கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவப்பிள்ளைகளே!
நாம் தேவ ஆசீர்வாதங்களைப் பெற வேண்டுமென்று விரும்புகிறோம். அதற்கு முன்பு தேவ ஆசீர்வாதங்களைப் பெற நாம் தகுதியுள்ளவர்களா என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க வேண்டும். சேஷ்டபுத்திர பாகத்தைப் பெற ஏசா தகுதியற்றவன் என்று தேவன் கண்டபோது தேவாசீர்வாதங்கள் ஏசாவைத் தாண்டி யாக்கோபுக்குப் போனது. பின்பு ஏசா மிகவும் கெஞ்சி மன்றாடியும் ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ள முடியவில்லை. யாக்கோபின் பன்னிரண்டு குமாரரில் ரூபன் சேஷ்டபுத்திரன். ஆனால் தேவன் ரூபனைத் தள்ளிவிட்டு யோசேப்பைத் தெரிந்துகொண்டார். யோசேப்பின் இரண்டு குமாரரில் இளைய குமாரனாகிய எப்பிராயீமை ஆசீர்வதிக்கத் தெரிந்துகொண்டார். எப்பிராயீம் யோசேப்பைப் போல் தனக்கு ஏற்ற கனிகளைக் கொடுக்க வேண்டும் என்று விரும்பியே தேவன் எப்பிராயீமை ஆசீர்வதித்தார். ஆனால் தேவாசீர்வாதங்களைச் சுதந்தரித்துக்கொண்ட எப்பிராயீமிடம் பல குறைகள் காணப்பட்டது. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
எப்பிராயீமிடம் காணப்பட்ட குறைகள்:
1. எப்பிராயீம் விக்கிரகங்களோடே இணைந்திருந்தான் (ஓசி.4:17)
பத்து கற்பனைகள் விக்கிரகங்களை உண்டாக்கவும், நமஸ்கரிக்கவும், சேவிக்கவும் வேண்டாம் என்று நமக்குப் போதிக்கிறது (யாத்.20:4,5). விக்கிரகங்களை தொழுது சேவிக்க இணங்காதபடிக்கு உங்கள் ஆத்துமாக்களைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள் (உபா.4:19) என்றும் சொரூபங்களை வணங்கி, விக்கிரகங்களைப் பற்றி பெருமை பாராட்டுகிற யாவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக (சங்.97:7) என்றும் விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள் (1கொரி.10:14) என்றும் வேதம் நமக்கு அறிவுறுத்துகிறது. விக்கிரகாராதனைக்காரர் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கல்லெறிந்து கொல்லப்படுவார்கள் (உபா.17:2-5). விக்கிரகாராதனைக்காரர் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை (1கொரி.6:9). விக்கிரக ஆராதனை பொருளாசைக்கும் (எபே.5:5) முரட்டாட்டம் பண்ணுதலுக்கும் (1சாமு.15:23) ஒப்பனையாக கூறப்பட்டுள்ளது. ஆனால் எப்பிராயீமோ தேவன் அருவருத்த விக்கிரகாராதனை செய்கிறவனாகக் காணப்பட்டான். எப்பிராயீம் தேவனுடைய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொண்டபோதும் அவன் உள்ளம் தேவனோடு இணைக்கப்படவில்லை. தேவன் அருவருக்கும் காரியங்கள் நம்மைவிட்டு அகல வேண்டும். நாம் தேவனைத் தள்ளி அவருக்கு முதலிடம் கொடுக்காமல் எவற்றுக்கு முதலிடம் கொடுக்கிறோமோ அவை விக்கிரகமாக மாறிவிடுகிறது.
முதலாவது நாம் தேவனைத் தேடும்போது அவர் கொடுக்கும் ஆசீர்வாதங்கள் நம்மை வந்தடையும்.
