எழும்பு, எழும்பு பெலன்கொள்

Written by Pr Thomas Walker

November 4, 2016

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!

தேவன் தம் திருச்சபை மக்களைப் பார்த்து “எழும்பு, எழும்பு, சீயோனே உன் வல்லமையைத் தரித்துக்கொள். பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள் என்று சொல்லுகிறார்,” சபை மக்கள் அனலுமில்லாமல், குளிருமில்லாமல் இருக்கும் நிலையிலிருந்து அனலுள்ள வைராக்கியமுள்ளவர்களாய் மாற வேண்டும் என்று விரும்புகிறார். சீயோனின் மக்கள் சாத்தானின் சிறைக் கைதிகளாய் அடிமைப்பட்டு போயிருக்கின்றனர். கட்டுகளுடன் நிந்தை அவமானத்துடன் காணப்படுகின்றனர். விலையின்றி விற்கப்பட்டுள்ளனர். தேவன் அவர்கள் தூசியை உதறிவிட்டு எழும்பு, என்னிடமாய் திரும்பு என்கிறார்.

ஏசா.51:9 வசனத்தில், “எழும்பு, எழும்பு, பெலன்கொள்; கர்த்தரின் புயமே, முந்தினநாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?” ஆதி திருச்சபை மக்களைப் போல ஜெபிப்பதிலும், ஊழியம் செய்வதிலும், அன்பின் ஐக்கியம் அப்பம் பிட்குதலிலும் சபை மக்கள் வைராக்கியமாக வாழவேண்டும். ஆத்தும பாரத்துடன் ஆத்துமாக்களுக்காக அழுது, புலம்பி ஜெபிக்க வேண்டும். சபைகளில் அற்புதங்களினாலும், அடையாளங்களினாலும் வசனத்தை உறுதிப்படுத்த வேண்டும். ஆயிரமாயிரமான ஆத்துமாக்கள் இரட்சிப்படைய ஜெபிக்க வேண்டும். வாலிபர்கள் தேவனுக்காக எழும்பி பிரகாசிக்க வேண்டும். விழித்திருந்து மக்கள் ஜெபிக்க ஆயத்தப்படுதலே எழுப்புதலின் ஆரம்பம், பரலோகத்திலிருந்து பின்மாரி அபிஷேகம் ஊற்றப்பட வேண்டும். திருச்சபைகள் மலர வேண்டும். எழுப்புதலின் அக்கினி பற்றி எரிய வேண்டும்.

1) தேவனுடைய சபை உயிர்ப்பிக்கப்பட வேண்டும்!

சங்.119:126 வசனத்தில், “நீதியைச் செய்ய கர்த்தருக்கு வேளைவந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிரமாணத்தை மீறினார்கள்” தேவன் தமது ஜனம் அடிமைத் தனத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார். அதற்கு உண்மையாய் ஜெபிக்கும் ஜெப வீரர்கள் தேவை. இருதயம் நொறுங்கி, கண்ணீருடன் மன்றாடும் ஜெபிக்கும் மக்கள், ஜெப வீரர்கள் தேவை. இருதயம் நொறுங்கி கண்ணீருடன் மன்றாடும் ஜெபிக்கும் மக்கள் திருச்சபையில் எழும்ப வேண்டும். யாக்.4:3ஆம் வசனத்தில், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்க வேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியினாலே பெற்றுக் கொள்ளாமலிருக்கிறீர்கள். இச்சையை நிறைவேற்றும் ஜெபமல்ல, இன்றைய திருச்சபையின் தேவை என்னவென்றால், தன்னலமற்ற முறையில் சுயநலமற்ற அழுது மன்றாடும் ஜெப வீரர்களே தேவை.

