வளருவீர்கள்…. நாம் வளருவோம்…. தேவ பிள்ளைகள் வளருவார்கள் – இதுதான் தேவ பிள்ளைகளுக்கு தேவன் கொடுக்கும் வாக்குத்தத்தம். “….நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்” என்று (மல்கியா 4:2)ல் வாசிக்கிறோம். தேவனுடைய நாமத்துக்கு பயப்படுகிற தேவபிள்ளைகள் எங்கிருந்தாலும் வளருவார்கள். கர்த்தருடைய நாமத்தை நாம் கனம் பண்ணவேண்டும். நாம் எப்படி தேவனை கனப்படுத்துகிறோம் என்பதை, நாம் எப்படி ஜீவிக்கிறோம், எப்படி செயல்படுகிறோம் என்பதை வைத்துதான் தேவன் கணிக்கிறார்.
தேவபிள்ளைகள் துன்புறுத்தப்பட்டாலும் அவர்கள் வளருவதுதான் வசனத்தின் அடிப்படையில் உண்மை. பார்வோனும் எகிப்திய ஆளோட்டிகளும் இஸ்ரவேல் ஜனங்களை எவ்வளவாய் ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள் “ஆனாலும் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள்…” (யாத்.1:12). கம்யூனிச நாடாகிய சீனாவில் கிறிஸ்தவர்கள் பலவிதமாக துன்புறுத்தப்பட்டார்கள். ஆனால் தற்போது 10 கோடிக்கும் அதிகமான உண்மைக் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். எங்கெல்லாம் கிறிஸ்தவ மார்க்கத்தை ஒழித்துவிட்டோம் என்று மார்தட்டினார்களோ அங்கெல்லாம் கிறிஸ்தவம் வேகமாக பெருகி வருவதைக் காண்கிறோம்.
‘வளருவீர்கள்’ என்று பார்க்கும்போது பொருளாதார ரீதியில் மட்டும் நாம் வளருவோம் என்று தப்பாக கணக்கு போட்டுவிடக்கூடாது. ஆவிக்குரிய நிலையில் ஏற்படும் வளர்ச்சியையே நாம் முக்கியமாகக் கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் முதன்மையாக தேவ ராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடுவதே உண்மையான வளர்ச்சி ஆகும்.
ஆபிரகாமுடன் தேவன் இருந்தபடியால் அவன் செய்த காரியங்கள் எல்லாம் வாய்த்தது. கர்த்தரிலும் அவருடைய வேதத்திலும் நாம் பிரியமாக இருப்போமானால், நம்முடைய காரியமும் ஜெயமாக இருக்கும் (சங்.1:3). ஆபிரகாமுடைய வளர்ச்சியைக் கண்ட அபிமெலேக்கு ஆபிரகாமைத் தேடிவந்து அவனோடு உடன்படிக்கை பண்ணிக்கொண்டான். அபிமெலேக்கு ஆபிரகாமுடன் கர்த்தர் இருப்பதைக் கண்டான் (ஆதி.21:22).
ஈசாக்கை கர்த்தர் ஆசீர்வதித்ததினால் நூறுமடங்கு பலன் அடைந்தான் (ஆதி.26:12). அவன் ஐசவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான் என்று (ஆதி.26:13)ல் வாசிக்கிறோம். வர வர விருத்தி நம்முடைய வாழ்க்கையில் அவசியமாயிருக்கிறது. கர்த்தர் ஈசாக்கோடு இருந்ததால் அவனுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட வளர்ச்சியைக் கண்ட அவன் எதிராளியாகிய அபிமெலேக்கு அவனோடு உடன்படிக்கை பண்ணிக்கொண்டான். (ஆதி.26:26-31).