2. எப்பிராயீம் தன்னைக் குணமாக்குகிறவர் தேவன் என்பதை அறியாமற் போனான்
தேவனே நமது சிருஷ்டிகர். அவரே நமது பரிகாரி (யாத்.15:26) அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம் (ஏசாயா 53:5). கர்த்தரே பிசின் தைலம், இரண வைத்தியர். எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன் என்று வாக்குப்பண்ணியிருக்கிறார். அவர் நமது விண்ணப்பங்களைக் கேட்டு கண்ணீரைத் துடைக்கிறவராக இருக்கிறார். ஆனால் தேவனுடைய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொண்ட எப்பிராயீமோ தேவன் தன்னைக் குணமாக்குகிறவர் என்பதை அறியாமற் போனான். ஏசா தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, பரிகாரிகளையே தேடிப் போனான் (2நாளா.16:12). அதேபோல் எப்பிராயீமும் தன் வியாதி நேரத்தில் கர்த்தரைத் தேடாதே போனான். வியாதி வரும் நேரங்களில் நாம் தேவ சமூகத்தில் நம்மைத் தாழ்த்தி நம்மை ஆராய்ந்து பார்க்க வேண்டும். தேவன் மேல் நமது முழு நம்பிக்கையையும் வைக்க வேண்டும். அப்பொழுது தேவன் தமது தழும்புகளால் நம்மை குணமாக்குவார்.
3. எப்பிராயீம் அந்நிய ஜனங்களோடே கலந்திருந்தான் (ஓசியா 7:8)
அவிசுவாசிகளுடன் பேசுவது குற்றமல்ல. அவிசுவாசிகளுடன் பழகி அவர்களுடைய பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொண்டு, அவர்களுடன் கலந்து விடுவதே குற்றம். எப்பிராயீமோ, அந்நிய ஜனங்களோடே கலந்திருந்தான். துன்மார்க்கர், பாவிகள், பரியாசக்காரர் யாவரும் நமக்கு அந்நியரே (சங்.1:1). அவர்களுடன் நாம் கலந்திருப்பது தேவனுடைய ஆசீர்வாதங்களை சுதந்தரிக்கத் தடையாயிருக்கிறது. மாறுபாடான இந்த சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்று பேதுரு ஆதி திருச்சபையாருக்கு புத்தி சொன்னான் (அப்.2:40). நாம் இந்த உலகத்தில் வாழும்போது மீன் கடலில் வாழ்ந்தாலும் உப்பாயிராதது போல் ஜீவிக்க வேண்டும். உலகத்தின் வேஷம் கடந்துபோகிறதாயிருக்கிறது. லோத்து தேவ மனிதனாகிய ஆபிரகாமை விட்டு அந்நிய ஜனங்களுடன் கலந்திருந்தபடியால் அவன் சந்ததி தேவாசீர்வாதங்களை இழந்தது. “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; ….நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள்…” (2கொரி.6:14-16) என்று பவுல் நமக்கு ஆலோசனை கூறுகிறார்.
அந்நிய ஜனங்களோடே நாம் கலந்துவிடக் கூடாது. தேவ பிள்ளைகளின் ஐக்கியத்தையே நாம் நாடவேண்டும். தேவாசீர்வாதங்களை உதாசீனப்படுத்தி எப்பிராயீம் தகாத கற்பனைகளைப் பின்பற்றிப் போனான் (ஓசியா 5:11). தேவன் நம்மை ஆசீர்வதிக்க வேண்டுமென்று விரும்புவோமானால் அவரது கற்பனைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும்.
தேவன் மனந்திரும்பாமல் பின்மாறிப்போன எப்பிராயீமை கைவிடவில்லை. அவருடைய தந்தையுள்ளம் அவனுக்காக மனதுருகிறது. “எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? …என் இருதயம் எனக்குள் குழம்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது” என்று புலம்புவதைப் பார்க்கிறோம் (ஓசியா 11:8). தேவனுடைய சகாயம் எப்பிராயீமுக்குக் கிடைத்தது (ஓசியா 13:9).
இன்று பின்மாறி விழுந்துபோய் கிடக்கும் நம்மையும் தேவன் மனதுருக்கத்துடன் பார்க்கிறார். தேவனுடைய கிருபை மட்டும் நம்மைத் தாங்காவிட்டால் நாம் நிர்மூலமாகியிருப்போம். தேவனுடைய கிருபையை நாம் அசட்டை பண்ணாமல் அவரது ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்வோமாக.