எட்டு வயதான ஒரு சிறுமி தன்னுடைய சிறிய தம்பியைப் பற்றி பெற்றோர்கள் பேசுவதைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தாள். அவர்கள் பேசுவதிலிருந்து தன்னுடைய தம்பி மிகவும் சுகவீனமாயிருப்பதையும் அவனுடைய மருத்துவ செலவிற்கு போதிய பணம் பெற்றோர்களிடம் இல்லை என்பதையும் தெரிந்து கொண்டாள். மருத்துவ செலவின் காரணமாக அவர்கள் வசதியாக வாழ்ந்த வீட்டை விட்டு சிறிய வீட்டிற்கு இடம் பெயர்ந்தார்கள். அதிக பணம் செலவழித்து ஒரு அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் தம்பி பிழைக்கமாட்டான் என்பது மாத்திரம் அவளுக்குத் தெரிந்தது.
மிகுந்த கவலையோடிருந்த அவள் தாயைப் பார்த்து தந்தை மெல்லிய குரலில், “ஓர் அற்புதமே உன் மகனைக் காப்பாற்ற முடியும்” என்று சொன்னது அச்சிறுமி காதில் விழுந்தது. உடனே அச்சிறுமி தன் படுக்கையறைக்குள் சென்று மறைத்து வைத்திருந்த ஒரு கண்ணாடி ஜாடியை எடுத்தாள். அதில் அவள் சேர்த்து வைத்திருந்த சில்லறையை தரையில் கொட்டினாள். அதை கவனமாக எண்ணி ஜாடியில் போட்டுக்கொண்டு அருகிலிருந்த மருந்து கடைக்குச் சென்றாள். அந்த ஜாடியிலிருந்த சில்லறைகளை எடுத்து கடையிலிருந்த மேஜையில் வைத்தாள்.
அந்த மருந்து கடைக்காரர் “உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்?” அந்தப் பெண் மறுமொழியாக மிகவும் சுகவீனமாயிருக்கும் என் சிறு தம்பிக்கு ஒரு அற்புதம் வேண்டும் என்றாள். அதிர்ச்சியடைந்த அந்த மருந்துக்கடைக்காரர் “தயவு செய்து என்ன வேண்டும் என்பதை திரும்பச் சொல்” என்றார். அந்தச் சிறுபெண், “என்னுடைய தம்பியின் பெயர் ஆண்ட்ரு (ஹனேசநற) அவனுடைய மூளைப் பகுதியில் ஒரு சிறு கட்டி இருக்கிறது. ஓர் அற்புதமே அவனைக் காப்பாற்ற முடியும் என்று என் தந்தை சொல்வதைக் கேட்டேன். எனவே ஒரு அற்புதத்தின் விலை என்ன?” என்று கேட்டாள்.
ஒரு சோகப் புன்னகையுடன் அந்த மருந்துக் கடைக்காரர், “சிறுபெண்ணே என்னை மன்னித்துவிடு, நாங்கள் இங்கு மருந்துகளை விற்கிறோமே தவிர, அற்புதங்களை விற்பதில்லை” என்றார். அந்த பெண்ணோ, “அற்புதத்தை தயவுசெய்து எனக்குத் தாருங்கள். என்னிடம் இன்னும் கொஞ்சம் பணம் இருக்கிறது. அதுவும் போதாவிட்டால் என்னால் இயன்ற மட்டும் சேர்த்துத் தருகிறேன்” என்றாள்.
அந்தக் கடைக்கு நன்றாக உடையணிந்த ஒரு தனவந்தர் வந்தார். அவர் அந்த சிறு பெண்ணைப் பார்த்து, “உன்னுடைய தம்பிக்கு எந்தவிதமான அற்புதம் வேண்டும் என்று கேட்டார்”. அந்த சிறு பெண் தன் கண்களை அகல விரித்தவளாக, “என் சிறு தம்பி மூளையில் ஒரு கட்டி இருக்கிறது. அதற்கு ஒரு பெரிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். என் தந்தையிடமோ போதிய பணமில்லை. எனவே ஒரு அற்புதமே என் தம்பியை காப்பாற்ற முடியும் என்று என் தந்தை சொல்வதைக் கேட்டேன்” என்றாள்.
“உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது” என்று அந்த தன்வந்தர் கேட்டார். “ஒரு டாலரும் பதினொரு சதங்களும்” என்றாள் அச்சிறுபெண்.
அந்த தன்வந்தர் சிரித்தவாரே “ஒரு டாலரும் பதினொரு சதங்களுமே உன் தம்பியைக் காப்பாற்ற போதுமானது. எனவே உன் பெற்றோரிடம் என்னை அழைத்துச் செல். அவர்களை நான் பார்க்க விரும்புகிறேன்” என்றார். அந்த பெரிய தன்வந்தர் தான் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் கார்ல்டன் ஆம்ஸ்ம் ராங் (ஊயசடவடிn ஹஅளவசடிபே). சிறு தம்பிக்கான அறுவை சிகிச்சை முழுவதையும் எந்தச் செலவுமில்லாமல் செய்தார், அந்த மருத்துவர். அந்த சிறு தம்பியும் விரைவில் பூரண சுகமடைந்தான்.
அச்சிறுமியின் தாயாருக்கு ஒன்றும் புரியவில்லை. “எப்படி இந்த அற்புதம் நிகழ்ந்தது, இந்த அற்புதத்துக்கு என்ன விலைதானோ” என்று திகைத்தாள்.
அந்த சிறுமிக்கோ ஓர் அற்புதத்தின் விலை ஒரு டாலரும் பத்து சதங்களும் விசுவாசமுமே.
கடுகளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் போதும். உங்களால் கூடாத காரியம் ஒன்றுமே இராது. மத்தேயு 17:20.