2) ஒரே மனதுடன் ஜெபத்தில் தரித்திருக்க வேண்டும்:

அப்.1:14 வசனத்தில், “அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்” யார் மூலமாக எழுப்புதல் வரும் என்றால்? ஒருமனதுடன் ஜெபிப்பவர்கள் மூலம் தான். அப்.2:1 “பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்”

3) வாய்க்கால்களை வெட்டுங்கள்:

2இராஜா.3:16,17 “…இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள். நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடுமாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார். இது கர்த்தரின் பார்வைக்கு அற்பகாரியம்; மொவாபியரையும்(சத்துருக்களையும்) உங்கள் கையிலே ஒப்புக்கொடுப்பார்” காற்றையும், மழையையும் காணாவிட்டாலும் பள்ளத்தாக்குகள் தண்ணீரால் நிரப்பப்படும். தோண்டுகிற வேலை நம்முடையது, நிரப்புகிற வேலை தேவனுடையது. நாம் தேவனுக்காக கிரியை செய்ய வேண்டும். ஆழமாகத் தோண்டினால் அதிகமாய் தண்ணீர் நிற்கும். அதிகமாய் பிரயாசப்பட வேண்டும். நாம் கிறிஸ்துவுக்குள் படுகிற பிரயாசம் ஒருநாளும் வீண்போகாது. ஜெபத்தில், ஊழியம் செய்வதில், வசனத்தைப் போதிப்பதில் பிரயாசப்பட வேண்டும். தேவன் சபைகளை ஆத்துமாக்களினால் நிரப்புவார். சத்துருக்களை சிதறடிப்பார். அது அவருக்கு அற்ப காரியம்.

4) உங்களை பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள்:

யோசுவா 3:5 “யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக் கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார்” என்றான். உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள். கர்த்தர் அற்புதங்களைச் செய்வார். சந்தேகம், விசுவாசமில்லாத எண்ணங்கள், எழுப்புதலுக்கு தடைகளாகும். ஆடம்பர வாழ்க்கை, உடை நடைமுறை பழக்க வழக்கங்களில் பரிசுத்தம் காணப்பட வேண்டும். சுயநலம், உலக சிநேகம் கூடாது. செயல்முறைகளில் கிறிஸ்து வெளிப்பட வேண்டும். சுயத்துக்கு மரிக்க வேண்டும். தன்னலம் வேரோடு பிடுங்கி எடுக்கப்பட வேண்டும். பொருளாசை நீக்கப்பட வேண்டும்.

உலக சிநேகமும், பொருளாசை பெருந்தீனியும் நம்மிலிருந்து அகற்றப்பட வேண்டும். சோதனைக்குட்படாமல் விழித்திருந்து ஜெபிக்க வேண்டும். நம் கண்கள் இயேசுவின் மேல் பதிக்கப்பட வேண்டும். உதாரணமாக ஒரு நாய் முன் கறித் துண்டுகள் ஒரு தட்டில் வைக்கப்பட்டிருந்தாலும் அதின் கண்கள் எஜமானனையே நோக்கிப் பார்க்கும் வரை சோதனையிலிருந்து தப்பிவிடும். நாம் எஜமானாகிய இயேசுவையே பார்த்துக் கொண்டேயிருந்தால் தான் சோதனைக்குத் தப்ப முடியும். நம்மில் உள்ள இரக்கமற்ற சுபாவங்கள் நீக்கப்பட வேண்டும். எரிச்சலின் ஆவி, மாம்ச குணங்கள் வேரோடு தோண்டப்பட வேண்டும்.

அன்பு நண்பரே! தேவன் விரும்பும் வண்ணம் நாம் தூசியை உதறிவிட்டு எழும்ப வேண்டும். சத்துருக்களை மேற்கொள்ள வேண்டும். முந்தின நாட்களில் செய்த கிரியைகளிலும், ஆதி அன்பிலும், பரிசுத்தத்திலும் நாம் பெருக வேண்டும். சுயநலம் இல்லாமல் ஆத்தும பாரத்தோடு ஜெபிக்க வேண்டும். தேவனுக்காக நாம் கிரியை செய்வது, ஆழமாய் வாய்க்கால்களை தோண்டுவது, நம் வேலை. நிரப்புவது தேவனுடைய வேலை. தேவனுடைய வார்த்தையை நேசித்து, அதற்கு கீழ்ப்படிந்தால் எழுப்புதல் நம் வாழ்வில் ஏற்படும். தேவனுடைய மகிமை நம் மூலம் வெளிப்படும். அல்லேலூயா!






Author

You May Also Like…

Share This