இனிய வார்த்தைகளும், செய்கைகளும் ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி உயர்த்துகிறது என்பதற்கான ஒரு அழகிய உதாரணம் இந்த உண்மைச் சம்பவம்.
அது ஒரு பள்ளியின் ஐந்தாம் வகுப்பு. அந்த வகுப்பு ஆசிரியையின் பெயர் திருமதி.தாம்ஸன் (Mrs.Thomson). வகுப்பு ஆரம்பித்த முதல் நாளன்று ஆசிரியை மாணவர்களைப் பார்த்து, “நான் உங்கள் அனைவரையும் சரிசமமாக நேசிக்கிறேன்” என்றார். ஆனால் வகுப்பின் முதல் வரிசையில் அமர்ந்திருந்த டெடி (Teddy) என்ற சிறுவன் கசங்கிய அழுக்கான சீருடையோடு அமர்ந்திருந்தான். அவனுடைய விடைத்தாள்களை ஆசிரியை திருத்தியபோது அவன் பல விடைகளுக்கு தவறுதலாக பதிலளித்திருந்தான். திருமதி தாம்ஸன் அவனது கடந்த கால பள்ளி அறிக்கைகளை வாசித்துப் பார்க்க விரும்பினார்கள்.
டெடியின் முதல் வகுப்பு ஆசிரியை, எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மற்றவர்க ளுடன் பழகுவான். நன்றாக படிப்பான். அவனுடைய வேலைகள் மிகவும் சுத்தமாக இருக்கும் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்கள். டெடியின் இரண்டாம் வகுப்பு ஆசிரியை, டெடி படிப்பில் மிகவும் கெட்டிக்காரன், மற்ற மாணவர்கள் அனைவரும் அவனை மிகவும் விரும்புகிறார்கள். ஆனால் அவனது தாயார் வியாதிப்படுக்கையில் இருப்பதால், அவனது வீட்டு சூழ்நிலை மகிழ்ச்சிகரமாக இல்லை என்ற அறிக்கை கொடுத்திருந்தார்கள். டெடியின் மூன்றாம் வகுப்பு ஆசிரியை இவ்விதம் குறிப்பிட்டி ருந்தார்கள். டெடி அவனுடைய தாயாரின் மரணத்தினால் மிகவும் பாதிக்கப் பட்டிருக்கிறான். அவனுடைய தந்தை அவனை படிப்பில் ஊக்குவிக்காததால் நன்றாக முயன்றும் அவனால் முன்புபோல் படிக்க முடியவில்லை என்று, டெடியின் நான்காம் வகுப்பு ஆசிரியை இந்த வருடம் டெடி படிப்பில் அதிக ஆர்வம் காட்டவில்லை. அவனுக்கு அதிகம் தோழர்கள் இல்லை. சில சமயங்களில் வகுப்பில் தூங்கி விடுகிறான் என்று எழுதியிருந்தார்கள்.
திருமதி தாம்ஸன் அவனது பரிதாபமான நிலையைப் புரிந்துகொண்டு அவனைத் திருத்த முயற்சி மேற்கொண்டார்கள். கிறிஸ்மஸ் காலம் நெருங்கியிருந்தது. மாணவர்கள் தங்கள் வகுப்பு ஆசிரியையான திருமதி.தாம்ஸனுக்கு அழகான அட்டைகளால் அலங்கரிக்கப்பட்ட பரிசுப் பொருட்களை வழங்கினார்கள். ஆனால் ஒரு கிறிஸ்மஸ் வெகுமதி மட்டும் கசங்கிய காகிதத்தால் சுற்றப்பட்டிருந்தது. அது டெடியின் பரிசுப் பொருள். அதை திருமதி.தாம்ஸன் மிகுந்த சிரமத்துடன் திறந்து பார்த்தார்கள். உள்ளே கற்கள் பதிக்கப்பட்ட வளையல் ஒன்றும், பாதி உபயோகிக்கப்பட்ட நிலையிலிருந்த வாசனைத் திரவிய பாட்டில் ஒன்றும் இருந்தது. அந்த வளையலில் சில கற்களைக் காணவில்லை. சில மாணவர்கள் அதைப் பார்த்து பரிகசித்துச் சிரித்தார்கள், ஆசிரியர் அவர்களை அமைதியாக இருக்கும்படி கூறினார்கள். அந்த வளையலை தன் கையில் அணிந்துகொண்டார்கள். வகுப்பு முடிந்தவுடன் டெடி ஆசிரியரிடம் சென்று, “இன்று உங்கள்மேல் என் தாயாரின் வாசனை வீசுகிறது. கடந்த கிறிஸ்மஸ் தினத்தின்போது இந்த வாசனை திரவியத்தை அவர்கள் போட்டுக் கொண்டார்கள்” என்றான். அவன் வகுப்பை விட்டு சென்றபின் திருமதி.தாம்ஸன் அவனது நிலையை நினைத்து ஒரு மணி நேரம் அழுதார்கள்.
