நீ தராசிலே நிறுக்கப்பட்டு குறைய காணப்பட்டாய்!

Written by Pr Thomas Walker

August 4, 2016

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!

தேவன் நீதியுள்ள நியாயாதிபதியாய் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். அவர் கையில் சுமுத்திரையான தராசு உள்ளது. யோபு 31:6 வசனத்தில், “சுமுத்திரையான தராசிலே தேவன் என்னை நிறுத்து, என் உத்தமத்தை அறிவாராக” என்கிறார். பெல்ஷாத்சர் என்னும் பாபிலோனிய ராஜா பெரிய விருந்து செய்து எருசலேமிலுள்ள தேவனுடைய வீடாகிய ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட பொற் பாத்திரங்களைக் கொண்டு வந்தார்கள். அதில் ராஜாவும், அவன் பிரபுக்களும், அவனுடைய மனைவிகளும், அவனுடைய வைப்பாட்டிகளும் குடித்தார்கள். பின்பு விக்கிரகங்களைப் புகழ்ந்தார்கள். அந்நேரத்திலே மனுஷ கைவிரல்கள் தோன்றி விளக்குகளுக்கு எதிராக சுவரிலே எழுதிற்று. எழுதின அந்தக் கையுறுப்பை ராஜா கண்டான். “தெக்கேல்” என்பதற்கு, “நீ தராசிலே நிறுக்கப்பட்டு குறைவாய் காணப்பட்டாய்” என்று எழுதியது. அன்றே அவன் கொலைசெய்யப்பட்டான்.

ஏழு சபைகளின் நடுவிலே உலாவி வரும் தேவன் அக்கினி ஜூவாலைப் போன்ற கண்களுடன் சபைகளைப் பார்க்கிறார். அதின் குறைவுகளையும், செயல்களையும் நிறுத்துப் பார்க்கிறார். அவர் தம் குறைகளையும் தராசிலே வைத்து நிறுத்துப் பார்க்கிறார். யோவான் கண்ட தரிசனத்தில் உள்ள ஆசியாவில் முதல் நூற்றாண்டில் உள்ள 7 சபைகளையும் எதிர்காலத்திலும், இப்பொழுதும் உள்ள சபைகளின் குறைபாடுகளையும் தேவன் காண்கிறார். நிறுத்துப்பார்க்கிறார்.

தேவன் யார் யாரையெல்லாம் நிறுத்துப் பார்த்து, குறைகளை சுட்டிக்காட்டினார் என்று ஆராய்ந்து பார்ப்போம்.

1) எபேசு சபை

வெளி.2:2,3,4 வசனங்களில் ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக் கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது “உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்; நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன். ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு” என்றார். இரட்சிக்கப்பட்ட ஆரம்பத்தில் இருந்த அன்பு நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.

2) சவுல் நிறுக்கப்பட்டு குறைவாக காணப்பட்டான்

1சாமு.15:28 வசனத்தில் “அப்பொழுது சாமுவேல் அவனை நோக்கி: கர்த்தர் இன்று உம்மிடத்திலிருந்த இஸ்ரவேலின் ராஜ்யத்தைக் கிழித்துப்போட்டு; உம்மைப்பார்க்கிலும் உத்தமனாயிருக்கிற உம்முடைய தோழனுக்கு அதைக் கொடுத்தார்” என்றார். இஸ்ரவேலின் முதல் அரசன் சவுல் கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படியவில்லை. எனவே, சாமுவேல் கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும், பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம். இரண்டகம் பண்ணுதல், பில்லிசூனிய பாவத்திற்கும் முரட்டாட்டம் பண்ணுதல், அவபக்திக்கும், விக்கிரக ஆராதனைக்கும் சரியாய் இருக்கிறது. நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான். சவுல் சாமுவேலிடம் நான் கர்த்தருடைய கட்டளைகளையும், வார்த்தைகளையும் மீறினதினாலே பாவஞ்செய்தேன் நான் ஜனங்களுக்குப் பயந்து அவர்கள் சொல்லக் கேட்டேன் என்றான்.

3) யெரொபெயாம் நிறுக்கப்பட்டு குறைவாக காணப்பட்டான்:

1இராஜா.14:9,10 வசனங்களில், “உனக்கு முன்னிருந்த எல்லாரைப் பார்க்கிலும் பொல்லாப்புச் செய்தாய்; எனக்குக் கோபம் உண்டாக்க, நீ போய் உனக்கு அந்நிய தேவர்களையும் வார்க்கப்பட்ட விக்கிரகங்களையும் உண்டுபண்ணி, உனக்குப் புறம்பே என்னைத் தள்ளிவிட்டாய். ஆகையால் இதோ, நான் யெரொபெயாமுடைய வீட்டின்மேல் பொல்லாப்பை வரப்பண்ணி, யெரொபெயாமுக்கு, சுவர்மேல் நீர்விடும் ஒரு நாய் முதலாயிராதபடிக்கு, ….யெரொபெயாமின் பின்னடியாரை அவர்கள் கட்டோடே அற்றுப்போகுமட்டும் கழித்துப்போடுவேன் என்றார்.” யெரொபெயாம் பொற் கன்றுக்குட்டிகளை வணங்கும்படி இஸ்ரவேலை வழி நடத்தினான். சங்.106:19,20; நீதி.16:2; ஏசா.40:12,13; வெளி.6:5 வசனங்களைப் பார்க்கும்போது நிறுக்கப்பட்டு குறைவாக காணப்பட்டால் அழிவு. வெளி.6:5 வசனத்தில், இதோ ஒரு கறுப்புக் குதிரையைக் கண்டேன், அதின்மேல் ஏறியிருந்தவன் தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான். ஏசா.40:12, “…பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, பர்வதங்களைத் துலாக்கோலாலும், மலைகளைத் தராசாலும் நிறுத்தவர் யார்?” தேவன் ஒருவரே.

