நம்முடைய போராட்டம் எப்படிப்பட்டது?

Written by Pr Thomas Walker

March 21, 2006

பிரியமானவர்களே, இன்றைய செய்தித்தாள்களை திருப்பும்போது பலர் தங்கள் உரிமைகளை வலியுறுத்தி போராடுவதை செய்திகளாக வெளியிடுகிறார்கள். கம்யூனிஸ்ட்கள் முன்னாட்களில் வர்க்க போராட்டத்தை நடத்தினார்கள். இதனால் அநேக உயிரிழப்புகள்தான் ஏற்பட்டது. சமூக சீர்திருத்தவாதிகள் பலவிதங்களில் போராடி உரிமைகளைப் பெற நினைக்கிறார்கள். ஆனால் கிறிஸ்தவர்களாகிய நாம் போராட வேண்டிய ஒரு போராட்டம் உண்டு. அந்தப் போராட்டத்தைப் போராடி ஜெயம் பெற்றால் மட்டுமே நித்திய ஜீவனைப் பெறமுடியும். “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது,…” என்று பவுல் தான் ஓடி முடித்த ஓட்டத்தைப் பற்றி 2தீமோ.4:7,8ல் குறிப்பிடுகிறார்.
இந்தப் போராட்டம் நம்மை மகிமையில் சேர்க்கும் போராட்டமாகும். இந்த உலகத்தில் இடுக்கமான பரலோகப் பாதையைத் தெரிந்துகொள்ளும்போது நமக்குத் துன்பங்களும் போராட்டங்களும் வருகிறது. இந்த போராட்டங்களைப் போராடி வெற்றிகொள்ள வேண்டும். நாம் எந்த காரியங்களுக்காக போராடி மேற்கொள்ள வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.

முதலாவதாகபாவத்தை மேற்கொள்வதற்காக போராடும் போராட்டம் (ரோமர் 7:23)
பவுலின் உள்ளத்தில் ஒரு யுத்தம் நடந்துகொண்டிருந்தது. அது பாவத்தோடு போராடும் போராட்டமாகும். “…நானோ பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டு, மாம்சத்துக்குரியவனாயிருக்கிறேன். எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன். … நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.” (ரோமர் 7:14,15,17) என்று பவுல் எழுதுகிறார்.  பாவத்திலிருந்து வெற்றி காண பவுல் பல வழிகளைக் கையாண்டு பார்த்தார். பலன் கிட்டவில்லை. ஆனால் கிறிஸ்துவின் கரத்தில் தன்னை முற்றிலும் ஒப்புக்கொடுத்தபோது வெற்றி உண்டானது. “கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே” என்று ரோமர் 8:2ல் வாசிக்கிறோம்.
பாவத்திற்கு விரோதமாக இருக்கும் தேவன் நமக்குள் இருப்பதால் நேர்மையற்ற காரியங்களுக்கு ஒத்துப்போகாமல் போராடி ஜெயம் பெற வேண்டும். “பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே” என்று எபி.12:4ல் பார்க்கிறோம். நாம் பாவத்தை ஆவலோடு பருகுகிறவர்களாய் இராமல் பாவத்தை எதிர்க்கிறவர்களாய் மாறவேண்டும். சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவைக்குறித்து பேசி அவரை உயர்த்தும்போது உலகிற்கு இரட்சிப்பு உண்டாகும். பாவத்திற்கு காரணமாகிய சாத்தானை கட்டி ஜெபித்து அவனை எதிர்த்துப் போராடி ஜெயம் பெற வேண்டும். “மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, …பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” (எபி.6:12) ஜெபத்தில் போராடி ஜெயம் பெற வேண்டும்.