அன்று முதல் திருமதி.தாம்ஸன் தன் வகுப்பு மாணவர்களின் சூழ்நிலைகளை உணர்ந்து பாடங்களை நடத்தினார்கள். டெடியின் மேல் தனிக் கவனம் செலுத்தினார்கள். அவன் நன்றாகப் படிக்க ஆரம்பித்தான். ஐந்தாம் வகுப்பை முடிக்கும்போது டெடி ஆசிரியையின் செல்லப் பிள்ளையாக மாறினான்.
பதினைந்து வருடங்கள் கழித்து டெடியிடமிருந்து ஆசிரியருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் தன் வாழ்வில் திருமதி.தாம்ஸனைப் போல ஒரு ஆசிரியரைப் பார்த்ததில்லை என்றும் திருமதி.தாம்ஸன் தான் தன் வாழ்வை மாற்றிய ஆசிரியை என்றும் குறிப்பிட்டிருந்தான். அந்தக் கடிதத்தில் டாக்டர்.தியோடர் F.ஸ்டடர்ட் M.D. (Dr.Theodore F.Stoddard M.D) என்று கையொப்பமிட்டிருந்தான். திருமதி தாம்ஸன் நெகிழ்ந்து போனார்கள்.
கடைசியாக வந்த ஒரு கடிதத்தில் தனக்கு ஒரு பெண்ணை நிச்சயித்திருப்பதாகவும், தகப்பனார் இரண்டு வருடங்களுக்கு முன்பு மரித்துவிட்டதால், திருமதி.தாம்ஸன் தான் தாய் ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை நடத்தித் தரவேண்டும் என்றும் குறிப்பிட்டி ருந்தான். அதற்கு திருமதி தாம்ஸனும் சம்மதித்தார்கள். டெடியின் திருமண நாளன்று திருமதி.தாம்ஸன் டெடி 5ஆம் வகுப்பு படிக்கும்போது கொடுத்த பல கற்களில்லாத அந்த வளையலை அணிந்துகொண்டார்கள். வாசனைத் திரவியத்தைப் போட்டுக் கொண்டார்கள்.திருமண நாளன்று டாக்டர் தியோடர், திருமதி தாம்ஸனைப் பார்த்து, “என் வாழ்க்கையை சிறப்பாக மாற்றி அமைக்க முடியும் என்பதை எனக்குக் காட்டிய படியால் நன்றி”, என்று நெகிழ்ந்த குரலில் கண்ணீரோடு கூறினார்.
இதை வாசிக்கும் அன்பர்களே! யாரையும் அற்பமாய் எண்ணிவிடாதீர்கள். ஒன்றை மாத்திரம் நினைவில் வைத்துக்கொள்வோம். நாம் எங்கே போனாலும் எதைச் செய்தாலும் மற்றவர்களை மாற்றக்கூடிய ஆற்றல் நமக்கு உண்டு.
“எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம்” என்று பவுலடியார் கொலோ.1:28ல் கூறிய வசனத்தை நினைவில் வைத்துக்கொள்வோமாக!