4) பெல்ஷாத்சார் நிறுக்கப்பட்டான்:

தானி.5:22,23 வசனத்தில், “அவருடைய(நேபுகாத்நேச்சாரின்) குமாரனாகிய பெல்ஷாத்சார் என்னும் நீரோவென்றால், இதையெல்லாம் அறிந்திருந்தும், உமது இருதயத்தைத் தாழ்த்தாமல், பரலோகத்தின் ஆண்டவருக்கு விரோதமாக உம்மை உயர்த்தினீர்; அவருடைய ஆலயத்தின் பாத்திரங்களை உமக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்; நீரும், உம்முடைய பிரபுக்களும், உம்முடைய மனைவிகளும்…. திராட்சரசம் குடித்தீர்கள்; இதுவுமன்றி, தம்முடைய கையில் உமது சுவாசத்தை வைத்திருக்கிறவரும், உமது வழிகளுக்கு எல்லாம் அதிகாரியுமாகிய தேவனை நீர் மகிமைப்படுத்தாமல் காணாமலும் கேளாமலும் உணராமலும் இருக்கிற வெள்ளியும் பொன்னும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தீர்” எனவே அன்றே கொலை செய்யப்பட்டான்.

5) பாபிலோனின் நேபுகாத்நேச்சார் நிறுக்கப்பட்டான்:

தானி.4:30,31 வசனங்களில், “இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப் பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான். இந்த வார்த்தை ராஜாவின் வாயில் இருக்கும்போதே, வானத்திலிருந்து ஒரு சத்தம்உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று.” மனுஷரிலிருந்து தள்ளப்படுவாய். வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய். மாடுகளைப் போல புல்லை மேய்வாய். இப்படியே 7 காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று சொல்லப்பட்டது. அதன்படி 7 வருடங்கள் மாடுகளைப்போல புல்லை மேய்ந்தான்.

6) அசீரியா ராஜா சனகெரிப் நிறுக்கப்பட்டான்:

2நாளா.32:10-21 அசீரியா ராஜா இஸ்ரவேலின் தேவனுக்கு மேலாக தன்னை உயர்த்தி அவரைக் குறித்து நிந்தனையாகப் பேசினான். 2நாளா.32:21 “அப்பொழுது கர்த்தர் ஒரு தூதனை அனுப்பினார்; அவன் அசீரியருடைய ராஜாவின் பாளயத்திலுள்ள சகல பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், சேனாபதிகளையும் அதம்பண்ணினான்; அப்படியே சனகெரிப் செத்தமுகமாய்த் தன் தேசத்திற்குத் திரும்பினான்; அங்கே அவன் தன் தேவனுடைய கோவிலுக்குள் பிரவேசிக்கிறபோது, அவனுடைய கர்ப்பப்பிறப்பான சிலர் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள்.”

7) ராஜாவாகிய யோவாஸ் நிறுக்கப்பட்டான்:

2நாளா.24ஆம் அதிகாரம் ராஜாவாகிய யோவாஸ் தன் மாமாவாகிய பிரதான ஆசாரியனாகிய யோய்தாவின் நாளெல்லாம் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான். யோய்தாவின் மரணத்துக்குப்பின் 2நாளா.24:15 தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தை விட்டுவிட்டு தோப்பு விக்கிரகங்களையும் சிலைகளையும் சேவித்தார்கள். அவர்கள் செய்த இந்த குற்றத்தினிமித்தம் யூதாவின் மேலும் எருசலேமின் மேலும் கடுங்கோபம் மூண்டது. கர்த்தர் அவர்களிடத்திலே தீர்க்கதரிசிகளை அனுப்பினார். அவர்கள் ஜனங்களை திடச் சாட்சியாகக் கடிந்துகொண்டார்கள். ஆனாலும் செவிகொடுக்கவில்லை. யோய்தாவின் மகன் சகரியாவின் மேல் தேவ ஆவி இறங்கினதினால் “நீங்கள் கர்த்தருடைய கற்பனைகளை மீறுகிறது என்ன? நீங்கள் கர்த்தரை விட்டுவிட்டதினால் அவர் உங்களைக் கைவிடுவார் என்றான். அதற்காக அவனை கல்லெறிந்து கொன்றார்கள்.

அன்பு நண்பரே! தேவன் நீதியின் தேவன் அவரவரின் செய்கைகளுக்குத் தக்க பலனை அவர்களுக்குத் தரும்படி அவர் ஒவ்வொரு செய்கைகளையும், வழிகளையும், எண்ணங்களையும், வாயின் வார்த்தைகளுக்கும் தக்க பலனைக் கொடுக்கும்படி நிறுத்துப் பார்க்கிறார். தராசிலே நிறுக்கப்பட்டு குறைவாக காணப்பட்டால் அவரவர் பாவங்களுக்கும், அக்கிரமங்களுக்கும் தக்க பலனை நீதியின் தேவன் தருவார். எனவே கர்த்தருக்குப் பயந்து அவர் வசனத்தின்படி வாழ்வோம்! – அல்லேலூயா!






Author

You May Also Like…

Share This