய பார்வையில் உண்மையற்றது. ஆபேலைப் போல தேவன் அங்கீகரிக்கும் உண்மையான காணிக்கையைச் செலுத்த வேண்டும். தன் இரண்டு காசுகளை கர்த்தருக்குக் காணிக்கையாக செலுத்திய ஏழை விதவையைப் போல நம்மை முபமையாக அர்ப்பணிக்க வேண்டும்.

ஆறாவதாகபின்பற்றுவதில் உண்மை
கர்த்தரே ஏற்படுத்தின தலைவனாகிய மோசேயை யோசுவாவும், காலேபும் உண்மையாக பின்பற்றினார்கள் (எண்.14:24). மற்றவர்கள் முறுமுறுத்துக்கொண்டே பின்பற்றினார்கள். மனப்பூர்வமாக பின்பற்றவில்லை. ஆறு இலட்சம் இஸ்ரவேல் புருஷர்களில் இரண்டு பேர் மாத்திரமே தன்னை பின்பற்றுவதை தேவன் கண்டார். அவர்களை தேவன் ஆசீர்வதித்தார். ‘எங்கு போனாலும் உம்மை பின்பற்றுவேன்’ என்று கூறி தன் மாமியாரைப் பின்பற்றிய ரூத்தின் உறுதி (ரூத் 1:16-18) நமக்கு கர்த்தரைப் பின்பற்றுவதில் இருக்க வேண்டும். மனப்பூர்வமாய் அவர் சொல்லுகிறபடி செய்தால் ஆசீர்வாதங்கள் நம்மைப் பின்பற்றும். தேவனை மனப்பூர்வமாய் பின்பற்றும்போது பாடுகள், கஷ்டங்கள், உபத்திரவங்கள் தான் நமக்கு உண்டு. அவைகளைக் கண்டு துவண்டுவிடாமல் அவரை பின்பற்ற வேண்டும்.

ஏழாவதாகதாலந்துகளை பயன்படுத்துவதில் உண்மை
தேவன் நமக்குக் கொடுத்தத் தாலந்துகளை பயன்படுத்துவதில் நாம் உண்மையாயிருக்கிறோமா என்பதற்கு கணக்குக் கேட்பார். தேவன் கொடுத்த தாலந்துகளை அவருடைய நாமத்தின் மகிமைக்காக பயன்படுத்த வேண்டும். தாலந்துகளை புதைத்து வைப்பதை ஒருபோதும் தேவன் விரும்பவில்லை. அப்படி தாலந்துகளை புதைத்து வைப்பவர்களை புறம்பான இருளிலே தள்ளிப் போடுங்கள் என்கிறார் (மத்.25:30). தாலந்துகளை பயன்படுத்தினவர்களை “நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி” (மத்.25:21) என்கிறார். தேவன் நமக்குக் கொடுத்த தாலந்துகளை உண்மையாக பயன்படுத்தி அவருடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோமாக.
தாவீது உண்மையுள்ளவனாயிருந்தான் (1சாமு.22:14). தாவீது தன் எதிரியாகிய சவுல் இராஜாவுக்கும் உண்மையுள்ளவனாயிருந்தான். அதனால் கர்த்தர் அவனை உயர்த்தி ராஜ்யபாரத்தை அவன் கையிலே கொடுத்தார். நாமும் கர்த்தருக்கு முன்பாக உண்மையுள்ளவர்களாக இருக்கும்போது அவருடைய ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக்கொள்ள முடியும்.






Author

You May Also Like…

Share This