கர்த்தருடைய பிள்ளையாக நாம் இருப்போமானால் நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள், போராட்டங்கள், துன்பங்கள், பயமுறுத்தல்கள் ஒருபோதும் நமது வளர்ச்சிக்குத் தடையாக இருக்காது. அவை ஆசீர்வாதத்தின் மைல்கற்களாகவே இருக்கும். யோசேப்பு சகோதரரால் பகைக்கப்பட்டு குழியில் போடப்பட்டான். இது அவனது ஆசீர்வாதத்தின் முதல்படி; பின்பு இஸ்ரவேலர் கையில் விற்கப்பட்டான். இது ஆசீர்வாதத்தின் இரண்டாம்படி; பின்பு போத்திபாரின் வீட்டிலிருக்கையில் அபாண்டமாக பழி சுமத்தப்பட்டான். இது ஆசீர்வாதத்தின் மூன்றாம்படி; சிறையிலடைக்கப்பட்டான். இது ஆசீர்வாதத்தின் நான்காம்படி; உலகத்தின் பார்வையில் அற்பமாக தெரிந்தாலும் யோசேப்பின் வளர்ச்சிப் படிகள் இவைகளே. அதன் முடிவு அவனுக்கு மகிமையைக் கொண்டுவந்தது. தேவன் யோசேப்போடு இருந்தபடியால் அவன் எங்கு இருந்தாலும் அவன் காரியம் ஜெயமாக இருந்தது. பன்னிரெண்டு வயதில் அபிஷேகம் பண்ணப்பட்ட தாவீது பதினேழாவது வயதில் கோலியாத்தைக் கொன்றான். தாவீது சிறிய காரியமானாலும் பெரிய காரியமானாலும் தேவனையே சார்ந்திருந்தான். அதனால் தாவீது வரவர பலத்தான். (2சாமு.3:1).
நாம் வளரவேண்டிய மூன்று காரியங்களைக் குறித்து இங்கு ஆராயலாம்.
முதலாவதாக திருவசனமாகிய ஞானப்பாலின் மேல் வாஞ்சையாயிருப்பதில் நாம் வளர வேண்டும் (1 பேதுரு 2:3)
நாம் வளரும்படி திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாக இருக்க வேண்டும். கடமைக்காக வேதத்தை வாசிக்காமல் விசுவாசத்தில் வளரும்படி வேதத்தை வாசிக்க வேண்டும். தேவன்மேல் வாஞ்சையாயிருக்கும்போது அவர் நம்மை விடுவிப்பார். நம்மை உயர்ந்த அடைக்கலத்தில் வைப்பார். நமது குடியிருப்பு பரலோகத்தில் இருக்கிறது என்பதை உணர்ந்து வேத வசனங்களை வாசிப்பதிலும் தியானிப்பதிலும் நாம் வளர வேண்டும். தங்கள் குடம்பத்தையும், உறவினர்களையும், உடைமைகளையும் பிரிந்து பிற நாடுகளுக்கு செல்பவர்கள் எவ்வளவாய் தங்கள் சுயதேசத்துக்கு திரும்ப வாஞ்சிப்பார்கள். அப்படிப்பட்ட வாஞ்சையோடு நாம் வேதவசனங்களை வாசிக்க வேண்டும். வேதத்திலுள்ள அதிசயங்களை பார்க்கும்படி நமது கண்கள் திறக்கப்பட வேண்டும். (சங்.119:18).
தேவனுடைய வசனங்களை காத்துக்கொள்ள வேண்டும். (சங்.119:9) அவைகளை நமது இருதயத்தில் வைத்து வைக்க வேண்டும் (சங்.119:11). தேவனுடைய வசனங்களை மறந்து போகக்கூடாது (சங்.119:16). அவைகளை கைக்கொள்ள வேண்டும் (சங்.119:17). வேதம் நமக்கு மனமகிழ்ச்சியாயிருக்க வேண்டும் (சங்.119:77). அவருடைய வசனத்துக்குக் காத்திருக்க வேண்டும் (சங்.119:81). வேதத்தில் பிரியமாயிருக்க வேண்டும் (சங்.119:97). இதுவே தாவீதின் அனுபவமாக இருந்தது. அவருடைய வசனத்தின்மேல் தாகமும் வாஞ்சையும் நமக்கு அவசியமாயிருக்கிறது.