இரண்டாவதாகஇடுக்கமான வாசல் வழியாக செல்பவர்களுக்கு உண்டாகும் போராட்டம் (மத்.7:13,14)
“ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” (மத்.7:14) என்று நமதாண்டவராகிய இயேசுகிறிஸ்து நம்மைத் தமது அடிச்சுவடுகளில் பின்தொடர்ந்து வரும்படி அழைக்கிறார். இடுக்கமான வாசல் வழியாகச் செல்ல விரும்பும் நம் மனதில் ஒரு யுத்தமே நடக்கிறது. நீங்கள் நிற்கும் இடம் எது? என்று உங்களை நீங்களே நிதானித்துப் பாருங்கள். அது விசாலமான பாதையா? இடுக்கமான பாதையா? விசாலமான பாதையில் செல்லும்போது மனம்போல் வாழலாம். அது பிசாசுடன் ஒத்துப்போகும் வாழ்க்கை. அதில் போராட்டங்கள் இல்லை. ஆனால் குறுகிய இடுக்கமான பாதையைத் தெரிந்துகொள்ளும்போதே நம் வாழ்க்கையில் போராட்டம் ஆரம்பமாகிறது. ஆனால் அந்த பாதையே நம்மைப் பரலோகில் கொண்டு சேர்க்கும் பாதை. அந்தப் பாதையில் தேவன் நம்மோடு இருக்கிறார். நாம் தேவனையே சார்ந்துகொண்டு, அந்த இடுக்கமான பாதையில் முன்னேறிச் செல்லவிடாதபடி சாத்தான் பல தடைகளையும் சோதனைகளையும் கொண்டு வருவான். “…கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” என்று 2தீமோ.3:12ல் வாசிக்கிறோம். இடுக்கமான பாதையில் செல்லும்போது தேவன் நம்முடன் நின்று ஜெயம் தருவார். இடுக்கமான பாதை வழியாகச் செல்வதை தெரிந்துகொண்ட பவுல் “புறம்பே போராட்டங்களும் உள்ளே பயங்களும்” இருந்தன என்று எழுதுகிறார். “…இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்;…” (கலா.2:20) “அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது; நானும் உலகத்திற்கு சிலுவையிலறையுண்டிருக்கிறேன்” என்று பவுலைப் போல நம்மை முழுவதும் அவருக்கு ஒப்புக்கொடுத்து இடுக்கமான பாதை வழியாக பிரவேசித்து நித்திய ஜீவனைக் கண்டடைவோமாக.

மூன்றாவதாகநமக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்தை காத்துக்கொள்வதற்காக போராடும் போராட்டம் (யூதா 3)
விசுவாசம் விலையேறப் பெற்றது. அது பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசம். அதற்காக நாம் தைரியமாக போராட வேண்டும் (யூதா 3). பொன்னை விட விசுவாசம் விலையேறப்பெற்றது. வயது அதிகரிக்க அதிகரிக்க நம்மில் உள்ள விசுவாசம் நாளுக்கு நாள் வளர வேண்டும். பாட்டிக்குள் இருந்த விசுவாசம், தாய்க்குள் இருந்த விசுவாசம், மகனாகிய தீமோத்தேயுவுக்குள் வந்தது. வேதத்தை வாசித்து, தியானித்து சிந்தித்துக் கொண்டிருந்தால் விசுவாசம் வளரும். நாம் பெற்றுக்கொண்ட விசுவாசத்திற்காக ஜீவனைக் கொடுப்பது எத்தனை பாக்கியமானது. தேவனுக்கு முன்பாக கற்புள்ள கன்னிகையாக நிற்கவேண்டுமானால் விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடி ஜெயிக்க வேண்டும் (1தீமோ.6:12). ஆபிரகாம் அந்த விசுவாசத்திற்காக போராடினான். இன்னும் எத்தனையோ பரிசுத்தவான்கள் அந்த விசுவாசத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ சோதனைகள், கொடிய சூழ்நிலைகள் உண்டானாலும் அந்த விசுவாசத்திற்காக போராடி ஜெயிக்க வேண்டும். விசுவாசத்திற்காக போராட வேண்டும் என்று பவுல் பிலிப்பு சபையாருக்கு அறிவுறுத்துகிறார் (பிலி.1:27). விசுவாசத்தின் நல்ல போராட்டத்தை போராடி ஓட்டத்தை முடிப்போமாக (1தீமோ.6:12).
வெற்றியாக இவ்வுலக ஓட்டத்தை முடிக்க விரும்பும் நாம் ஜெபத்துடன் போராட வேண்டும். பவுல் போராடி ஜெயிக்கிறவனாயிருந்தான். தீமோத்தேயுவுக்கு போராடி ஜெயிக்கக் கற்றுக்கொடுத்தான். போராடி ஜெபிக்கும்போது குடம்பத்தில், தேசத்தில், சமுதாயத்தில் பெரிய மாறுதல்கள் உண்டாகும்.


“ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. நீங்கள் என்னிடத்தில் கண்டதும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு” (பிலி.1:29,30). நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள பாவத்தை வெறுத்து, விசுவாசத்தைக் காத்துக்கொண்டு, இடுக்கமான வாசலைத் தெரிந்துகொண்ட நமக்கு போராட்டமே காத்திருக்கிறது. ஜெபத்துடன் தேவ பெலனைப் பெற்றுக்கொண்டு அந்தப் போராட்டங்களை போராடி மேற்கொள்வோமாக!






Author

You May Also Like…

Share This