இரண்டாவதாக அன்பில் வளர வேண்டும் (1தெச.3:12)
ஒருவரிலொருவர் அன்பு கூருவது அவசியம். அதில் வளர்ந்து பெருக வேண்டும். பரிசுத்த ஆவியானவரின் அன்பு நமது இருதயங்களில் ஊற்றப்படுகிறது. அது நமது கிரியைகளில் காணப்பட வேண்டும். அதிகமான நேரம் முழங்காலில் நிற்பதும், வேதத்தை வாசித்து தியானிப்பதும், நற்கிரியைகளை செய்வதும் அன்பின் வளர்ச்சியைக் காட்டுகிறது. ‘அகாப்பே’ என்கிற பதம் தெய்வீக அன்பைக் குறிக்கிறது. தெய்வீக அன்பு மாறாத அன்பு. உலக அன்போ, தாயின் அன்போ, தகப்பனின் அன்போ, நண்பனின் அன்போ, கணவன் அல்லது மனைவியின் அன்போ தேவ அன்புக்கு இணையாகாது. தேவ அன்பு தூய அன்பு. அதில் வளர வேண்டும். இயேசுவின் அன்பு சத்துருவையும் சிநேகிக்கும் அன்பு. காட்டிக்கொடுக்க வந்த சீஷனை சிநேகிதனே என்று அழைக்கும் அன்பு. தமக்கு விரோதமாக பேசியவர்களுக்காகவும் ஜெபிக்கும் அன்பு, பதில் எதிர்பாராத அன்பு. அன்பில் நாம் வளரவேண்டும். வசனத்தினாலும், நாவினாலும் அல்ல, கிரியையினாலும், உண்மையினாலும் அன்புகூர வேண்டும் (1யோவான் 3:18).
மூன்றாவதாக தேவனை அறிகிற அறிவில் வளர வேண்டும் (2 பேதுரு 3:18)
தேவனோடு நெருங்கி ஜீவிக்கிற அனுபவத்தின் மூலம் தேவனை அறிய முடியும். இதில் நாம் வளர வேண்டும். அவருடைய அன்பை, தியாகத்தை, மன்னிக்கும் சுபாவத்தை சகிப்புத் தன்மையை அறிந்து அவற்றில் நாம் வளர வேண்டும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவில் நாம் வளரும்படி நமது பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும்.
தேவனை அறிகிற அறிவில் வளரும்படி அவரது கிருபையில் பெருக வேண்டும். புவி யாத்திரை கடினமானது. அதை வெற்றியுடன் செய்ய தேவகிருபை அவசியமாயிருக்கிறது. கிறிஸ்துவின் பரிபூரண அளவுக்குத்தக்கதாக நாம் வளர வேண்டும். ஆவிக்குரிய ஜீவியத்தில் நான்கு வகையான நிலைகள் உள்ளது. முதலாவது குழந்தைகள் என்கிற நிலை. இது பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையாகும்; இரண்டாவது பாலகர் என்கிற நிலை, இது பிதாவை அறிந்துள்ள நிலையாகும்; மூன்றாவதாக வாலிபர் என்கிற நிலை, இது பொல்லாங்கனை ஜெயிக்கும் நிலையாகும்; நான்காவதாக முதியவர்கள் என்கிற நிலை, இது ஆதிமுதல் இருக்கிறவரை அறிந்துள்ள நிலையாகும். (1 யோவான் 2:13,14). முதியோர்கள் என்கிற நிலை வரும்வரை நாம் வளர வேண்டும். தேவனை அறியும் அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டம் என்று விட்டேன் என்று பவுல் கூறுகிறார் (பிலி.3:8).
நாம் அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிறவர்களாக இருக்க வேண்டும் (2கொரி.2:14). இயேசுவை அறிகிற அறிவினால் நமக்கு கிருபையும் சமாதானமும் பெருகுகிறது (2பேதுரு 1:2). இயேசுவை அறிகிற அறிவினாலே நாம் உலகத்தின் அசுத்தங்களுக்கு தப்புகிறோம்.
நீதிமான் லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான் என்று (சங்.92:12)ல் பார்க்கிறோம். நீதிமான் பலனை எதிர்பாராமல் பலன் கொடுப்பான். லீபனோனிலுள்ள கேதுரு மரம் 300 அடி உயரம் வரை வளரக்கூடியது. நீதிமான் தேவனுடைய சாரத்தை எடுத்து வளர்ந்துகொண்டே இருப்பான். அவருடைய சாரத்தில் வளரும் நாமும் வேதவசனத்தின் மேல் வாஞ்சையாயிருப்பதிலும், கிறிஸ்துவை அறிகிற அறிவிலும் அன்பிலும் வளர்ந்து பெருகுவோமாக. கிறிஸ்தவர்களாகிய நாம் இவற்றில் வளரும்போது நம் இனத்தாரை நம்மை சுற்றியுள்ளவர்களை, நமது தேசத்தை இயேசுவுக்கு சொந்தமாக்க முடியும்.